Photo, DAILY SABAH

அறிமுகம்

தற்போது இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பாகப் பரந்த கலந்துரையாடல் (ஆதரவாகவும் எதிராகவும்) நாடாளுமன்றத்திலும், அரசியல் பரப்பிலும், சிவில் சமூக மட்டத்திலும் இடம்பெற்று வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருப்பதனைப் பார்க்க முடிகிறது. அது IMFஇன் பொதுவான நடைமுறையும் கூட. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் ஆளுகை செயன்முறையில் உள்ள குறைபாடுகளை ஆழமாக மதிப்பீடு செய்து, 139 பக்கங்களைக் கொண்ட ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இலங்கையின் ஆளுகைக் கட்டமைப்பில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பிரதான 16 மறுசீரமைப்புகள் மற்றும் மாற்றங்கள் குறித்து விரிவான பரிந்துரைகளை  முன்வைத்துள்ளது. இந்தப்பரிந்துரைகள் ஒவ்வொன்றும் இலங்கையில் ஆளுகை செயன்முறையில் உள்ள குறைபாடுகள், அதிகார துஷ்கபிரயோகம், நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள ஊழல் மோசடி, ஊழல் கலாச்சாரம், வெளிப்படைத்தன்மை இன்மை, பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஒட்டுமொத்த அறிக்கையிலும் தொடர்ச்சியாக அழுத்தி வலியுறுத்தப்படும் விடயம் யாதெனில் இலங்கையில் ஊழலற்ற ஒரு ஆளுகை செயன்முறையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதாகும் (Corruption -free governance process). ஆளுகை செயன்முறையில் உள்ள குறைபாடுகளை மிக விரைவில் களைய வேண்டும் என்பதை அவர்கள் வலியுறுத்துவதுடன், அது பொருளாதார அபிவிருத்தி, வெளிநாட்டு முதலீடு, ஒழுக்கமுடைய பொது நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறும் ஆளுகைக்கு அவசியம் எனப்படுகின்றது. அவர்கள் முன்வைத்துள்ள 16 பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேறுப்பட்ட கால அவகாசத்தையும் வழங்கியிருப்பது இதில் இன்னுமொரு சிறப்பம்சமாக காணப்படுகிறது.

ஆகவே, இலங்கையின் ஆட்சி செயன்முறையில் காணப்படும் தோல்வியைச் சரி செய்ய, அதில் இருந்து இலங்கை நாட்டை மீட்டெடுக்க வேண்டுமாயின் இந்த சவால்மிக்க பரிசோதனையில் இலங்கை ஈடுபட வேண்டும் என்பது இங்கு வெளிப்படுகின்றது. இந்தக் கசப்பான மாத்திரையினை இலங்கை விரும்பியோ விரும்பாமலோ உட்கொள்ள வேண்டும் என்பது இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும். ஆகவே, இந்த நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறுமாக இருந்தால் மூன்றாவது தவணைக் கடன் உதவியினைச் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக் கொள்வது இயலாத காரியமாக மாறக்கூடிய வாய்ப்பு ஏற்படலாம். இரண்டாவது தவணைக் கடன் ஜனவரி மாதம் அளவில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கலாம். அதில் பெரியளவிலான சவால்கள் இருப்பதாகத் தென்படவில்லை. இந்த நாட்டில் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டப் பின்னர் ஆளுகை செயன்முறையில் காணப்படும் பிரதான குறைபாடுகளில் ஒன்றுதான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினுடைய கைகளில் சகல அதிகாரங்களையும் குவித்து நாடாளுமன்றத்தையும், நீதிமன்றத்தையும் கேலிக்கூத்தாக மாற்றியமையாகும். இது இலங்கையில் நிறைவேற்று சர்வாதிகார ஆட்சியினை ஏற்படுத்தியது எனலாம். இதனை ஆளுகை செயன்முறையின் ஒரு பிரதான பிரச்சனையாக காணலாம். நாம் இன்று அனுபவிக்கும் பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் அனைத்திற்கும் ஆளுகை செயன்முறையில் காணப்படுகின்ற குறைபாடுகள் அல்லது ஆளுகை தோல்வி (governance failure) அல்லது தீங்கான ஆளுகை (malgovernance) பிரதான காரணியாக உள்ளது. அரகலயப் போராட்டக்காரர்கள் தொடச்சியாக வலியுறுத்தியது ஆளுகை மறுசீரமைப்பாகும் – அதனை அவர்கள் முறைமை மாற்றம் (System Change) என்ற பெயரில் கோரினார்கள். அந்த வகையில் இக்கட்டுரையானது IMFஇன் ஆளுமை மறுசீரமைப்பு பரிந்துரைகள்

இங்கு அவதானிக்க வேண்டிய பிறிதொரு விடயம் யாதெனில், IMF இலங்கைக்கு இத்தகைய பரிந்துரைகளை 16 தடவைகள் வழங்கியுள்ளது. அவற்றினால் ஆளுகை செயன்முறையில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என்ற வினாவினையும் இங்கு முன்வைப்பது பொருத்தமாகும். இலங்கை அரசாங்கம் ஒவ்வொறு முறையும் கடன் பெறும்போது இதுபோன்ற எண்ணற்றப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவை அமுல்படுத்தப்படவில்லை – அவை கிடப்பில் போடப்பட்டதுடன்,  ஊழல் மோசடிகள் நிறைந்த ஆளுகை முறையே தொடர்ந்தது. இப்போக்கினை பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் அவதானிக்க முடியும். ஆகவேதான், இடதுசாரி அமைப்புகளும் சில அரசியல் கட்சிகளும் IMFஇன் கொள்கைகளே நாட்டின் தற்போதைய வங்குரோத்து நிலைக்கும் பொது மக்கள் அனுபவிக்கும் பொருளாதார பிரச்சினைகளுக்கும் காரணம் என விமர்சிக்கின்றனர். IMFஇன் நவ தாராளக் கொள்கைகள் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமென விமர்சிக்கப்படுகின்றது. இது பகுதியவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் என்றாலும், கொள்கை வகுப்பாளர்கள் IMFஇன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமை, தவறான கொள்கைகள் அல்லது பொருத்தமற்ற கொள்கைகளை தொடர்ச்சியாக உறுவாக்கியமை, அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தமை, அரசியலில் இன, மதத்தின் தலையீட்டினை வெளிப்படையாகவே அனுமதித்தமை, ஊழல் போன்ற வேறும் பல காரணிகளும் நாட்டின் தற்போதைய வங்குரோத்து நிலைக்கு மற்றும் ஆளுகை தோல்விக்கு காரணம் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. ஆகவே, இப்பொழுது IMF வழங்கியிருக்கும் பரிந்துரைகளை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டிய தேவையுண்டு. எதிர்காலத்தில் IMFஇன் கடன் உதவிகளை நாடிச் செல்லாத வகையில் பொருளாதாரக் கொள்கைகளை மறுசீரமைக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதற்கு, ஏற்றுமதி பொருளாதாரத்தினை, தன்னிறைவுடன் கூடிய பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்ப அவசியமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இவை நீண்டகாலத் திட்டங்களாக நிலைபேறுத்தன்மையின் அடிப்படையில் அமைய வேண்டும். தொடர்ச்சியான கடன் பொறிக்குள் இருந்து இலங்கையை மீட்டெடுக்க, நவ பொருளாதார பிடியில் இருந்து மீட்க தீவிர மறுசீரமைப்புகளை உள்நாட்டு சூழலை அடிப்படையாகக் கொண்டு பாரிய பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் கலந்துரையாடல் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும், இம்முறை IMF வழங்கியுள்ள இப்பதினாறு பிரதானப் பரிந்துரைகள் இலங்கையில் ஆளுகைக் கட்டமைப்பில் நீண்டகாலமாக நிலவும் குறைப்பாடுகளை களைவதற்கான ஒரு நிழற்பட அச்சாகப் (Blue Print) பார்க்க முடியும். இவற்றை இலங்கை சரியான முறையில் பின்பற்றுகின்ற பட்சத்தில் ஆட்சிமுறை செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறலை மேம்படுத்த முடியும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நம்பிக்கையாகக் காணப்படுகின்து. அதேவேளை, இலங்கையில் நல்லாட்சியை விரும்பும் அனைத்து தரப்பினரும் இதனை விரும்புவர் என்றும் எதிர்ப்பார்க்கலாம். ஊழலற்ற இலங்கையினை (Corruption Free Sri Lanka) கட்டியெழுப்ப எத்தனிக்கும் எவரும் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை முற்றாக எதிர்க்க மாட்டார்கள். ஏனென்றால், இவை நாட்டிற்கு மிக அவசியமானவை. இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இன்றுவரையில் ஆளுகை செயன்முறையில் நாம் நான்கு பிரதான குறைபாடுகளை அவதானிக்கலாம். அவை முறையே (1) ஏற்கனவே குறிப்பிட்டதன்படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை, (2). ஊழல் மோசடி, (3). இனவாதம் அல்லது ஆட்சிமுறை செயற்பாட்டில் இனத்துவத்துவ மேலாதிக்கம், (4). அரசியல் செயற்பாடுகளில் பௌத்த மதத்தின் மேலோங்கிய செல்வாக்கு. இந்நான்கு காரணிகளும் இலங்கையின் தற்போதைய வங்குரோத்து நிலைமைக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது என்பதனை எவரும் மறுதலிக்க முடியாது. ஆகவே, இன்று பெரியளவிலான மறுசீரமைப்புகள் ஆளுகை மற்றும் இலங்கையின் அரசியல் முறைமையில் அவசியமாக உள்ளது. இப்பின்புலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் 16 பரிந்துரைகளையும் அவதானிப்பது அவசியமாகும். இவ்வறிக்கையும் அதன் பரிந்துரைகளும் முழுக்க ஆளுகை செயன்முறையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக மாத்திரமே அவதானம் செழுத்துகின்றது என்பதனை குறிப்பிட வேண்டும். பிரதான 16 பரிந்துரைகளுக்கு அப்பால் எண்ணற்ற பரிந்துரைகள் ஒவ்வொறு துறை சார்ந்து முன்வைக்கப்பட்டுள்ளது. அவற்றினை இவ்வறிக்கையினை வாசிக்கும் பொழுது அவதானிக்க முடிகின்றது.

இலஞ்ச மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை

இலங்கையின் இலஞ்ச மற்றும் ஊழல் எதிரப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஓர் ஆலோசனைக் குழுவை 2023 நவம்பர் மாதத்திற்குள் நியமிக்க வேண்டும் என்பதே முதலாவது பரிந்துரையாகும். இதனை நவம்பர் மாதத்தில் நிறைவுசெய்ய வேண்டும். இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவிற்கு கடந்த காலங்களில் பதவியில் இருந்த ஜனாதிபதிகள் தமக்கு வேண்டப்பட்டவர்களை, விசுவாசமானவர்களை நியமித்த போக்கை அவதானித்துள்ளளோம். நிறைவேற்று அதிகாரத்தினைப் பயன்படுத்தி தமக்கு அரசியல் விசுவாசத்தினை காட்டும் நபர்களைக் மாறி மாறி பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள் நியமித்தார்கள். இச்செயற்பாடும் இந்நாட்டில் ஆளுகை செயன்முறையின் பிரதான வீழ்ச்சிக்கு  காரணமாக அமைந்தது. ஆகவேதான் தகுதியான ஆலோசனைக் குழுவொன்றை நியமித்து, அவர்கள் வழங்குகின்ற ஆலோசனையின் பெயரில் இலஞ்ச மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவிற்கான 5 உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்று இவ்வறிக்கை குறிப்பிடுகின்றது. இந்தக் காரியத்தினை அரசியலமைப்பு பேரவை முன்னெடுக்க வேண்டும்.

அதனூடாக ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் நியமன விடயத்தில் அரசியல் தலையீடுகளை தவிர்ப்பது, நேர்மையாக, வினைத்திறன்மிக்கவகையில் இந்த ஆணைக்குழு செயற்படுவதை உறுதிப்படுத்துவது, ஊழலுக்கு எதிராக செயற்படுவதற்கு அவகாசத்தை ஏற்படுத்துவது என்பன எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் இலஞ்ச ஊழலுக்கு எதிராகச் செயற்படுகின்ற பிரதான நிறுவனமாக ஒவ்வொரு நாட்டிலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு காணப்படுகிறது. ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில் இவ் ஆணைக்குழு நிறுவன ரீதியான ஒரு கட்டமைப்பினைக் கொண்டிருந்தாலும் இதன் அதிகாரங்கள், கடமைகள், வளங்கள் தொடர்பாக பாரிய பிரச்சினைகளும், மட்டுப்பாடுகளும் காணப்படுகிறது. தொடர்ச்சியான அரசியல் அழுத்தம், அரசியல் தலையீடு, 20ஆவது சீர்திருத்தங்களின் கீழ் இவ் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை மற்றும் அதன் நிலை வலுவிழக்கச் செய்யப்பட்டமை போன்றன இலஞ்ச  ஊழல் ஆட்சிமுறை செயற்பாடுகளில் பரந்தளவில் இடம்பெறுவதற்கு அல்லது ஒரு கலாசாரமாக மாறுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. ஆகவே, இந்த நிலைமையை மறுசீரமைப்பதற்கு இந்த ஆணைக்குழுவின் சுயாதீன தன்மையைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாணைக்குழுவின் உறுப்பினர்களை நியமிக்கும் போது ஒரு சுயாதீன ஆலோசனைக் குழுவை நியமிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. டிரான்ஸ் பேரன்சி இன்டர்நெசனல் நிறுவனம் 2017ம் ஆண்டு ஆசியாவில் உள்ள ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுக்களின் செயற்றிறன் தொடர்பாக மதிப்பீடு ஒன்றினை செய்து அறிக்கை வெளியிட்டது (Transparency International, Anti-corruption agencies in Asia: an evaluation of their performance and challenges). இதன்படி இலங்கையின் இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த பணியாளர் தொகை 802 ஆகும். அதில் 353 பேர் மாத்திரமே தற்போது சேவையில் இருப்பதாகவும் சுமார் 449 பதவி வெற்றிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இப்பதவி வெற்றிடங்கள் இக்கட்டுரை எழுதும் தருணம்வரையில் முழுமையாக நிரப்பப்படவில்லை இன்னும் 300 பதவி வெற்றிடங்கள் இருப்பதனை கட்டுரையாசிரிருக்குக் கிடைத்த தகவல்கள் உறுதிசெய்கின்றன. இது அரசாங்கம் இலஞ்ச ஊழலுக்கு எதிராக போராடுவதில் காட்டுகின்ற அர்ப்பணிப்பின் அளவினை வெளிப்படுத்துகின்றது.

அரசியல்வாதிகள் சொத்துக்களைப் பிரகடனப்படுத்தல் 

இரண்டாவது பரிந்துரை 2024 ஆண்டு ஜூலை மாதமாகும்போது சகல அரசியல்வாதிகளும் தமது சொத்துக்களைப் பிரகடப்படுத்தியிருக்க வேண்டும் என்பதாகும். நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் தமது சொத்துக்களைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்பதே இங்கு குறிப்பிடப்படுகின்றது. இது வெளிப்படைத்தன்மைக்கும், பொறுப்புக்கூறலுக்கும் பெரிதும் அவசியமாகும். இதுவரைக்கும் 12 உறுப்பினர்கள் மாத்திரமே தமது சொத்துகளைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளனர். அதுமட்டுமல்லாது சர்வதேச நாணய நிதியம் வெளிப்படுத்தும் இன்னுமொரு விடயம் அரசியல்வாதிகள் சொத்துக்களைப் பிரகடனப்படுத்திய பின்னர் அவற்றைப் பொதுமக்கள் அணுகக்கூடிய ஒரு இணையத்தளத்தில்  காட்சிப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அவற்றைப் பார்ப்பதற்கான வசதியை, உரிமையை வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றது. இது தனிப்பட்ட நபர்களை அடிப்படையாகக் கொண்ட முரண்பாடுகளை தவிர்ப்பதற்கு செய்வதற்கு அவசியமாகும்.

ஆட்சி செயன்முறையில் நேர்மைத் தன்மையும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்புக் கூறலையும் கொண்டு வருவதற்கு சொத்துகளைப் பிரகடனப்படுத்துவது அவசியமாக உள்ளது. சொத்துகளைப் பிரகடனப்படுத்துவதை இலங்கையின் பல அரசியல்வாதிகள் தொடர்ந்தும் தவிர்த்துக்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எவ்வாறு சொத்துக்களைச் சேர்த்தார்கள், எங்கிருந்து அவ்வளவு சொத்துக்களைச் சேர்த்தார்கள், எங்கு அதனை முதலீடு செய்கிறார்கள், எந்தந்த நாடுகளில் தமது சொத்துக்களைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள் போன்ற விடயங்களைப் பொதுமக்கள் அறிய முடியாதுள்ளனர். இது இன்னுமொரு பக்கத்தில் தேர்தல் காலத்தில் மோசமான ஊழல் மோசடியையும், பணத்தையும் பொருளையும் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் கலாசாரத்தையும் இலங்கையில் உருவாக்கி இருப்பதை நாம் பார்க்க முடியும். இந்த மோசமான நிலையை முறியடிக்க வேண்டுமாக இருந்தால் அரசியல்வாதிகள் சொத்துக்களைப் பகிரங்கப்படுத்துவது அவசியமாகும். அது மக்கள்  பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையும்கூட.

கறுப்புப்பணத்தின் புழக்கத்தினைத் தடைசெய்தல்

மூன்றாவது பரிந்துரை சட்டத்துக்குப் புறம்பான பணத்தினைத் (கறுப்புப்பணம்) தூய்தாக்கல் செய்வதனைத் தடுப்பதற்கு குற்றவியல் சட்டத்தை இறுக்கமாக்க வேண்டும். அதன் ஊடாக கருப்புப் பணத்தினைத் தூய்தாக்குவதனைத் தடுக்க வேண்டும் எனப்படுகின்றது (Anti –money laundering). ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான சமவாயம் (UN Convention Against Corruption) மற்றும் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் தராதரங்களுக்கு ஏற்ப குற்றவியல் சட்டங்களை இறுக்கமாக்க (திருத்த) வேண்டும் என குறிப்பிடுகின்றது.  சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு (Financial Action Task Force –FATF) என்பது சட்டவிரோத பணப்புழக்கம் (கடத்தல்) மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதனைத் தடுப்பதற்கான அரசுகளிக்கிடையிலான சர்வதேச கண்கானிப்பு அமைப்பாகும். அதன் தலைமையகம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் அமைந்துள்ளது. சட்டவிரோத பண பறிமாற்றத்தினை மற்றும் தூய்தாக்கப்படுவதனைத் தடுப்பதற்கு இவ்வமைப்பு பல தராதரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கையில் நிதி தூய்தாக்குதல் மிகவும் பிரச்சனைக்குரிய விடயமாகக் காணப்படுகிறது. அரசியல்வாதிகள் கருப்புப் பணத்தினை இலங்கையில் முதலிடுமாறு கடந்தகாலங்களில் பகிரங்கமாக அறிவித்தார்கள். இலங்கைக்கு நேர்மையான முதலீட்டாளர்கள் வருகைத்தராமைக்கு இது பிரதான காரணம் என்பதனை அரசியல்வாதிகள் இன்னும் உணரவில்லை போல் தெரிகிறது. கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வர முடியும் என்ற ஒரு சூழலைப் பசில் ராஜபக்‌ஷ தரப்பினர் இந்த நாட்டிலே உருவாக்கினார்கள். இது சர்வதேச சட்ட பொறிமுறைகளுக்கு முரணான ஒரு விடயம். ஆகவேதான் சர்வதேச நாணய நிதியம் 2024 ஏப்ரல் மாதமாகும் போது ஒரு உறுதியான சட்டத் திருத்தத்தினைக் கொண்டு வந்து  நிதி தூய்தாக்குதலை ஒரு குற்றமாக நிறைவேற்ற வேண்டும், அதில் ஈடுபடுவோரை தண்டிக்க வேண்டும், அந்தச் செயற்பாட்டை நிறுத்த வேண்டும், சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப அந்தக் காரியத்தை இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகின்றது. 2016ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணம் துய்தாக்கலுக்கு எதிரான சட்டமானது பல குறைப்பாடுகளைக் கொண்டுள்ளது. அதனால் சட்டவிரோத பணப்புழக்கத்தினை நிறுத்த முடியாமல் உள்ளதாக இவ்வறிக்கை குறிப்பிடுகின்றது.

இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்தப் பின்னர் நிதி தூய்தாக்குதல் பெரியளவில் இந்தியாவில் நிறுத்தப்பட்டது. இதற்குக் காரணம் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டமையாகும். இன்று பெரும் செல்வந்தர்களும், அதிகாரம் படைத்தவர்களும் சட்டவிரோத பணப்புழக்கத்தில் ஈடுபடுவதனை காண முடியும். இச்செயல் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதையரியப்படுத்தும். அவநம்பிக்கையினை ஏற்படுத்தும். இத்தகைய செயற்பாடுகள் இலங்கையில் வியாபாரம் செய்வதற்கான உகந்த சூழ்நிலையினை ஒருபோதும் உருவாக்க போவதில்லை என்பதனை புரிந்துக்கொள்ள வேண்டும். வியாபாரம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு மிகவும் கடினமான ஒழுங்கு விதிகள், சட்டங்கள் மற்றும் இலஞ்ச கலாசராத்தினைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலிள் இலங்கை முன்னணியில் உள்ளது என்பதனையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். உலக வங்கியின் 2023ஆம் ஆண்டுக்கான எளிதாக வணிகம் செய்யக்கூடிய (Ease of doing business index) நாடுகளின் தரப்படுத்தலிள் 190 நாடுகளில் இலங்கை 99ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலைமையில் இலங்கைக்கு வெளிநாட்டு முதலீட்டுகளை கொண்டுவருவது வெறும் பகல் கனவாகவே அமையும்.

தேசியக் கணக்காய்வுச் சட்டத்தினைத் திருத்துதல் 

நான்காவது பரிந்துரை தேசிய கணக்காய்வு சட்டத்தைத் திருத்த வேண்டும் என்பதாகும். தேசிய கணக்காய்வு சட்டத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. தேசிய கணக்காய்வு சட்டத்தில் காணப்படும் குறைபாடுகள்தான் அரச நிறுவனங்களில் ஊழல், மோசடிகள் பல்கி பெருகுவதற்கு காரணமாக இருக்கின்ற அதேவேளை, அரச நிறுவனங்களில் பொது நிதியை பயன்படுத்துவதில் நேர்மைத்தன்மை, பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை இல்லாமல் போவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. சில அரச நிறுவனங்களில் கடந்தகாலங்களில் கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டமைக்கு எந்த சான்றுகளும் இல்லை. ஒப்பந்தங்களை வழங்கும் போது, பெரும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்கின்றபோது ஸ்தாபிக்கப்பட்ட நிதி ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப பொது நிதி செலவிடப்படுவதில்லை. இது அரசியல் மற்றும் நிர்வாக ஊழலுக்கு பெரியளவில் வழிவகுக்கின்றது. ஆகவேதான் தேசிய கணக்காய்வு சட்டம் திருத்தப்பட்டு, அதில் புதிய ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டு கணக்காய்வினை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. கணக்காய்வு இறுக்கமாக இடம்பெறுகின்ற பொழுது பொறுப்புகூறலும், வெளிப்படைத்தன்மையும் ஏற்படும். மறுபக்கமாக பிரஜைகளுக்கு அரசாங்க நிறுவனங்கள் மீது நம்பிக்கை ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கின்றது. அத்துடன், பொது நிதியினை பயன்படுத்தல் தொடர்பாக சரியான மேற்பார்வையினை செய்யத்தவரும் அதிகாரிகள் மற்றும் பிரதம கணக்காளர்கள் (அமைச்சின் செயலாளர் உட்பட) ஆகியோரிடம் கடமையை செய்ய தவறியமைக்காக அதிக பணத்தினை வசூலிக்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றது.

ஐந்தாவது பரிந்துரை வியாபார செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல் ஆகும். குறிப்பாக, கம்பனி சட்டத்தின் படி வணிக செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு தமக்குக் கிடைக்கும் பயன்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு அவசியமான ஒழுங்குவிதிகளை இருதி வடிவப்படுத்தி அதனை அமுல்படுத்த வேண்டும். அத்துடன், உரித்துடமையின் பயன்களை பொதுவில் காட்சிப்படுத்த 2024 ஏப்ரல் மாதம் ஆகும் போது ஒரு பதிவேட்டினை ஸ்தாபித்தல் வேண்டும்.

பொது கொள்முதல் தொடர்பாகப் புதிய சட்டம் ஒன்றினை இயற்றுதல் 

இலங்கைக்கு மிக மிக முக்கியமானது ஆறாவது பரிந்துரையாகும். இது நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் விடயமும் கூட. இலங்கையில் பொது நிறுவனங்களில் ஊழல் மோசடிகள் பாரிய அளவில் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைவது கொள்முதல் தொடர்பான சட்டமொன்று இல்லாமல் இருப்பதாகும் (Procurement law). இலங்கையில் அரச நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றபோது சில வழிகாட்டல்கள் மற்றும் கொள்கைகள் இருக்கின்றனவே தவிர சட்டமொன்று இன்னும் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்படவில்லை. இந்த சட்டம் உருவாக்கப்படாமைக்கு காரணமும் அது ஊழல் மோசடிகளை தடுக்கும் என்பதாலாகும். ஆகவே, நாடாளுமன்றத்திலுள்ள பெரும்பாலான அரசியவாதிகள் இத்தகைய சட்டத்தை நிறைவேற்ற தொடர்ந்தும் விருப்பம் காட்டவில்லை. உலகில் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பான ஆராய்ச்சிகளில் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விடயம் யாதெனில் அரச நிறுவனங்களில் கொள்முதல் அல்லது பெறுகை (Procurement) தொடர்பான விடயங்களில் காணப்படும் தவறான செயற்பாடுகளே ஊழல் மோசடிக்கான கதவை திறந்து விடுகின்றது என்பதாகும். 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக கொள்முதல் ஆணைக்குழுவொன்று கொண்டுவரப்பட்டப்போதும், அது தொடர்பான சட்டம் ஒன்றினைக் கொண்டு வந்து கொள்முதல் செயன்முறையில் நீண்டகாலமாக காணப்படும் ஊழலை தடுப்பதற்கு எந்த ஒரு அரசாங்கமும் முயற்சிக்கவில்லை என்பது ஊழலை ஒழிப்பதில் இலங்கையின் அரசியல் தலைமைகள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பினைக் காட்டுகின்றது.

ஆகவேதான் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆகின்ற பொழுது கொள்முதல் தொடர்பான சட்டத்தினை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. ஊழலைக் கட்டுப்படுத்த இச்சட்டம் பெரிதும் அவசியமாகும். பொதுக் கொள்முதல் தொடர்பாக பொதுமக்களுக்குத் தகவல்களை வழங்க வேண்டும். பாரிய அளவிலான கொள்முதல் செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது. சீனிக் கொள்முதலாக இருக்கலாம் அல்லது அண்மைக்காலத்தில் சுகாதார அமைச்சு கொள்வனவு செய்த அவசர உபகரணங்கள் மற்றும் தரம் குறைந்த மருந்துப் பொருட்களாக இருக்கலாம். இவையனைத்தும் பாரிய ஊழலுடன் தொடர்புடையவை என்பதனை ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தியதனை இலகுவில் மறந்துவிட முடியாது.

 விலைமனு கோரல் செயன்முறையில் போட்டித்தன்மையினை ஊக்குவித்தல் 

அரசாங்கம் விலைமனு ஊடாக கொள்முதல் ஒப்பந்தங்களைக் வழங்கும்போது போட்டித்தன்மையினை ஊக்குவிக்க வேண்டும் என்பது ஏழாவது பரிந்துரையாகும். போட்டித்தன்மையின் அடிப்படையில் இவை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், அது தொடர்பான முன்னேற்ற அறிக்கையினைப் பொதுமக்கள் பார்க்கக்கூடிய ஒரு இணையத்தளத்தில் பிரசுரிக்க வேண்டும் என்கிறது. இதனை 2024 டிசம்பர் மாதம் ஆகும்போது மேற்கொள்ள வேண்டும். காரணம், 2022ஆம் ஆண்டு சுமார் 10 முக்கியமான அரச நிறுவனங்களில் போட்டித்தன்மை அடிப்படையில் விலை மனு கோரல் மற்றும் ஒப்பந்தங்களை வழங்கல் இடம்பெறவில்லை. இந்நிறுவனங்கள் அரசியல் மற்றும் தனிப்பட்ட உறவின் அடிப்படையில் ஒப்பந்தங்களை வழங்கியுள்ளன. ஆகவே, பாரிய திட்டங்களுக்காக ஒப்பந்தங்களை கோருகின்ற போது அது போட்டித்தன்மை மிகுந்ததாக இருக்க வேண்டும். போட்டித்தன்மை இல்லாவிட்டால் அங்கு ஊழல் மோசடிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. போட்டித்தன்மை திட்டங்களின் தரம், பணத்திற்கான பெறுமதி (Value for money), வினைத்திறன் மற்றும் சிறந்த கண்காணிப்பு என்பவற்றுக்கு வழிசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எட்டாவது பரிந்துரை ஒரு பில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட பொது கொள்முதல் தொடர்பான சகல ஒப்பந்தங்களையும் பொதுமக்களுடைய பாவனைக்காக காட்சிப்படுத்த வேண்டும். அது தொடர்பான தகவல்களை (ஒப்பந்தத்தினை பெற்றுக்கொண்டவர்களின் தகவல்கள் உட்பட) ஒரு பொது இணையத்தளத்தில் அப்டேட் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது. ஏனென்றால், மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற மாபெரும் அபிவிருத்தித் திட்டங்களையும், அதில் இடம்பெற்ற ஊழல் மோசடியையும், அந்த அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கை மக்களுக்கு ஏற்படுத்திய கடன் சுமையினையும் நாங்கள் இன்று அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம். அக்காலத்தில் இடம்பெற்ற மெகா அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு எந்த  வகையிலும் பங்களிப்பு செய்யவில்லை. மாறாக கடன் சுமையினையே மாத்திரமே ஏற்படுத்தியது. அதற்கு மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டையில் கட்டப்பட்ட மாநாட்டு மண்டபம், சூரியவெவ என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விளையாட்டு மைதானம் மற்றும் தாமரைத் தடாகக் கட்டடம் என்பவற்றினைச் சிறந்த உதாரணங்களாக குறிப்பிடலாம். ஆனால், இந்தத் திட்டங்களை முன்னெடுத்த அரசியல்வாதிகளுக்கு அவை செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள உதவியாக இருந்தன என்பதில் ஐயமில்லை.

வரி விலக்கு தொடர்பான தகவல்களை பொது மக்களுக்கு வழங்குதல்  

மேலும், முதலீட்டு சபை மற்றும் தந்திரோபாய அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக வரி விதிவிலக்கினைப் பெறும் நிறுவனங்கள், வரி விலக்களிப்பட்ட (Tax exemption) மொத்த தொகை, மற்றும் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வரி சலுகை வழங்கப்பட்ட நிறுவனங்களின் விபரங்கள் அனைத்தினையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இணையத்தளத்தில் அப்டேட் செய்யவேண்டும் என இவ்வறிக்கை குறிப்பிடுகின்றது. இதன் மூலம் வரி விலக்கு அளிக்கப்படும் நிறுவனங்கள் அதன் பெறுமதி தொடர்பான தகவல்களைப் பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் – அதன் ஊடாக விலைமனு மற்றும் வரி விலக்கு விடயங்களில் வெளிப்படைத்தன்மையினை ஏற்படுத்த முடியும். இன்று அரசியல்வாதிகள் அல்லது அமைச்சர்கள் தமக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு அல்லது நண்பர்களின் நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கும் நடைமுறையே காணப்படுகின்றது. அதில் எந்த ஒரு வெளிப்படைத்தன்மையும் பின்பற்றப்படுவதில்லை. தேர்தல் காலத்தில் பிரசாரச் செலவுகளுக்கு நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு அதிக வரி விலக்கினை வழங்குவது ஊழல் மோசடிகள் நிறைந்த தேர்தல் அரசியலின் ஒரு நிரந்தர அம்சமாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

அரசுக்குச் சொந்தமான வியாபார நிறுவனங்களை மறுசீரமைத்தல் 

அரசாங்கத்திற்குச் சொந்தமான பொது நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான கொள்கை ஒன்றை அரசாங்கம் கொண்டுவர வேண்டும் என்பது ஒன்பதாவது பரிந்துரையாகும். அரசுக்குச் சொந்தமான பொது நிறுவனங்களில் பாரிய நட்டம், ஊழல் மற்றம் மோசடிகள் மலிந்து காணப்படுகின்றன. அவை மறுசீரமைக்க வேண்டிய தேவை மிகவும் அவசரமாகவே காணப்படுகிறது. அவை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு எந்த வகையிலும் பங்களிப்பு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அவை பாரிய சுமையாக மாறியுள்ளது என சிலர் விமர்சிக்கின்றனர். அரசுக்குச் சொந்தமாக 527 பொது நிறுவனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சுமார் 55 நிறுவனங்கள் மாத்திரமே வருடாந்த அறிக்கையினை வெளியிடுகின்றன. இந்நிறுவனங்கள் மாத்திரமே ஓரளவுக்கு வினைத்திறனாகக் காணப்படுகின்றன. அதில் 10 விகிதமான நிறுவனங்களுக்கு மாத்திரமே நிதி தொடர்பான தகவல்கள் உள்ளன. 2006 – 2017 காலப்பகுதியில் இந்நிறுவனங்கள் சுமார் 795 பில்லியன் நட்டத்தினை ஏற்படுத்தியதாகக் கொழும்பில் அமைந்துள்ள எட்வகாடா (Advocata 2019) நிறுவனம் அரசுக்குச் சொந்தமான வியாபார நிறுவனங்கள் தொடர்பாக 2019ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆகவே, அவை தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களாக இருப்பதனால், அவற்றினை மறுசீரமைத்து வினைத்திறன் மற்றும் விளைத்திறனை அதிகரிக்க வேண்டிய பெரிய தேவை காணப்படுகிறது. இந்நிறுவனங்களுக்கு நியமிக்கப்படும் ஆலோசனைச் சபை மற்றும் உத்தியோகத்தர்கள் திறமை, தகுதி கொண்டவர்களாகவும், ஒழுக்கம் மற்றும் சுயாதீனமாகச் செயற்படக்கூடிய இயலுமைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் IMF அறிக்கை குறிப்பிடுகின்றது.

தந்திரோபாய அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்துதல் 

இலங்கை அரசாங்கம் கடந்தகாலங்களில் தொடர்ச்சியாக தந்திரோபாய அபிவிருத்தி செயற்திட்டங்கள் என்ற பெயரில் மேற்கொண்ட பல பாரிய செயற்திட்டங்களை நாம் அவதானித்துள்ளோம். கொழும்புத் துறைமுக அபிவிருத்தித் திட்டம் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். சர்வதேச நாணய நிதியம்; இத்தகைய தந்திரோபாய அபிவிருத்தி செயற்திட்டங்கள் (Strategic Development Projects) எதனையும் இனி மேற்கொள்ள முடியாது, அத்தகைய சட்டங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும் அல்லது இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதனையே பத்தாவது பரிந்துரையாக முன்வைத்துள்ளது. ஏனென்றால், அத்தகையத் திட்டங்களில் ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில் மாபெரும் ஊழல் மோசடிகள் இடம்பெற்றன. அரசியல்வாதிகளும், ஒப்பந்தக்காரர்களும் பெரும் இலாபத்தை ஈட்டுகின்ற, பொது மக்களின் பணத்தினை சூறையாடுகின்ற திட்டங்களாக அவை காணப்பட்டன. இலங்கையில் அப்படியான அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒரு வெளிப்படையான செயன்முறை, அத்திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான வினைத்திறன் மிக்க பொறிமுறை என்பன உருவாக்கப்படும் வரைக்கும் அவை கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றது.

இது தொடர்பாக அண்மைக்காலங்களில் நாடாளுமன்றத்தில் உள்ள பொது நிதி தொடர்பான குழுவிலும் தொடர்ந்தும் பேசப்பட்டு வருகின்றது. பொது நிதி தொடர்பான குழுக்கூட்டங்களில் கூட இத்திட்டங்களின் ஊடாக அரசாங்கம் சில கம்பனிகளுக்குத் தொடர்ச்சியாக வரி விலக்கை வழங்கிய விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன. சில கம்பனிகளுக்கு 17 ஆண்டுகள் வரைக்கும் அரசாங்கம் வரி விலக்கை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும். இவை அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வரி வருமானத்தினை இல்லாது செய்துள்ளது. அந்த வரி விலக்கு ஊடாக யார் நன்மை அடைந்தார்கள் என்றால் குறிப்பிட்ட சில  அரசியல்வாதிகளும் வியாபாரிகளுமே ஆகும். அத்தகைய பொறுப்பற்ற செயற்பாடுகளே இன்று பொருட்களின் விலை அதிகரிப்பு, வரி அதிகரிப்பு என பொதுமக்களுக்குப் பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறமாக நாட்டினை வங்குரோத்து நிலைக்கும் தள்ளியுள்ளது. ஆகவே, அத்தகைய பாரியத் திட்டங்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச நாணய நிதியம் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றது.

வரிச்சட்டத்தினைத் திருத்துதல் 

இவ்வறிக்கை வலியுறுத்துகின்ற இன்னுமொரு பரிந்துரை யாதெனில் வரி தொடர்பான சட்டத்தைத் சீர்திருத்த வேண்டும் என்பதாகும். நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் அரசியல்வாதிகள் அல்லது அமைச்சர்கள் வரி அறவிடும் செயன்முறையை இல்லாது செய்ய வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும் என்பது பதினோராவது பரிந்துரையாகும். கடந்த காலங்களில் சில அமைச்சர்கள் நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் சில பொருட்களுக்கு வரித் தீர்வை வழங்கினார்கள். சீனியில் ஏற்பட்ட மிகப்பெரிய மோசடி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். ஆகவே, இவற்றை நிறுத்த வேண்டுமானால் நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் மாத்திரமே வரித்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை இவ்வறிக்கை பரிந்துரைக்கின்றது. பொது நிதி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் நாடாளுமன்றத்துக்கு இருப்பதனால் வரி தொடர்பான விடயங்களில் மாற்றங்கள் செய்யும் போதும் நாடாளுமன்றத்தின் அனுமதி அவசியம் என்பது இதன் மூலம் வெளிப்படுகின்றது.

குறுங்கால ஊழல் ஒழிப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்தல்

பன்னிரெண்டாவது பரிந்துரை குறுங்கால ஊழல் ஒழிப்பு செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதாகும். ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டங்கள் அரசாங்கத்துக்கு வருமானத்தினைப் பெற்றுத்தரும் சகல திணைக்களங்களிலும்  இடம்பெற வேண்டும் – அதன் ஊடாக உள்ளக மேற்பார்வை, குற்றவியல் புலனாய்வு மற்றும் சட்ட அமுலாக்கம் என்பவற்றினை ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். இதற்கான காலக்கெடு 2023 டிசம்பர் மாதம் ஆகும். சுங்கத் திணைக்களம், மதுவரி மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் என்பவற்றில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை ஒழிப்பதை நோக்காகக் கொண்டு இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. 2024 டிசம்பர் மாதம் ஆகும்போது இச்செயற்பாட்டினால் ஏற்பட்ட பெறுபேறுகள் என்ன என்பது தொடர்பாக பொது அறிக்கையொன்றினை நிதி அமைச்சு வெளியிட வேண்டும் எனக்குறிப்பிடுகின்றது.

ஊழியர் சேமலாப நிதியினைப் பாதுகாத்தல் 

பதின்மூன்றாவது பரிந்துரை மத்திய வங்கியின் முகாமைத்துவத்தில் இருந்து ஊழியர் சேமலாப நிதியை விடுவிப்பதற்கு அவசியமான புதிய முகாமைத்துவ நடைமுறைகளை அடையாளம் காண்பதற்காக பரந்த கலந்துரையாடலின் பின்னர் 2024 ஜூன் மாதம் ஆகும்போது அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினைத் தயாரிக்க வேண்டும் என்பதாகும். அதனூடாக முரண்பட்ட நலன்களைத் தவிர்க்க வேண்டும் என்கிறது. இப்பொழுது IMF தொடர்பான முழு அதிகாரத்தையும் மத்திய வங்கியே கொண்டுள்ளது. மத்திய வங்கி பொதுமக்களின் அனுமதி மற்றும் ஆலோசனை இல்லாமல் இந்நிதியை பயன்படுத்துவதை நாம்; இன்று அவதானிக்க முடிகின்றது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு என்ற பெயரில் EPF பணத்தில் தற்போதைய அரசாங்கம் கைவைத்துள்ளது. அதனூடாகத் தொழிலாளர்கள் கடின உழைப்பால் வாழ்நாள் முழுவதும் சேமித்த பணத்திற்கு பெரும் ஆபத்தும் பெரும் இழப்பும் ஏற்பட்டுள்ளது. ஆகவேதான் EPF நிதியை கையாள்வதற்குப் பிரத்தியேக நிறுவன கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதனை IMF வலியுறுத்துகின்றது. இன்று EPF பணம் தொடர்பான நம்பிக்கை பிரஜைகள் மத்தியில் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. அதனை மத்திய வங்கி தொடர்பிலும் காண முடியும். EPFஇன் நிதி உதவியினைப் பெற்றுக்கொள்வதற்கு EPF நிதியினைப் பாதுகாப்பதற்கு அவசியமான பொறிமுறை ஒன்றினை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.

அரச வங்கிகளின் சுயாதீனத்தன்மையினை உறுதிசெய்தல் 

வங்கித் துறையிலே மேற்பார்வையைச் சக்திப்படுத்துவதற்காகச் சட்டங்களைத் திருத்த வேண்டும், ஒழுங்கு விதிகள் மற்றும் செயன்முறைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பது பதினான்காவது பரிந்துரையாகும். அரச வங்கித் துறையிலே பாரிய ஊழல் மோசடிகள் காணப்படுகின்றன. அரச வங்கித்துறையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை நியமிப்பதில் பாரிய அரசியல் தலையீடு மற்றும் வெளிப்படைத்தன்மையின்மை காணப்படுகின்றன. அது ஊழலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள் இப்பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றார்கள். அவர்கள் அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப தீர்மானம் எடுப்பதும் நடைமுறைப்படுத்துவதும் அரச வங்கிகளின் வீழ்ச்சிக்கும் சீர்குலைவுக்கும் காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலைமை மாற்றப்பட்டு வங்கிகள் சுயாதீனமாக இயங்குவதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகின்றது. இன்று அரச வங்கிகளில் பண வைப்பு செய்வதனை மக்கள் தவிர்த்து வருகின்றார்கள். இது அரச வங்கிகள் மீதான மக்களின் அவநம்பிக்கையினைக் காட்டுகின்றது.

காணிப்பதிவு செயன்முறையினை டிஜிட்டல்மயப்படுத்தல் 

பதினைந்தாவது பரிந்துரை மிகவும் முக்கியமானதாகும். இலங்கையில் காணிப்பதிவு செயன்முறையில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். மிக முக்கியமாக, காணி தொடர்பான அளவை வரைபடங்கள் (Survey plan) ஒரு இடத்திலும், காணி தொடர்பான உரித்துகள் (Title deed) இன்னுமொரு இடத்திலும் பாதுகாக்கப்படுகின்றன. சிலநேரம் காணி தொடர்பான அளவை வரைபடங்கள் தொலைந்து போவதும் அல்லது உரித்து பத்திரங்கள் தொலைந்து போவதும், அல்லது வேண்டுமென்று காணாமல் ஆக்கப்படுவதும் இலங்கையில் நாம் காணும் பொதுவான பிரச்சினைகள் ஆகும். ஆகவே இந்த நிலைமையைச் சரி செய்வதற்காகக் காணிப்பதிவு செயன்முறையில் வெளிப்படைத்தன்மையினைக் கொண்டு வருவதற்காகக் காணிப்பதிவினை டிஜிட்டல் பதிவு முறையின் ஊடாக மேற்கொள்ள வேண்டும் (Online digital land registry) எனவும் அரச   பதிவு செய்தல் மற்றும் உரித்து வழங்குதல் தொடர்பாக அடையப்பட்ட முன்னேற்றங்களைப் பொது மக்கள் பார்க்கக்கூடிய வகையில் ஒரு பிரத்தியேக இணையதளத்தில் 2024 டிசம்பர் மாதம் ஆகும் போது பதிவிட வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றது. காணிகளைப் பதிவு செய்வதற்கும், காணி தொடர்பான தகவல்களைப் பொது மக்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெற்றுக் கொள்வதற்கும் ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. இது மிகவும் முக்கியமானதாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் காணிகளைப் பெற்று வியாபார மற்றும் வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிக்க முற்படும் போது காணி உரித்துகளைப் பெற்றுக் கொள்வதில் பாரிய அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர். அந்தக் கடினமான செயன்முறையில் இருந்து விடுபடுவதற்காக முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கான பணத்தை அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இலஞ்சமாக வழங்கி காணிகளைப் பதிவு செய்து உரித்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். இச்செயன்முறை வெளிநாட்டு முதலீட்டாளர்களை வெறுக்கச் செய்துவிடுகின்றது. அவர்களின் வர்த்தக ஆர்வத்தை இல்லாமல் செய்து விடுகின்றது. ஆகவே, வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்வதற்கும், அவர்களுக்குக் காணிகளை இலகுவாக பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற பொறிமுறை ஒன்றினை இலங்கையில் உருவாக்கவும் இப்பரிந்துரையினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆகவேதான்  காணிப்பதிவு செயற்பாடுகளை Online மூலமாக டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான ஆலோசனையை சர்வதேச நாணய நிதியம் வழங்குகின்றது. காணிப்பதிவு மட்டுமல்ல, ஏனைய அரச சேவைகளையும் டிஜிட்டல் மயப்படுத்துவதன் ஊடாக அரச பொது நிறுவனங்களில் பொதுச் சேவைகளை வழங்குவதில் நீண்டகாலமாக காணப்படும் ஊழல் மோசடிகளைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்பதனையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையினைப் உறுதிசெய்தல் 

பதினாறாவதாக இலங்கையின் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு ஒதுக்கப்படுகின்ற வளங்களையும், இருக்கின்ற திறன்களையும் விஸ்தரிப்பதற்கு திட்டம் ஒன்றினை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்  என்ற பரிந்துரையை முன்வைக்கின்றது. அதனூடாக இவ்வாணைக்குழு தமது கடமை பொறுப்புகளைச் சுயாதீனமாக மேற்கொள்வதற்கான இயலுமை மற்றும் ஆற்றலை மேம்படுத்த முடியும். அத்துடன், நீதித்துறைக் கட்டமைப்பில் அல்லது செயன்முறையில் மாற்றங்களைக் கொண்டுவரவும், நீதித்துறையினை அபிவிருத்தி செய்யவும், நீதித்துறை ஏனைய துறைகள் மீது கண்கானிப்பு, மேற்பார்வை என்பவற்றை சுயாதீனமாக மேற்கொள்வதற்கு இவ்வாணைக்குழுவிற்குப் போதிய வளங்களும் தகுதி மற்றும் திறமைக்கொண்ட ஆளணியினரும் நியமிக்கப்பட வேண்டும் என்கிறது. இது ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான ஒன்றாகும். இலங்கையின் நீதிச்சேவை ஆணைக்குழுவின் பலவீனத்தைச் சர்வதேச நாணய நிதியம் அடையாளம் கண்டுள்ளது. அந்த பலவீனம் எவ்வாறு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மற்றும் நிர்வகிப்பதில் தாக்கம் செலுத்துகிறது என்பதை அடையாளம் கண்டுள்ளது. இதன் மூலம் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசியல் தலையீட்டினை இவ்வறிக்கை வெளிக்காட்டுகின்றது.

IMFஇன் ஆளுகை சீர்திருத்தங்கள் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளனவா?

1990களில் முன்னைய சோவியத் யூனியனில் இருந்து சுதந்திரம் பெற்றுக்கொண்ட பல நாடுகளில் ஆளுகைச் செயன்முறையில் பாரிய குறைப்பாடுகள் காணப்பட்டன (ஊழல், வெளிப்படைத்தன்மையின்மை, பொறுப்புகூறலின்மை உள்ளிட்ட). அவற்றில் 15 நாடுகளில் IMF ஆளுகை முறையில் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தது. அதன் விளைவாக, ஆர்மேனியா, ஜோர்ஜியா, எஸ்டோனியா, லிதுவேனியா, லெத்வியா, சேர்பியா ஆகிய நாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஆளுகைக் கட்டமைப்பில் ஏற்பட்டதுடன், அவை அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் பங்களிப்பு செய்தன என்பதனை பல ஆய்வறிக்கைகள் எடுக்காட்டுகின்றன. இதன் காரணமாக இந்நாடுகள் ஊழல் தரப்படுத்தல், உலக வங்கியின் ஆளுகைக் குறிகாட்டிகள் (Governance Indicator) மற்றும் ஜனநாயக தரப்படுத்தல், இலகு வனிகம் செய்தல் குறிகாட்டிகள் என்பவற்றில் கனிசமான முன்னேற்றங்களை அடைந்துள்ளன. ஆயினும், ஏனைய ஒன்பது நாடுகளில் IMFஇன் ஆளுகைச் சீர்திருத்தங்கள் எதிர்பார்த்த வெற்றியினைப் பெற்றுத்தரவில்லை என்பதனையும் குறிப்பிட வேண்டும். இதற்கு அரசியல் மற்றும் நிர்வாக விருப்பமின்மை, அர்ப்பணிப்பின்மை, சமூக கருத்தொருமைப்பாட்டினைக் கட்டியெழுப்பாமை மற்றும் அதிகாரத்தினை மையப்படுத்திய ஊழல் மோசடிகள் நிறைந்த தேர்தல் அரசியல் கலாசாரம் என்பன பிரதானக் காரணங்களாக அமைந்தன.

மேலும், IMF 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் மூன்று ஆபிரிக்க நாடுகளில் தீவிர ஆளுகை மறுசீரமைப்புகளை அறிமுகம் செய்தது. அவை பொஸ்வானா, ருவாண்டா மற்றும் சிசெல்ஸ் ஆகிய நாடுகள் ஆகும். அவை இலங்கைக்கு இம்முறை பரிந்துரைக்கப்பட்ட சீர்திருத்தங்களுக்கு ஒப்பானவையாகும். அவற்றை இந்நாடுகள் மிக சிறப்பாக நடைமுறைப்படுத்தியதுடன், இன்று இந்நாடுகள் ஆபிரிக்காவில் வியக்கத்தக்க ஆளுகைக் கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியினை கண்டுள்ளன. இதில் ருவாண்டா நீண்டகாலப் போரின் பின்னர் மீண்டெழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், பொஸ்வானா வளர்ந்த நாடுகளுக்கு இணையான சாதனைகளைப் பொருளாதார மற்றும் ஆளுகைப் பரப்புகளில் கண்டுள்ளது என்பதனை இங்கு வளியுறுத்துவது பொருத்தமாகும். இதற்கு காரணம் IMFஇன் ஆளுகைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அந்நாடுகளில் அரசியல் விருப்பம், அர்ப்பணிப்பு மற்றும் சமூக கருத்தொருமைப்பாடு காணப்பட்டது – அவை படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டன. அதேவேளை, வேறும் பல ஆபிரிக்க நாடுகளில் IMFபரிந்துரைத்த முன்மொழிவுகள் வெற்றியளிக்கவில்லை – அவை பகுதியளவில் மாத்திரமே அமுல்படுத்தப்பட்டன. பல நாடுகளில் பரிந்துரைகளின் தோல்விக்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு – குறிப்பாக, அவை IMFஇன் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான உபாயமாக மாத்திரம் கருதப்பட்டமை, சீர்திருத்த அமுலாக்கத்தில் நீண்டகால தரிசனமொன்று காணப்படாமை, நிலைபேறுத்தன்மை வெளிப்படையாகவே அலட்சியம் செய்யப்பட்டமை, IMFஇன் நிதி வசதிகள் முடிவடைந்தப் பின்னர் இப்பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டமை அல்லது அமுல்படுத்துவதில் ஆர்வம் காட்டப்படாமை என்பவற்றுடன், மிக முக்கியமாக இவை சர்வதேச நன்கொடையாளர்களினால் தினிக்கப்பட்ட சீர்திருத்தங்களாக கருதப்பட்டு அந்நிறுவனங்களின் நிதியில் தங்கியிருந்தமையும் (நிதி உதவிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் கைவிடப்பட்டன அல்லது அமுலாக்கம் தொடரவில்லை) இதன் தோல்விக்குப் பங்களிப்புச் செய்துள்ளன என வாதிட முடியும். கடந்தகால அனுபவங்களைப் பார்க்கும் போது இது இலங்கைக்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை.

முடிவுரை

இதுவரைக் கலந்துரையாடப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது IMF முன்வைத்துள்ள 16 பிரதானப் பரிந்துரைகளும் இலங்கைக்குப் பெரிதும் அவசியமாக காணப்படுகின்றன. இந்நாட்டில் புரையோடி போயிருக்கின்ற ஊழல் மோசடிகளை ஒழித்து வெளிப்படைத்தன்மை கொண்ட, பொறுப்புக்கூறுகின்ற, நேர்மைத்திறன் கொண்ட ஆட்சிமுறை கலாசாரத்தினை உருவாக்குவதற்கு இப்பரிந்துரைகள் பெரிதும் அவசியமானவையாகும். ஆகவே, இப்பரிந்துரைகளை  எதிர்ப்பதில் நியாயமில்லை. கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, தற்போதைய நெருக்கடியான சூழலில் இத்தகையதொரு கசப்பானதொரு மாத்திரையை நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ உட்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. அவை எதிர்காலத்தில் சிறந்த பெறுபேறுகளை இந்நாட்டிற்கு கொண்டுவர உதவும். அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடு பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் IMF வழங்கியுள்ள கால வரையறைக்குள் இப்பரிந்துரைகளை நிறைவேற்றுமா என்ற வினா எழுகின்றது. இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ராஜபக்‌ஷவின் மொட்டுக் கட்சியினர் எந்தளவுக்கு ஆதரவு வழங்குவார்கள்  என்பது பிறிதொரு விடயமாகும். அதேவேளை, இப்பரிந்துரைகளை அமுல்படுத்துவதனைக் கிடப்பில் போட்டுவிட்டு அரசாங்கம் தொடர்ந்தும்  மனித உரிமைகளையும், ஜனநாயக போராட்டத்திற்கான பிரஜைகளின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் நசுக்கும் சட்டங்களைக் கொண்டுவருமாக இருந்தால், அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை நாம் மனங்கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளில் காணப்படும் முக்கிய குறைப்பாடுகள் என்னவென்றால், இலங்கையில் ஜனநாயகத்தினையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க மற்றும் சக்திப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக எந்த பரிந்துரையும் முன்வைக்கப்படாமையாகும். முப்பது ஆண்டுகால சிவில் யுத்தம், யுத்தத்திற்குப் பின்னர் எழுச்சிப்பெற்ற இன மேலாதிக்க சர்வாதிகார அரசாங்கம், தொடர்ச்சியான இராணுவமயமாக்கம் மற்றும் அண்மைக்கால இன மற்றும் மத அடிப்படையிலான வன்முறைகள் போன்றன இலங்கையின் ஜனநாயகத்தினையும் மனித உரிமைகளையும் பெரிதும் அச்சுறுத்தலுக்குட்படுத்தியுள்ளன. ஆகவே, இலங்கையில் ஜனநாயகத்தினையும் மனித உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டிய தேவையொன்று காணப்படும் நிலையில், அது தொடர்பாக இவ்வறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது வருந்ததக்க விடயமாகும். இவ்வறிக்கை முழுக்க முழுக்க ஆளுகை செயன்முறையில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பாக கவனம் செழுத்தியுள்ளது. ஆனால், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகிய இரண்டும் ஆளுகை செயன்முறையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டவை – அவை நல்லாட்சிக்குப் பெரிதும் அடிப்படையானவை என்பதனை நாம் மனங்கொள்ள வேண்டும்.

பிறிதொரு குறைப்பாடு யாதெனில், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக மிகவும் பலவீனமாக நிலையில் வாழும் சமூகக் குழுக்களுக்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும், அவர்களின் சமூகப் பாதுகாப்பினை எவ்வாறு உறுதிசெய்ய வேண்டும் என்பது பற்றியப் பரிந்துரைகள் தெளிவாக சொல்லப்படாமையாகும். இன்று எழுபது லட்சம் பேர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகப் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள். விவசாயிகள், மலையக  மக்கள், நாட்கூலித் தொழிலாளர்கள், முறைசாரா துறைகளில் வேலை செய்வோர், பெண் தலைமைத் தாங்கும் குடும்பங்கள் பாரிய வாழ்வாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், வாழ்க்கையின் விரக்தி நிலைக்கு சென்றுள்ளனர். சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மேற்கூறிய தரப்பினர் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். சமூகப் பாதுகாப்புத் திட்ட அமுலாக்கத்தில் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றன. அவை ஆளுகைக் கட்டமைப்புடன் தொடர்புடையவை என்பதனை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். பொதுச் சேவை வழங்களில் காணப்படும் ஊழல், மோசடிகள், அரசியல் தலையீடு மற்றும் அரசியல் சகாய முறை என்பன உரியவர்களுக்கு அரச சேவைகள் கிடைக்காமைக்குக் காரணமாக அமைகிறது. ஆகவே, இது தொடர்பாக இவ்வறிக்கையில் பரிந்துரைகள் முன்வைக்கப்படாமை குறிப்பிடத்தக்கதாகும்.

கலாநிதி. இரா.ரமேஷ்
சிரேஷ்ட விரிவுரையாளர்,
பேராதனைப் பல்கலைக்கழகம்