Photo, SELVARAJA RAJASEGAR

நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி உள்ளூராட்சித் தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைத்து இப்போது நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. இலங்கையில் முதற்தடவையாக  சட்டக்கட்டமைப்புக்கு வெளியேயும் அரசாங்க திறைசேரியிடம் பணம் இல்லை என்ற காரணத்தினாலும் தேர்தல் ஒன்று ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல்களுக்குப் போகாமல் சமூகத்தின் அடிமட்டத்தில் அரசியல் ரீதியில் தன்னைப் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சி வெற்றியளிக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என்று தோன்றுகிறது.

உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தாமல் நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதன் மூலமாக, ஏற்கெனவே கலைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டி செயற்படவைப்பதற்கான அரசாங்கத்தின் விருப்பத்தெரிவு அரசியலமைப்புக்கு முரணானது என்று சட்டமா அதிபர் அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் எடுக்கப்படக்கூடிய வேறு எந்த தீர்மானமும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக நடத்தப்படாதிருக்கும் மாகாண சபை தேர்தல்கள் விடயத்தில் இதே கோட்பாடு ஏன் பிரயோகிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுவதற்கு வழிவகுத்திருக்கும்.

தற்போது நடைமுறையில் இல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டுமானால் அரசாங்கம் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றுவதுடன் சர்வஜன வாக்கெடுப்பொன்றில் மக்களின் அங்கீகாரத்தையும் பெறவேண்டியிருக்கும். அரசாங்கம் விரைவாக அண்மைய எதிர்காலத்தில் விரைவாக எந்த நேரத்திலும் தேர்தல் செயன்முறை அல்லது சர்வஜனவாக்கெடுப்பு ஒன்றின் ஊடாக மக்களின் கருத்தைப் பெறுவதற்கு விரும்பக்கூடிய சாத்தியம் இல்லை. அரசாங்கத்தின் செல்வாக்கில் குறிப்பாக ஜனாதிபதியின் செல்வாக்கில் அதிகரிப்பு ஒன்று இருப்பதாகவும் ஆனால் ஒட்டுமொத்த செல்வாக்கு தொடர்ந்தும் தாழ்ந்த நிலையில் இருப்பதாக மிகவும் அனுகூலமான கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

உள்ளூராட்சித் தேர்தல்களில் அரசாங்கம் தோல்வியடையக்கூடிய சாத்தியம் இருப்பது சட்டத்தின் பிரகாரம் அந்தத் தேர்தல்களை நடத்த அது மறுப்பதற்காக நியாயப்படுத்தலாக இருக்கமுடியாது. உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் காட்டும் மறுப்பு இலங்கையை இன்றைய கவலைக்குரிய நிலைக்குக் கொண்டுவந்த தண்டனையின்மைக் கலாசாரத்தின் (Culture of Impunity) இன்னொரு குழப்பம் தரும் அறிகுறியாகும்.

சிறந்த முறையில் ஆட்சிசெய்யத் தவறிய அல்லது உறுதிமொழிகளை நிறைவேற்றத்தவறிய தலைவர்களையும் பிரதிநிதிகளையும் அகற்றுவதற்கு மக்களுக்கு வாய்ப்பைக் கொடுக்கும் தேர்தல்களே பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான பிரதான ஜனநாயக வழிமுறையாகும். தேர்தல்களின் மூலமாக ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் அரசியல் முறைமைக்குள் புதிய முகங்களைக் கொண்டுவரும்.

அரசாங்கத்துடன் இணையுமாறு எதிர்க்கட்சிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் அழைப்பு விடுத்தார். ஆனால், ஒரு சிலரே தங்களது அரசியல் கட்சிகளைக் கைவிட்டு அரசாங்கத்துடன் இணைந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அவர்களுக்கு அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட்டன. எதிரணி முழுவதும் தேர்தல் செயல்முறையையும் அரசியலமைப்பையும் மீறி சட்டத்தின் ஆட்சியின் ஒரு பிறழ்வாக தனது பங்காளிகளாக வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்க முடியாது.

பொறுப்புக்கூறல் இல்லை

வழமையான சூழ்நிலைகளின் கீழ், அரசாங்கம் ஒன்று அரசியலமைப்பை மீறிச்செயற்பட்டால் எதிர்க்கட்சி நீதிமன்றத்தை நாடி பரிகாரத்தை காணும். ஆனால், இத்தடவை தேர்தல்களை நடத்தாமல் விடுவதற்கு நிதிப்பற்றாக்குறை ஒரு சாட்டாக இருக்கமுடியாது என்ற நீதிமன்றங்களின் தீர்ப்பை அரசாங்கத்தினால் அலட்சியம் செய்யப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றச் சிறப்புரிமையை மீறியதாக விசாரணை செய்வதற்கு நாடாளுமன்றக்குழு முன்னிலையில் நீதிபதிகள் அழைக்கப்படுவார்கள் என்று அச்சுறுத்தலும் கூட  விடுக்கப்பட்டது.

ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. அதேவேளை நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசாங்கம் மதித்து  நடக்கவுமில்லை. தேர்தல்கள் நடத்தப்படாமல் இருக்கும் ஜனநாயகம் ஒன்றில் மக்கள் பரிகாரம் காண்பதற்கு இருக்கக்கூடிய கடைசி நிறுவனம் நீதித்துறையேயாகும். அதை மதித்து செயற்படுவதன் மூலமாக அரசாங்கத்தில் உள்ளவர்கள் முன்னுதாரணத்தை வகுக்கவேண்டியது அவசியமாகும்.

மக்களை அணிதிரட்டி வீதிகளில் இறங்கச்செய்வது எதிரணி எடுக்கக்கூடிய அடுத்த நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால், எதிரணி கட்சிகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ வீதிகளில் இறங்கி அரசியல் போராட்டங்களில் ஈடுபடுவதில் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. பொருளாதாரத்துக்கு அவசியமான முதலீடுகளை சீர்குலைக்கக்கூடிய உறுதிப்பாடின்மையை தோற்றுவிக்க அவர்கள் விரும்பவில்லை. மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கு சட்டங்களைப் பயன்படுத்துவதில் கடும் முனைப்புடன் செயற்படும் அரசாங்கத்துடன் மோதவும் அவர்கள் தயாராக இல்லை.

நாட்டின் சட்டங்களை மதித்து உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு மறுப்பதன் மூலமாக அரசாங்கம் வெளிக்காட்டும் பொறுப்புக்கூறல் இன்மை ஆட்சிமுறையின் வேறு துறைகளுக்கும்  பரவலாம். அத்தகைய எண்ணற்ற துறைகளில்  தண்டனையின்மை காணப்படுகிறது.

மக்களின் உடனடி நல்வாழ்வில் எந்தத் தாக்கத்தையும் கொண்டிராதவையாக தோன்றுகின்ற மிகவும் செலவுகூடிய செயற்திட்டங்கள் தொடர்பில் அரசாங்க அமைச்சர்கள் யோசனைகளை முன்வைக்கிறார்கள். அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்புப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஓய்வூதிய நிதியங்களை இலக்குவைப்பதில் காண்பிக்கப்பட்டிருக்கும் பொறுப்பக்கூறலின்மை ஒரு பெரும் அனர்த்தமாகும். அதன் விளைவுகள் இன்னமும் வெளிப்படவில்லை. இதற்குப் பொறுப்புக்கூறல் அவசியமாகிறது.

அரசாங்க வைத்தியசாலைகளுக்குச் சென்ற மக்களில் பலருக்கு ஏற்பட்ட துன்பியல் கதியின் விளைவாக தரங்குறைந்த மருந்துப்பொருட்கள் விநியோகம் தொடர்பிலான பிரச்சினை பகிரங்கத்துக்கு வந்திருக்கிறது. மருந்துப்பொருட்கள் விநியோகத்தில் நிலவும் ஊழலும் பொறுப்புக்கூறல் இன்மையும் ஊடகங்களினால் பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரச்சினை அரசாங்க சுகாதார சேவையைப் பயன்படுத்துபவர்களுக்கு ஜீவமரண விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.

மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இந்த விவகாரத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. இதே போன்றே பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிடும் சிறுவர்களின் எண்ணிக்கை, தங்களது தொழில்களை இழந்தவர்களின் எண்ணிக்கை, சமுர்த்தி/ அஸ்வேசும சமூக நலன்புரித் திட்டங்களில் சேர்க்கப்படாதோரின் எண்ணிக்கையும் தற்போதைக்கு இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் பரிகார நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக கருத்தில் எடுககப்படவேண்டியது முக்கியமானதாகும்.

நம்பகத்தன்மை இல்லை

தேர்தல்கள் இல்லாத இந்தக் காலப்பகுதியில் நாடாளுமன்றம்  புதிய சட்டங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை போன்று காணப்படுகிறது. வரிகளுக்காக, சுற்றுலாத்துறைக்காக, பயங்கரவாதத்துக்கு எதிராக, தெழிலாளர்களுக்காக, ஊழலுக்கு எதிராக, ஒலிபரப்புக்காக, அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்காக, உண்மை ஆணைக்குழுவுக்காக பல புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. வரிச்சட்டங்கள் போன்ற சில சட்டங்கள் நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டிருக்கும் அதேவேளை  ஊழலுக்கு எதிரான சட்டம், தொழில் சட்டம் போன்ற வேறு சில சட்டங்கள் நிறைவேற்றப்படவிருக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம், ஊடக ஒலிபரப்பு சட்டம் போன்ற இன்னும் சில சட்டங்கள் தாமதிக்கப்பட்டிருக்கின்றன.

கோட்பாட்டு மட்டத்தில் பெருமளவுக்கு ஆராயப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் தொடர்பான சட்டங்கள் இறுதிசெய்யப்பட்டு இன்னமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்தச் சட்டங்களில் சிலவற்றில் அனுகூலமான அம்சங்கள் காணப்படுகின்றன. ஆனால், அவை மக்களுக்குப் பொறுப்புக்கூறாமல் இருக்கும் ஒரு அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவுகளை மதித்துச் செயற்படாத ஒரு அரசாங்கம் ஏனைய சமூகத்துக்காகச் சட்டங்களை இயற்றுவது இன்றைய ஆட்சிமுறையில் உள்ள முரண்பாடாகும்.

தற்போதைய அரசாங்கம் அதன் ஜனநாயக நியாயப்பாட்டைப்  (Democratic Legitimacy) பொறுத்தவரை, பிரச்சினையொன்றைக் கொண்டிருக்கிறது. தற்போதைய தருணத்தில் நினைத்துப் பார்க்கக்கூடிய வேறு எந்தவொரு  தலைவரையும் விட சிறப்பான ஒரு பணியை செய்துகொண்டிருப்பதாக பலரும் ஏற்றுக்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் பிரகாரம் சட்டப்படி ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டவர். சர்வதேச சமூகமும் மேல்மட்ட வர்த்தக சமூகமும் பரந்தளவு நடுத்தர வர்க்கத்தினரும் அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், அவர் தார்மீக நியாயப்பாட்டை இழந்த ஒரு நாடாளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட்டவர்.

ஒரு வருடத்துக்கு முன்னர் மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவும் அவர் தலைமையிலான முழு அரசாங்கமும் பதவி விலகியபோது விரைவாக தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் நாட்டை ஆட்சிசெய்யும் பொறுப்பைக் கையேற்க புதிய தலைமைத்துவம் ஒன்று தோன்றும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்குப் பதிலாக அரசியலமைப்பை மீறும் வகையில் உள்ளூராட்சி தேர்தல்கள் கூட நடத்தப்படாமல் இருக்கும் ஒரு நிலைவரத்தையே காண்கிறோம்.  சட்டத்துக்கு அப்பாற்பட்டதாக தன்னை அரசாங்கம் கருதுவது போன்று இருக்கிறது.

அரசாங்கம் அதற்கு நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி புதிய சட்டங்களை நிறைவேற்றமுடியும். ஆனால், சட்ட சீர்திருத்தங்களும் புதிய சட்டங்கள் உருவாக்கமும் பிரச்சினைத் தீர்வுக்கோ அல்லது சிறந்த நல்லாட்சிக்கோ வழிவகுக்கப்போவதில்லை. சட்டங்கள் மாற்றியமைக்கப்படவும் முடியும். அரசியலமைப்புக்கான 17ஆவது திருத்தத்துக்கு பிறகு 18ஆவது, 19ஆவது, 20ஆவது திருத்தங்கள் என்று வந்து இறுதியில் மிகவும் தளர்வான 21ஆவது திருத்தத்தில் முடிந்திருக்கிறது. போர்க்களத்தில் என்றாலென்ன, தேசிய பொருளாதாரத்தில் என்றாலென்ன குற்றங்களைச் செய்தவர்கள் பொறுப்புக்கூறவைக்கப்படவேண்டியதே அவசியமானதாகும். அவர்கள் மீண்டும் குற்றங்களைச் செய்யாமல் மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்கக்கூடிய நிலைமை உறுதிப்படுத்தப்படவேண்டும். இதுவே நிலைமாறுகால நீதியின் பெறுமதியாகும். இந்த நீதி உண்மை கண்டறியப்பட்டு, குற்றங்களைச் செய்தவர்கள் பொறுப்புக்கூற வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டிய அவசியத்தையும் மீண்டும் குற்றங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்ய முறைமை மாற்றத்தை செய்யவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

பொருளாதாரக் குற்றங்களைப் பொறுத்தவரை, ஊழியர் சேமலாப நிதியம்/ ஊழியர் நம்பிக்கை நிதியத்தை வைத்திருப்பவர்களுக்கும் நாடு வங்குரோத்து நிலையை அடைந்த காரணத்தினால் தங்களது வருமானமும் சேமிப்புகளும் அரைவாசியாகிப் போய் பரிதாபநிலைக்குள்ளானவர்களுக்குமே நிவாரணம் அளிக்கவேண்டிய தேவை இருக்கிறது. ஆனால், இலங்கை வங்குரோத்து நிலை அடைந்தமைக்கான காரணங்களை ஆராய்ந்து  விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவைப் போன்று குற்றங்களைச் செய்தவர்களே தீர்மானங்களை எடுப்பவர்களாக இருந்தால் இப்போதைக்கு மீட்சி இல்லை.

கலாநிதி ஜெகான் பெரேரா