Photo, OPENACCESSGOVERNMENT

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரிட்டனின் புதிய பிரதமராக கடந்தவாரம் பதவியேற்றதும் தெற்காசியாவிலும் குறிப்பாக இந்திய உபகண்டத்திலும் ஒரு குதூகலம். இலங்கையில் உள்ளவர்களும் எமது பிராந்தியத்தில் தனது வேர்களைக் கொண்ட ஒருவர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக வந்திருப்பது குறித்து உள்ளம் குளிர்ந்தார்கள்.

சுனாக் 2015 நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டபோது பகவத்கீதையை கையில் வைத்துக்கொண்டே பதவிப்பிரமாணம் செய்தார். பிரதமராக பதவியேற்கும்போதும் அவ்வாறு பகவத்கீதையை வைத்த பதவியேற்றால் – பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற 75 வருட நிறைவில் – அது இந்தியாவுக்கு மகத்தான ஒரு நிகழ்வாக இருக்கும் என்று சென்னைவாசி ஒருவர் ருவிட்டர் சமூக ஊடகத்தில் பதிவு செய்திருந்தார். உலகம் பூராவும் இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி நாட்களில் சுனாக் பிரிட்டிஷ் பிரதமராகியிருப்பது இந்துக்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய தற்செயல் நிகழ்வு எனலாம்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆபிரிக்க அமெரிக்கரான பராக் ஒபாமா 2008 தெரிவானபோது வெளியிடப்பட்டதைப் போன்று வெள்ளையர் அல்லாத அதுவும் இந்துவான சுனாக் பதவியேற்றிருக்கும் தற்போதைய சந்தர்ப்பத்திலும் பல்வேறு விதமான பிரதிபலிப்புக்களும் எதிர்பார்ப்புக்களும் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.எமது பிராந்திய நாடுகளில் இவ்வாறாக எல்லாம் வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்தவர்களோ அல்லது சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்களோ அரசியல் உயர்பதவிக்கு வரமுடியுமா என்ற கேள்விகளுடன் ஊடகங்களில் வாதப் பிரதிவாதங்கள் மூண்டிருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

1960 களில் கிழக்கு ஆபிரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி (பஞ்சாபி இந்து) பெற்றோருக்கு மூத்த மகனாக இங்கிலாந்தின் தென்கரையோர துறைமுக நகரான சௌதாம்ரனில் 1980 மே 12 பிறந்தவர் ரிஷி சுனாக். ஸ்ராண்ட்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது தனது எதிர்கால மனைவியான – இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான இன்ஃபோசைஸ் நிறுவன உரிமையாளர் என்.ஆர். நாராயண மூர்த்தியின் மகள் – அக்சதாவை சுனாக் சந்தித்தார். அவர்களுக்கு இரு மகள்மார் இருக்கிறார்கள்.

சுனாக்கும் மனைவியும் இன்று பிரிட்டனின் 222ஆவது பெரிய தனவந்தர்களாக 73 கோடி பவுண்கள் பெறுமதியான சொத்துக்களுடன்  இருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு (House of Commons) 2015 பொதுத்தேர்தலில் நோர்த் யோர்க்ஷயரின் றிச்மண்ட் தொகுதியில் இருந்து தெரிவான சுனாக் 2016 சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் (பிரெக்சிட்)வெளியேறுவதை உறுதியாக ஆதரித்தவர். பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த சுனாக்கின் பதவி விலகலைத் தொடர்ந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.க்கள் பலரும் கிளர்ந்தெழுந்ததையடுத்தே ஜோன்சன் பதவியில் இருந்து விலகவேண்டியேற்பட்டது.

அடுத்து பிரதமராக வந்த லிஸ் ட்ரஸ் 45 நாட்கள் மாத்திரமே பதவியில் இருந்தார். மூன்று மாத காலத்தில் பிரிட்டன் காணும் மூன்றாவது பிரதமர் சுனாக் என்பது குறிப்பிடத்தக்கது.

42 வயதான அவரே 210 வருடகால வரலாற்றில் ஐக்கிய இராச்சியத்தின் மிகவும் இளமையான பிரதமர் என்ற பெருமையை தனதாக்கிக்கொண்டுள்ளார். தனது பின்புலம் காரணமாக உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் சுனாக் அண்மைக்கால வரலாற்றில் பிரிட்டன் எதிர்நோக்கியிராத பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கவேண்டிய பாரிய சவாலை எதிர்நோக்குவதால் அவரின் உயர்வை கொண்டாடுவதற்கு அவசரப்படக்கூடாது என்று சில தெற்காசிய பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கங்களில் கூறியிருக்கின்றன.

இந்திய உபகண்டத்தில் வேர்களைக் கொண்ட  வெள்ளையர் அல்லாத, இந்து மதத்தவரான  ஒருவர் முதன்முதலாக பிரிட்டிஷ் அதிகாரத்தின் உச்சிக்கு வந்திருப்பது குறித்து இந்தியர்களும் தெற்காசியர்களும் மகிழ்ச்சியடைவது போன்று கிழக்கு ஆபிரிக்க மக்கள் குறிப்பாக கென்யா மற்றும் தான்சானியாவை சேர்ந்த மக்களும் அதை கொண்டாடமுடியும்.

சுனாக்கின் தாய்வழிப்பாட்டி (தாயாரின் தாயார்) சுரக்சா ஆபிரிக்க கிராமத்தில் வளர்ந்தவர். தான்சானியாவின் தொலைதூர கிராமத்தில் ஒரு குடிசையில் இந்து பஞ்சாபி பெற்றோர்களுக்கு  பிறந்த சுரக்சா 16 வயதில் அன்று தான்சானியாவில் பணியாற்றிக்கொண்டிருந்த பஞ்சாபைச் சேர்ந்த ரயில்வே பொறியியலாளரான ரகுபிர் பெரியை திருமணம் செய்தார். தாங்கள் வெளியேறிவந்த இந்தியாவுடன் தொடர்ந்து அவர்கள் நெருக்கமான உறவுகளை பேணிவந்தார்கள். பஞ்சாபில் அவர்களின் பகுதி இப்போது பாகிஸ்தானுக்குள் இருக்கிறது.

திருமணம் செய்தால் கணவருடைய நாட்டுக்கே அவருடன் சென்றுவிடும் குடும்ப சம்பிரதாயத்தையும் மீறி சுரக்சா ஆபிரிக்காவிலேயே தனது புதிய வாழ்வை தொடங்க முடிவெடுத்து கணவரையும் இணங்கவைத்தார்.

தனது புதிய நாட்டில் ரகுபிர் வரி அதிகாரியாக தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். சுனாக்கின் தாயார் உஷா தான் முதல் பிள்ளை. அடுத்து இரு சகோதரர்கள்.

1960 களில் அந்த குடும்பத்துக்கு பிரிட்டனுக்கு குடிபெயரவேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஒக்ஸ்போர்ட்டினதும் சேக்ஸ்பியரினதும் மண் என்பதால் சுரக்சாவுக்கு பிரிட்டன் மீது ஒரு ஆர்வம் என்று தற்போது வெளியாகும் தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் பிரிட்டனுக்கு  குடிபெயருவதற்கு குடியேற்ற விதிகள் அனுகூலமானவையாக இருந்தபோதிலும் நிதி ஒரு பெரிய பிரச்சினையாக இருந்ததாம்.

மனதில் உறுதிகொண்ட சுரக்சா தனது திருமண ஆபரணங்களை விற்று அந்தப்பணத்தில் ஒரு வழிப்பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு தனது கணவரையும் மூன்று பிள்ளைகளையும் எதிர்காலத்தில் பிரிட்டனுக்கு வரவழைக்கமுடியும் என்ற நம்பிக்கையில் தான்சானியாவை விட்டு தனியாக புறப்பட்டார். குடும்ப உறவினர்களோ அல்லது நண்பர்களோ பிரிட்டனில் வரவேற்க இல்லாத நிலையில் 1966 சுரக்சா லண்டன் வந்திறங்கினார்.

லீசெஸ்டருக்கு சென்று அங்கு வாடகை அறையில் தங்கியிருந்துகொண்டு தனக்கு ஒரு வேலை தேடுவதற்கு கஷ்டப்பட்ட சுரக்சாவுக்கு இறுதியில் ஒரு எஸ்டேட் ஏஜென்சியில் கணக்குப் பதிவாளர் பதவி கிடைத்தது. கஷ்டப்பட்டு உழைத்து ஒவ்வொரு சதமாக சேமித்த அவர் அந்த பணத்தில் கணவரையும் மூன்று பிள்ளைகளையும் தன்னுடன் பிரிட்டனுக்கு அழைத்துக்கொண்டார். உஷாவுக்கு அப்போது 15 வயது. அந்தக் குடும்பம் கனவுகண்ட வாழ்க்கை பிரிட்டனில் தொடங்கியது.

மருந்தகவியல் கல்வி கற்க உஷா அஸ்ரன் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். நாளடைவில் அவர் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட – உயர் நடுத்தர வர்க்க பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்த யஷ்விர் சுனாக்கிற்கு பரஸ்பர நண்பர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டார். யஷ்விர் குடும்பம் அவரது வளரிளம் பருவத்தில் நைரோபியில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தது.

சௌதம்ரனுக்கு வருவதற்கு முன்னதாக 1977 லீசெஸ்டரில் உஷாவும் யஸ்விரும் திருமணம் செய்துகொண்டனர்.  அவர்களுக்கு முதல் பிள்ளையாக ரிஷி சுனாக் பிறந்தார். பிறகு இன்னொரு மகனும் மகளும் பிறந்தார்கள். இதுவே சுனாக் குடும்பத்தின் பின்புலத்தின் சுருக்கம்.

இது இவ்வாறிருக்க, ஆபிரிக்காவில் வேர்களைக் கொண்ட இந்திய வம்சாவளியின் இந்துப் புதல்வன் ஒருவன் ஒரு காலத்தில் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் பிரதமாக வந்துவிட்டார் என்பதால் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுவிடும் என்று அங்கலாய்கத் தேவையில்லை.

பிரிட்டனின் முதலாளித்துவ அரசியல் கட்டமைப்பு சிறுபான்மையினத்தவர்களை பிரதமராக அனுமதிக்கும் அளவுக்கு தாராளவாத போக்குடையதாக இருக்கிறது என்பது தரம் சார்ந்த ஒரு பண்பு முன்னேற்றமாக இருக்கிறது. அது வரவேற்கப்படவேண்டியதே. சிறுபான்மையினத்தவர்களை அதுவும் குறிப்பாக வெள்ளையர் அல்லாத குடியேற்றவாசிகளின் சந்ததியினரை ஆட்சியதிகார கட்டமைப்புக்குள் உள்வாங்கி உச்சப் பதவிகளை அவர்கள் வகிப்பதற்கு வசதியாக அமைந்திருக்கும் போக்கு பிரிட்டிஷ் வெள்ளையர் சமுதாயத்தினால் எவ்வாறு நாளடைவில் நோக்கப்படும் என்பது முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்றாகும்.

ஐரோப்பாவின் பல நாடுகளில் குடியேற்றவாசிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட தீவிர வலதுசாரி அரசியல் சக்திகளின் செல்வாக்கு கடுமையாக அதிகரித்துவரும் நிலையில் சுனாக்கின் உயர்வு பிரிட்டனிலும் அத்தகைய அரசியல் சக்திகளின் செல்வாக்கு அதிகரிப்புக்கு வழிவகுத்துவிடக்கூடிய ஆபத்து குறித்தும் சிந்திக்கவேண்டியிருக்கிறது. பிரெக்சிட்டுக்கு வழிவகுத்த காரணிகளில் வெளிநாட்டு குடியேற்றவாசிகளுக்கு எதிரான வெள்ளையரின் உணர்வுகளும் முக்கியமானது.

பிரிட்டிஷ் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சுனாக்கை தலைவராக தெரிவுசெய்து பிரதமராக்கியிருக்கிறது என்றால் அந்த நாட்டின் ஆட்சியதிகார வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கக்கூடிய ஒரு தலைவராக அவரை அவர்கள் நம்பிக்கையுடன் அடையாளம் கண்டதே  அதற்கு அடிப்படைக் காரணம். ஒபாமா எவ்வாறு தனக்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளை விடவும் வித்தியாசமாக எவ்வாறு செயற்படவில்லையோ அதேபோன்றே சுனாக்கும் நடந்துகொள்ளவேண்டியிருக்கும் எனலாம்.

சுனாக்கின் உயர்வை இனவெறி இல்லாத பிரிட்டிஷ் சமுதாயம் ஒன்றின் வெளிக்கிளம்பலின் அடையாளமாகப் பார்க்கமுடியாது. என்றாலும், பிரிட்டிஷ் மன்னர் சார்ள்ஸ் கிறிஸ்தவராகவும் பிரதமர் ரிஷி சுனாக் இந்துவாகவும் லண்டன் மாநகரின் மேயர் பிரபு சாதீக் கான் முஸ்லிமாகவும் இருப்பது சுவாரஸ்யமானதே.

இன்னொரு சுவாரஸ்யம். தனது றிச்மண்ட் தொகுதி மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி வியாபாரிகளை நூற்றுக்கணக்கில் கொண்டதாக இருக்கிறது என்றும் அந்தக் கால்நடை பண்ணை விவசாயிகளின் ‘அருமையான’ தொழில்துறையை ஆதரிக்க தான் கடமைப்பட்டவர் என்று பிரதமர் சுனாக் ஓரிரு  தினங்களுக்கு முன்னர் ருவிட்டரில் பதிவொன்றைச் செய்திருந்தார்.

உணவுத்தெரிவு என்பது மக்களின் சொந்த உரிமை. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கால்நடை பண்ணை விவசாயிகளுக்காக குரல்கொடுக்கும் அரசாங்கம் ஒன்றுக்கு தலைமைதாங்கப்போவதாகவும் அந்தப் பதிவில் அவர் மேலும் கூறியிருக்கிறார்.

இந்து என்பதால் அவரைக் கொண்டாடுவோர் இதைக் கண்டு என்ன நினைப்பார்களோ?குறிப்பாக இந்தியாவின் இந்துத்வா சக்திகள்.

வீரகத்தி தனபாலசிங்கம்