Photo: Kumanan
கத்தோலிக்க அருட்தந்தையான ஜிம் பிறவுன் மற்றும் அவருடைய உதவியாளரான வென்சலோஸ் விமலதாஸ் ஆகியோர் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி காணாமல்போனார்கள். கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த கிராமத்தில் வசித்த இடம்பெயர்ந்த சிவிலியன்களை பார்வையிடுவதற்காக அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். யாழ்ப்பாண மாவட்டத்தில் அல்லைப்பிட்டியில் அமைந்திருக்கும் கடற்படையினரின் சோதனைச் சாவடியில் அவர்களை ஆட்கள் இறுதியாகப் பார்த்திருந்தார்கள்.
அல்லைப்பிட்டி கிராமத்தைப் பொருத்தவரையில் ஆகஸ்ட் மாதம் துன்பங்கள் நிறைந்த ஒரு மாதமாக இருந்து வந்துள்ளது. போரிலிருந்து தப்பி, உள்ளூர் கத்தோலிக்க தேவாலயத்திற்கு தஞ்சம் கோரி வந்திருந்த சிவிலியன்களை ஆகஸ்ட் 12ஆம் திகதி இரவு அருட்தந்தை பிறவுண் வரவேற்றிருந்தார். ஆனால், இந்த தேவாலயமும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதுடன், தேவாலய வளவுக்குள் 36 பேர் கொல்லப்பட்டார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என அருட்தந்தை பிறவுண் கடற்படை அதிகாரிகளிடம் மன்றாடி கேட்டுக்கொண்டிருந்தார். முன்னர் மே மாதத்தில் இக்கிராமத்தில் நான்கு மாதக் குழந்தை மற்றும் நான்கு வயதுடைய பிள்ளை ஆகியோரையும் உள்ளிட்ட விதத்தில் ஒன்பது சிவிலியன்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.
பெருமளவுக்கு இராணுவமயமாக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாவட்டத்திலும், நாட்டின் ஏனைய பாகங்களிலும் பெருந்தொகையான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்படும் சம்பவங்களுக்கு இரையாகி வந்த ஒரு காலப் பிரிவாக அது இருந்து வந்தது. அவர் ஒரு கத்தோலிக்க அருட்தந்தையாக இருந்து வந்த காரணத்தினால் காணாமற்போன சம்பவம் நன்கு அறியப்பட்ட ஒரு சம்பவமாக இருந்து வந்தது. ஒரு கத்தோலிக்க அருட்தந்தை காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கூட உண்மை மற்றும் நீதி என்பன ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை என்ற விடயத்தை கடந்த 15 ஆண்டுகள் எடுத்துக் காட்டியுள்ளன. அவர் காணாமலாக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குள் 2009 மே மாதம் போரின் இறுதி நாளன்று மற்றொரு கத்தோலிக்க அருட் தந்தையான பிரான்சிஸ் ஜோசப் காணாமல் போனார். அவர் இராணுவத்தினரிடம் சரணடைவதனையும், ஒரு பேருந்தில் ஏற்றிச் செல்லப்படுவதனையும் இறுதியாக மக்கள் பார்த்திருந்தார்கள். வேறு சில கத்தோலிக்க அருட் தந்தையரும் காணாமலாக்கப்பட்டிருப்பதுடன், கொலை செய்யப்பட்டும் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த சிவிலியன்களுக்கு ஆதரவளிப்பதற்கு முன்வந்தவர்களாகவும், அநீதிகளுக்கு எதிராக தமது குரல்களை எழுப்பியவர்களாகவும் இருந்து வந்துள்ளார்கள். காணாமலாப்பட்டிருக்கும் இலங்கையர்கள் தொடர்பாக அரச நிறுவனங்களுக்கு 65,000 இற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அருட் தந்தை பிறவுண் கடைசியாக காணப்பட்ட கடற்படை சோதனைச் சாவடியின் பதிவேட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு பதில் மாஜிஸ்ட்ரேட் நீதவான் கட்டளையிட்டிருந்த போதிலும், அப்பதிவேட்டை கையளிப்பதற்கு கடற்படையினர் மறுத்துள்ளார்கள் என ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய ஒரு கட்டுரையில் டி.பி.எஸ். ஜெயராஜ் குறிப்பிட்டிருந்தார். மாஜிஸ்ட்ரேட் நீதவான் மற்றும் பொலிஸார் அல்லைப்பிட்டி கிராமத்திலிருந்து திரும்பிச் செல்லும் பொழுது கடற்படையினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்ததாகவும் ஜெயராஜ் அறிக்கையிட்டுள்ளார். மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு (UTHR – Jaffna ) 2007ஆம் ஆண்டில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இதனை ஒத்த ஒரு விளக்கத்தை முன்வைத்திருந்தது. அந்த இரு அறிக்கைகளும் கடற்படையினர் அருட்தந்தை பிறவுணை பகைமையுடன் நோக்கியிருந்ததாகவும், அருட்தந்தை பிறவுண் கடற்படை முகாமை வந்தடைந்த நேரம், கடற்படையினர் குறிப்பிடும் நேரத்திலும் பார்க்க வேறுபட்டதாக இருந்து வந்தனர் என்பதனை மற்றொரு கத்தோலிக்க அருட் தந்தையின் நேரடிச் சாட்சியம் குறிப்பிடுகின்றது என்பதனையும் சுட்டி காட்டியிருந்தன.
அருட்தந்தை பிறவுண் காணாமலாக்கப்பட்ட சம்பவம், 2006 மே மாதத்தில் அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் இரு அயல் கிராமங்களில் நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவங்கள் என்பன தொடர்பாக 2006ஆம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணை செய்ய வேண்டுமென பணிக்கப்பட்டிருந்த பாரதூரமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் 16 இல் ஒன்றாகும். 2009 மே மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஆணைக்குழுவின் அறிக்கை போதியளவில் சான்றுகள் இல்லாதிருப்பதனாலும், “மரணமடைந்ததாக கூறப்படுபவரின் சடலம்” கண்டுபிடிக்கப்படாத காரணத்தாலும் அருட்தந்தை பிறவுணின் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படவில்லை எனக் குறிப்பிடுகின்றது. அல்லைப்பிட்டி படுகொலைகளை விசாரணை செய்வதற்கு போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.
தனது மகனுக்கு என்ன நேர்ந்தது என்பதனை அறியாமலேயே அருட்தந்தை பிறவுணின் தாயார் காலமானார். நான் அவர்களுடைய வீட்டுக்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவருடைய வயது முதிர்ந்த தந்தை, தான் மரணிப்பதற்கு முன்னர் தனது மகனுக்கு என்ன நேர்ந்தது என்பதனை அறிந்து கொள்ள முடியுமா என்பது குறித்து கவலையுடன் கேட்பது வழக்கம்.
தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள்
போர் இடம்பெற்ற காலப் பிரிவின் போது தேவாலயங்களுக்கு உள்ளே வைத்து சிவிலியன்கள் கொல்லப்பட்ட யாழ்ப்பாண மறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரேயொரு தேவாலயமாக அல்லைப்பிட்டி கத்தோலிக்க தேவாலயம் மட்டும் இருந்து வரவில்லை. நவாலி கத்தோலிக்க தேவாலயத்தின் மீதும், அதனைச் சூழவுள்ள கிராமத்தின் மீதும் 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு விமானத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதன் விளைவாக சுமார் 147 சிவிலியன்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இடம்பெயர்ந்தவர்களாக இருந்து வந்ததுடன், அந்த தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்கள். 1993ஆம் ஆண்டு குருநகர் கத்தோலிக்க தேவாலயத்தின் மீது நிகழ்த்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் போது பல சிவிலியன்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.
2019ஆம் ஆண்டில் முற்றிலும் வேறுபட்ட ஒரு பின்புலத்தில், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்தாரிகள் கொழும்பு மறை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் மீதும், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீதும் தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள். இத்தாக்குதல்களின் விளைவாக மூன்று தேவாலயங்களில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். அதே நேரத்தில் ஹோட்டல்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் 70 மரணங்கள் இடம்பெற்றிருந்தன. இத்தாக்குதல்களில் மொத்தம் 600 பேர் காயமடைந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது.
இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு வருடங்கள் மற்றும் நான்கு மாதங்களின் பின்னர் வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றி வைப்பதன் மூலமும், தேவாலயங்களில் மணியை ஒலிக்கச் செய்வதன் மூலமும் உண்மை மற்றும் நீதி என்பவற்றுக்கான கோரிக்கையை முன்வைத்து, ஓர் எதிர்ப்புச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு கொழும்பு மறை மாவட்டம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதி கோரி இவ்வாண்டு மார்ச் மாதம் நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஞாயிறு எதிர்ப்பு நிகழ்வுக்கு இணையான விதத்தில் கறுப்புக் கொடிகளை காட்ட வேண்டும் என முன்வைக்கப்பட்டிருக்கும் வேண்டுகோள் ஊடகங்களில் ஏற்கனவே பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. கொழும்பு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்களும், மேலும் பல கத்தோலிக்கர்களும் உண்மை மற்றும் நீதி என்பவற்றுக்கான உள்நாட்டு செயன்முறைகளில் தமக்கு நம்பிக்கையோ விசுவாசமோ இல்லை எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக சர்வதேச ரீதியில் நீதி கிடைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்கள். அருட்தந்தை பிறவுண் காணாமலாக்கப்பட்ட சம்பவம் போன்ற சம்பவங்களையும் உள்ளடக்கிய விதத்தில் இந்தக் கோரிக்கைகளும், உணர்வுகளும் பல தசாப்தகாலம் (கத்தோலிக்கர்களையும் உள்ளடக்கிய விதத்தில்) தமிழர்கள் முன்வைத்து வந்திருக்கும் கோரிக்கைகளை எதிரொலிப்பவைகளாகவே இருந்து வருகின்றன. அது தேசிய அல்லது சர்வதேச செயன்முறையாக எப்படி இருந்து வந்தாலும் சரி, பல்வேறு இனத்துவக் குழுக்களினால் மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சிகள் நீதிக்கான போராட்டங்களை வலுப்படுத்துவதுடன், தோழமை மற்றும் சகவாழ்வு என்பவற்றையும் வலுப்படுத்த முடியும்.
ருக்கி பெர்னாண்டோ
15 Years Later, No Truth or Justice for Missing Priest and Aide என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.