Photo, INDUSTRYALL
தற்போது, தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள சுதந்திர வர்த்த வலய தொழிலாளர்கள் (FTZ) அவரவர்களின் விடுதிகளில் கட்டாயமாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பலரும் சேர்ந்து தங்கியிருக்கும் விடுதிகளில் பல தொழிற்சாலைகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் இருக்கும் காரணத்தினால் மனித வலுத் தொழிலாளர்களும் (Man Power) நாட்கூலித் தொழிலாளர்களும் தமது வாழ்வினைக் கொண்டு நடத்தச் சிரமப்படுகின்றனர். மேலும், இம்முறை அரசாங்கம் இவ்வாறான தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்காத காரணத்தினால் பாதிப்புறு நிலைக்கு ஆளாகியுள்ளனர். மேலும், கட்டாய தனிமைப்படுத்தலுக்குத் தொழிலாளர்கள் உட்படுத்தப்பட்டுள்ள சில விடுதிகளில் சிறுவர்களும் கர்ப்பிணிப் பெண்களும் உள்ளனர் என்பதுடன், இந்தத் தொழிலாளர்களுக்கான பொறுப்பினை எந்த அதிகாரிகளும் எடுக்காத நிலைமையே காணப்படுகின்றது. இதனால் இவர்கள் பல சவால்களுக்கு முகங்கொடுக்கும் நிலை காணப்படுகின்றது.
மேலும், பெருந்தொற்றின் போது தொழிலாளர்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களை மீறியுள்ளமையும் இடம்பெற்றுள்ளது. இதுவும் முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது.
கட்டுநாயக்கவில் உள்ள ஆமந்தொலுவ மற்றும் அவரிவத்தயில் உள்ள விடுதிகளில் சுமார் 65 தொழிலாளர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இன்னும் கூட்டிச் செல்லப்படவில்லை. சகல தனிமைப்படுத்தல் நிலையங்களும் நிரம்பி வழிவதால் இவர்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் வெற்றிடங்கள் ஏற்படுமிடத்து இவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இவர்களிடம் கூறியுள்ளனர். இதனால் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட தொழிலாளர்கள் அவரவரின் விடுதிகளிலேயே சுயமாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விடுதிகளை இவர்கள் ஏனைய தொழிலாளர்களுடன் பகிர்ந்துகொள்கின்றனர். இத்தொழிலாளர்கள் தொடர்ந்தும் வேலைக்குச் செல்கின்றனர். இது விடுதிகளில் மிக ஆபத்தான நிலைமையினை உருவாக்கியுள்ளது. எந்த அதிகார அமைப்பும் இத்தொழிலாளர்களின் இந்த நிலை தொடர்பாகப் பொறுப்பு ஏற்காத காரணத்தினால் இவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. சில சந்தர்ப்பங்களில், தொழிலாளர் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு 5 நாட்கள் கடந்த பின்னரும் கூட அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. தொழிலாளர் ஒருவருக்குத் தொற்று இருப்பது அறியப்பட்ட பின்னரும் கூட பலரும் பகிர்ந்துகொள்ளும் விடுதிகளில் தொற்று நீக்கம் செய்யப்படுவதில்லை. தெளிவான திட்டம் எதுவும் இல்லை, உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் வரையில் தமது கைகள் கட்டப்பட்டுள்ளன என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இத்தொழிலாளர்களிடம் கூறியுள்ளனர்.
கட்டுநாயக்கவில் உள்ள ஒரு விடுதியில் தொற்றுக்குள்ளான தொழிலாளர் ஒருவர் தொற்று உறுதி செய்யப்பட்டு 3 நாட்களின் பின்னரே ஒரு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார். 7 நாட்களில் இவர் விடுதிக்கு மீ்ண்டும் கொண்டுவரப்படுவார் என அவர்களிடம் கூறப்பட்டுள்ளது. ஆனால் 10 நாட்கள் கூட தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருக்காமல் இவர் முற்கூட்டியே மீண்டும் விடுதிக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இது இவரின் கர்ப்பிணியான மனைவிக்கும் விடுதியிலுள்ள ஏனைய தொழிலாளர்களுக்கும் ஆபத்தினை ஏற்படுத்தலாம்.
ஏனைய தொழிலாளர்களும் அங்கே தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். வெவ்வேறு தொழிற்சாலையினைச் சேர்ந்த 44 தொழிலாளர்கள் 21 அறைகளைப் பகிர்ந்துகொள்கின்றனர். இவர்களுக்கு 5 நாட்கள் வரையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை (2 பேர் தவிர). மனித வலுத் தொழிலாளர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நலனைக் கவனிக்க யாரும் இல்லாத காரணத்தினால் இவர்களில் பலர் உண்ண உணவின்றி இருக்கின்றனர்.
கட்டுநாயக்கவில் அவரிவத்தயில் உள்ள விடுதி ஒன்றில் உள்ள 75 தொழிலாளர்களில் 2 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது மே 10 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், 3 நாட்களாகியும் இவர்கள் வைத்தியசாலைக்கோ அல்லது தனிமைப்படுத்தல் நிலையத்திற்கோ அழைத்துச் செல்லப்படவில்லை. தொற்று ஏற்பட்டுள்ள தொழிலாளர்களின் தொழில் வழங்குனர்களினால் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பயன்படுத்துவதற்காக ஒரு கழிப்பறையும் ஒரு குளியலறையும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த இரண்டு தொழிலாளர்களும் தங்களின் ஏனைய அனைத்து நடவடிக்கைகளையும் தாங்களாகவே செய்யவேண்டி இருப்பதால் இது தொற்றினை உண்மையிலேயே குறைக்குமா என்கின்ற கேள்வி இங்கே எழுகின்றது. மேலும், வெவ்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கே உள்ள காரணத்தினாலும் மனித வலுத் தொழிலாளர்களும் இருக்கின்றமையாலும் அவர்கள் தொடர்ந்தும் வேலை செய்கின்ற காரணத்தினாலும் இந்த நிலை ஆபத்தானதாக மாறியுள்ளதுடன் வைரஸ் துரிதமாகப் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. விடுதி உரிமையாளர்களுக்குப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் 10,000 ரூபா பெறுமதியான பொருட்களல்ல. சில கிராம சேவையாளர்கள் ஏனையோருக்கு பில்களுடன் பொருட்களை வழங்கி வருகின்றனர். விடுதி உரிமையாளர்களுக்குப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், ஏனையோருக்கு வழங்கப்படுவதில்லை. ஏனெனில், அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை.
ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளில் ஒருவரான தொழிலாளர் ஒருவர் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்கின்றார். இவரின் உடன்பிறப்புக்களில் ஒருவர் புற்றுநோயாளியான தனது தாயுடன் வசிக்கின்றார். இவரின் 3ஆவது உடன் பிறப்பும் விடுதியில் வசிக்கின்றார். தாயுடன் வசிக்கும் சகோதரிக்கு அண்மையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரையும் இவரின் குடும்பத்தையும் வெளியேறுமாறு விடுதி உரிமையாளர் கேட்டுள்ளார். ஏனெனில் தொற்றாளரான இவரின் சகோதரியிடம் இருந்து இவருக்குத் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தினால் ஆகும். எனவே வேறு வழியின்றி இவரும் இவரின் கணவரும் பிள்ளையும் இவரின் தாயுடனும் தொற்றாளரான சகோதரியுடனும் சேர்ந்து வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது இவர்களை ஆபத்தான நிலைக்கு ஆளாக்கியுள்ளது. பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சகோதரியினை மே 9 ஆம் திகதி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். இவரை முதலில் அழைத்துச் சென்றபோது தன்னை எங்கே அழைத்துச் செல்கின்றார்கள் என்பது இவருக்குத் தெரியவில்லை. அடுத்த நாள் இவர்களுக்கு இரவு உணவு வழங்கப்படவில்லை. ஆனால் வேலைத்தளத்தினால் இவருக்கு பிஸ்கட் வழங்கப்பட்டிருந்தது. அதனை இவர் சாப்பிட்டிருக்கின்றார். இங்கே எவ்வித குறிப்பிட்ட திட்டமிடலும் இல்லாமையே தெரிகின்றது. இவரின் சகோதரி மிகவும் பலவீனமானவராக இருக்கின்றார். இவருக்கு நெஞ்சு வலியும் உள்ளது. இவருக்கு வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள சகல தொழிற்சாலைகளும் தற்போது இயங்கிவருகின்றன. இருந்தாலும் எழுமாறாக பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அண்மையில் தொற்றுக்குள்ளானதாகக் கண்டறியப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
J.K. கார்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடட், லியனகேமுல்ல, கட்டுநாயக்க
மே மாதத்தின் முதல் வாரத்தின் போது 12 தொழிலாளர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனால், ஒரு வாரத்தினுள் இந்த எண்ணிக்கை 55 ஆக அதிகரித்தது.
அன்செல் லங்கா பிரைவேட் லிமிடட், பியகம
தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை பற்றிய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் எதுவும் இல்லாதபோதிலும் தற்போது இந்த எண்ணிக்கை 100 ஆக இருக்க முடியும் என உத்தியோகபூர்வமற்ற மூலங்கள் தெரிவித்துள்ளன.
Courtaulds குளோதிங் லங்கா (CCL) பிரைவேட் லிமிடட், கடுவெல்லகம, நீர்கொழும்பு
தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான பரிசோதனையின் போது 50 பேருக்குத் தொற்றிருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர், மே 7 ஆம் திகதி, தொழிற்சாலை மூடப்பட்டு சகல தொழிலாளர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் மே 10 இல் வெளியிடப்பட்டன. 300 தொழிலாளர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. தொழிற்சாலை 10 ஆம் திகதி மீண்டும் திறந்தபோது 150 தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்தனர்.
சிரியோ லிமிடட், படல்கம
இங்கேயும் எழுமாறான பரிசோதனையின் போது தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். சகல தொழிலாளர்களுக்கும் மே 7ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
நெக்ஸ்ட் மெனுபக்சரிங் (பிரைவேட்) லிமிடட், கட்டுநாயக்க
முதலில் 7 தொழிலாளர்களுக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், இந்த எண்ணிக்கை தற்போது 100 இனைத் தாண்டியுள்ளது. மே மாதம் 10ஆம் திகதி காலை மேலும் 40 தொழிலாளர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இன்னும் அதிகமான பரிசோதனை முடிவுகள் அன்றைய தினம் மாலையில் கிடைக்கவிருந்தன. பன்னிரெண்டு தொழிற்சாலைப் பிரிவுகளில் நான்கு மட்டுமே தற்போது இயங்குகின்றன. ஏனைய தொழிலாளர்களுக்கு ஒன்றில் தொற்று ஏற்பட்டுள்ளது அல்லது அவர்கள் தொற்றாளர்களுடன் நெருங்கிய உறவினைப் பேணியவர்கள். தொழிலாளர்கள் சுய தனிமைப்படுத்தலில் அவரவர் விடுதிகளில் தங்கியுள்ளனர். இருந்தாலும் தொழிலாளர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். ஏனெனில், சில சக தொழிலாளர்களுக்குச் சிவந்த கண்கள், காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுவதுடன் சிலர் வேலை செய்கையில் மயங்கி விழுந்திருக்கின்றனர். தொழிலாளர்களுக்கான பொறுப்பினை ஏற்பதற்கு அதிகாரமுடைய யாரும் இல்லாத காரணத்தினால் நிலைமை குறிப்பாகப் பயங்கரமானதாக இருக்கின்றது. ஏனெனில், மனித வள ஆளணியினரில் அதிகமானவர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.
மேலும், இந்தத் தொழிற்சாலையில் தொற்றாளர்களாகத் மே 10ஆம் திகதியன்று அடையாளம் காணப்பட்ட தொழிலாளர்கள் இன்னும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இவர்களை அழைத்து முன்னெச்சரிக்கையுடன் விடுதிகளில் தங்கியிருக்குமாறு கூறியுள்ளனர். தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இவர்களைக் கூட்டிச் செல்வது பற்றி அவர்கள் எதுவும் கூறவில்லை. மே 10 இல் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட தொழிலாளர் ஒருவர் அவரது விடுதியில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார். அவ்விடுதியில் வேறு ஒன்பது தொழிலாளர்களும் உள்ளனர். எவ்வாறாயினும், விடுதியில் சுய தனிமைப்படுத்தலில் தொழிலாளர்கள் உள்ளனர் என்ற அறிவித்தலை விடுதிக்கு வெளியே பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஒட்டவில்லை. இந்த விடுதியில் தங்கியுள்ள United Tobacco Processing (UTP) (Pvt) Ltd. and Hirdaramani Garments Katunayake (Pvt) Ltd போன்ற ஏனைய தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைக்கு வர வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. இவர்களின் கேட்டுக்கு வெளியே தனிமைப்படுத்தல் அறிவித்தல் போடப்படாததால் தமது விடுப்பு வெட்டப்படும் எனத் தொழிலாளர்கள் பயப்படுகின்றனர். இந்த ஒன்பது தொழிலாளர்களும் ஒரு கழிப்பறையினையே பயன்படுத்துகின்றனர். தொற்றுள்ள தொழிலாளர் காலை 5 மணிக்குப் பயன்படுத்துவார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் பயன்படுத்துவார்கள். இவர்களிடம் உரிய துப்பரவாக்கல் பொருட்கள் இல்லாத காரணத்தினால் வைரஸ் பரவுவதற்கான ஆகக்கூடிய ஆபத்துக் காணப்படுகின்றது.
ஸ்மார்ட் சேர்ட்ஸ் (லங்கா) லிமிடட், ஏடிஜி கிளவ்ஸ் நிட்டிங் (பிரைவேட்) லிமிடட், நெக்ஸ்ட், கிரிஸ்டல் மார்டின் கார்மென்ட்ஸ், ஸ்கிரீன்லைன் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடட், ஸ்கை ஸ்போர்ட் லங்கா பிரைவேட் லிமிடட், எஸ்சி செய்ல்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிடட், எஸ்டீல் மற்றும் பிரண்டிக்ஸ் ஆகிய தொழிற்சாலைகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்களுக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாம் வேலைக்குச் செல்லாவிட்டால், அந்த நாட்கள் தமது விடுப்பில் இருந்து வெட்டப்படும் எனச் சில தொழிலாளர்கள் பயப்படுகின்றனர். தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட பலர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குக் கூட்டிச் செல்லப்படவில்லை இவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றும் திட்டம் பற்றியும் அறிவிக்கப்படவில்லை. விடுதிகளில் தொழிலாளர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்கையில் அது தனிமைப்படுத்தல் பிரதேசம் என்ற அறிவித்தல் வெளியே ஒட்டப்படவில்லை. இதனால், தொழிலாளர்கள் விடுதியில் இருந்து வெளியே சென்று உள்ளே வருகின்றனர். தம்மையும் ஏனையோரையும் ஆபத்துக்கு உட்படுத்துகின்றனர். இது மிக ஆபத்தான சூழ்நிலையாகும். வீடுகளில் தங்கியிருப்பதற்கும் தொழிலாளர்கள் தயக்கமுறுகின்றனர். ஏனெனில் அவ்வாறு தங்கினால் அவர்களின் சம்பளங்கள் வெட்டப்படும். வீட்டில் தங்கியிருப்பதால் நட்டம் ஏற்படும் என்பதால் தொழிலாளர்கள் எப்படியும் வேலைக்குச் செல்கின்றனர். குறிப்பாக, சுய தனிமைப்படுத்தலில் இருப்பவர் தமது தொழிற்சாலையினைச் சேர்ந்தவராக இல்லாவிட்டால் ஏனைய தொழிலாளர்கள் வழமை போன்று தொடர்ந்து வேலைக்குச் செல்கின்றனர். தொழிலாளர்களுக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர் அல்லது தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கும் சக தொழிலாளர்களுக்கும் போதிய பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை.
MAS Active Linea Intimo மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 300 தொழிலாளர்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைக்குச் செல்கின்றனர்.
Screenline Holdings (Pvt) Ltd போன்ற சில தொழிற்சாலைகள் அடிப்படைச் சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுவதில்லை. இதனால் தொழிலாளர்கள் தமது பாதுகாப்புத் தொடர்பாக அஞ்சுகின்றனர். சகல தொழிலாளர்களும் முகக் கவசம் அணிந்து கைகளைத் தொற்று நீக்கம் செய்யவேண்டும் என்றாலும் 15 – 20 தொழிலாளர்கள் ஒருவருடன் மற்றவர் ஒரே இயந்திரத்தில் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டியிருக்கின்றது. 2 – 3 நாட்களுக்கொரு தடவையே இயந்திரம் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்படுகின்றது.
MAS Active Linea Intimo, Silueta (Pvt) Ltd., and Ansell Lanka Pvt. Ltd ஆகிய தொழிற்சாலைகளைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரவரின் விடுதிகளில் சுய தனிமைப்படுத்தல் செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர். ஆனால், ஏனைய தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் அங்கே தங்கியுள்ளனர். இந்த விடுதிகளில் உள்ள தொழிலாளர்கள் விடுதியில் இருந்து வேலைக்குச் சென்று வருவதால் இந்த விடுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் தொற்றுப் பரவும் எனப் பயப்படுகின்றனர்.
பொடிலைன் (பிரைவேட் லிமிடட்) ஹொரன
இந்தத் தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 110 தொழிலாளர்களுக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், தொழிற்சாலை இவர்களுக்குப் பணமாகவோ அல்லது உலர் உணவுகளாகவோ எவ்வித நிவாரணத்தினையும் வழங்கவில்லை.
ஹொரணயிலுள்ள Taian Lanka Steel Company (PVT) Ltd மற்றும் Laojee தொழிற்சாலைகள் அதிகளவான தொற்றாளர்கள் இருப்பதாக அறிக்கையிட்டுள்ளன. லாவோஜி தொழிற்சாலை தற்போதைக்கு மூடப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தொழிற்சாலைகள் வழமைபோன்று இயங்கிவருகின்றன.
லலன் ரப்பர் (பிரைவேட்) லிமிடட், திஹாரிய மற்றும் ஹொரமஸ்மன்கந்த
கடைசி அலையினைப் போன்றே இத்தடவையும் தொழிலாளர்களுக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்செய்தி வெளியில் கசிந்துவிடும் என்று தொழிற்சாலை உரிமையாளர்கள் பயப்படும் காரணத்தினால் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படவில்லை.
அக்குவா கார்மென்ட், நீர்கொழும்பு
127 தொழிலாளர்களுக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தொழிலாளர்கள் தொழிற்சாலையில் தொடர்ந்தும் வேலை செய்து வருகின்றனர்.
மனிதவலுத் தொழிலாளர்கள்
வேலைக்கு வருவதற்கு முன்னர் தொழிலாளர்கள் பிசிஆர் பரிசோதனை செய்யவேண்டும் எனச் சில தொழிற்சாலைகள் வற்புறுத்துகின்ற காரணத்தினால் பல தொழிலாளர்களினால் இதற்குப் பணம் செலவழிக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. மனித வலு முகவர்கள் பரிசோதனைக்கு அனுசரணை வழங்க மறுத்துள்ள காரணத்தினாலும் இத்தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் தங்களின் விடுதிகளில் தங்கியுள்ளனர். சில தொழிற்சாலைகள் மனித வலுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள போதிலும் அவர்கள் ஒரு தொழிற்சாலையில் நீண்டகால வேலையினைப் பெறுவதில்லை. மேலும் தற்போது அதிகமான தொழிற்சாலைகள் மனித வலுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தாத காரணத்தினால் இவர்களில் பலர் தொழிலின்றி கடுமையான பொருளாதாரக் கஷ்டங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மேலே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் நோக்குகையில், சுதந்திர வர்த்தக வலயத்தினுள் கொவிட் 19 தொற்று மேலும் பரவுவதைத் தடுத்துக் கட்டுப்படுத்த அரசாங்கம் அவசரமான திட்டத்தினை அமுல்படுத்தவேண்டும் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகின்றது.