Photo, LICIAS.COM, Ishara Kodikara/ AFP

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட போதிலும் கூட உள்ளூராட்சி தேர்தல்களுக்கு எதிரான அரசாங்கத் தரப்பின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றன.

கலைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்கான அதிகாரத்தை உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சருக்கு வழங்குவதற்கு மாநகர சபைகள் கட்டளைச் சட்டம், நகர சபைகள் கட்டளைச் சட்டம் மற்றும் பிரதேச சபைகள் சட்டத்தின் பல பிரிவுகளுக்கு திருத்தங்களைக் கொண்டுவருவதை நோக்கமாகக்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இரு சட்டமூலங்களைக் கொண்ட தனிநபர் பிரேரணையொன்றைக் கொண்டுவந்திருக்கிறார். ஜூன் 26 வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சட்டமூலங்கள் ஜூலை 5 நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு புதிய தேர்தல்களுக்கான அறிவிப்பு செய்யப்பட்ட நிலையில் நெருக்கடியொன்றின் காரணமாக அவற்றை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் கலைக்கப்பட்ட சபைகளை குறிப்பிட்ட காலப்பகுதிக்கு கூட்டுவதற்கு அமைச்சருக்கு அதிகாரம் அளிக்கக்கூடியதாக தற்போதைய சட்டங்கள் திருத்தப்படவேண்டும் என்று கெட்டகொடவின் பிரேரணையில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் தனது தற்துணிபில் உள்ளூராட்சி சபைகளை எவ்வளவு காலத்துக்கு மீண்டும்  கூட்டமுடியும் என்று அதில் பிரத்தியேகமாகக் கூறப்படவில்லை. அதனால் சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் கலைக்கப்பட்ட சபைகளை மீண்டும் ஒரு நீண்டகாலத்துக்கு செயற்படவைக்கக்கூடிய ஆபத்து இருப்பதாக அரசியல் அவதானிகள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

அதேவேளை, உள்ளூராட்சி சபைகளை தனிநபர் சட்டமூலங்கள் ஊடாக மீண்டும் கூட்டுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி அரசியலமைப்புக்கு முரணானது என்று சட்டமா அதிபர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

கெட்டகொடவின் சட்டமூலங்கள் அரசியலமைப்புக்கு முரணான பிரிவுகளைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆதரவுடன் நிறைவேற்றுவதற்கு புறம்பாக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் மக்களின் அங்கீகாரமும் பெறப்படவேண்டும் என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு எழுதிய கடிதத்தில்  சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சட்டமூலங்களின் ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்  ‘நெருக்கடிக்கு’ தொடர்பில்லாத வகையில் வரையறை குறிப்பிடப்படாத ஒரு காலப்பகுதிக்கு (கலைக்கப்பட்ட) உள்ளூராட்சி சபைகள் கூட்டப்படக்கூடும். அதனால் உத்தேச திருத்தம் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கும் தேர்தல்களை தாமதிப்பதற்கும் ஜனநாயக அடிப்படையில் ஒரு ஆணையைப் பெறாமல் உள்ளூராட்சி உறுப்பினர்கள் வரையறை குறிப்பிடப்படாத காலப்பகுதிக்குப் பதவியில் தொடரவும் வழிவகுக்கும். அதனால் வாக்களிப்பதற்கான மக்களின் அடிப்படை உரிமையும் அவர்கள் தேர்தல்களில் நிற்பதற்கான உரிமையும் பாதிக்கப்படும் என்று  சட்டமா அதிபர் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

கெட்டகொடவின் பிரேரணைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் எதிரணி கட்சிகள் அரசியலமைப்புக்கு முரணான சட்டமூலங்களை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கு பதிலாக அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டிருக்கின்றன.

இதனிடையே சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் (பவ்ரல்) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ரோஹண ஹெட்டியாராச்சி சட்டமூலங்களின் அரசியலமைப்புப் பொருத்தப்பாட்டை கேள்விக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் கடந்தவாரம் விசேட தீர்மானம் கோரும் மனுவொன்றைத் தாக்கல் செய்திருக்கிறார்.

உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதைத் தடுப்பதற்கு சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யக்கூடிய ஆபத்தான சூழ்நிலையை கெட்டகொடவின் பிரேரணை தோற்றுவிக்கும் என்பதால் அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும் ஜனநாயக முறைமை முழுமையின் மீதும் மக்களை நம்பிக்கை இழக்கச்செய்துவிடும் என்றும் ஹெட்டியாராச்சி மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் மேலும் பல மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

உயர்நீதிமன்றத்திடம் இருந்து வரக்கடிய தீர்மானம், நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு எழுதிய கடிதத்தில் சட்டமா அதிபர்  ஏற்கெனவே தெரிவித்திருக்கும் அபிப்பிராயத்தின் பின்புலத்தில் கெட்டகொடவின் பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

உள்ளூராட்சி தேர்தல்களில் தங்களுக்கு ஏற்படக்கூடிய படுதோல்வி பதவியில் இருப்பதற்கான நியாயப்பாட்டைப் பொறுத்தவரை ஏற்கெனவே பெரும் சவாலை எதிர்நோக்கும் தங்களது அரசாங்கத்துக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று அஞ்சும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுனவும் வியூகங்களை வகுக்கின்றன.

கெட்டகொடவின் பிரேரணையை உள்ளூராட்சி தேர்தல்கள்  தற்போதைக்கு நடத்தப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இதுவரையில் அரசாங்கம் செய்துவந்த இடையூறுகள் மற்றும் கெடுபிடிகளின் ஒரு தொடர்ச்சியாகவே நோக்கவேண்டும்.

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களுக்கான நியமனப்பத்திரங்களை ரத்துச்செய்வதற்கு நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரவேண்டும் என்று அரசாங்க அரசியல்வாதிகள் சிலர் யோசனை தெரிவித்த சில நாட்களில் கெட்டகொட கலைக்கப்பட்ட சபைகளை மீண்டும் கூட்டுவதற்கான இந்தப் பிரேரணையை கொண்டு வந்திருக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தல்களை தற்போதைக்கு நடத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்பதில் கடும் உறுதியாக இருக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க கலைக்கப்பட்ட சபைகளை மீண்டும் கூட்டுவதை நோக்கமாகக் கொண்ட முயற்சி குறித்து இதுவரையில் கருத்து எதையும் வெளியிடவில்லை.

கெட்டகொட பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ஷவின் தீவிர விசுவாசி. அதனால் பசிலின் தூண்டுதலின் பேரில்தான் அவர் இந்த தனிநபர் சட்டமூலங்களைக் கொண்டுவந்திருப்பார் என்று வலுவாக நம்பப்படுகிறது.

கலைக்கப்பட்ட 340 உள்ளூராட்சி சபைகளில் 330 சபைகள் பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் இருந்தவை. அந்தச் சபைகள் மீண்டும் கூட்டப்பட்டால் பயனடையப்போவது அந்தக் கட்சியேயாகும். மக்கள் செல்வாக்கை இழந்த நிலையில் மீண்டும் உள்ளூர் மட்டங்களில் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு உள்ளூராட்சி உறுப்பினர்களை வலிமையான படையணியாக பயன்படுத்தமுடியும் என்று பசில் நம்புகிறார் போலும்.

சபைகள் மீண்டும் கூட்டப்படுமேயானால் பொதுஜன பெரமுனவைப் பொறுத்தவரை இரட்டைப் பயன் இருக்கிறது. அதாவது உள்ளூராட்சி தேர்தல்களுக்கு தற்போதைக்கு முகங்கொடுக்கவேண்டியதில்லை. அதேவேளை, தேர்தல் இல்லாமலேயே மீண்டும் உள்ளூராட்சி சபைகள் பொதுஜன பெரமுனவின் ஆதிக்கத்தில் வந்துவிடும். அத்தகைய ஒரு சாத்தியப்பாட்டை ஜனாதிபதி விக்கிரமசிங்க விரும்புவாரா என்பது முக்கியமான ஒரு கேள்வி.

அதேவேளை, இந்த நிகழ்வுப் போக்குகளை எல்லாம்  நாட்டு மக்கள் எவ்வாறு நோக்குவார்கள் என்பது பற்றி அரசாங்க அரசியல்வாதிகளுக்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை.

மீண்டும் மக்கள் கிளர்ச்சியொன்று மூண்டுவிடாதிருப்பதை உறுதிசெய்வதில் குறியாக இருக்கும் அரசாங்கம் சிறிய ஒரு ஆர்ப்பாட்டத்தைக்கூட அளவுக்கும் அதிகமான படைபலம் கொண்டு அடக்குகிறது. அத்தகைய அடக்குமுறையை முன்னெடுத்துக் கொண்டு ‘நியாயப்பாட்டை’ இழந்துவிட்ட நாடாளுமன்றம் ஒன்றை பயன்படுத்தி ஜனநாயக விரோதமான சட்டங்களை நிறைவேற்றுவதில் அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகிறது.

2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக அதிகாரத்துக்கு வந்த கோட்டபாய ராஜபக்‌ஷ அவரது தவறான ஆட்சிமுறைக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியின் விளைவாக இரண்டரை வருடங்களுக்குள்ளாகவே பதவியில் இருந்து விரட்டப்பட்டார். 2020 ஆகஸ்ட் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பிரதமராக பதவிக்கு வந்த மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது அமைச்சரவையும் அதே மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் பதவிவிலகவேண்டியேற்பட்டது.

அதனால், இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் அளித்த ஆணை இன்னமும் கூட ‘நியாயப்பாட்டைக்’ கொண்டிருக்கிறது என்று கூறமுடியாது.

இத்தகைய ஒரு நாடாளுமன்றத்தை, மக்களின் வாக்குரிமையைப் பாதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் பயன்படுத்த முனைவது படுமோசமான ஜனநாயக விரோதப் போக்காகும். இதைத் தடுக்க ஜனநாயக ரீதியான வெகுஜனப் போராட்டங்கள் அவசியம்.

வீரகத்தி தனபாலசிங்கம்