Photo, Getty Images/ CNN

கடந்த மே மாத முற்பகுதியில் கொழும்பு காலிமுகத்திடலில் ‘அறகலய’ போராட்டக்களத்துக்கு அண்மையாக பெருமளவு பொலிஸ், இராணுவ வாகனங்களைக் கொண்டுவந்து நிறுத்தி அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் அன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ அரசாங்கம் இறங்கியபோது வெறுமனே ஒரு எம்.பியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க அவசரகாலச்சட்டத்தைப் பயன்படுத்தி ‘கோட்டா கோ கம’ வை அரசாங்கம் குழப்புவதற்கு முயற்சிக்குமானால் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகப்போவதாகவும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதை  நிறுத்தப்போவதாகவும் நாடாளுமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் விடுத்த எச்சரிக்கை இப்போது எத்தனை பேருக்கு நினைவிருக்கிறதோ தெரியவில்லை.

அதே மாத நடுப்பகுதியில் பிரதமராக பதவியேற்பதற்கு முன்னதாக விக்கிரமசிங்க வேறு என்ன நிபந்தனைகளை கோட்டபாயவிடம் முன்வைத்தாரோ தெரியாது. ஆனால், முன்வைத்த ஒரு நிபந்தனையை நாடும் உலகமும் அறியும். அதாவது, அறகலய போராட்டக்காரர்கள் மீது கைவைக்கக்கூடாது; அந்தப் போராட்டம் தொடர அனுமதிக்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதை ஏற்றுக்கொண்டு, தன்னை வீட்டுக்குப் போகுமாறு கேட்ட அந்த போராட்டத்தை குழப்புவதற்கு கோட்டபாயவும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ஆனால், அன்று போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த அவசரகாலச்சட்டம் பயன்படுத்தக்கூடாது என்று விக்கிரமசிங்க கேட்டாரோ அதே அவசரகாலச்சட்டத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய ‘அறகலய’ போராட்டத்தை ஒடுக்கப்போவதாக இன்று அவர் சூளுரைப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை 2023 வரவு – செலவுத்திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதியொதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய விக்கிரமசிங்க ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படக்கூடிய எந்தவொரு அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தையும் ஒடுக்குவதற்கு அவசரகாலச்சட்டத்தை பிரகடனம் செய்து இராணுவத்தைப் பயன்படுத்தப்போவதாக கூறினார்.

“அரசாங்கத்தைக் கவிழ்க்க இன்னொரு அறகலய போராட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமொன்று இருக்கிறது. அதை நான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. மீண்டும் ஒரு ‘அறகலய’ முன்னெடுக்கப்பட்டால் அவசரகாலச் சட்டத்தையும் இராணுவத்தையும் பயன்படுத்துவேன். அதற்காக என்னை அவர்கள் ஹிட்லர் என்று அழைக்கக்கூடும்.

“மக்களும் அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், பொலிஸாரிடம் முதலில் அனுமதியைப் பெறவேண்டும். பொலிஸ் அனுமதியில்லாத போராட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும்.

“பல மதத்தலைவர்கள் போராட்டங்களை வெளிப்படையாகக் கண்டனம் செய்தனர். குறிப்பிட்ட சில குழுக்களினால் அந்தத் மதத்தலைவர்கள் அச்சுறுத்தப்படுவதாக செய்திகள் வருகின்றன. ‘அறகலய’ குறித்து ஆராய ஆணைக்குழுவொன்றை நான் நிமிப்பேன். ஆர்ப்பாட்டங்கயைும் வன்முறைகளையும் ஊடகங்கள் தூண்டிவிடுகின்றன. எந்த ஊடக நிறுவனங்கள் இவ்வாறு  செய்கின்றன என்பதை நாம் கண்டறியவேண்டியிருக்கிறது” என்று ஜனாதிபதி தனதுரையில் கூறினார்.

பிரதமராக விக்கிரமசிங்க அறகலயவை நோக்கிய முறைக்கும் ஜனாதிபதியாக அவர் அதை நோக்குவதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை எவராலும் புரிந்துகொள்ளமுடியும். அறகலயவின் காரணமாகவே தன்னிடமிருந்து இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக நழுவிக்கொண்டிருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி தனது கைகளில் சிக்கியது என்பதை அவர் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கமுடியாது. ராஜபக்‌ஷர்களை அதிகாரத்தில் இருந்து விரட்டிவிட்டு ஒரு விக்கிரமசிங்கவை அரியாசனத்தில் அமர்த்துவதற்காக மக்கள் போராட்டத்தை நடத்தவில்லை என்பதையும் அவர் அறிவார்.

ஆனால்,  ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட்ட ஜூலை 20 தொடக்கம் ‘அறகலய’ போராட்டக்காரர்களுக்கு திராக அவர் தொடங்கிய வேட்டை ஓய்வின்றி தொடருகிறது. மக்களின் அமைதிவழி போராட்டத்திற்குள் ‘ஊடுருவிய பாசிசவாதிகள்’ சட்டம், ஒழுங்கைச் சீர்குலைத்து அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் செயற்பட ஆரம்பித்ததனாலேயே படைபலத்தை பயன்படுத்தவேண்டியேற்பட்டது என்பதே அவர் கற்பிக்கும் நியாயமாகும்.  கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக சர்வதேச சமூகத்துக்கு பல வருடங்களாக உறுதியளித்த விக்கிரமசிங்க அமைதிவழி போராட்டக்காரர்களுக்கு எதிராக – எந்தவிதமான பயங்கரவாதச் செயலிலும் ஈடுபடாதவர்களுக்கு எதிராக – அதே சட்டத்தை இப்போது பயன்படுத்துவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவரை நாட்டைவிட்டு வெளியேறவைத்த மக்கள் கிளர்ச்சி எந்தவொரு அரசியல் கட்சியினாலும் ஏற்பாடு செய்யப்பட்டதல்ல. இலங்கை அதன் வரலாற்றில் இதுகாலவரையில் காணாத படுமோசமான பொருளாதார நெருக்கடியின் விளைவான இடர்பாடுகளுக்கு நாடுபூராவும் மக்கள் காட்டிய தன்னெழுச்சியான பிரதிபலிப்பே கிளர்ச்சியின் முதல் வெற்றியின் மூலாதாரமாகும். போராட்டத்தில் முன்னரங்கத்தில் நின்றவர்களுக்கு எதிரான பொலிஸாரின் வேட்டை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மையே. அதனால், நிலவுகிற ‘அமைதியை’ தனது அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியாக ஜனாதிபதி நம்பினால் அவர் நாட்டு மக்களின் உணர்வுகளை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதே அர்த்தமாகும்.

அரசியல் புரட்சியொன்றின் பரிமாணங்களை ஒரு கட்டத்தில் எடுத்த ‘அறகலய’ மக்கள் போராட்டம் உண்மையில் அரசியல் அதிகார வர்க்கத்தின் அத்திபாரத்தை ஆட்டம் காண வைத்தது. அதே நிலைவரத்தை அந்த வர்க்கம் தொடர்ந்து அனுமதிக்காது. எவ்வாறெனினும், மீண்டும் மக்கள் கிளர்ச்சி உருவாகாமல் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அது மேற்கொள்ளும் என்பது தெரிந்ததே. அந்த  வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதியாக ஜனாதிபதி விக்கிரமசிங்க இன்று மக்கள் போராட்டங்களுக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்கிறார்.

மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்து கிளர்ச்சிக்கான சூழ்நிலைகளை இல்லாமல் செய்வதென்பது அதிகார வர்க்கத்தினால் சாதிக்கமுடியாத ஒன்று. பதிலாக அடக்குமுறையின் ஊடாகவே கிளர்ச்சி மூளாதிருப்பதை உறுதிசெய்வதில் அவர்கள் முழுமூச்சாக செயற்படுவார்கள். அரச இயந்திரம் அந்த நோக்கத்துக்காக முழுவீச்சில் பயன்படுத்தப்படும். இதுவே இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

வரும் நாட்களில் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பதை விக்கிரமசிங்க நன்கு அறிவார். அதனால்தான் அவர் மக்கள் மீண்டும் வீதிகளில் இறங்குவதைத் தடுப்பதற்கு முன்கூட்டியே கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து பயமுறுத்துகிறார். கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் அவர் ‘மீண்டும் ஒரு அறகலயவுக்கு’ எதிராக விடுத்த எச்சரிக்கை அத்தகைய ஒன்றே.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொணரவேண்டிய நியாயபூர்வமான கடப்பாட்டின் நிமித்தம் மக்கள் போராட்டத்துக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவத்தை ஜனாதிபதி போராட்டங்களையும் வன்முறைகளையும் அவை தூண்டியதாக வியாக்கியானம் செய்கிறார். வன்முறையை ஊக்கப்படுத்திய ஊடக நிறுவனங்களைக் கண்டறியவேண்டியிருப்பதாகவும் அதற்காக ‘அறகலய’ குறித்து ஆராய ஆணைக்குழுவொன்றை நியமிக்கப்போவதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

இது உண்மையில் ஊடக சுதந்திரத்துக்கு எதிரான அப்பட்டமான அச்சுறுத்தலாகும். மக்களின் பிரச்சினைகளை ஊடகங்கள் வெளிப்படுத்துவதை அச்சுறுத்தித்  தடுக்க அவர் முற்படுகிறார்.

மீண்டும் ஒரு அறகலய மூண்டு அது ‘ரணில் கோ கம’வாக மாறுவதை ஜனாதிபதி ஒருபோதும் விரும்பமாட்டார். ஆனால், மீண்டும் மக்கள் வீதிக்கு இறங்காமல் இருப்பதென்பது அவரது அச்சுறுத்தல்களில் அல்ல, மக்களின் பொருளாதார இடர்பாடுகளைத் தணிப்பதற்கு அவரது அரசாங்கம் எடுக்கக்கூடிய பயனுறுதியுடைய நடவடிக்கைகளிலேயே தங்கியிருக்கிறது.

இன்று வீதியில் ‘அறகலய’ இல்லாமல் இருக்கலாம். ஆனால், கூரையைப் பிரித்துக்கொண்டு வானளாவ உயர்ந்துகொண்டேயிருக்கும் விலைவாசி காரணமாக ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் ‘அறகலய’ நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.

இறுதியாக, ராஜபக்‌ஷர்கள் போன்ற தலைவர்களுடன் ஒப்பிடும்போது விக்கிரமசிங்க ஒப்பீட்டளவில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு கூடுதல் மதிப்புக் கொடுப்பவராகவே அடையாளம் காணப்பட்டு வந்திருக்கிறார். ஆனால், அவர் இப்போது மக்கள் போராட்டங்களுக்கு எதிராக விடுக்கின்ற எதேச்சாதிகாரத்தனமான அச்சுறுத்தல்களை நோக்கும்போது ‘ஒருவரிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள், அவரின் உண்மையான சுபாவம் தெரியவரும்’ என்று சொல்வார்களே… அந்த கூற்றுத்தான் நினைவுக்கு வருகிறது.

வீரகத்தி தனபாலசிங்கம்