Photo, Selvaraja Rajasegar

மலையக வரலாறு இரு நூற்றாண்டை எட்டியுள்ள நிலையில் மலையகத் தமிழர்கள் தமது அடையாளம் குறித்த தேடுதலில் இன்றும் உள்ளனர்.

  • ஆரம்பத்தில் இந்தியத் தமிழர்கள் என அழைக்கப்பட்டனர்.
  • இந்திய வம்சாவளித் தமிழர் என்றும் அழைத்தனர்.
  • மலையகத் தமிழர் என்பது இன்று பரவலாகப் பேசப்படும் சொற்பதம்.

இந்தப் பெயர்களில் அரச அங்கீகாரம் ‘இந்தியத் தமிழ்’ என்பதுதான்.

பிறப்புச் சான்றிதழ் முதல் கொண்டு அணைத்து அரச ஆவணங்களிலும் ‘இந்தியத் தமிழ்’ என்பதுதான் பிரகடனப்படுத்தப்பட்ட பெயர். இது இன்றுவரை எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கின்றது.

‘இந்தியத் தமிழ்’ என்பது இந்திய அடையாளத்தின்பாற்பட்டது. இந்தப் பெயருடன் எமக்கு உடன்பாடில்லை எனக் கூறியே ‘மலையகத் தமிழர்’ என்ற சொற்பதம் வலிந்து புகுத்தப்பட்டது. ஆனால் இதற்கான அரச அங்கீகாரம் இதுவரை பெறப்படவில்லை.

இந்தியாவில் ‘சிலோன்காரன்’

இதில் விசித்திரம் என்னவெனில் மலையகத்தில் இருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த தமிழர்கள் இந்தியத் தமிழர் என்ற அடையாளத்தடன் அழைக்கப்படவில்லை. அவர்கள் ‘சிலோன்காரன்’ என்றே இந்தியாவில் அழைக்கப்படுகின்றனர்

மலையகத்தின் ‘ஹெனான்’ என்று ஹட்டனை வரித்துக் கொண்டவர்கள் மலையகத் தமிழர் என்று அழைத்துக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டினர். அந்த தலைமுறையைச் சார்ந்தவர்கள் பிரதி அமைச்சராகவும் இருந்தபோதும் இந்த மலையகத் தமிழர் சொற் பதத்திற்கு அரச அங்கீகாரம் பெறுவது குறித்து சிந்திக்கவும் இல்லை செயலில் இறங்கவும் இல்லை. இது மக்கள் மத்தியில் நாம் யார்? தமது அடையாளம் என்ன? என்பது குறித்த குழப்பம் தலைவிரித்தாட காரணமாகியது.

இதனால் பெரும்பாலான மக்கள் தம்மை ‘இலங்கைத் தமிழர்’ என்று ஆவணங்களில் அடையாளப்படுத்திக் கொள்ளத் தொடங்கினர். இந்தப் போக்கு மலையக மாவட்டங்கள் பலவற்றில் சத்தமின்றி அரங்கேறத் தொடங்கியது.

தென்பகுதியில் சிங்களமயமாகும் மலையகத் தமிழர்

ஆனால், தென் மாவட்டங்களில் உள்ள மலையகத் தமிழர்கள் தம்மை பெரும்பான்மை இனத்துடன் அடையாளப்படுத்திக் கொள்ளத் தொடங்கினர். கணேசன் அப்புகாமி, கந்தசாமி பண்டா என்று பெயர்கள் மாற்றம் பெறுகின்றன. இதைப் பற்றி அவர்களிடம் வினவினால் அடுத்த சந்ததியாவது பிரச்சினை இன்றி இருக்கும் என்று அப்பாவித்தனமாகக் கூறி தம்மை சமாதானப்படுத்திக் கொள்ளும் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு பெரும்பான்மை இனத்தவர்களின் பெயர்களை சூட்டத் தொடங்கியுள்ளனர்.

அதேவேளையில் போதிய தமிழ்ப் பாடசாலைகள் தென் பகுதிகளில் இல்லாத நிலையில் சிங்களப் பாடசாலைகளில் தமது பிள்ளைகளைச் சேர்த்து சிங்கள மொழியில் கல்வி கற்க வைக்கின்றனர். அதாவது தமது எதிர்காலச் சந்ததியினரை சிங்களம் நோக்கி கலந்து கறைந்துப்போக வைப்பதில் முனைப்பாக இருக்கின்றனர்.

மொத்தத்தில் அரச ஆவணரீதியாக ‘இந்தியத் தமிழர்’ என இருக்கும் அடையாளத்தை ஏற்கும் மன நிலையில் இல்லாத மக்கள் தமது அடையாளத்திற்கான தீர்க்கமான முடிவினை எடுக்க முடியாத நிலையில் திசைமாறி சீரழிந்து கொண்டிருக்கின்றனர்.

வழி காட்ட எவரும் இல்லை. இதுதான் உனது அடையாளம் என கை காட்டியவர்களும் பேசு பொருளாக மட்டுமே ‘மலையகத் தமிழர்’ என்ற பெயரை வைத்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவுதான் மலையகம் இன்றும் தனது அடையாளம் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றது. ஆனால், மக்கள் குழப்பத்தில் இன அடையாளத்தை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலை தொடருமாக இருப்பின் தேசிய இன விகிதாசாரத்தில் நாம் பேசுகின்ற மலையகத் தமிழர் மிக விரைவில் பூஜ்ஜியத்திற்குள் சென்றுவிடுவர். இதனையே சிங்கள தேசம் எதிர்பார்க்கின்றது. அவர்கள் தமிழர்கள் இல்லாத அல்லது சிங்களவர்களாகிய தமிழர்களையும் இணைத்த சிங்கள தேசத்தையே எதிர்பார்க்கின்றனர். அதனை நோக்கியதாகவே தென்னிலங்கையின் அனைத்து நகர்வுகளும் உள்ளன.

ஊழல் மோசடிக்குள் மிதக்கும் மலையக தொழிங்சங்க அரசியல் கட்டமைப்பு

இதனை விரைவுபடுத்துவதாக மலையக தொழிற்சங்க அரசியல் இருக்கின்றது என்பதை பதிவு செய்தாக வேண்டும். மலையக தொழிற்சங்க அரசியல் தோட்டத் தலைவர்களில் இருந்து மாவட்டத் தலைவர்கள் மற்றும் உயர்மட்டத்தினர் வரை ஊழலில் மிதப்பதாக மக்கள் கனல் கக்கும் கோபத்தில் உள்ளனர்.

மலையகம் அடுத்து என்ன? என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை ஒன்று குறித்து தமிழகத்தில் இருந்து ஒருவர் இவ்வாறு கருத்தினைப் பதிவு செய்திருந்தார்.

‘எப்படிப் பார்த்தாலும் நல்ல ஒரு தலைவர் மலையகத்தில் தென்படவில்லையே’ என்ற ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தார்.

கம்பளையில் இருந்து ஒருவர் கோபக் கனல் கக்க தெறிக்கவிட்ட எழுத்து இது.

‘மக்கள் மடையர்களாக இருக்கும்வரை அரசியல்வாதிகள் புத்திசாலிகளே’ என பதிவிட்டுள்ளார்.

இந்த இரு பதிவுகளையும் மலையக மக்களுக்காகவும் மலையக தொழிங்சங்க அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் பின்னால் நிற்கும் ‘மலையக படித்தவர்களின்’ முன்பாகவும் வைக்கின்றேன்.

ஏனெனில், இந்த ‘படித்தவர்கள்’ மலையக தொழிங்சங்க அரசியல்வாதிகளை சமூக நலன் நோக்கி வழிநடத்தாது தவறிழைத்துக் கொண்டிருக்கின்றனர். இது மலையக சமூகத்திற்கு செய்யும் கூட்டுத் துரோகமாகும்.

தொழிற்சங்க கட்டமைப்பு இன்று பெரிய மாறுதல்களைக் கண்டுள்ளது. இந்த மாறுதல்களை தொழிங்சங்கத் தலைமைகள் மாத்திரம் அல்ல அவர்களின் பின்னால் நிற்கின்ற ‘மலையக படித்தவர்களும்’ அறிவர். ஆனால், தொழிற்சங்க கட்டமைப்பில் மாறுதல்களை கொண்டுவருவதில் இவர்கள் ஏன் அக்கறை காட்டுகின்றார்கள் இல்லை என்பதுதான் புதிராக இருக்கின்றது.

கருப்புத் தோல் துரைத்தனம்

தோட்டத்துறையும் காலனித்துவத்தின் எச்சசொச்சங்களை சுமந்து கொண்டு கருப்புத் தோல் துரைத்தனத்துடன் தோட்டத்துறையை நிர்வகிக்கின்றனர். இதனால் தோட்டத்துறையில் முரண்பாடுகளுக்கு பஞ்சமின்றி கொட்டிக் கிடக்கின்றன.

தற்போது தென்னிலங்கை மக்கள் கோரி நிற்கின்ற ‘சிஷ்டம் சேஞ்’ மலையக தொழிங்சங்க அரசியலிலும் வேண்டும். மலையக மக்கள் இதுவரை தொழிங்சங்க அரசியல் குடும்பங்களையும் அவர்கள் சார்ந்தோரையும் வாழ வைத்தது போதும். மலையக மக்களை வாழ வைப்பதற்கான அரசியலுக்கான பாதையை மக்களே தீர்மானிக்கட்டும். அதற்கு துணையாக மலையக சக்திகளும் சிவில் சமூகமும் திரண்டெழ வேண்டும். ஏனெனில், மலையகம் பரந்து விரிந்தது.

மலையகம் பரந்து விரிந்தது

மலையகம் என்பது தோட்டத்துறை சார்ந்த ஒரு இலட்சத்து 25 ஆயிரம் தொழிலாளர்கள் மாத்திரம் அல்ல அவர்களுடன் சார்ந்த குடும்ப அங்கத்தவர்களுடன் அவர்களில் தங்கி இருப்போருடன்  சுமார் 7 இலட்சம் பேருடைய வாழ்வாதார, அரசியல் பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டது.

இதற்கும் அப்பால் ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகத்துறை சார்ந்தவர்கள், வேலை வாய்ப்புக்காக கொழும்பு போன்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என பல தரப்பட்டவர்கள் அடங்குகின்றனர். இவர்கள் அனைவர்களின் அடையாளமும் அரசியல் பயணமும் கேள்விக் குறியாக நிற்கின்றது.

பொங்கல் தீபாவளி மாத்திரமல்ல வருடாந்தம் நடைபெறும் கோவில் பூஜைகளும் இவர்கள் ஒன்று கூடும் மையங்களாக தோட்டங்கள்  உள்ளன. மலையகத்தைச் சேர்ந்த பெரும்பாலான வர்த்தகர்கள் தமது அடையாளத்திற்காக தோட்டக் கோவில்களை தத்தெடுத்து வைபவங்களை நடத்த தோட்டங்களுக்கு வந்து போவதும் வழமை.

மொத்தத்தில் பேசப்படுகின்ற ‘மலையகம்’ என்பது இந்த மக்களின் வாழ்வுடன் இணைந்த குறியீடு. இந்தக் குறியீட்டைத்தான் சிங்கள தேசம் காணாமல் ஆக்க முயல்கின்றது. அந்த வகையில் தோட்டம் என்பது மலையக மக்களுக்கு ஒரு குறியீடு.  அந்தக் குறியீட்டைச் சிதைப்பதே தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றது.

சிதைவடையும் பெருந் தோட்டப் பொருளாதாரம்

  • தோட்டப் காணிகள் துண்டாடப்படுகின்றன.
  • சிங்களக் குடியேற்றத்திற்காகவும், நகர, மாநகர அபிவிருத்திகளுக்காகவும், காணிகள் கையகப்படுத்தப்படுகின்றன.
  • தோட்டங்களில் வேலையின்மை வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
  • இதனால் பெரும்பாலான மலையக இளைஞர், யுவதிகள் கொழும்பு போன்ற நகரங்களுக்கு வேலையாட்களாக அதாவது வேறு சமூகங்கள் செய்ய முன்வராத கண்ணியம் குறைந்த வேலைவாய்ப்புகளில் உள்வாங்கப்படுகின்றனர்.
  • இது மலையக வாக்கு வங்கியில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தவல்லன.
  • இது தொடர்ந்தால் இன்றைய தொழிற்சங்க அரசியலும் கேள்விக் குறியாகும்.
  • மலையக அரசியல் என்பது சிங்கள அரசியலின் எச்சங்களாக மாறிவிடும் (இதில் இருந்து மீட்சிபெற மலையக சமூகம் தனக்குத்தானே புதிய இரத்தத்தைப் பாய்ச்சிக் கொண்டு புதுப் பிரசவம் எடுக்க வேண்டும்).
  • திராவிட செல்வாக்கை தடுத்து நிறுத்தினர்.

மலையகம் 1960களில் திராவிட செல்வாக்கால் அதிகம் ஈர்க்கப்பட்ட பகுதியாக இருந்தது. ஈவேராவின் சீர்திருத்தக் கருத்துக்களால் உயிரூட்டப்பட்ட மலையகம் அது.

மலையகத்தை நோக்கிய இந்தத் தமிழக அலை சிங்கள ஆட்சியாளர்களை கிலி கொள்ள வைத்தது. இந்த பின்னணியிலேயே தமிழக பிரசுரங்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டன. உள்ளூர் பிரசுரங்களை ஊக்குவிப்பதற்கும் உள்ளூர் எழத்தாளர்களை வளர்த்தெடுப்பதற்குமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றதென ஆட்சியாளர் தரப்பில் கூறப்பட்டது.

இது அவ்வேளையில் சரியான தீர்மானமாகவே பார்க்கப்பட்டது. இலங்கையின் தமிழ் இலக்கிய எழுத்துத்துறை உலகில் புதிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டது என்பது உண்மையே. ஆனால், சிங்கள ஆட்சியாளரின் நகர்வு வேறுவிதமாக இருந்தது.

அதேவேளையில் சுதந்திர இலங்கையில் பிரஜா உரிமை சட்டத்தின் மூலம் அரசியல் அநாதைகளாக்கப்பட்ட மக்களுக்காக நியமன எம்பி பதவியை மலையகத் தலைமைகளுக்கு வழங்க சிங்கள ஆட்சியாளர்கள் முன்வந்தனர். ஏ.எம்.அஸீஸ், எஸ்.தொண்டமான் ஆகியோருக்கு நியமன எம்பி பதவி வழங்கப்பட்டன. இது கூட மலையகத்தை நோக்கிய தமிழக அலையை தடுத்து நிறுத்தும் சிங்கள ஆட்சியாளர்களின் நகர்வாகும். இதில் சிங்கள ஆட்சியாளர்கள் வெற்றியும் பெற்றனர்.

தமிழகத் தொடர்புகளை தடுத்து நிறுத்துவதில் வெற்றி கண்ட சிங்கள ஆட்சியாளர்கள் மலையக மக்களை ‘இந்தியத் தமிழர்’ என்ற சொற்பதத்துக்குள்ளேயே வைத்திருந்தனர். இன்றும் அதே சொற்பதமே தொடர்கின்றது.

இந்தச் சொற்பதத்தால் பெருமிதம் அடையும் மலையகத் தமிழர்களும் உள்ளனர். இந்த அடையாளம் இலங்கை மண்ணில் தம்மை அந்நியப்படுத்துகின்றது என்ற உணர்வுகளால் வேதனையில் வெந்து சாவோரும் உள்ளனர். இந்த மனப் போராட்டமே மலையகத் தமிழர் என பேச வைக்கின்றது. ஆனால், மலையகத்துக்கான அடையாளம் இன்றும் பேசு பொருளாகவே உள்ளது.

மலையகம் தமது அடையாளத்துக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும். இதற்கு விரைந்து விடை காணப்பட வேண்டும். விரைந்து முடிவுக்கு வராவிடில் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் மலையகத் தமிழினத்தின் தலைவிதி மாற்றப்படுவதை தடுத்து நிறுத்த முடியாது போய்விடும்.

வி.தேவராஜ்