சோஷனா சுபோவ்வினுடைய (Yasha Lewine 2018) ‘கண்காணிப்பு முதலாளித்துவ யுகம்: புதிய அதிகாரத் தளத்தில் மனித எதிர்காலத்திற்கான போராட்டம்’ (The age of Surveillance Capitalism: The fight for a Human future at the new frontier of power – 2019) என்ற நூல் மிக அண்மைக் காலமாக பிரபலம் பெற்ற நூலாக பேசப்படுகின்றது. அதற்கு முன்னர், யாஷா லெவின் ((Yasha Lewine 2018) சோவியத் யூனியனைச் சேர்ந்த ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளர், தன்னுடைய நூலில் இணையத்தள அபிவிருத்தியில் இராணுவ செல்வாக்குப் பற்றிக் குறிப்பிடுகின்றார். பனிப்போரின் பின் கணிணி அறிமுகப்படுத்தப்பட்டது என குறிப்பிடும் ஆசிரியர், கணிணி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தக்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக விபரிக்கின்றார். தொடர்ந்து குறிப்பிடுகையில் இணையத்தளம் (Internet) எப்போதுமே கண்காணிப்பு தொடர்பானது, இது ஒரு இரகசியமான விடயமுமல்ல. இவ்வாறான வலைப்பின்னல் அறிமுகம் கிளர்ச்சியை அடக்குவதற்காக வியட்நாம் போரில் தொடங்கி இன்றுவரைக்கும் பயன்படுத்தப்படுவதான குற்றச்சாட்டு இன்றும் இருந்து வருகின்றது. இதனுடைய அடுத்த நகர்வாகத்தான் இணையத்தளத்தை தனியார் மயப்படுத்துவதை நோக்க வேண்டி இருக்கின்றது. இத்தளத்திலே தான் (google)இன் எழுச்சியையும், இணையத்தளத்தில் ‘தேடும்படலத்தில்’ தனியுரிமை மிக்க வல்லரசாக உள்ளது. தற்போது (online) நிகழ்நிலை உலகத்தை தமது மேலாண்மைக்குள் ஐந்து நிறுவனங்கள் கொண்டிருக்கின்றன. அமேசன் (Amazon), அப்பிள் (Apple), பேஸ்புக் (Facebook), கூகுள் (Google), மைக்ரோசொப்ட் (Microsoft). Google க்கும் பெண்டகனுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றியும், அமேசன் தற்போது அபிவிருத்தி செய்து வரும் Cloud Computing க்கும் CIA க்குமிடையிலான தொடர்புகள் பற்றியுமான தகவல்கள் இரகசியமானது அல்ல. ஒட்டு மொத்தத்தில் Silicon Valley ஐ சூழவுள்ள கணிணி ஏகாதிபத்திய சாம்ராஜ்யத்திற்கும் அமெரிக்க படைத்துறை கட்டுமான உளவுத்துறைக்குமிடையிலான தொடர்புகள் பற்றிய வெளிப்படையான ஆய்வுகள் பொதுவெளியில் நிறையவே உள்ளன. மேற்கூறப்பட்ட தொழிநுட்ப வணிக நிறுவனங்களின் வளர்ச்சி என்பது பெண்டகனின் கைகளில்தான் உள்ளது. Smart City வினைத்திறன் மிக்க நகரங்கள் என அறிமுகப்படுத்தப்பட்ட நகரங்களில் கண்காணிப்பு மிகத் தீவிரமாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. மிக அண்மையில் படைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘M’ Smart Bus Stop – வினைத்திறன் மிக்க பேருந்து நிலையம் ஒரு பரிசோதனை முயற்சியே. இப்பரிசோதனை வெற்றியளிக்குமானால் இது ஏனைய இடங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படலாம். இதன் மூலம் அரசிற்கு எதிரான கண்காணிப்பை தீவிரமாக்கி கட்டுப்படுத்துதல் இலகுவானதாகும்.

Shoshona Zuboff (2019) குறிப்பிடுகின்ற கண்காணிப்பு முதலாளித்துவம், மனித அனுபவத்தை, இலவசமான மூலப்பொருளாகக் கொண்டு மனித நடத்தையை தீர்மானிக்கின்றது. மனித அனுபவத்தினூடாக கிடைக்கப்பெறும் தகவல்கள், நடத்தை தரவுகளாக (Behavioural Data) மாற்றப்பட்டு, ‘இயந்திர அறிவு’ (Machine Intelligence) பொறிமுறைக்கூடாக எதிர்வு கூறப்படும் முடிவுப் பொருளாக (Prediction Product) மாற்றப்படுகின்றது. இதன் மூலம் ஒருவர் எதிர்காலத்தில் என்ன செய்யக்கூடும் என்பதைத் தீர்மானித்தலாகும். இவை எதிர்காலத்தில், எதிர்கால நடத்தை சந்தையில் விற்பனைப் பொருளாக்கப்படும். மத்தியில் ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகள் மனிதர்களின் நடத்தை பற்றிய எதிர்வுகூறலை செய்வதோடல்லாமல், மனிதர்களின் நடத்தையையும் தீர்மானித்து கட்டமைப்பவையாகவும் மாறுகின்றன. ஆசிரியர் குறிப்பிடுகின்ற, அறிவிலிருந்து அதிகாரத்திற்கான நகர்வு மனிதர்களை தானியங்கு நடத்தைக்கு மாற்றுவதாகும். ‘எங்களுக்கான ஏகாதிபத்தியத்தை அல்லது ஆதிக்கத்தை நாங்கள் பணம் கொடுத்து தெரிவு செய்கின்றோம்’ (அதே நூல்).

“கண்காணிப்பு முதலாளித்துவம் எங்களைப் பற்றிய ஒவ்வொன்றையும் தெரிந்து கொண்டிருக்கின்றது. ஆனால், அவர்களுடைய செயற்திட்டங்கள் எங்களுக்குத் தெரிவதில்லை. எங்களிலிருந்து புதிய அறிவைப் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால், எங்களுக்காக அல்ல. எங்களுடைய எதிர்காலத்தை ஏனையவர்களுடைய நலன்களுக்காக எதிர்வு கூறுகின்றனர்..” (அதே நூல்). முதலாளித்துவம் சமூக விழுமியங்களை கட்டவிழ்க்கின்றது, அதே நேரத்தில் தனிமனித சுதந்திரத்தையும் சிக்கலுக்குட்படுத்துகின்றது. அதனூடாக ஜனநாயக அடிப்படை விழுமியங்களை சவாலுக்குட்படுத்துகின்றது. கண்காணிப்பு முதலாளித்துவத்தின் வளர்ச்சி மனித இருப்பை சவாலுக்குட்படுத்துகின்றது (அதே நூல்).

Suboff (2019), கண்காணிப்பு முதலாளித்துவத்தை மோசமான அல்லது வலிமையான (Rough) சக்தியாக (Force) குறிப்பிடுகின்றார். இது அறிவைக் கொண்டு ஆரம்பிக்கின்றது, அதே நேரத்தில் அந்த அறிவை முற்றுரிமை (Monopoly) எடுக்கின்றது: அறிவை, ஆணையுரிமையை, அதிகாரத்தை வரையறுக்கின்றது. அறிவு என்று குறிப்பிடுவது முறைசார் கற்கை மூலம் பெறப்படும் அறிவு அல்ல, மாறாக புதிதாக பெறப்படும் அறிவை, இயந்திரங்கள் தரவுகளை சேகரித்து, ஆராய்வதன் மூலம் பெறப்படும் அறிவை. இவ்வாறான மீதரவுகள் (Bid Data) லாபமீட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. மனித உணர்வு நிலையை கண்காணிப்பதனூடாக அவற்றை மீகை நடத்தையாக (Behavioural Surplus) மாற்றி அதன் பின்னர் அந்நடத்தையை திரிவுபடுத்திக் கட்டமைத்து, அதையே கட்டுப்படுத்தும் கருவியாக உபயோகித்து, அதிகாரமாக உருமாற்றுகின்றது. ‘கூகுள் வரைபடம்’ தொழிநுட்பத்தை அவர் ‘காலனித்துவம் எனக் குறிப்பிடுகின்றார். ஐரோப்பிய காலனித்துவத்திற்கு நிலபட வரைபு மிக முக்கியமானது. நிலபட வரைபு (Mapping) நிலப்பகுதியை வெற்றி கொள்ளலுக்கு இன்றியமையாததாக காட்டி, வெற்றி கொள்ளலுக்கு கைப்பற்றப்பட்டதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் அவசியமானது என்கின்றார் (C.H. Gray 2019).

கூகுள் தனிநபரின் ‘தேடும் வரலாற்றை’ (Search Histories) சேகரித்து, தேசிய புலனாய்வுத் துறையுடனும், காவல்துறையுடனும் பகிர்ந்து கொண்டதை ஒப்புக் கொண்டது (S. Suboff 2015). கேம்பிரிஜ் அனாலிடிக்கா (Cambridge Analytica) என்ற வணிக நிறுவனம், வாக்காளர் மீது செல்வாக்குச் செலுத்தும் ஆலோசனைக்குழு, 87 மில்லியன் பேஸ்புக் வாடிக்கையாளர்களது தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்திய வரலாறு நினைவிருக்கும் (Davies 2015). இவ் வணிக ஆலோசனைக்குழு நடத்திய கணக்கெடுப்பிலிருந்து வாக்காளர்களது நடத்தை எதிர்வு கூறப்பட்டது.  ஆனால், அதே வணிக நிறுவனம் Ted Cruz க்கும் டொனால்ட் ட்ரம்பிற்கும் அவர்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் உதவியது என குற்றஞ் சாட்டப்பட்டது (D. Lyon 2019). அதன் பின்னர் ஓரளவிற்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர் விழிநிலைக்கு வந்ததாகத் தெரிந்தது. இணையத்தளம் என்பது ஒரு கண்காணிப்பு வெளி (Bauman 2013). இதனுடைய எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்படாமல் இருக்கும். இந்தக் கண்காணிப்பு வெளி இணையத்தளத்தில் தான் வாழ்க்கை வாழப்பட வேண்டும் என்ற சமூகக் கட்டமைப்பை உருவாக்கி விட்டது. இதனால் தான் பெரும்பாலானோர் இதைத் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கொள்கின்றனர். அதனால் ஈடுபட வேண்டிய தேவைக்குள் உள்வாங்கப்படுகின்றனர். இதை ‘சமூக கண்காணிப்பு என்பர் (Marvick 2012). இந்தக் கண்காணிப்பு வெளி வணிக ஈடுபாட்டுடன் மட்டும் வரையறுத்துக் கொள்ளப்படவில்லை. அரசுப் புலனாய்வுத்துறையும், காவல்துறையும் இதைப் பயன்படுத்துகின்றது.

சமூக வலைத்தளங்களில் நேரம் எவ்வளவிற்கு செலவிடப்படுகின்றதோ அவ்வளவிற்கு தரவுகள் சேகரிக்கப்படுகின்றது. அத்துடன், கண்காணிப்பும் நடைபெறுகின்றது. இணையத்தள கண்காணிப்பு, கண்காணிப்பு பண்பாட்டை உருவாக்கியது. கண்காணிப்பு கமராக்களின் அறிமுகம் கண்காணிப்பை இன்னும் தீவிரமாக்கியது. குறிப்பாக மக்களுடைய தனிநபருடைய வினைத்திறன் மிக்க வெளியை இந்த கமராக்கள் ஆக்கிரமித்தன. இக் கண்காணிப்பு தனிநபர்களுடைய வாழ்க்கையையும், நாளாந்த வாழ்க்கையையும் ஆக்கிரமித்துக் கொண்டது. இப்பண்பாடு எவ்வாறு நாங்கள் இருக்க வேண்டும் என்பதையும், எவ்வாறு இருக்கக்கூடாது என்பதையும் தீர்மானித்துக் கொண்டது. உதாரணம் அலுவலக வாயில் திறக்கப்படமாட்டாது, என்னுடைய நுழைவு அட்டை புதுப்பிக்கப்படாவிட்டால், அதேபோல் என்னுடைய கார் வேலை செய்யாது, என்னுடைய குருதியில் அதிகமாக மதுபானம் கலந்திருந்தால், இதுவே சமூக வலைத்தளங்களில் நாங்கள் நினைத்த நபர்களை பின்தொடர்வதிலிருந்து கண்காணிப்பது வரை நீண்டிருக்கும்.

(S. Suboff 2019) ஹாவார்ட் கசட் நேர்காணலில் கண்காணிப்பு முதலாளித்துவத்தினால் ஏற்படப் போகும் ஜனநாயகத்தின் மாற்றம் அல்லது அழிவு பற்றிக் குறிப்பிடும் போது குறிப்பாக, கண்காணிப்பு முதலாளித்துவம் ஏற்படுத்தும் ‘நடத்தை மாற்றத்தால் தனிமனித சுதந்திர இழப்பும், தனிமனித செயலாண்மைத்தன்மை (Human Agency) இழப்பும், ஜனநாயகத்தை உள்ளிருந்து பாதிக்கின்றது எனக் குறிப்பிடுகின்றார். மேற்கூறப்பட்டவற்றின் இழப்பால், செயலிலும், சிந்தனையிலும் சுதந்திரத்தன்மை இன்மையால், அறம் சார்ந்து தீர்மானம் எடுக்க முடியாத சூழலும், திறனாய்வுச் சிந்தனையும் இல்லாமற் போகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகத் தென்படுகின்றது எனக் குறிப்பிடுகின்றார். மேற்கூறப்பட்ட இரு பண்புகளுமே ஜனநாயகத்தின் அடிப்படையாக அமைகின்றன (2019). கண்காணிப்பு முதலாளித்துவம் முன் எப்போதுமில்லாதவாறு அறிவையும், அதிகாரத்தையும் குவித்து வைத்துள்ளது. இதனால், ஏற்படுகின்ற சமச்சீரற்ற தன்மை நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது. தரவுகள், இயந்திர அறிவின் ஏகாதிபத்தியத்தையும் கொண்டு (The Guardian 20.01.2019) சமூக சமத்துவமின்மை இன்னும் ஆழமாக துருவமயப்படுத்துகின்றது. இவ்வாறான சமூக சமத்துவமின்மை ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது. இதுவும் சர்வதிகாரம், மக்களை (தரவுகளை) முதலீட்டுப் பொருளாகப் பயன்படுத்தி மக்களுக்காகப் பயன்படுத்தாமல் போகின்ற தனியான போக்கு மேலோங்குவதை அவதானிக்கலாம்.

சிறிலங்கா அரசு கண்காணிப்பு முதலாளித்துவத்தை சிறிலங்காவில் ‘மற்றமைகளுக்கெதிராக’ கட்டமைக்கின்றது. சிறிலங்கா அரசிற்கும் தொழிநுட்ப சாம்ராஜ்யத்தை தக்க வைத்துக் கொள்ளும் நிறுவனங்களுக்கிடையேயும் உள்ள தொடர்பு பற்றி ஒரு சில உதாரணங்களுக்கூடாக பார்க்கின்ற போது, சிறிலங்கா அரசு எவ்வாறு ‘மற்றமைகளுக்கெதிரான’ அடக்குமுறையை இந்நிறுவனங்களைப் பயன்படுத்தி, ஏனைய நாடுகளைப் போல, கட்டவிழ்த்துள்ளது என்பதை உற்று நோக்கலாம். இறுதிப் போர் என்று சிறிலங்கா அரசு குறிப்பிடும் போர்க்காலப்பகுதியில் கூகுள் செய்மதிப் படங்கள் இல்லாமற் செய்யப்பட்டன. இறுதிப் போர் நடந்தன எனக் குறிப்பிடப்படும் இடங்களில் போர் தொடர்பான ஆவணங்கள், நிலத்தோற்றங்கள், மனிதப் புதைகுழிகள் இன்னும் பிற கூகுள் கொள்ளடக்கத்தில் சாதாரண பாவனையாளர்களின் பார்வைக்கு இல்லாமலே போய்விட்டது. இதைக்கொண்டு ஏனைய அனுமானங்களை ஊகிக்க முடியும். அதேபோல ஏனைய சமூக வலைத்தளங்களில் ஈழத்தமிழர் சார்பான, தமிழின போராட்டம் தொடர்பான பதிவுகள் எல்லாமே கண்காணிக்கப்படுவதோடு தணிக்கைக்குட்படுத்தப்படுகின்றன. இதற்கான மிகச் சிறந்த உதாரணங்களாக போன வருடம் மாவீரர் வாரத்தில் அது தொடர்பான பதிவேற்றம் செய்தவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டனர். மிக அண்மையில் கூட Instagram, ஈழத்தமிழர் தொடர்பான சொற்களின் பாவனையை தனது வலைத்தளத்தில் தடை செய்திருந்தது. அது தவிர Amazon வணிக வலைத்தளத்தில் சிறிலங்கா கொடியுடனான கால் துடைப்பம், உள்ளாடைகள் என்பன தடைசெய்யப்பட்டன.

வடக்கு – கிழக்கில் எழும் போராட்டங்களை மையப்படுத்தி கூட்டான அடக்குமுறைக்கெதிரான நடத்தை பண்பாட்டை இயந்திர அறிவுகொண்டு எதிர்வு கூறக்கூடிய வலுவையும் சிறிலங்கா அரசு கொண்டிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அடக்குமுறைக்கு எதிரான மக்கள் பலம் என்பது அசாத்தியத்தன்மை கொண்டதையும் வரலாறு கற்பித்திருக்கின்றது.

எழில் ராஜன்


பிரதான படம்: Working Knowledge