Photo, Selvaraja Rajasegar

முஸ்லிம் சட்டத் திருத்தங்களுக்கான ஆலோசனைக்குழு, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத் திருத்தம் (MMDA) தொடர்பான தனது அறிக்கையினை 2021 ஜூன் 21ஆம் திகதி நீதி அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரியிடம் கையளித்துள்ள செய்தியினை நாம் வரவேற்கிறோம். திருத்தத்திற்கான கால எல்லையும், வெளிப்படைத்தன்மையும் இக்கால கட்டத்தில் மிகவும் முக்கியமானவை என்பதுடன், ஏற்கனவே நாம் அவதானிக்கின்றதன்படி திருத்தச் செயற்பாட்டைப் பாழ்படுத்தக் கூடிய அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் பாதுகாத்து திருத்தத்தினை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதேவேளை, திருத்தங்களுக்கான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையினை தாமதமின்றிப் பகிரங்கப்படுத்துவதன் ஊடாக, பெரிதும் பாதிப்புக்குள்ளான பெண்களுக்கு, வரவிருக்கும் திருத்தம் தொடர்பாக நம்பிக்கை அளிக்கும் படி நீதியமைச்சரைக் கோருகிறோம்.

சட்ட ஏற்பாடுகள் தொடர்பான அமைச்சரவையின் நான்கு தீர்மானங்கள் தொடர்பாக:

MMDA குறித்த முக்கிய சட்டப் பிரிவுகள் தொடர்பான அமைச்சரவையின் தீர்மானங்களை நாங்கள் வழிமொழிகிறோம்:

1) எந்தவொரு விதிவிலக்குமின்றி திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதெல்லையை 18 ஆக உயர்த்துதல்

2) ஒரு திருமணத்தை வலிதாக்க மணமகளது சம்மத்தினையும், கையொப்பத்தினையும் தேவைப்படுத்தல்

3) பெண் காதிநீதிபதிகளை அனுமதித்தல்

4) பலதாரமணத்தினை ஒழித்தல்.

திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதெல்லை, மணமகளின் சம்மதம் மற்றும் பெண் காதிநீதிபதிகள் என்பன 2019ஆம் ஆண்டு பெரும்பான்மையான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் ஏற்று அங்கீகரிக்கப்பட்டவை என்பதனை அமைச்சரவையின் இத்தீர்மானங்களை எதிர்ப்பவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக, இத்திருத்தங்கள் பல குழுக்களால், பல சந்திப்புகளில், பல அரசாங்கங்களுடன் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. ‘எல்லாத் திருத்தங்களுக்கும் இணங்குதல்’ என்பது ஒருபோதும் இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. இவ்விடயம், திருத்தத்தினை இழுத்தடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதென்பதுடன் தொடர்ச்சியாக முஸ்லிம் பெண்களையும், சிறுமிகளையும் இடருக்குள்ளாக்கி வந்துள்ளது. காலம் முழுவதும், இத்தகைய பாரபட்சமான சட்டப்பிரிவுகளால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு வந்த முஸ்லிம் பெண்களை திட்டமிட்ட வகையில் ஆண்கள் தலைமையில் நடாத்தப்பட்டு வந்த MMDA உரையாடல்களில் விலத்தியே வைத்திருந்தனர். ACJU போன்ற குழுக்கள் முஸ்லிம் பெண்களை ஒருபோதும் உள்ளடக்கவில்லை என்பதுடன் முஸ்லிம் பெண்களதும், சிறுமிகளதும் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளைப் பற்றி கருத்தில் கொள்ளவுமில்லை.

திருத்தம் தொடர்பான உரையாடல்களில் அரச பொறுப்புடைமை என்பது மிக முக்கியமானதொரு விடயம். இத்திருத்தங்கள் மிக நீண்டகாலமாக முஸ்லிம் பெண்கள் கோரிவருகின்ற சட்டத் திருத்தத்தின் பகுதி என்பதுடன், இவை முஸ்லிம் பெண்களது வாழ்வியல் அனுபவங்களதும், சிரமங்களினதும் நேரடித் தொடர்புடையனவாகும். இத்திருத்தங்கள் கலந்தாலோசிக்கப்பட்ட அரச பொறுப்புடைமையைக் காட்டி நிற்கின்றன. இந்நான்கு திருத்தங்களையும் நாம் முழுமனதுடன் வரவேற்கிறோம். அத்துடன், இத்தீர்மானங்கள் பெண்கள் பாரபட்சத்துக்குள்ளாக்கப்படவோ அல்லது விலத்தி வைக்கப்படவோ இல்லை என்பதனை உறுதிப்படுத்தும்.

காதிநீதிமன்ற முறைமை தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம் தொடர்பாக

காதிநீதிமன்றத்துடனான முஸ்லிம் பெண்களது வாழ்வியல் அனுபவங்கள் தீவிரமான பல பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன. இதில் பெண்கள் நியாயமான நடாத்துகை கூட இன்றி பல வழிகளில் பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்படுகின்றமையும் அடங்குகிறது. முஸ்லிம் பெண்கள் நீதிக்கான சமத்துவமான, நியாயமான அணுகுதலைக் கொண்டிருத்தல் வேண்டும் என தொடர்ச்சியாக நாம் கோரி வருகின்றோம். இந்தளவில், பதிலீடு என்ன என்பது பற்றிய எதுவிதமான போதியளவு தகவல்களும் இன்றி காதிநீதிமன்ற முறைமையினை இல்லாமல் ஆக்குவதற்கான அமைச்சரவையின் தீர்மானம் பற்றி நாம் கரிசனை கொண்டுள்ளோம். MMDA எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்பது தொடர்பான தெளிவுபடுத்தல் உடனடியாக நீதியமைச்சினால் வழங்கப்பட வேண்டும் என நாம் வேண்டுகிறோம். தற்போது நடைமுறையிலுள்ள மாவட்ட நீதிமன்ற முறைமையானது ஏற்கனவே அணுகுதல், தாமதம், குடும்ப நேயமற்ற முறைமை என பல சவால்களைக் கொண்டிருக்கிறது. காதிநீதிமன்ற முறைமையைப் போன்று, அதுவும் விசாலமான திருத்தத்தினை வேண்டி நிற்கின்றதை நாம் புரிந்து வைத்திருக்கிறோம். MMDA இனை நிர்வகிக்கும் எந்தவொரு நீதிமுறைமையாயினும் அது பொதுவாக தற்போது இலங்கை பெண்கள் மற்றும் குடும்பங்களால் அணுகப்படுகின்ற நீதிமுறைமையினை விடவும் சிறந்ததாக இருத்தல் வேண்டும் எனும் நிலைப்பாட்டை நாம் உறுதியாகவும், மனப்பூர்வமாகவும் கொண்டிருக்கிறோம். அதாவது நீதிமுறைமையானது தெளிவான, சமத்துவமான, விரோத மனப்பான்மையுடனான நடைமுறைகள் அற்ற, நேரகாலத்தைப் பொறுத்தளவில் வினைத்திறனுடைய,  இலகுவான அணுகுதலுடைய, முக்கியமாக குறைந்த வருமானமுடையவர்களால் செலவைத் தாங்கக் கூடியதாயுள்ள வகையிலானதாய் இருத்தல் வேண்டும்.

திருத்தம் மிக நீண்டகாலமாக தாமதிக்கப்படுகின்றது. திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கான நெறிமுறையான செயன்முறைக்கான காத்திருப்பு என்பது முஸ்லிம் பெண்கள் இடர்களையும், தங்களுக்கு எதிரான முற்கற்பிதங்களையும், பாரபட்சங்களையும் தொடர்ந்தும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதாகும். திருத்தம் செய்யப்படும் வரை நாம், குறுகிய அரசியல் இலாபங்களுக்கும், பழைமைவாத குறுகிய நோக்கங்களுக்கும் எதிராகத் தொடர்ந்தும் போராடுவோம். முழுமையான திருத்தத்திற்கான நேரம் இதுவே!

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி (MWRAF) மற்றும் முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த செயற்பாட்டுக் குழு(MPLRAG)


ஆசிரியர் குறிப்பு: “MMDA: நீதியைத் தேடும் பெண்கள்” என்ற தலைப்பில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுடனான நேர்காணல்களைப் பார்க்க இங்கு கிளிக் செய்யும்.