Photo, CHANNEL4

பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை இலங்கை விவகாரங்கள் தொடர்பில் விவரணக் காணொளிகளை வெளியிடும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கிளம்பும் சர்ச்சைகள்  சர்வதேச கவனத்தை ஈர்த்துவிடுகின்றன.

உள்நாட்டுப் போரின் இறுதி வாரங்கள் பற்றி ‘இலங்கையின் கொலைக்களங்கள் ‘(Sri Lanka’s Killing fields) என்ற தலைப்பில் 12 வருடங்களுக்கு முன்னர் சனல் 4 வெளியிட்ட புலனாய்வு விவரணக் காணொளியை நாம் எல்லோரும் பார்த்தோம்.

2011 ஜூன் 14 ஒளிபரப்பான ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ பிரிட்டனின் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் விரிவிளக்கமான விவரணக் காணொளிகளில் ஒன்று என்று கூட வர்ணிக்கப்பட்டது. அது மோதல் வலயத்தில் இடம்பெற்ற அதிர்ச்சியும் அச்சமும் தருகின்ற கொடூரமான போர்க் குற்றங்களை உலகிற்குக் காண்பித்தது.

ஸ்கொட்லாந்து திரைப்படத் தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான கலம் மக்ரேயின்  நெறியாள்கையில் பிரிட்டிஷ் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஜோன் சினோவின் விளக்கத்துடன் வெளியான அந்தக் காணொளியில் போரில் உயிர்த்தப்பிய குடிமக்கள், அந்தக் காலப்பகுதியில் இலங்கையில் இருந்த ஐக்கிய நாடுகள் பணியாளர்கள், மனித உரிமைகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச சட்ட நிபுணர்களின் நேர்காணல்களும் இடம்பெற்றிருந்தன.

இலங்கை அரசாங்கத்தினால் ‘போலியானது’ என்று வர்ணிக்கப்பட்ட காணொளியை மறுதலிக்க பாதுகாப்பு அமைச்சு ‘திட்டமிட்ட பொய்கள்’ (Lies Agreed upon) என்ற தலைப்பில் விவரணக் காணொளியை தயாரித்து வெளியிட்டது. ஆனால் ‘இலங்கையின்  கொலைக்களங்களுக்கு’ சிறந்த விவரணக் காணொளிகளுக்கான சர்வதேச விருதுகள் சிலவும் கிடைத்தன.

இப்போது 12 வருடங்களுக்குப் பிறகு கடந்தவாரம் (செப்.5) இலங்கை தொடர்பில் சனல் 4 வெளியிட்டிருக்கும் இன்னொரு விவரணக் காணொளி மீண்டும் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது.

2019 உயிர்த்த ஞாயிறு (ஏப்ரல் 21) கொழும்பிலும் மட்டக்களப்பிலும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஆடம்பர ஹோட்டல்களிலும் பல வெளிநாட்டவர்கள் உட்பட  269 பேரைப் பலிகொண்ட குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ‘இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் – செய்தி அனுப்பீடுகள்  ‘( Sri Lanka’s Easter Bombings – dispatches) என்ற தலைப்பிலான புதிய காணொளி அந்தக் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் பெரிய அரசியல் சதித்திட்டம் ஒன்று பற்றிய தகவல்களை பிரதானமாக சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரியிருக்கும் இலங்கையர் ஒருவரின் நேர்காணலின் மூலம் வெளிப்படுத்துகிறது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான  பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தனின் ஊடக பேச்சாளராகவும் நிதிச் செயலாளராகவும் முன்னர் பணியாற்றிய ஹன்சீர் அசாத் மௌலானா என்பவரே சனல் 4 அலைவரிசைக்கு நேர்காணலை வழங்கியிருப்பவர்.

ராஜபக்‌ஷர்களை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்கு குறிப்பாக கோட்டபாய ராஜபக்‌ஷவை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவைப்பதற்கு வசதியாக நாட்டில் பாதுகாப்பற்ற அச்சமான சூழ்நிலையை உருவாக்கும் நோக்குடன் தீட்டப்பட்ட சதித்திட்டத்தின் விளைவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் என்று நிறுவுவதை இலக்காகக் கொண்டே அசாத் மொலானா தகவல்களை கூறுகிறார்.

குண்டுத் தாக்குதல்களை நடத்த இஸ்லாமிய தீவிரவாதிகளைப் பயன்படுத்துவதற்கு தனது உதவியை இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே நாடியது பற்றியும் அதுவிடயத்தில் தான் செய்த காரியங்களையும் கூறும் அவர் பிள்ளையானையும் அந்தத் சதித்திட்டத்தின் ஒரு பங்காளியாகக் காண்பிக்கிறார்.

‘சதித்திட்டம் பற்றிய தகவல்களுக்கு அப்பால் ‘சண்டே லீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை, பிள்ளையானை முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஸப் பரராஜசிங்கம் கொலைவழக்கில் இருந்து விடுவிக்க நீதித்துறையில் செய்யப்பட்ட தலையீடுகள் போன்ற வேறு விவகாரங்கள் தொடர்பிலும் மௌலானா பல விடயங்களை கூறியிருக்கின்றார் என்ற போதிலும் இந்தக் கட்டுரையின் நோக்கம் சனல் 4 காணொளிக்குப் பிறகு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு விடுக்கப்படும் கோரிக்கைகளில்  கவனம் செலுத்துவதே என்பதால் அவற்றை அலசுவதை இங்கு தவிர்க்கிறோம்.

‘இலங்கையின் கொலைக்களங்கள் ‘ காணொளியை நிராகரித்து அன்றைய அரசாங்கம் அதன் எதிர்வினையைக் காட்டுவதில் அவதானிக்கக்கூடியதாக இருந்த முனைப்பை புதிய காணொளி விவகாரத்தில் தற்போதைய அரசாங்கத்திடம் காணமுடியவில்லை.

ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக அரங்கேற்றப்படும் ஒரு ‘நாடகமாக’ சனல் 4 காணொளியை நோக்கும் அரசாங்கம் அதில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு  ஒரு வரம்புக்கு உட்பட்டதாக பதிலளிப்பதே பொருத்தமானது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது.

காணொளியில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்படுபவர்கள் மாத்திரம் பதிலளிக்க வேண்டுமே தவிர முழு அரசாங்கமும் அதைச் செய்யத் தேவையில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியதாக கடந்த வாரம் செய்திகள் வெளியான போதிலும், நேற்று சனிக்கிழமை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு அமைச்சு குற்றச்சாட்டுக்களை திடடவட்டமாக மறுத்து அறிக்கையொன்றை வெளியிட்டது.

காணொளி குறித்து அரசாங்கம் புதிய விசாரணையொன்றை நடத்தும் என்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பது தொடர்பிலான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும்  நாடாளுமன்றத்தில் அமைச்சர் மனுஷ நாணயக்கார முதலில் அறிவித்தார்.

அதேவேளை இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது தனது முன்னாள் செயலாளர் ஒரு ஏமாற்றுப்பேர்வழி என்றும் அவர் தான் தப்பிப்பிழைப்பதற்காக மற்றவர்களுக்கு துரோகமிழைக்கிறார் என்றும் குறிப்பிட்டார். இலங்கையில் தன்னால் வாழமுடியாது என்று பொய் கூறி மௌலானா வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோருகிறார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவினரே என்பதை கத்தோலிக்கத் திருச்சபையும் மற்றையவர்களும் விளங்கிக்கொள்ளவேண்டும் என்று பிள்ளையான் கூறினார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ கடந்த வியாழக்கிழமை நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டு சனல் 4 காணொளி ராஜபக்‌ஷர்களுக்கு  எதிரான வசைமாரி என்றும் அதன் பிரதான நோக்கம் 2005 தொடங்கி ராஜபக்‌ஷர்களின் மரபுக்கு கரிபூசுவதேயாகும் என்றும் கூறியிருக்கிறார். அந்த அலைவரிசையினால் முன்னர் வெளியிடப்பட்ட காணொளிகளைப் போன்றே இதுவும் பொய்கள் நிரம்பியதாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சனல் 4 காணொளி கிளப்பியிருக்கும் சர்ச்சை தென்னிலங்கையில் இருந்து சர்வதேச விசாரணைக் கோரிக்கை கிளம்புகின்ற சூழ்நிலையைத் தவிர்க்கமுடியாமல் தோற்றுவித்திருப்பது ஒரு புதிய திருப்பமாகும்.

காணொளியின்  தகவல்கள் குறித்து  சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படவேண்டும் என்று கொழும்பு அதிமேற்றிராணியார் கார்டினல் மல்கம் ரஞ்சித், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் ஆரம்பத்தில் ஈடுபடுத்தப்பட்டு  பின்னர் அரசாங்கத்தினால் இடமாற்றம் செய்யப்பட்ட உள்நாட்டு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் சுயாதீன சர்வதேச குழுவொன்றினால் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கூறிய கார்டினல் மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பது நேரத்தையும் வளங்களையும் விரயம் செய்யும் ஒரு காரியமாகவே முடியும் என்று குறிப்பிடடார்.

உள்நாட்டில் வெளிப்படையானதும் நியாயமானதுமான விசாரணையொன்று நடத்தப்படவில்லை என்பதனாலேயே சர்வதேச விசாரணையைக் கோருவதாக கூறிய பிரேமதாச குண்டுத்தாக்குதல்கள் குறித்து முன்னர் வெற்றிகரமாக விசாரணையை நடத்திக்கொண்டிருந்தபோது அதில் இருந்து நீக்கப்பட்ட குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் புதிய விசாரணையை ஒப்படைக்கவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகிறார். பொன்சேகாவும் கடந்தவாரம்  நாடாளுமன்றத்தில் சர்வதேச விசாரணையே வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

கார்டினல் மல்கம் ரஞ்சித்தைப் பொறுத்தவரை உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களில் பலியானவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்காவிட்டால் சர்வதேச நீதிமன்றம் ஒன்றின் விசாரணையைக் கோரும் நிர்ப்பந்தம் ஏற்படும் என்று இரு வருடங்களுக்கு முன்னரே கூறியிருந்தார் என்பதும் கடந்த வருடம் மார்ச் மாதம் ஜெனீவா சென்று அன்றைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பாச்லேயை சந்தித்து குண்டுத்தாக்குதலில் பலியானவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து தனது விசனத்தை வெளிப்படுத்தி முறையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் காட்டும் அக்கறையை கார்டினல் கடுமையாக கண்டனம் செய்தார் என்பது முக்கியமாக நினைவுபடுத்தப்பட வேண்டியதாகும்.

காலாதிகாலமாக மத நம்பிக்கையுடையதாக விளங்கிவரும் இலங்கை போன்ற நாடொன்றுக்கு மேற்குலக நாடுகள் மனித உரிமைகள் குறித்து ‘போதனை’ செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேற்குலகின் புதிய மதமாக மனித உரிமைகள் வந்துவிட்டன என்று உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னரான காலப்பகுதியில் 2018 செப்டெம்பரில் ஞாயிறு ஆராதனையொன்றில் கார்டினல் கூறியதாக பதிவுகள் உள்ளன. வேறு பல சந்தர்ப்பங்களிலும் அவர் சர்வதேச தலையீடுகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ சனல் 4 காணொளி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையின் தன்மையை நாடாளுமன்றமே தீர்மானிக்கவேண்டும் என்று கூறினார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற உடனடியாகவே ரணில் விக்கிரமசிங்க சர்வதேச விசாரணை குறித்து யோசனையை முன்வைத்தார். ஆனால், அதற்கு எந்தவொரு தரப்பிடமிருந்தும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. அதனால் விசாரணையின் தன்மையை தீர்மானிக்கவேண்டியது இப்போது  நாடாளுமன்றத்தின் பொறுப்பு என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய பின்புலத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து இதுவரையில்  நடத்தப்பட்ட விசாரணைகளை ஒரு தடவை திரும்பிப்பார்ப்பது அவசியமானதாகும்.

குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற மறுநாளான ஏப்ரில் 22, 2019 அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்ற நீதிபதி விஜித் மலலகொட தலைமையில் குழுவொன்றை  நியமித்தார். அந்தக் குழு ஜூன் 10, 2019 அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது.

தாக்குதல்கள் நடைபெற்று ஒரு மாதம் கழித்து மே 22, 2019 நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றின் மூலம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் தெரிவுக்குழு ஒன்றை நியமித்தது. மலலகொட குழுவின் அறிக்கையும் கூட தெரிவுக்குழுவின் தலைவரிடம் கையளிக்கப்பட்டது.

பிறகு செப்டெம்பர் 20, 2019 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலமாக சிறிசேன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை உயர்நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையில் நியமித்தார். அந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை தலைவர் பெப்ரவரி 1, 2021 ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவிடம் கையளித்தார்.

ஆனால், அந்த அறிக்கையின் பல பகுதிகள் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையாக இருப்பதாகக் காரணம் கூறி ஜனாதிபதி செயலகம் அவற்றை வெளியிடாமல் நிறுத்திவைத்தது. என்றாலும், அந்தப் பகுதிகள் உள்ளடங்கலாக இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டபாயவின் அறிவுறுத்தலின் பேரில் நாடாளுமன்ற சபாநாயகரிடம் பெப்ரவரி 22, 2022 கையளிக்கப்பட்டது.

ஆனால், இந்த குழுக்கள், நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் எல்லாமே குண்டுத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களும் கத்தோலிக்க திருச்சபையும் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களும் கிளப்பிய சகல கேள்விகளுக்கும் பதில்களைத் தரத்தவறிவிட்டன.

இது உள்நாட்டு விசாரணைகள் மீது இதுகாலவரையில் தமிழர்கள் மத்தியில் இருந்த நம்பிக்கையீனம் தவிர்க்கமுடியாமல் தென்னிலங்கையில் சிங்கள சமூகத்துக்கு பரவுவதற்கு வழிவகுத்திருக்கிறது.

சர்வதேச சமூகமும் இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையீனத்தை அண்மைக்காலமாக வெளியிட்டு வருவதும் கவனிக்கத்தக்கது.

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  54 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் போன்ற அடையாளபூர்வ முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச உதவியுடன் சர்வதேச நியமங்களுக்கு இசைவான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் காண்காணிப்பகம் (Human Rights Watch) உட்பட ஒன்பது சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக கடந்தவாரம் வெளியிட்ட அறிக்கையொன்றில் இலங்கையின் முன்னைய  விசாரணைக் குழுக்கள்  உண்மையை வெளிக்கொணரவும் நீதியை வழங்கவும் தவறிய நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றன என்றும் அதனால் அரசாங்கத்தின் உத்தேச தேசிய ஐக்கியம் மற்றும்  நல்லிணக்க ஆணைக்குழு குறித்தும் கடுமையான சந்தேகங்கள் கிளம்புகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகளை வலுப்படுத்தக்கூடியவையாக அமைந்திருக்கின்றன.

சனல் 4 காணொளியின் நம்பகத்தன்மை குறித்து வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கலாம். அது வேறு விடயம். ஆனால், குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் காணப்படுகின்ற வழமைக்கு மாறான தாமதங்களும் உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிவதில் காணப்படும் அக்கறையின்மையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி மறுக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டை மாத்திரமல்ல, பின்னணியில் இருந்திருக்கக் கூடியவர்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படுகின்றது என்ற சந்தேகத்தையும் கடுமையாக வலுப்படுத்துகிறது.

இந்த நிகழ்வுப் போக்குகள் எல்லாம் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையில் பல வருடங்களாக உறுதியாக இருக்கும் தமிழர்களின் நிலைப்பாட்டின் நியாயத்தையே பிரகாசமாக துலங்க வைக்கின்றன.

ஆனால், தென்னிலங்கையில் இன்று சர்வதேச விசாரணையைக் கோருபவர்கள் தங்களின் கோரிக்கையை நியாயப்படுத்துவதற்கு கூறும் காரணங்களே அடிப்படையில் தமிழர்களின் கோரிக்கையின் பின்னணியிலும் இருக்கிறது என்பதை இனிமேலாவது ஒத்துக்கொள்ள முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. அது தான் இலங்கை அரசியல்.

வீரகத்தி தனபாலசிங்கம்