படம் | Reliefweb

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பொறுப்பில் இருந்து விலகிச் செல்கின்றது. நிவாரண அரசியலுக்கு வாக்களிக்காமல் கொள்கை அரசியலுக்கு வாக்களித்த மக்களுக்கு கூட்டமைப்பு கொடுத்த நம்பிக்கை என்ன என்ற கேள்விகளைத் தவிர வேறு எதுவும் விஞ்சிக் காணப்படவில்லை. ஜெனீவா தீர்மானம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டால் வந்தது என கூட்டமைப்பில் உள்ள சிலர் கூறுகின்றனர். ஜெனீவா தீர்மானத்திற்கு கூட்டமைப்பு கூடுதல் பங்காற்றியது என சுமந்திரன் நேரடியாகவே கூறுகின்றார். இறுதிக்கட்ட போரில் சரணடைந்தவர்களை கண்ட நேரடியான சாட்சியம் என்று அனந்தி சசிதரன் கூறுகின்றார்; ஜெனீவாவில் அனைத்தையும் கூறியதாகவும் அவர் சொல்கிறார்.

கூட்டுப்பொறுப்பு எங்கே?

எவ்வாறாயினும் ஜெனீவா தீர்மானம் தமிழ் மக்களுக்கு எதைச் செய்யும் எதைச் செய்யாது என்பதை விட சுமந்திரனுக்கும் அனந்திக்கும் இடையே ஜெனீவா கூட்டத்தொடருடன் ஆரம்பித்த மோதல் திருகோணமலை கூட்டத்திலும் தொடர்ந்தது. நிவாரணம் அல்ல அரசியல் தீர்வுதான் வேண்டும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டுப் பொறுப்பு தொடர்பாக நம்பிக்கை அற்றுப் போய்விட்டது.

கூட்டமைப்பை பதிவுசெய்வதில் ஆரம்பித்த பிரச்சினை, அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவை கூட்டுவதில் தொடங்கிய முரண்பாடு, ஜெனீவா விடயத்தில் ஆரம்பித்த குழப்பமான கருத்துக்கள், பிரச்சினைகள் கூட்டமைப்புக்குள் இன்னும் தொடருகின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறினாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒழுக்க விதிகள்,, யாப்புகள் இல்லை என்பது ஒன்று, மற்றையது தலைமையின் சரியான வழிகாட்டல் அல்லது தலைமை யாரையும் கட்டுப்படுத்துவதில்லை என்ற காரணங்களும் முக்கியமானது.

நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று வரும் வரைக்கும் சாதாரண கட்சி அரசியல் பண்புகள் தமிழ் மக்களிடையே அவசியமில்லை என்ற கருத்துக்கள் இந்த பத்தியில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது. ஆனாலும், சாதாரண கட்சி அரசியல் பண்புகளையும் தெரிந்து கொள்ளாத நிலை அல்லது அதற்கு கட்டுப்படாத செயற்பாடுகள் தமிழ் மக்களுடைய எதிர்கால அரசியல் செயன்முறைகளுக்கு ஆபத்தானது என்ற கருத்துக்கள் மேலோங்கியுள்ளன. தலைமை என்பது அதிகாரம் அல்ல. ஒரு வழிகாட்டி. ஆனால், சம்பந்தன் அதிகாரத்தை செலுத்துகின்றார், வழிகாட்டவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள்தான் மேலோங்கியுள்ளன.

சம்பந்தனிடம் பொறுப்பு

யாரையும் கட்டுப்படுத்துவதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தங்களுக்குரிய எல்லைகளுடன் செயற்பட முடியும் என சம்பந்தன் பெருந்தன்மையாக நினைக்கக்கூடும். 30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டம் தோல்வி கண்ட நிலையில் அதற்கு அடுத்து 1983இல் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் தமிழ் அரசியல் சூழலில் எதைச் செய்ய வேண்டும் என்ற ஆரோக்கியமான தீர்மானத்தை முன்கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு சம்பந்தனுக்குரியது. ஏனெனில், அஹிம்சைப் போராட்ட காலத்திலும் ஆயுதப் போராட்ட காலத்திலும் வாழ்ந்தவர் என்பதை விட அந்த 60 ஆண்டுகால போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் தன்னை ஈடுபடுத்தியவர் அல்லது விமர்சிக்கப்பட்டவர் என்று கூடச் சொல்லாம்.

இந்த நிலையில், 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதிக்கு பின்னரான அரசியல் சூழலில் சம்பந்தனின் கையில் பாரிய பொறுப்பு – கடமை ஒன்று இயல்பாகவே ஒப்படைக்கப்பட்டது. மலையகத் தமிழ் மக்கள் கூட சம்பந்தனின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் நிலை ஒன்று இருந்தது. அந்தளவுக்கு அவர் மீதான மதிப்பும் மரியாதையும் உண்டு. அதைவிட கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவர் தலைவராக இருப்பது வடக்கு – கிழக்கு மக்களிடையே எழக்கூடிய முரண்பாடுகளுக்குக் கூட ஒரு விடையாக அமைந்தது. ஆனால், அந்தப் பொறுப்பை சம்பந்தன் இன்றுவரை சரியாக செய்தாரா அல்லது செய்யவிடமால் தடுக்கப்பட்டாரா என்பது கேள்வி.

ஏற்பட்ட முன்னேற்றம் என்ன?

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அல்லது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவராக சம்பந்தன் பதவி வகிப்பதில் யாருக்கும் பிரச்சினை இல்லை அது தொடர்பாக யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஏனெனில், தகுதியானவர் அவரேதான். இதற்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், போருக்கு பின்னரான நான்கு வருடங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் தமிழ் மக்களின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என்ற கேள்வியை விட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ற கேள்விகள்தான் இன்று விஞ்சியுள்ளன. இந்த கேள்விகளுடன் நம்பிக்கையீனங்களும் தமிழ் மக்களிடையே அதிகரித்துள்ளன.

சம்பந்தன் தலைவராக இல்லாத காலங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினுடைய எதிர்காலம் பற்றியும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து செயற்படக்கூடிய தலைமை யார் என்பது தொடர்பாகவும் உறுதியற்ற நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியே பிரிந்து சென்று சாதாரண கட்சி அரசியல் பண்புகளுடன் எதிர் விமர்சனங்களை செய்யப் போகின்றனரா? வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு என்று தனித்தனியான கட்சிகள் உருவாகப் போகின்றனவா? என்ன நடக்கப் போகின்றது? இந்க்த கேள்விகளுக்கு கூட்டமைப்பில் இருக்கக்கூடிய மூத்த தலைவர்களிடம் பதில் உள்ளதா?

அடுத்த தலைமை பற்றிய கேள்வி?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை செயற்படுத்தக்கூடிய அடுத்த தமைமை யார் என்பது தொடர்பான ஒரு தயார்ப்படுத்தல் சம்பந்தனிடம் அல்லது மூத்த உறுப்பினர்களிடம் இல்லாத ஒரு கையறு நிலையைத்தான் திருகோணமலையில் நடைபெற்ற இரண்டு கூட்டங்களும் எடுத்துக்காட்டியிருந்தன. 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தினால் அரசியல் ரீதியான தலைமை பற்றி சிந்திக்காமல் இருந்தது வேறு. ஆனால், 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான அரசியல் சூழலில் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்துச் செயற்படக்கூடிய ஒரு அரசியல் தலைமை அவசியம் என தமிழ்ச் சமூகம் எதிர்ப்பார்க்கின்றது. சம்பந்தனுக்கு பின்னரான அரசியல் சூழல் என ஒன்று உள்ளது. அதனை சம்பந்தன் கூட உணர்ந்து செயற்படுகிறாரா என்பதும் கேள்விதான்.

இதற்காகச் செய்ய வேண்டியது என்ன? தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவுசெய்து அதனை ஒரு அரசியல் கட்சியாக அல்லாமல் ஒரு தேசிய இயக்கமாக செயற்படுத்த வேண்டும். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இருக்கக்கூடிய பழமைவாத சிந்தனைகள் நீக்கம் செய்யப்படுதல் வேண்டும். பதிவுக்கு முன்னர் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு யாப்பு உருவாக்கப்பட்டு அந்த யாப்பின் பிரகாரம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் செயற்படுதல் வேண்டும். உருவாக்கப்படும் யாப்பு சாதாரண கட்சி அரசியல் பண்பில் இருந்து விடுபட்டு வடக்கு – கிழக்கு மாகாணத்தை இணைத்து நேர்மையான அரசியல் தீர்வுக்காக உழைக்க வேண்டும். கட்சியின் தலைமை அல்லது பெறுப்புகள் கிழக்கு மாகாணத்திற்கும் பகிரப்படுதல் வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்ந்த அனைத்து கூட்டங்களும் செயற்பாடுகளும் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி அமைதல் வேண்டும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

சுழற்சி முறையிலான தலைமைப் பண்புக்கும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத வெளியில் இருக்கக்கூடிய நிபுணர்களின் சேவைகள் ஆலோசணைகளை பெறுவதற்கான ஏற்பாடுகளும் உருவாக்கப்படும் யாப்பில் இணைக்கப்படுதல்அவசியம். இவற்றை சம்பந்தன் தனது பதவிக்காலத்தில் செய்வாரேயானால் சம்பந்தனுக்கு பின்னரான அரசியல் சூழல் என்பது ஆரோக்கியமாக அமையும். எதிரும் புதிருமான விமர்சனங்கள் மத்தியில் சம்பந்தன் தனது அரசியல் செயற்பாடுகளை கடந்த 60 ஆண்டுகாலமாக தொடர்ந்ததால் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் சம்பந்தன் தலைமை பொறுப்பை ஏற்கக்கூடியதாக இருந்தது. தமிழ் மக்கள் சம்பந்தனை எதிர்க்கவில்லை.

ஆகவே, தனக்கு பின்னரான அரசியல் சூழலில் யாரும் எதிர்ப்பு வெளியிடாத – விரும்பக்கூடிய ஒரு தலைமையை சம்பந்தன் உருவாக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சீர்ப்படுத்த வேண்டும். அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சியாக இருக்கின்றது. ஆனால், கட்சி அரசியல் பண்பில் இருந்து விடுபட்டு மேற்படி கருத்துக்களை உள்வாங்கி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாற்று நடவடிக்கைகளை முன்னெடுத்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் விரும்பியோ விரும்பாமலே இணைந்து செயற்பட வேண்டிய ஒரு நிலை உருவாகலாம். கொள்கை ஒரு பிரச்சினை அல்ல. அது மக்களிடம் தாராளமாகவே இருக்கின்றது.

ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக அ. நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

Nix P0001