Photo: Colombo Telegraph
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி சமூக ஊடகங்களில் தமிழர்களினால் செய்யப்பட்ட பதிவுகளுக்கு எதிர்மறையான பிரதிபலிப்பை பலரும் வெளியிடுவதை காணக்கூடியதாக இருக்கிறது. அது பற்றி சிறு குறிப்பு இது.
எல்லாவற்றையும் வெறுமனே கறுப்பாகவும் வெள்ளையாகவும் மாத்திரம் பார்த்துப்பழகிய அரசியல் கலாசாரத்தின் வெளிப்பாடே அந்த எதிர்மறைப் பிரதிபலிப்புகள். இரண்டுக்கும் இடையிலும் உள்ள சாம்பல் நிறத்திலும் சிலவற்றை நோக்கவேண்டும்.
மங்களவின் அரசியலை மற்றைய தென்னிலங்கை சிங்கள தலைவர்களுடன் ஒப்பிட்டே நோக்கவேண்டும். அவர் புலிகளை கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால், தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ எதிராக இனத்துவேசத்தைப் பேசிய ஒரு சிங்கள அரசியல்வாதி அல்ல. எப்போதுமே மனித உரிமைகள், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், அரசியல் தீர்வு பற்றியே அவர் உரத்துப் பேசியிருக்கிறார். போரை ஆதரித்து அவர் பேசியதில்லை. சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை மாத்திரமல்ல, மகாசங்கத்தையும் பிற்போக்கான சிந்தனையைக் கொண்டவை என்று உரத்து விமர்சித்தவர் என்பதை மறந்துவிக்கூடாது. அதனால் அவர்களின் சீற்றத்துக்கு ஆளானவர். அத்தகைய ஒருவரை பற்றி அனுதாபமாக நோக்குவதில் எந்த தவறும் இல்லை.சந்திரிகாவின் ஆட்சியில் அநுருத்த ரத்வத்த போரை முன்னெடுத்தபோது மறுபுறத்தில் மங்கள் சமாதான முயற்சிகளை முன்னெடுக்க வெண்தாமரை இயக்கத்தை ஆரம்பித்தார்.
சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்தின் இறுக்கமான பிடிக்குள் இருந்துவரும் இலங்கை சிங்கள அரசியல் சமுதாயத்திலும் அரசிலும் தாராளமய சிந்தனை கொண்டவர்கள் ஆற்றக்கூடிய பாத்திரத்திற்கு பெருமளவு மட்டுப்பாடுகள் இருக்கிறது என்பதை விளங்கிக்கொண்டே மங்களவின் அரசியலை நோக்கவேண்டும். சிங்கள அரசியல் சமுதாயத்தில் இருந்திருக்கக்கூடிய ‘லிபரல் டெமோகிரட்’ போக்குடைய அரசியல் தலைவர்களில் மங்கள முக்கியமானவர் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இறப்பதற்கு சில வாரங்கள் முன்னதாகக் கூட தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதில் அக்கறையில்லாமல் இருக்கும் இன்றைய அரசின் போக்கை மங்கள செய்தியாளர் மகாநாடொன்றில் கண்டனம் செய்தார்.
எனவே எதையும் ஒப்பிட்டுப் பார்த்து அணுகும் போக்கை கடைப்பிடித்தால் மங்களவின் மறைவை கணிசமான எண்ணிக்கை தமிழர்கள் அனுதாபமாக பார்ப்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்காது. இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படாமல் அது 70 வருடங்களாக நீடிப்பதற்கும் இனக்கலவரங்கள் மற்றும் போர் மூலம் தமிழர்கள் அழிக்கப்பட்டதற்கும் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடவேண்டியிருப்பதற்கும் மங்கள போன்றவர்கள் காரணமல்ல.
அவரின் மறைவு தாராளமய அரசியல் சிந்தனைக்குப் பேரிழப்பு.
சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அபிலாசைகளையும் மனக்குறைகளையும் ஏற்றுக்கொள்ளாவிட்டால் இந்த நாட்டில் என்றென்றைக்கும் சமாதானமும் அமைதியும் வரப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை இறுதிமூச்சுவரை மங்கள கொண்டிருந்தார். முள்ளிவாய்கால் போருடன் இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்று சிங்கள அரசியல் சமுதாயத்தின் கணிசமான பிரிவினர் (ஆட்சியாளர்களும் கூட) நினைக்கின்ற ஒரு காலகட்டத்தில் மங்களவின் அரசியலை வேறுபடுத்திப் பார்ப்பதில் என்ன சங்கடம் இருக்கிறது?
யாழ்ப்பாணத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி தனக்கு கவலையில்லை என்றும், தமிழர்களைப் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் சந்தோசமடைவார்கள் என்றும் கூறிய ஜனாதிபதி ஒருவரின் ஆட்சியின் கீழும் நாம் வாழ்ந்தோம் என்பதை இன்றைய இளம் சந்ததி அறியுமோ தெரியவில்லை.
அரசாங்கங்களில் முக்கிய அமைச்சராகப் பதவிவகித்து மங்கள கடைப்பிடித்த போக்குகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்படவில்லை. இனங்களுக்கிடையிலான உறவுகளைப் பாதிக்கக்கூடாது என்பதில் அவர் தனது அரசியல்வாழ்வு பூராவும் கடைப்பிடித்த நிலைப்பாட்டுக்காகவே இங்கு புகழாரம் சூட்டப்படுகிறது.
வீ. தனபாலசிங்கம்