Photo, María Alconada Brooks, THE LILY
அன்பான சகோதர சகோதரிகளே,
உங்களுக்குச் சொல்ல ஒரு கதை இருக்கிறது. அது என்னுடைய கதை. ஆனால், நாம் கடக்கும் இந்தக் காலத்தைப் பார்த்தால் எனது கதை உங்களது கதை என்று பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இருக்க முடியாது. எனது கதை நாளை உங்களது கதையாகவும் இருக்கக் கூடும். உங்களது கதை அடுத்த வாரத்தில் எனது கதையாகவும் ஆகலாம். இன்று நாம் விடும் மூச்சுக்காற்று மற்றும் தவறுதலாக ஏற்படும் ஸ்பரிசங்கள் போன்று சிறு துளியளவு விதியால் நாம் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டுள்ளோம். எம்மை எந்நாளும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருந்தது கடலாகும். இன்று எம்மைக் கூட்டாகப் பிடித்து வைத்திருப்பது பயமாகும். எவ்வகையான விசேடத்தன்மையுமின்றி எந்த ஒருவருக்கும் ஏற்படக்கூடும் எனும் விதியாக எங்களிடையே இருக்கும் வித்தியாசங்களை இல்லாமலாக்கி வைத்திருக்கிறது.
அண்மையில் கொவிட் தொற்று ஏற்பட்டு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். எட்டு நாட்களாக வைத்தியசாலையில் இருந்தேன். வெளியிலிருந்து கொடுத்த ஆக்ஸிஜன் மூலம்தான் என்னால் சுவாசிக்க முடிந்தது. நான் இப்போது குணமாகிக்கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்குத் தெரிந்த யாராவது இறந்து விட்டதை அல்லது வைத்தியசாலைகளில் உள்ளார்கள் எனும் தகவல்கள் பற்றி பயத்துடனேயே உங்களைப்போன்று நானும் ஒவ்வொரு நாளும் நித்திரையிலிருந்து எழும்புகின்றேன்.
கொவிட் தொற்று பற்றி நான் படித்தது மற்றும் அந்தத் தொற்று எனக்கு என்னைப்பற்றிச் சொல்லிக்கொடுத்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த நெருக்கடிக்கு முகம்கொடுக்கவும் அதிலிருந்து மீளெழும்புவதற்கும் எங்களுக்கு இதையும்விட அதிகமானவற்றைச் செய்ய முடியும் என்று நான் குணமடைந்ததன் பின்னர் புரிந்துக்கொண்டேன். எங்களிடம் பாரிய சக்திகள் இருக்கின்றன. அநேகமான குணமடையும் முறைகள் எங்களுக்கு தெரியும். எங்களது பொது அறிவு ஊடாக அநேக பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடிக்கொள்ள முடியும். உண்மையில் இவ்வளவு வேதனை, இவ்வளவு பயம் நாம் அனுபவிக்கத் தேவையில்லை. இவ்வளவு மரணங்கள் இடம்பெறத் தேவையுமில்லை.
திடீரென தனக்கு கொவிட் என்று தெரிந்துக்கொண்டவுடன் ஒருவருக்கு என்ன நடக்கும் என்று விளக்கிக்கொண்டே இக்கதையை நான் ஆரம்பிக்கிறேன்.
முதலாவதாக பெரியதொரு அதிர்ச்சி. சுற்றியுள்ள அனைத்தும் தம் மீது உடைந்துவிழும் துரதிஷ்டம் எத்தருணத்திலாவது நம் மீதும்; திரும்பி வருவதற்கு இடமுள்ளதெனும் எம் அனைவரிடமும் இருக்கும் உள்ளார்ந்த உந்துதலாலேயே இவ்வாறு இடம்பெறுகிறது. மிக மோசமான சூழ்நிலையில் கூட எங்களுக்கு இவ்வாறு நடக்காது எனும் எதிர்பார்ப்புகளைக் கைவிட எங்களால் முடியாது.
எங்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டு கஷ்டப்படுவோம் என்று நாங்கள் யாரும் நினைப்பதில்லை. அதனால் அவ்வாறு நடந்த பிறகு பெரியதொரு அதிர்ச்சி ஏற்படுகிறது.
இந்தத் தொற்று எங்களுக்கு செய்துள்ளவற்றைப் பற்றிக் கதைப்பதற்குத் தகுந்த தருணம் இதுவாகும். எங்களுக்கு கொவிட் தொற்று ஏற்படாது என்ற நம்பிக்கையிலிருந்து, ‘ ஆம் எமக்கும் கொவிட் தொற்றக்கூடும்’ என்பதை ஏற்றுக்கொள்ளும் வரை செல்ல முடியும் என்றால், அதனூடாக எங்களது மனதில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட தொற்றுக்கு முகம்கொடுக்க எங்களுக்கு சக்தியை பெற்றுக்கொடுக்கின்றது.
“கொவிட் பொஸிடிவ்” எனும் அந்த இரண்டு வார்த்தைகளுடன் எமது உலகம் ஒரே விநாடியில் தவிடு பொடியாகி விடுகிறது.
தொற்றின் தாக்கம்
தொற்றின் தாக்கம் என்பது அது எமது உடலுக்குள் ஏற்படுத்தும் விடயமல்ல. இந்த தொற்றின் தாக்கமானது அது எமது மனதிற்கு ஏற்படுத்தும் விடயமாகும்.
எனது அனுபவத்தின் தீர்க்கமான தருணம் ஒன்று இருந்தது. நான் நன்றாகவே சுகவீனமுற்றிருந்தேன். கடுமையான காய்ச்சல், உடல் நன்றாகவே பலவீனமடைந்திருந்தது. ஆனால் எனக்கு கொவிட் இல்லை என்று நினைக்கும் தருணமும் பிசிஆர் பொஸிடிவ் என்று அறிந்த தருணங்களுக்கிடையில் உள்ள வித்தியாசம் பற்றி நான் உங்களுக்குச் சொல்லி ஆக வேண்டும். அந்த ஒரு சில விநாடிகளில் எனது உடலில் எந்தவிதமான வித்தியாசமும் இடம் பெறவில்லை. ஆனால், திடீரென நான் அனைத்தும் இழந்துவிட்டது போல் ஆகிவிட்டது. கொவிட் மீது ஏற்றியுள்ள சுமை காரணத்தினாலேயே எனக்கு அவ்வாறு நேர்ந்தது.
அந்த சுமை எங்கே இருக்கின்றது?
அந்தச் சுமைதான் இந்தத் தொற்றைப்பற்றி எமது நாட்டில் ஏற்படுத்தியுள்ள பாரிய அவமதிப்பு, குற்றச்சாட்டு. இந்தத் தொற்றில் உள்ள உண்மை நிலைக்கு அப்பால் மிகவும் பாரிய அழிவை ஏற்படுத்தும் அரக்கன் ஒருவனாக மாறியுள்ளது. உண்மையில் இந்தத் தொற்று எவ்வாறானது? கொவிட் என்பது மிகவும் இலகுவில் பரவக்கூடிய, வயது அல்லது ஏனைய சுகாதார பிரச்சினைகளாலும் நோய் எதிர்ப்புச் சக்தி பலவீனமடைந்துள்ள மனிதர்களுக்கும் மரணபயத்தை ஏற்படுத்தக்கூடிய நோயாகும். கொவிட் என்பது இதற்கு அப்பால் வேறு எதுவும் இல்லை. ஆனால், அது எங்களுக்கு இதையும்விட வித்தியாசமானது எனின் அவ்வாறு நடப்பதற்கான காரணம் அதன்மீது சுமத்தப்பட்டிருக்கும் மேலதிக தாக்கத்தினாலாகும்.
ஆனால், நண்பர்களே, எங்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள சுமையிலிருந்து விடுதலையடைய முடியும். நாங்கள் விடுதலை அடைய வேண்டும்!
மனிதாபிமானம் கடுமையான சவால்களுக்கு உட்பட்டுள்ள இந்நேரத்தில் இவ்வாறான முதிர்ச்சியற்ற, திறமையற்ற மற்றும் ஊழல் மிக்க அரசியல் தலைமைகளின் கீழ் இருப்பதற்கு நேர்ந்த எமது நாட்டு மக்கள் எவ்வளவு துரதிஷ்டவசமானவர்கள்? புரிந்துணர்வுள்ள, கனிவான மற்றும் தாழ்மையான தலைமைத்துவத்திற்கு எங்களது மரணம் மற்றும் துக்கங்களைக் குறைத்திருக்கலாம். ஆனால், சுகாதார பிரச்சினையை ஒரு அரக்கனாக மாற்றி, நாட்டைப் பக்கவாத நிலைக்கு உட்படுத்திய பைத்தியக்கார ஆட்சியாளர்களுடன் நாங்கள் மரண வலையில் சிக்கியுள்ளோம். நான் அவர்களின் நோக்கங்களையும் இந்நாட்டை ஆட்சி செய்வதற்கு அவர்களுக்குக் கடுகளவேனும் தகுதி உள்ளது என்றால் அதை நான் முழுமையாக மறுக்கிறேன். அதற்கு அப்பால் அவர்களைப் பற்றிக் கதைத்து எனது வார்த்தைகளை வீணடிக்க நான் விரும்பவில்லை. செய்வதற்கு அதிகமான வேலைகள் இருக்கிறது. செய்துள்ள அநேகமான வேலைகளில் திருத்தங்கள் பல செய்ய வேண்டியுள்ளது. எம்மைத் தவறாக வழிநடத்தும் ஆட்சியாளர்களைப் பார்த்துக்கொண்டிராமல், இந்நாட்டு பிரஜைகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
எமக்கு முன்னால் இருக்கும் கொவிட் தொற்றின் தோற்றம் எவ்வாறானது? கடந்த இரண்டு வருடங்களுக்குள் இந்தத் தொற்றினை அடிப்படை சுகாதாரப் பிரச்சினையாகக் கருத்திற்கொண்டு வேலை செய்ய இடமளிப்பதற்குப் பதிலாக வேறு பல விடயங்களை செய்வதற்கு இடமளித்ததையே நாம் செய்தோம். அவை கட்டுப்பாடுகள் இன்றி வேகமாக வளர்ச்சியடைந்து பாரிய அழிவுகளை ஏற்படுத்தி, தொற்று வலுவாக வளர்வதற்கு இடமளிக்கப்பட்டது. இறுதியில் நாம் அனைவரையும் வெறித்தனமான பயத்திற்குள் அணைத்து, அடிபணிய வைக்கும் நிலைக்கு இத்தொற்று வளர்ச்சியடைந்தது.
இலங்கையில் இந்தத் தொற்று ஒரு ஆயுதம். அரசியல் பழிவாங்கலுக்கான ஒரு ஆயுதம். இனவாத ஆயுதம். மக்களை வெட்டவெளியில் அவமானப்படுத்த, துன்புறுத்துவதற்கு மற்றும் தன்னிச்சையாக தண்டனை வழங்குவதற்குமான ஆயுதம். அரசியலமைப்பை மீறுவதற்கு உபயோகிக்கக் கூடிய ஆயுதமாகும்.
கொவிட் தொற்றியுள்ளது என்று மனிதர்களை அவமானப்படுத்துகிறார்கள், நிந்திக்கிறார்கள், தண்டனை வழங்குகிறார்கள், உரிமைகளைப் பறிக்கின்றார்கள், மனிதர்களைத் தமது குடும்பங்களிலிருந்து ஒதுக்குகிறார்கள், எந்தவொரு மரியாதையும் கொடுக்காது புதைத்து விடுகிறார்கள். எமது முஸ்லிம் சகோதர சகோதரிகள் தங்களது ஆன்மா கொவிட் தொற்றிக்குப் பலியாகும் என்ற பயத்தில் இருக்கிறார்கள். கொஞ்சம் சிந்தியுங்கள், இது தாங்கிக்கொள்ள கூடிய ஒன்றா?
தொற்றின் உண்மையான தாக்கம் மற்றும் அதன் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை அகற்றிக்கொள்வது மிக முக்கியமாகும். அப்போது தான் உருவாக்கப்பட்ட அரக்கனுக்குப் பதிலாக எங்கள் முன்னால் உள்ள உண்மையான சவால் என்ன என்பதை இனங்காண முடியும்.
தொற்றின் இந்தப் போலியான சுமையை விடுதலை செய்யவேண்டியது மிக முக்கியமாகும். ஏனென்றால், கொவிட் நோயாளிகள் இந்த மேலதிக சுமையால் கடுமையான மன அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள்.
கொவிட் நோயாளிகள் போராடுவது தொற்று உடலுக்குள் ஏற்படுத்தும் தாக்கத்துடன் மட்டுமல்ல, பயம், குற்ற உணர்ச்சி, வெட்கம், குற்றச்சாட்டு, குழப்பங்கள், பீதி இவ் அனைத்திலும் அவர்களின் மூச்சு இறுக்கமாகிறது. அது தொற்றிக்கு அரக்க பலத்தைக் கொடுத்து போராடுவதற்கு நம்மிடம் உள்ள ஆற்றலை பலவீனப்படுத்துகிறது. அநேகமான நேரங்களில் நோயாளிகள் கொவிட் உடன் போராடுவதற்கு முன்பே தோல்வியடைகிறார்கள்.
இப்போது நாம் இதை பற்றி கதைக்க வேண்டியுள்ளது.
கொவிட் உடன் போராடுவதற்குத் தேவையான மூன்று விடயங்கள்
ஒரு நோயாளிக்கு இந்தத் தொற்றுடன் போராடுவதற்கு மூன்று முக்கிய தேவைகள் இருப்பதை நான் குணமடைந்ததன் பின்னரே அறிந்துக்கொண்டேன். 1. அவர்களுக்கு காலம் கடத்தாமல் வைத்திய சிகிச்சை கிடைக்க வேண்டும் (வைத்திய சிகிச்சை தேவையான நிலையில் இருந்தால் மட்டும்), 2. மக்களிடமிருந்து தொடர்ச்சியாக ஒத்துழைப்புக் கிடைத்தல் வேண்டும், 3. மிக முக்கியமானது அவர்கள் தொற்றிக்கு பயப்படாது இருத்தல் வேண்டும்.
இம்மூன்றில் முதலாவதற்கு மட்டுமே எமது நாட்டில் முழுமையாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது வைத்திய சிகிச்சை பெற்றுக்கொடுத்தல். மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பயத்தைக் குறைத்தல் போன்ற ஏனைய இரண்டு காரணிகளும் முழுமையாகக் கவனத்திற்கொள்ளாது உள்ளனர். இவ்வாறான நிலைமையில் கொவிட் நோயாளிகளின் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்கு மற்றும் குணமடைய தேவையான முழு பலத்தையும் நாம் பெற்றுக்கொடுப்பதில்லை.
இக்காரணத்தை உங்களுக்குத் தெளிவுபடுத்த எனது கொவிட் கதைக்கு மீண்டும் செல்வோம்.
தனிப்பட்ட விடயமொன்று பொது விடயமாக மாற்றமடைதல்
நாங்கள் நிறுத்தியது எனது அந்த பயங்கர “ கொவிட் பொஸிடிவ்” பெறுபேறு கிடைத்த இடத்தில் தானே…?
திடீரென நீங்கள் வேறொரு உலகிற்குள் தடுமாறி விழுவது போன்று உங்களுக்கு விளங்கும். எச்சரிக்கை, அறிவுறுத்தல்கள் பாய்ந்தோடி வர ஆரம்பிக்கும் – இலக்கங்கள், கருத்துக்கள், ஆலோசனைகள், பிரச்சினைகள், கோட்பாடுகள், மருந்து வகைகள் – எல்லோரும் உதவிசெய்ய முனைவார்கள். பாரிய கோஷங்கள். உங்களுக்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள். அதன் பிறகு நண்பர்கள், தெரிந்தவர்கள், உறவினர், அதற்கு அப்பால் வைத்தியர்கள், பொது மக்களின் கருத்துக்கள், அரசின் அறிவுறுத்தல்கள், PHI பரிந்துரைகள், புதிய ஊடக அறிக்கைகள்…. அனைத்தும் மிக வேகமாக சிக்கலுடன் இடம்பெறும். அது உங்களது படுக்கை அறையிலிருந்து துணிப் பட்டிகளைக் கொண்டு கட்டிலை இறுக்கமாகக் கட்டி, கடுமையான ஒளியுடன் வெளிப்படுத்தும் மனிதக் குரல்கள் நிறைந்த திறந்த பொது சிகிச்சை நிலையத்திற்குள் உள்வாங்கப்படுவது போன்ற ஒன்றாகும். எல்லோரும் உங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், ஆனால், யாரும் உங்களை தொடுவதில்லை.
உங்களது உடம்பிலுள்ள நோயானது இதற்கு மேலும் தனிப்பட்ட ஒரு விடயமல்ல. அது இப்போது சமூகத்தினுள் உள்வாங்கப்பட்ட பொதுவான விவாத மையம் போன்றது. தொற்றானது மறைமுகமான விதத்தில் உங்களுக்குள்ளே வளர்ச்சியடையும்போது, காதுகளைச் செவிடாக்கும் கருத்துக்கள், அறிவுறுத்தல்களின் கோஷம் அதிகரிக்கும்போது, தனிமைப்படுத்துவதற்கு முன்னெடுக்கும் தாக்கங்கள் தாங்கிக்கொள்ள முடியாத வகையில் பலமடையும்போது உங்களது உடம்பில் மற்றும் உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களிடமிருந்து நீங்கள் மென்மேலும் தூரமாக விலகிப்போவதற்கான ஆரம்பம் உருவாகும்.
இது பயங்கரமான நிலையாகும். நோயாளி சுகயீனமாக இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். நோயாளி இவ்வனைத்திற்கும் முகம்கொடுப்பது உடல் மற்றும் உள ரீதியிலான பலவீனத்துடனாகும்.
இதனால் நோயாளி மிக விரைவில் தமது உடல் தொடர்பான கட்டுபாடுகளை இழந்து விடுவார். உதாரணமாக நான் செய்துகொண்டிருந்த சிறு சிறு வேலைகள் அனைத்தும் என்னால் கைவிட நேர்ந்தது. மெது மெதுவாக மேலும் பலவீனமான உடல் மற்றும் மென் மேலும் பயமடைந்த மனதுடன், நீங்கள் தனியாக உங்களது சிந்தனையுடன், தனிமையில் தத்தளிப்பீர்கள். யாரும் உங்கள் அருகில் வர மாட்டார்கள், யாரும் உங்களைக் கையால் தொடமாட்டார்கள். உங்கள் வாழ்க்கை உங்களிடமிருந்து மிக தூரத்திலுள்ளவர்களால் தீர்மானிக்கப்படும்.
கொவிட்டிலுள்ள புதுமையான விடயம் சில நேரங்களில் மிகவும் தனிப்பட்ட ரீதியிலும் மிகவும் பொதுவாகவும் பீதிக்கு உட்பட நேரிடும். மனித வர்க்கத்தினர் இதற்கு முன்னரும் பல தொற்று நோய்களுக்கு முகம்கொடுத்து இருக்கிறார்கள். ஆனால், இதற்கு முன்னர் எந்தக் காலத்திலும் இதுபோன்ற காதைச் செவிடாக்கும் அளவு அதிகமான சத்தத்திற்கு மத்தியில், மனிதர்களை இவ்வாறு தனிமைப்படுத்துவதற்குக் கட்டாயப்படுத்தும் நிலைமையைக் கண்டதில்லை. இந்த இரு அந்தங்களின் அனுபவமானது – சகித்துக்கொள்ள முடியாத தனிமைப்படுத்தலைத் தாண்டி மனித கோஷங்களின் இரைச்சல்.. – இது மிகவும் வேதனைக்குரிய அனுபவமாகும்.
இந்த உளரீதியான சோர்வு மற்றும் தோல்வியான உணர்வானது, உடலை வதைத்துக்கொண்டிருக்கும் தொற்றிக்கு எதிர்ப்பைக் காட்டும் திறனை அதிகமாகப் பலவீனமடையச் செய்யும். நோயாளி பயத்துடனும் குழப்பத்துடனும் இருக்கும்போது அதனால் ஏற்படுவது இந்த வைரஸ் தொற்று மென்மேலும் போஷாக்கடையும்.
இந்த வைரஸ் தொற்றின் போராடும் போர்க்களம் எது என்பதை மறக்க வேண்டாம் – போராட்டம் இருப்பது சுவாசத்துடன் – வைரஸ் தொற்று தாக்கத்தை ஏறபடுத்துவது எமது சுவாசத்திற்காகும். எங்களது பயத்தினால் தாக்கம் அடைவது சுவாசமாகும். நாங்கள் பயப்படுவதால் வைரஸ் தொற்றின் தாக்குதலுக்கு உட்பட்டு இருக்கும் சுவாசம் மேலும் தடைப்படும். இதற்கு பயப்படுவது என்பது நேரடியாக கொவிட் வைரஸ் தொற்றை உயிரூட்டுவதாகும்.
தனிமையிலிருந்து தனிமைப்படுத்தல்
என்னை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கிறது. இப்போது என்னை காப்பாற்றிக்கொள்ள என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று நான் அறிந்திருந்தேன். காய்ச்சல் 103க்கு உள்ளது. சுவாசிக்கும் எல்லா மூச்சுக் காற்றும் பெரிய சத்தமாக கேட்டது. மனித கைகளின் ஸ்பரிசத்தின் தேவைகளை அதிகமாக உணரமுடிந்தது. வேறு எதுவும் என் வாழ்வில் ஞாபகமில்லை.
என்னைக் கொண்டுச் செல்ல ஆம்புலன்ஸ் வண்டி வரும் வரை நான் 6 நாட்கள் தனியாக ஒரு அறையில் இருந்துள்ளேன். ஒரு படி ஏறுவது, துணிப் பையை கையில் எடுத்துச்செல்வது எவ்வளவு சிரமமானது என்பதை நான் மறந்து போயிருந்தேன். 8 அடி தூரத்தில் நின்றுக்கொண்டு என்னையே பார்த்துக்கொண்டு இருந்த என் குடும்பத்தாரை விட்டுவிட்டு நான் நேசிக்கும் வீட்டிலிருந்து வெளியேறும்போது, என்னால் தாங்கிக்கொள்ள முடியாத தனிமையை உணரக்கூடியதாக இருந்தது.
சைரன் ஒலியின் சத்தம் கேட்கும்போது எனது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது எனக்கு ஞாபகமிருக்கிறது. ஆம்புலன்ஸ் வண்டியில் பின் இருக்கையில் செல்லும் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் தேவை ஒன்று எனக்கு இருந்தது. ஆனால், நான் கைகுலுக்கி வெற்றியோடு சிரிக்கும் போது இன்னும் ஒருவர் என்னுடன் இருப்பார் என்று எந்நேரமும் நினைத்தேன்.
சுகாதார ஊழியர்கள் மக்களைப் பலவந்தமாக இழுத்துச்சென்று அறைகளுக்குள் தள்ளிவிடும் விதம், அந்த மக்கள் தனியாக உயிருக்காகப் போராடும் விதம், இறந்ததன் பின்னர் பொலித்தீனில் சுற்றி வீசி எறியும் விதத்தினைக் காட்டும் காணொளி மற்றும் புகைப்படங்கள் ஒன்றும் பெரிதான விடயமொன்றல்ல என்ற மனோநிலை எங்கள் மத்தியில் ஏற்படுவதற்கு காட்டுமிராண்டித்தனமான சமூக ஊடகங்கள் வழிவகுத்துள்ளன. இதுபோன்ற புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை மீண்டும் மீண்டும் பார்ப்பதால் நாங்கள் அதிர்ச்சியடைவதுடன் அதுபோன்ற சம்பவம் உண்மையிலேயே அந்த நோயாளி மற்றும் அக்குடும்பத்தினரை எந்தளவு கடினமான தருணத்திற்குக் கொண்டு செல்லும் என்பது பற்றிய உணர்வுகளே இல்லாமல் போயுள்ளது.
ஒரு நோயாளியை வீட்டிலிருந்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது தனக்கு இனி ஒருநாளும் தனது அன்புக்குரியவர்ளைப் பார்க்க முடியாது, நான் தனியாக இறக்க நேரிடும் என்றே அவர்களுடைய எண்ணத்தில் தோன்றும். இந்த சந்தர்ப்பத்தில், பலவீனமடைந்த மனதுடன் சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் பார்த்தவைகளில் இருந்து தமது யதார்த்தத்தைத் தெரிவு செய்வது நோயாளிகளுக்கு மிகக் கடினமாகும்.
அறிமுகமில்லாதவர்களிடையே சுகயீனத்துடன்
பாரிய கட்டடங்கள், தெளிவில்லாத இணைக் கலாச்சாரங்கள், அதிகாரிகளின் செயற்பாடுகள், இவை எல்லாவற்றுடன் வைத்தியசாலையில் என்பது எம்மை பயமுறுத்தும் இடங்களாகும். ஆரோக்கியமான நிலையில் இருந்தாலும் ஒருவருக்குத் தனியாக வைத்தியசாலையின் வளைவுகளை புரிந்துக்கொள்ள முடியாது. இதனால் தான் எப்போதும் நோயாளியுடன் மற்றுமொருவர் வைத்தியசாலைக்குச் செல்கிறார்கள். அருகில் இருப்பதற்கு,உதவி செய்வதற்கு, நோய் நிலையின் ஏற்றத்தாழ்வுகள் தொடர்பில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதற்கு, வைத்தியர்களுடன் கதைப்பதற்கு, தாதிகளிடம் கேள்வி கேட்பதற்கு, வீட்டிலுள்ளவர்களுக்கு தகவல் அனுப்புவதற்கு யாராவது ஒருவர் நோயாளியுடன் இருப்பார்கள்.
கொவிட் உடன் வரும் கட்டாய தனிமைப்படுத்துலுடன் இவை அனைத்தும் நின்றுவிடும்.
பலவீனமடைந்த பயத்துடன் நோயாளி அனைத்தையும் தனியாக செய்து கொள்ள வேண்டியுள்ளது.
என்னை ஒரு அறையினுள் போட்டார்கள். அடுத்த சில நாட்களில் பூரண பாதுகாப்பு கவசங்களை அணிந்த மனிதர்கள் அவசர அவசரமாக இடையிடையே வந்து போனார்கள். அவர்கள் எனது உடலில் திரவ வகைகள் அடங்கிய ஊசிகளை ஏற்றினார்கள். இரத்தம் எடுத்தார்கள், என்னைக் கருவிகளுடன் இணைத்தார்கள், எனக்கு ஒட்சிசன் கொடுத்தார்கள், ஸ்கேன் செய்தார்கள், எனது நிலையை பரிசோதித்தார்கள். ஆனால் அவர்கள் என்னிடம் கதைக்கவோ, என்னைப் பார்க்கவோ இல்லை. நிமிடத்திற்கு நிமிடம் எனது குழப்பநிலை, பயம், சோர்வு அதிகரித்துக் கொண்டே இருந்தது.
எனக்கு வைத்தியம் செய்தவர்களுக்கு உயர்தரமான புலமை இருந்தது. தேவையான வேலையை செய்து முடித்ததன் பின்னர் யாரும் அந்த அறையில் ஒரு விநாடியாவது இருப்பதில்லை. கோகல்ஸ் மற்றும் முக கவசத்தின் காரணத்தால் எனக்கு அங்குள்ளவர்களின் கண்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் போனது. நீலநிறமான அங்கி, மாஸ்க், கையுறை, வயிசர் மற்றும் ஏப்ரனுடன் அவை அனைத்தும் ஒன்றாகத் தெரிந்தது. குரல் ஒலி கேட்கும் வரை அது ஆணா பெண்ணா என்று என்னால் சொல்ல முடியாமல் இருந்தது. முகம், வாய், கண் இரண்டும் விளங்காத, எப்போதுமே சந்தித்தில்லாத நீலநிற அங்கியை அணிந்த மௌனத்துடனான மனித குழுக்கள் எனது உயிர் மற்றும் உடலைப்பற்றி அனைத்துத் தீர்மானங்களையும் மேற்கொள்ளும்போது, பயத்துடன் எனது சுவாசம் மேலும் இறுக்கமானது.
மனித தொடர்புகளின் தேவை
வைத்தியசாலையில் இருந்த இந்த இரண்டு வாரங்களும் மிக ஆபத்தானது. அறையில் தன்னந்தனியாக, எல்லாவற்றையும் தனியாக செய்து கொண்டு, ஒரு வார்த்தை கதைக்கக் கூட ஒருவருமில்லாத.. அடுத்த முறை வைத்தியர் வந்தவுடன் நான் என்ன கேட்பது? என்ன கேட்க வேண்டும் என்பதைக் கூட நினைக்க முடியாமல் போனது. எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. நான் வைத்தியசாலைக்கு வந்து எவ்வளவு காலம் என்பதோ, நான் தூங்கினேனா இல்லையா என்பதோ ஒன்றுமே என் ஞாபகத்தில் இல்லை. எனக்கு இன்னும் காய்ச்சல் 103ல் இருந்தது. சுய உணர்வு குறைந்து போயுள்ளது. இப்போது வைத்தியர் எனக்கு என்ன சொன்னார்? ஏன் எனக்கு காய்ச்சல் குறையாமல் இருக்கிறது? ஏன் எனக்கு ஸ்டேரொயிட் ஊசி ஏற்றப்படவில்லை? இன்றைய தினம் என்ன?
வைரஸ் தொற்றால் அல்ல, தாங்கிக்கொள்ள முடியாத பயம் மற்றும் தனிமையினால் நான் இறக்கக்கூடும் என்று நினைத்த நேரமும் இருந்தது.
இப்படி இருக்கும்போது இரண்டாது நாள் இரவு சம்பவமொன்று நடந்தது. சோர்ந்து போன நிலையோடு ஒரு தாதி அறைக்குள் வந்தார். அவர் திரும்பி செல்லும்போது மின்விளக்கை அணைத்துவிட்டு “சரி செல்லம்.. கடவுள் துணை இருப்பார்” என்று சொன்னார். அவர் என்னைப் பார்க்கவும் இல்லை, நான் தலையை திருப்புவதற்கு முன்பே அவர் வெளியேறிவிட்டார். ஆனால் அந்த வார்த்தையால் எனக்கு கண்ணீர் குளமானது. பல நாட்களுக்கு பிறகு, மனிதர் ஒருவரின் கருணைக் குணத்தின் மகிமை எனக்கு புரிந்தது.
நட்புறவிற்கான சமிக்ஞைகள்
இந்த சந்தர்ப்பத்தில்தான் மேலும் பயத்திற்கு இடமளிக்கக் கூடாது எனத் தீர்மானம் செய்தேன். மனிதர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் முயற்சியைக் கைவிடக்கூடாது என்றும் இந்த சிக்கலான நிலைக்கு முகம்கொடுக்க இவை இரண்டும் தேவையானது என்றும் புரிந்துக்கொள்ள முடிந்தது. நான் பயப்படாது இருக்க வேண்டும், நான் மனிதர்களுடன் தொடர்புகளை முன்னெடுக்க வேண்டும்ே
இப்படி இருக்கும்போது நான் எனது அறைக்கு வந்து போன முகமில்லாத, நீல நிறங்களால் மூடிய மனிதர்களைப் பற்றி சிறு சிறு குறிப்புகளை சேகரிக்கத் தொடங்கினேன் (வழக்கத்திற்கு மாறாக சிறிய கைகளை உடைய தாதி, மூக்குக்கண்ணாடி வலயத்தில் புலித்தோல் கொண்டு வடிவமைத்திருந்த தாதி ஒருவர், இறப்பர் கையுறைக்குள் அவரது தொலைபேசியைப் போட்டு வைத்திருந்த வைத்திய உதவியாளர் ஒருவர், முகக்கவசத்தின் மேல் ஊதா நிறத்திலான ஒரு பட்டித் துண்டை ஒட்டியிருந்த ஆண் தாதி ஒருவர், வேகமாக கண் இமையைச் சுழற்றும் வைத்தியர் ஒருவர், PPE ஓவர் ரோல் ஒன்றை எந்நேரமும் தரையுடன் இழுத்துச்செல்லும் சுத்திகரிப்பாளர் – இவையெல்லாவற்றையும் நான் குறித்துக்கொண்டேன்.)
அறைக்குள் ஒருவர் உள்ளே வந்த எந்த சந்தர்ப்பத்திலும் நான் அவர்களுடன் பலவந்தமாகக் கதைத்தேன். நான் அவர்களிடம் தகவல்களைக் கேட்டேன், முழுநாளும் பாதுகாப்பான உடைகளை அணிந்துக்கொண்டு மாக்ஸ் வயிஸர் போட்டுக்கொண்டிருப்பதில் உள்ள அசௌகரியத்தைப் பற்றிக் கேட்டேன். கடைசியாக எப்போது வீட்டுக்குப் போனீர்கள், எமது சுகாதார சேவைகள் அரசியலாக்கப்பட்டுள்ளது பற்றி, இந்தத் தொற்றைப் பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்து என்ன என்று கேட்டேன். நான் அவர்களுக்கு என்னை பற்றிய தகவல்களைச் சொன்னேன். எனது பிள்ளைகளைப் பற்றி, எனது நாடகத்தினைப் பற்றி, என்னைத் தொடுவதற்கு உங்களுக்கு பயமா என்று கேட்டேன். நோயாளிக்கு ஒரு மனித ஸ்பரிசம் எவ்வளவு முக்கியமானது என்று நான் அவர்களுக்கு விபரித்தேன். கொஞ்சமாவது என்னிடம் நெருங்கிய எந்நேரமும் நான் அவர்களுக்கு நன்றி கூறினேன்.
கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் எனது நண்பர்களாக மாறினார்கள். எனது குறிப்புப் பட்டியல் வரவர நீளமாகச் சென்றது. இன்னும் அவர்கள் அனைவரும் பார்க்கும்போது ஒரே மாதிரியாகவேதான் இருந்தார்கள். ஆண், பெண், வயதானவர்கள், இளைஞர்கள் – எல்லோரும் ஒரே மாதிரியாக இருந்தார்கள். ஆனால், இப்போது அவர்களை வேறுபடுத்தி இனங்காண முடியும். மெது மெதுவாக அவர்களும் ஓரிரு வார்த்தைகளைக் கதைக்கத் தொடங்கினர். பகிடியாகக் கதைக்கத் தொடங்கினர், என் கையைப் பிடித்தனர், எனது பார்வை முன்பைவிட குணமடைந்திருப்பதாகச் சொன்னார்கள், மிக சோர்வு என்றும், PPE அணிந்துக்கொண்டு இருப்பது எவ்வளவு கஷ்டமானது என்றும் அவர்கள் கூறினார்கள். தனது பிள்ளைகளைப் பற்றிய பயத்துடன் இருப்பதாகச் சொன்னார்கள். கதைக்க ஒன்றுமே இல்லாத நாட்களில் நாங்கள் ஒன்று சேர்ந்து இந்நாட்டு அரசியல்வாதிகளுக்குச் சாபமிட்டோம்.
நான் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு போகும்போது எனது அறைக்கு வந்து போன சுகாதார ஊழியர்கள் 26 பேர் எனது பட்டியலில் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக இனங்காண முடியும் என்பது எனக்குப் பெருமையாக உள்ளது.
இதோ இதுபோன்ற மாற்றங்களுடன்தான் எனது இதயம் அமைதியானது, சுவாசிப்பதற்கு இலகுவானது, நான் குணமடையப் போவதை என்னால் அறிந்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது.
எனது உடலின் உரிமையை பொறுப்பேற்றல்
நான் குணமடைந்ததும் என்னுடையதை எனதாக்கிகொள்வதே எனது அடுத்த தீர்மானமாக இருந்தது. நான் வீட்டு அறையில் தனியாக இருக்கும்போது செய்த சில வேலைகள் இருந்தது. வைத்திசாலையில் இருந்து வந்த சோர்வு நிலையால் நான் அவைகளை நிறுத்தி வைத்திருந்தேன்.
மீண்டும் அவற்றைத் தொடங்கினேன்.
உடல் களைப்படையும் வேலைகள் எதையும் செய்யவேண்டாம் என்று எனக்கு அறிவித்திருந்தார்கள். ஆனால், நான் செய்வது சரி என்றே என் உணர்வு சொன்னது.
நான் காலையிலேயே எழுந்து யோகாசனம் செய்யத் தொடங்கினேன். ஒவ்வொருநாளும் நீராவி பிடித்தேன். எனது கை, கால்களை மசாஜ் செய்துக்கொண்டேன். எந்நாளும் மத்தியானத்தில் கட்டிலில் இருந்து இறங்கிச் சென்று சுடு நீரில் உடலை கழுவினேன் ( ஒக்ஸிஜன் மாக்ஸ் அணிந்துக்கொண்டு!). அதன் பின்னர் வைத்தியசாலை மாடியின் வெளிபுறத்தில் வெயில் படும் விதத்தில் அமர்ந்திருந்தேன். ஒவ்வொரு நாளும் நித்திரைக்குச் செல்லுமுன் கொத்தமல்லி நீர் அருந்தினேன். எனக்கு முடியுமான எல்லா நேரங்களிலும் ஆழமாக சுவாசிக்கப் பயிற்சி செய்தேன்.
சரியாக சுவாசிக்கும் முறை என்னால் மறந்துபோயிருந்ததை உணரக்கூடியதாக இருந்தது. கடந்த சில தினங்களில் ஏற்பட்ட மன உளைச்சலுடன் எனது இதயத்தில் ஆழமாக சுவாசிப்பதில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதுதான் மனிதன் பயப்படும்போது சுவாசிக்கும் நிலை. சுவாசிப்பைப் பற்றிக் கவனம் செலுத்தும்போது, எனது உடல் எந்தளவு இறுக்கமாக உள்ளது என்று தெரிந்தவுடன் நான் அதிர்ச்சியடைந்தேன். இலகுவாக அமர்ந்து பெருங்குடலில் இருந்து ஆழமாக சுவாசிக்கும் விதத்தினை மீண்டும் என் உடலுக்குக் கற்பிக்க அதிகமான நேரம் தேவைப்பட்டது.
மெதுமெதுவாக எனது உடல் மீண்டும் என்னுடன் நெருக்கமாவதை என்னால் அறிய முடிந்தது. இது எனது வாழ்க்கை, இது எனது பயணம் எனும் உணர்வு தெரிய வந்தது. எனக்கு நடந்துள்ளவை தொடர்பில் எனக்குள்ள பங்களிப்பு, உரிமை மற்றும் பலம் என்னுள்ளேயே இருக்கிறது என்பதை என்னால் அறிய முடிந்தது.
குணமடைவதற்காக மனிதர்களுடன் ஒன்றித்தல்
இந்தத் தருணத்தில் தான் மனிதர்கள் எனக்காகச் செய்த பிரார்த்தனைகள், வேண்டுதல்களின் பலத்துடன் அர்த்தத்துடன் ஒன்றிணைய என்னால் முடிந்தது. நான் சுகயீனமடைந்த நாள் முதல் என்னைத் தெரிந்த, என்னை நேசித்த மக்கள் நான் நலமடைய வேண்டுமென்று தகவல்களை அனுப்பினார்கள். ஆனால், வைத்தியசாலையில் இருந்த அந்த பயம்கூடிய கருப்பான சில தினங்களில் இந்த பிரார்த்தனை மற்றும் வேண்டுதல்களால் கட்டியெழுப்பப்பட்ட அசைக்க முடியாத பலத்தின் ஊடாக இருந்த பிணைப்பு என்னிடமிருந்து விலகிச் சென்றிருந்தது.
இதன் பின்னர்தான் நான் என்னையே சமாதானம் செய்து கொண்டேன். குணமடைவதற்குத் தேவையான, யாராலும் சரியாகப் புரிந்துக்கொள்ள முடியாத, ஆனால் கடுமையாக நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு சாட்சி வழங்கக் கூடிய, இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை அணுகிச் செல்ல என்னால் முடியுமாக இருந்தது.
எனது அன்புக்குரியவர்களின் சிறந்த பிரார்த்தனைகள், வேண்டுதல்களின் பலத்துடன் தொடர்பு கொண்டமை குணமடையும் செயற்பாடுகளுக்கு சிறந்த வழியாகும். நான் இன்னும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்தத் தருணத்தில் இருந்து எனக்கு மனிதர்களிடமிருந்து தூரமாக இருப்பது போன்று தெரியவில்லை. என்னைப் பார்ப்பதற்கு என் அறைக்கு வருபவர்கள் இப்போது என்னுடன் கதைக்கிறார்கள். என்னைப் பார்க்க வர முடியாதவர்களுடன் கதைப்பதற்கு நான் தயாராகிக்கொண்டிருக்கிறேன்.
கொவிட் தொற்றியுள்ளது என்று அறிந்த தருணத்தில் என்னிடம் இருந்து இழந்தவை அனைத்தையும் மீண்டும் நான் பெற்றுவிட்டேன். எனக்கு என் உடல் தொடர்பில் ஆழமான தெளிவு மற்றும் தயவுள்ள சமூகத்தின் பிரார்த்தனைகளின் பலமும் கிடைத்தது. பயத்தில் விடுதலை பெற்று சமாதான, கட்டுப்பாட்டுடனான பிரதேசத்திற்குள் நான் உட்புகுந்தேன். பெரியதொரு மாற்றம் தெரிந்ததே எனது சுவாசத்தில்தான்.
இந்த அனுபவத்தின் ஊடாக நான் கற்றுக்கொண்ட பாடங்கள் சிலவற்றை தெளிவாகக் குறிப்பிட்டு நான் இந்தக் கதையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
கொவிட் என்பது பாடங்களைக் கற்பிப்பவர்
கொவிட் வலுவாக வளரத் தேவையான களம் பயம். இந்த பீதிமிக்க மனநிலையுடன் போராடுவது, நோயுடன் போராடுவதன் ஒரு பிரதான பகுதியாகும்.
முதலாவதாக நாங்கள் தனிப்பட்ட வகையில் மேலும் பயம் மற்றும் குழப்பங்களைப் பரவச்செய்ய மாட்டோம் என்ற உறுதியை எங்களுக்கு நாங்கள் கொடுத்துக்கொள்ளல் வேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் கோஷங்களுக்கு அகப்படாமல், பொறுப்புடன் நாம் எம்மை அறிவூட்டிக்கொள்ளல் வேண்டும். எங்களது நோய்த்தடுப்பு பலத்தை விருத்தி செய்து கொள்வதற்காக செயற்படல் வேண்டும், இந்த சவாலான சந்தர்ப்பத்திற்கு முகம்கொடுக்க உள்ளார்ந்த மற்றும் ஆன்மீக பலத்தை நாம் முன்னேற்றிக்கொள்ளல் வேண்டும்.
தொழில் ரீதியாக எடுத்தால் நாம் எமது சுகாதாரப் பிரிவில் தொழில்புரியும் அனைத்து ஊழியர்களுக்கும் முடிந்தளவு உடல் மற்றும் உளவியல் வழியிலான பங்களிப்பை பெற்றுக்கொடுத்தல் வேண்டும். சுகாதார ஊழியர்கள் பல வகையான சிரமங்களோடு இருந்தால், அதிகமாக களைப்படைந்திருந்தால், தமது குடும்பம் தொடர்பில் பயத்துடன் இருந்தால், தன்னிடம் வரும் நோயாளிகளை நன்றாகப் பராமரிக்க அவர்களால் முடியாது போகும். இதனால் நாம் அவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமையைப் பெற்றுக்கொடுத்தல் வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உன்னதமான பொறுப்பு – அதாவது தன்னிடம் வரும் நோயாளிகளைப் பாதுகாத்துக்கொள்வது என்ற வார்த்தையின் அர்த்தத்திற்கு ஏற்ப பாதுகாத்துக்கொள்வது – என்பதை நிறைவேற்றிக்கொள்ள முடியும். அவர்களின் உன்னதமான பொறுப்பினை நிறைவேற்றுமாறு நாங்கள் அவர்களிடம் கேட்க வேண்டியதும் முக்கிய தேவையாகும்.
ஏனென்றால், அது அவர்கள் தொழிலைத் தெரிவு செய்யும்போது ஏற்றுக்கொண்ட பொறுப்பு என்ற காரணத்தினாலாகும். சிக்கலான நேரத்தில் கருணை மற்றும் தைரியமாக செயற்படுவதே அவர்களின் தொழிலின் அடிப்படை நெறிமுறைகளாகும்.
இறுதியாக நாம் பிரஜைகள் என்ற வகையில், எம்மை சோம்பேறிகள் மற்றும் மடையர்களாக மாற்றும் மனிதர்களால் இந்நாட்டில் பரவலடையும் பயம் மற்றும் பிரச்சினையால் குழப்பமடைந்துள்ள கலாச்சாரத்தை செயற்திறனுடன் எதிர்க்க வேண்டியது முக்கியமாகும். பிரஜைகள் என்ற வகையில் நாம் ஒருவருக்கொருவரை பாதுகாத்துக்கொள்வதற்காக ஒன்றிணைதல் வேண்டும். நாம் எமது ஒன்றுபட்ட தன்னம்பிக்கையுடன் தம்மையும் மற்றவர்களையும் குணப்படுத்திக்கொள்வதற்காக எங்களிடமுள்ள வாய்ப்புகள் மீது நம்பிக்கை வைத்து ஒவ்வொருவருக்காகவும் கரம் கொடுத்தல் வேண்டும்.
நாம் பயமில்லாமல் இதைச் செயற்படுத்த வேண்டும்.
நன்றாகத் தயாராகும் போது பயமில்லாமல் இருக்கலாம். நாம் எம்மை மற்றும் எமது குடும்பத்தின் அன்புக்குரியவர்களை இந்தச் சிக்கலுக்கு முகம்கொடுக்க தயார்படுத்த வேண்டும்.
எங்களை ஒன்றாக ஒன்றிணைக்கும் விடயங்களை பலப்படுத்துவதன் மூலம் இதை செயற்படுத்த முடியும். நாங்கள் செபம் செய்யும் குடும்பம் எனின் ஒன்றாக செபங்களை முன்வைக்க முடியும். நாம் தொடர்ச்சியாக கதைக்கும் குடும்பம் எனின் ஒன்றாக இணைந்து கதைக்க வேண்டும். நாங்கள் சமையல் செய்யும் குடும்பம் எனின் ஒன்றாக இணைந்து சமைக்க முடியும். எங்களை ஒன்றாக இணைக்கும் செயற்பாடு ஒன்றில் தொடர்பு கொள்ளும் எந்தவொரு நேரமும் இச்சவாலான சந்தர்ப்பத்திற்கு முகம் கொடுப்பதற்கான பலத்தினை எமக்கு அதிகரிக்கும்.
இலங்கையர்கள் சிக்கலானவற்றை கதைக்காமல் தவிர்த்திருக்கும் போக்கு ஒன்று உள்ளது. ஆனால், எல்லாமும் மிக வேகமாக மாற்றமடையக்கூடிய சூழ்நிலையில் நாங்கள் அமர்ந்து ஒவ்வொருவரும் கதைக்க வேண்டியது முக்கியமாகும். குடும்பமாக ஒன்றாக அமர்ந்து, நோய் வாய்ப்படல், மரணம் மற்றும் மரணத்தின் பின்னர் எமது நம்பிக்கைகள் பற்றி கதைக்க வேண்டும். நடக்கக்கூடியவைகளைப் பற்றி நாம் எமது பிள்ளைகளுடன் கதைக்க வேண்டும். இந்த தொற்றுக்குள் அகப்பட்டுக்கொண்டால் அவர்களுக்கு வெளிப்படையாக உள்ள மாற்றுவழி என்ன என்பது பற்றி நாம் எமது பெற்றோருடன் கதைக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரின் வித்தியாசங்கள் பற்றி கதைக்க வேண்டும். ஒவ்வொருவரையும் மன்னிக்க வேண்டும். சொத்துரிமை, பணம் தொடர்பில் ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும். இதனால் அறிமுகமில்லாத நிலைப்பாடுகளில் எமது பயம் தணிந்துவிடும். ஏனென்றால் நாம் நேசிப்பவர்களுடன் ஒரு புரிந்துணர்வை விருத்தி செய்திருப்போம். இந்த புரிந்துணர்வு ஒரு சிக்கலான சந்தர்ப்பத்தில் பெரியதொரு ஆறுதலைப் பெற்றுக்கொடுக்கும். நாம் கதைத்திருக்கின்றோம், ஒவ்வொருவருக்கிடையிலான தயவினை வெளிக்காட்டியுள்ளோம், அன்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனிமை மற்றும் பயத்துடன் வாழும் இந்த காலத்தில், ஒன்றாக வாழும் மக்கள் முடியுமான எல்லா நேரத்திலும் ஒருவரையொருவர் பரஸ்பர ஸ்பரிசங்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். எமது பிள்ளைகள் மனிதர்களின் ஸ்பரிசங்களின் பயத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். பெரியோர்கள் ஸ்பரிசம் இல்லாத ஏக்கத்தால் முதிர்ச்சி நிலையடைகிறார்கள். மனிதன் இவ் உலகத்தில் தோன்றிய நாள்முதல் சக்தியின் மூலக்கூறான ஒன்றை எங்களிடமிருந்து பறிக்கும் தொற்று ஒன்றிற்கு இடமளிக்க முடியுமா? மனிதரின் ஸ்பரிசம் எமக்கு சுகமானது. விருத்தி மற்றும் மனதிற்குப் பலத்தினைப் பெற்றுக்கொடுக்கிறது. அது எம்மை எமது உடலிற்கும் எமது சமூகத்திற்குமான இணைப்பை ஏற்படுத்துகிறது.
எந்தவொரு சூழ்நிலையிலும் அது விலகியிருப்பின் அதைப் பலப்படுத்தக்கூடிய மாற்றுவழியைத் தேடிக்கொள்ள வேண்டும். அப்போது அதன் பெறுமதியை நழுவவிடாது பாதுகாத்துக்கொள்ள முடியும். மனித ஸ்பரிசங்களை வேறு எதனாலும் ஈடு செய்யமுடியாது.
நாம் நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதை முடிந்தளவு எதிர்க்க வேண்டும். இதுவரை முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள். அவர்கள் நோயாளியுடனேயே இருக்கிறார்கள்,அவர்களுக்கு உதவி செய்ய முடியும். நாங்கள் மாஸ்க் அணிந்துக்கொண்டு பாதுகாப்புடன் நல்ல சிந்தனையுடன் இருப்போமெனின் மனிதர்களைத் தொடுவதற்கு இந்தளவு பயத்தினை ஏற்படுத்திக்கொள்ளும் தேவை ஏற்படாது. உதவிசெய்ய வருவதற்கு ஆயத்தம், தயவு, தன்னம்பிக்கையுடனான ஒரு மனிதன், பயம் மற்றும் மரணத்துடன் போராடும் ஒருவருக்குப் பெரிய பலமாகும்.
மிகவும் கூறுணர்வற்ற வகையில், கவலைக்கிடமாக கொவிட் மரணங்களினைப் பற்றிச் சுட்டிக்காட்டுவது தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. மரணம் என்பது வேதனையானது. விடைபெற்றுச் செல்வது புனிதமானது… மரணித்தவர்களிடம் மற்றும் மரணித்தவர்களுக்காக அஞ்சலி செலுத்துபவர்களுக்கு கௌரவம் மற்றும் மரியாதை செலுத்துவது எங்களின் கடமையாகும். கொவிட் நோயாளி ஒருவர் இறந்துவிட்டால் கடைபிடிக்க வேண்டிய கூறுணர்வு மற்றும் செயற்திறனான நடவடிக்கைகளை வைத்தியசாலை ஊடாக இக்காலத்தில் திட்டமிடப்பட்டிருத்தல் வேண்டும். கொவிட் மரணங்கள் சைரன் ஒலியெழுப்பும் அம்புலன்ஸ் வண்டிகளின் பாரிய குழப்பத்துடன் தினந்தோறும் வைத்தியசாலையிலிருந்து சவச்சாலைவரை கொண்டு செல்லும் தேவை ஏற்படாது. மரணம் நிகழ்ந்ததன் பின்னர் குழப்பமடைதல், அவசரம் தேவையில்லை. அவசரம் மற்றும் குழப்பம் இருக்கவேண்டியது மனிதர்களைக் காப்பாற்றுவதற்கு மட்டுமேயாகும். ஒரு மனிதன் இறந்ததன் பின்னர் அந்த உடலினுள் உள்ள தொற்றுக்கிருமிகளும் இறந்துபோகும் என்று விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இறந்த நபரின் இறுதிக் கிரியைகளை கௌரவத்துடனும், தயவுடனும், கட்டுப்பாடுடனும் நிறைவேற்ற முடியும்.
கொவிட்டிற்கு எதிராகப் போராடுவதற்கு எமக்குள்ள அதிகப்படியான தகுதி
கொவிட் தொடர்பில் உள்ள மிகவும் சுவாரஷ்யமான விடயம், மாஸ்க் அணிந்துக்கொண்டு இருந்தாலும், மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் முகம் அதில் வெளிப்படுவதாகும். கடந்த இரண்டு வருடங்களில் கொவிட் காரணத்தால் மனிதர்களின் ஆத்மாக்களும் வெளிப்படையாகியுள்ளது. இதில் சில ஆத்மாக்கள் பிரகாசமானது, சில ஆத்மாக்கள் தீமையானது. எங்களுக்கு மனிதர்களின் உண்மையான சுபாவத்தினைக் காணக்கூடியதாக இருக்கிறது – துணிச்சலற்றவர்கள், மிருகத்தனமானவர்கள், மடையர்கள், புனிதர்கள், துணிச்சலான போராளிகள், பொய்காரர்கள், சகோதரர்கள்..
இந்தப் பிரச்சினைக்கு முகம்கொடுக்கும்போது பல்வேறு மனிதர்கள், பல்வேறு நாடுகள் அவர்களுக்கே உரிய ஒன்றுக்கொன்று மாறுபட்ட விழுமியங்கள் பெறுமதிகள் என்னவென்பதைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளனர். இலங்கையானது விருந்தோம்பல் மற்றும் நல்லுறவிற்கு உலகப்புகழ் பெற்ற ஒரு நாடாகும். முற்காலம் தொற்று எமது புன்னகை, நல்லுள்ளம் மற்றும் தியாகமனப்பாங்கு ஆகியன எமக்கு உள்ள கவர்ச்சிகரமான பண்புகளாகும். முற்காலம் தொற்று இப்பண்புகளுக்காக நாம் புகழடைந்து இருப்பின் உண்மையிலேயே அவை எமக்குள் இருக்கவே வேண்டும். அவ்வாறாயின், ஒரு நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் போது அப்பண்புகள் எமது வெளிப்பாட்டின் பிரதான அளவுகோல்களாக வெளிவராதது ஏன்?
எமது உள்ளாந்தத்தை ஆழமாக ஆராய்ந்து, போராடுவதற்கு எம்மிடம் உள்ள வளங்களை அடைய ஏதேனும் ஒரு வாய்ப்பு இருந்திருந்தால், இன்று போல் திக்கற்று எல்லா இடங்களிலும் தள்ளாடிக்கொண்டு மிகவும் பலவீனமாக போராட நேரிடாது என நான் திடமாக நம்புகின்றேன்.
கொவிட் தொற்றிலிருந்து மீள்வதற்கான வழியைத் தேடும் போராட்டத்தில் இருக்கும் இத்தருணத்தில், எமக்கு எம்மைத் தேடிக்கொள்ள இந்த சிறிய தீவில் நாம் வணங்கும் பல தெய்வங்கள் எமக்கு உதவி வழங்கட்டும்.
உங்களது நேரத்தை வழங்கியமைக்காக நன்றி.
ருவன்தி டி சிக்கேரா
தமிழாக்கம்: ஜினாந்தனி பரமேஸ்வரன்