ஏப்ரல் 21, 2019 அன்று நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கான நீதி கோரி, அதற்கடையாளமாக, எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி, ஞாயிறன்று தேவாலயத்திற்கு செல்லும் போது கொழும்பு திருச்சபைக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துக் கத்தோலிக்கர்களும் கறுப்பு உடை அணிந்து கொண்டு தேவாலயத்திற்கு செல்லும்படி கடந்த ஞாயிறு, பெப்ரவரி 28 அன்று இரத்மலானை, புனித ஜோசப் தேவாலய திருப்பலி பூசையின் போது எங்களது பரிஷ் மதகுரு அறிவித்தார். இது ஒரு அரசியல் நடவடிக்கையல்ல, ஆனால் நீதிக்கான ஒரு தேடல் என அவர் வலியுறுத்தினார். அதன் பின், ஏனைய கத்தோலிக்கர்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் ஞாயிறு ஒரு ‘கறுப்பு ஞாயிறு’ தினமாக அனுஷ்டிக்கப்பட இருப்பதாக நான் அறிந்து கொண்டேன்.
கட்டுவாபிட்டிய கத்தோலிக்க தேவாலயத்தில் சுமார் 115 பேர், கொச்சிக்கடை கத்தோலிக்க தேவாலயத்தில் சுமார் 50 பேர், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் சுமார் 30 பேர்கள் மற்றும் இரண்டு சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல்கள் உட்பட மேலும் பல இடங்களில் மேலுமொரு 66 பேர்கள் என உயிர்ப்பலி எடுத்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்று ஏறத்தாழ இரண்டு வருடங்களாகிவிட்டன. இத்தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் அவர்களின் இனத்துவத்தால் (முஸ்லிம்) மற்றும் மதத்தினாலும் (இஸ்லாம்) அநேகம் இனங்காணப்பட்டனர். எனினும், அப்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட பலர் மீது சந்தேகத்தின் சாயல் படர்ந்துள்ள போதிலும் கூட அச்சம்பவங்களின் சூத்திரதாரிகள் அதேபோன்று இந்தத் தாக்குதல்களைத் தடுத்திருக்கக் கூடிய உயர் மட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் யாவர் என இன்னமும் முடிவு செய்யப்படாமல் உள்ளனர்.
உயிர்த் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நீதிக்காக ஆதரவு தேடியவர்களுள் மிகவும் முக்கியமானவர் கொழும்பு கத்தோலிக்கப் பேராயர் மல்கம் கர்தினல் ரஞ்சித் அவர்களாவர். புலன்விசாரணைகள் மற்றும் நட்டஈடு வழங்குதல் நோக்கிய முன்னைய அரசாங்கம் துரிதமான நடவடிக்கை எடுப்பதற்கு அவரது முயற்சிகள் பங்களித்தன.
தாக்குதல்கள் நடைபெற்று ஒரு மாதத்தின் பின் ஒரு பல் தரப்பு நாடாளுமன்றக் குழு ஸ்தாபிக்கப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர் ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. செப்டெம்பர் 2019 இல், தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி ஒரு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினை உருவாக்கினார். இரண்டு இடைக்கால அறிக்கைகள் மற்றும் ஓர் இறுதி அறிக்கை என்பன முறையே டிசம்பர் 2019, மார்ச் 2020 மற்றும் பெப்ரவரி 2021 காலப்பகுதிகளில் தற்போதைய ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. ஆனால், அவை வெளியிடப்படவில்லை. இதை விடத் தனியாக, பொலிஸ் புலன் விசாரணைகள் பல நூறு பேர்கள் கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்தது, அவர்களுள் சிலர் விடுவிக்கப்பட்டனர், சிலர் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். எனினும், எவரொருவருக்கும் எதிராக முறையாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் அவை தாக்கல் செய்யப்பட்டதாக நான் அறிக்கைகள் எதனையும் காணவில்லை. ஒரு சில மாதங்களினுள்ளேயே, தாக்குதலில் உயிரிழந்த ஒருவருக்கு ரூ.1 மில்லியன் வீதம், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான நட்ட ஈடாக ரூ. 262 மில்லியன்களுக்கும் அதிகமான தொகையை அரசாங்கம் கொடுப்பனவு செய்தது. மேலதிகமாக இரண்டு கத்தோலிக்கத் தேவாலயங்களை மீளமைப்பதற்காக ஒவ்வொன்றுக்கும் ரூ. 20 மில்லியன்களும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு ரூ. 5 மில்லியன்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மேலதிகமாக, கத்தோலிக்க மக்களால் நட்டஈடு வழங்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்களும் இடம்பெறுகின்றன. கட்டுவாபிட்டிய தேவலாயத்திற்கான விஜயத்தின்போதும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியளிப்போர்களுடனான ஒரு கலந்துரையாடலின்போதும், காயமடைந்தவர்களுக்கான மருத்துவ உதவி, ஒவ்வொரு குடும்பத்திற்குமாக அர்ப்பணிப்புடன் கூடியதான உளவளத்துணை அணிகள், பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் மற்றும் மத சேவைகள் என்பவற்றை கத்தோலிக்கத் தேவாலயங்களின் உதவிகள் உள்ளடக்கியிருந்ததை நான் அறிந்து கொண்டேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களிற்காக ஞாபாகார்த்த சின்னங்கள் பாதிக்கப்பட்ட இரண்டு தேவாலயங்களிலும் ஒரு சில மாதங்களினுள்ளேயே நிர்மாணிக்கப்பட்டதுடன், குண்டுத்தாக்குதல்களின் முதலாம் வருட ஞாபகார்த்த நினைவேந்தலுக்கு கொழும்பு பேராயரினால் விரிவான ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இந்த ஏற்பாடுகளுக்கு அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்பட்டது. ஞாபகார்த்த நிகழ்வுகள் கொவிட் – 19 நிலைமை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டது, ஆனாலும், அரச தொலைக்காட்சிகள் உட்பட பரந்தளவில் ஊடக கவனத்தைப் பெற்றதுடன் தேசியளவில் ஒளிபரப்பப்பட்டன. தற்போதை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல அரசியல் தலைவர்கள் உயிர்த் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கான நீதியை உறுதிப்படுத்துவதில் தங்களது பற்றுறுதியை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். நீதி இன்னமும் வழங்கப்படாத போதிலும், இவை உயிர்பிழைத்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மதிப்பளிக்கும் முக்கியமான உத்தரவாதங்களாகும். இது போதுமானதாக இல்லாதிருந்தாலும் தசாப்தங்களுக்கு முன்னர் புரியப்பட்ட கடுமையான குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களுக்கான நீதி, ஏற்றுக்கொள்ளுதல், நினைவுகூரல்கள், நஷ்ட ஈடு மற்றும் ஏனைய வகையிலான நஷ்ட ஈடு என்பவற்றுக்கான இலங்கையின் மோசமான தராதரங்களுடன் ஒப்பிடுகையில், இரண்டு வருடங்களினுள் இது ஒரு முக்கியமான முன்னேற்றமாக கருதப்பட முடியும்.
யாழ்ப்பாணத்தில் நவாலி தேவாலயம் மீதான குண்டுவீச்சு, 1995
யுத்தத்தின் போது தேவாலயங்களில் தாக்குதல்கள் மற்றும் கொலை செய்தல் என்பன சாதாரணமானவையாக இடம் பெற்றிருந்தன. இவற்றுள் மிகவும் கொடூரமான நிகழ்வுகளில் ஒன்று, 1995 இல் யாழ்ப்பாணத் திருச்சபையின் நவாலி கத்தோலிக்கத் தேவாலயம் மற்றும் அதன் அண்டிய பகுதிகள் மீதான விமானக் குண்டுத் தாக்குதலாகும், அதில் சுமார் 145 பேர்கள் உடல்கள் சிதறி உயிரிழந்த சம்பவம் அறிவிக்கப்பட்டது. எனினும், இதற்குப் பொறுப்பானவர்கள் பயங்கரவாதிகள் எனக் குறிப்பிடப்படவில்லை என்பதுடன் அவர்களது இனம் அல்லது மதம் தொடர்பாகவும் எதுவும் குறித்துரைக்கப்படவில்லை. நான், நவாலியில் சந்தித்த அனைத்துப் பொதுமக்களுமே, குண்டுவீச்சு இலங்கை விமானப் படையினராலேயே மேற்கொள்ளப்பட்டதென உறுதிப்படக் குறிப்பிட்டனர். “விமானக் குண்டுவீச்சினால் ஏற்பட்ட காயங்கள் காரணமான இறப்பு” என இறப்பிற்கான காரணம் குறிப்பிட்டு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்களின் மூலமாக இது மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. 1995 இல், விமானக் குண்டு வீச்சு மேற்கொள்ளக் கூடியதான ஆயுதக்குழுக் குழு எதுவுமே இங்கு இருக்கவில்லை. “பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களிற்கு அமைய இடம்பெயர்ந்தவர்களே தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் தஞ்சம் கோரியிருந்தனர்” என்று யாழ்ப்பாணத்திற்கான அப்போதைய கத்தோலிக்க ஆயர் கூறியிருந்தார். தாக்குதல் நடைபெற்ற மறுநாள், ஏற்பட்ட இத்துன்பியல் நிகழ்வை விவரித்தும் மற்றும் கோவில்கள், தேவாலயங்கள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் போன்ற சிவிலியன் இலக்குகள் மீது விமானங்களிலிருந்து குண்டு வீசுதல், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுதல், கனரகப் பீரங்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்வதிலிருந்து நிறுத்திக் கொள்வதற்கு உங்களது படையினருக்கு தயவுசெய்து அறிவுறுத்தவும்” என வேண்டி யாழ்ப்பாண ஆயர் அப்போதைய ஜனாதிபதிக்குக் ஒரு கடிதம் எழுதினாரென்பதையும் ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டின.
சில வருடங்களிற்கு முன்பு நவாலி தேவாலயத்தில் பொது நினைவுச் சின்னம் கட்டப்பட்டது. கடந்த வருடம், 25 வருட ஞாபகார்த்த நினைவேந்தலின் போது, உயிரிழந்த சிலர்களின் பெயர்கள் காட்சிப்படுத்தப்பட்டன. உயிரிழந்தவர்கள் சிலரது குடும்பங்கள் பெற்ற நஷ்ட ஈடு ரூ.15,000 என மட்டுப்படுத்தப்பட்டது. குண்டு வீசப்பட்ட ஒரு தேவாலயம், ஓர் இந்துக் கோவில் மற்றும் ஏனைய கட்டடங்களைக் மீளக்கட்டுவதற்கு அரசாங்கம் உதவியளித்ததாக நான் அறியவில்லை. தேவாலயத்தின் மீதான குண்டுவீச்சின் 25ஆவது வருட ஞாபகார்த்த நிகழ்வு தேசிய தொலைக்காட்சி அல்லது ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. பொலிஸாரும் இராணுவத்தினரும் இந்த நினைவுகூரலை அச்சுறுத்தித் தடை செய்வதற்கும் முயற்சித்தனர். இத்தாக்குதல்களுக்கு உயர்மட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களோ அல்லது நாடாளுமன்றக் குழுக்களோ உருவாக்கப்படவில்லை. தாக்குதலிற்குப் பொறுப்பானவர்கள் கைதுசெய்யப்படவில்லை. நீதியை உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை. இங்கு, பேராயரின் நீதிக்கான கோரல் பெற்றுக் கொண்ட ஊடக கவனத்தை கூட வடக்கு தமிழ் மத குருமார்களின் நீதிக்கான கோரிக்கை ஊடக கவனத்தைப் பெறவில்லை.
இலங்கையில் உண்மை மற்றும் நீதி வழங்கப்படாமையும் சர்வதேசத் தெரிவுகளுக்கான தேவையும்
கொல்லப்பட்டும் காணாமலும்போன ஆயிரக்கணக்கான இலங்கையர்களின் குடும்பங்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையையோ அல்லது நீதி கிடைக்கப் பெற்றதா என்றோ தெரியாதுள்ளனர். இவ்வாறு உண்மையும் நீதியுமில்லாது கொல்லப்பட்டு அல்லது காணாமற் போனவர்களுள் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் (2009 இல், முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகலில் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமற் போனவர்), அருட்தந்தை ஜிம் பிரவுண் (2006 இல், யாழ்ப்பாண மாவட்டத்தின் அல்லைப்பிட்டி கடற்படைச் சோதனைச்சாவடியில் கைச்சாத்திட்ட பின்னர் காணாமற் போனவர்), அருட்தந்தை சந்திரா பெர்ணான்டோ (1988 இல், மட்டக்களப்பு மாவட்டத்தில் கொல்லப்பட்டார்), அருட்தந்தை மைக்கல் ரொட்ரிக்கோ (1987 இல், மொனராகலை மாவட்டத்தின் புத்தளவில் கொல்லப்பட்டவர்), அருட்தந்தை மேரி பஸ்டியான்ஸ் (1985 இல், மன்னார் மாவட்டத்தின் வங்காலையில் கொல்லப்பட்டவர்), மற்றும் அருட்சகோதிரி மேரி அக்னெட்டா (1983 இல், பதுளை மாவட்டத்தின் லுணுகலவில் கொல்லப்பட்டார்) ஆகியோரும் அடங்குவர். இவ்வாறு இன்னும் பலர் உள்ளனர்.
ஏறத்தாழ 40 வருடங்களின் பின்னரும் கூட, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஒரு சில சம்பவங்கள் தவிர்த்து, போர்க்காலப் படுகொலைகள் மற்றும் குற்றங்களுக்கான நீதி இன்னமும் வழங்கப்படவில்லை. ஓர் அரிதான சம்வத்தில், 2000 இல் மிருசுவில் எனுமிடத்தில் சிவிலியன்களைப் படுகொலை செய்த குற்றத்திற்காக 2015 இல், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த தனியொருவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். ஆனாலும், கடந்த வருடம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் பொது மன்னிப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டும் மற்றும் வலிந்து காணாமற் போதல்களுக்கும் உள்ளானார்கள், ஆனாலும், ஒரேயொரு சம்பவத்தில் மட்டும் குற்றம்சாட்டப்பட்டவர் மீது குற்றச் சாட்டுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதுடன் இதுவரை எந்தவொரு தீர்ப்பும் வழங்கப்படவில்லை.
போரின் முடிவு, வலிந்து காணாமற்போதல்கள், கொலைகள் மற்றும் படுகொலைகள் என்பவற்றையோ அல்லது அவற்றுக்கான குற்றவிலக்களித்தலையோ முடிவுக்கு கொண்டு வரவில்லை. 2013 இல் ரத்துபஸ்வெலவில் சுத்தமான தண்ணீருக்கான போராட்டம், 2011 இல் கட்டுநாயக்கவில் தொழிலாளர் உரிமைப் போராட்டம் மற்றும் 2012 இல் சிலாபத்தில் மீனவர்களின் போராட்டம் என்பன இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் போராட்டக்காரர்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்றதுடன் அவற்றுக்கும் நீதி இன்று வரை வழங்கப்படவில்லை. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பலரும் கத்தோலிக்கர்களாவர். 2012 இல் வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை அல்லது 2020 மஹர சிறைச்சாலைப் படுகொலை அல்லது 2014 இல் முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கமவில் கலவரம் என்பவற்றுக்கும் கூட நீதி இன்னும் வழங்கப்படவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் பலரின் குடும்பங்கள், செயற்பாட்டாளர்கள், அவர்கள் சாட்சியமளித்த மற்றும் ஒத்துழைப்பு நல்கிய விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைக் கோரினர். பேராயரும் இந்த வரிசையில் அண்மையில் இணைந்து கொண்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் ஒரு பிரதியைக் கோரியிருந்தார். ஒரு மாதத்தின் பின்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு, பேராயர் மற்றும் முன்னணி பௌத்த மதகுருக்களுக்கு அறிக்கையின் பிரதிகள் வழங்கியதாக அறிவித்தது, ஆனாலும், அவை உயிர் பிழைத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் ஏனைய சிவிலியன்களின் பார்வைக்கு இன்னமும் வெளியிடப்படவில்லை. ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கு மற்றொரு குழுவின் நியமனத்தை பேராயர் நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டது. முன்னைய ஆணைக்குழுக்களின் கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகளை அணுகுவதற்கு மற்றொரு ஆணைக்குழுவின் நியமனம் தொடர்பாக பரந்துபட்ட விமர்சனங்கள் மற்றும் அவநம்பிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
நீதியை உறுதிப்படுத்துவதில் உள்நாட்டுச் சட்டங்கள், நிறுவனங்கள், பொறிமுறைகள் மற்றும் செய்முறைகள் என்பவற்றின் தோல்வி உயிர்தப்பியவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அக்கறைகொண்ட ஏனைய தரப்புகள் சர்வதேச நீதியை நாடுவதற்கு வழிவகுத்தது. இந்த வருட முற்பகுதியில், பதிப்பாசிரியரும் பத்திரிகையாளருமான லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையின் 12 வருடங்களின் பின்னரும், நீதிக்கான எந்த அறிகுறிகளுமின்றி அவரது மகள் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு முறைப்பாட்டைத் தாக்கல் செய்தார். ஒரு சில வருடங்களுக்கு முன்னர் அவர் ஐக்கிய அமெரிக்காவிலும் வழக்குகளைத் தாக்கல் செய்தார். உள்நாட்டில் நீதி இல்லாமையினால் அண்மையில் ஏமாற்றமடைந்தவர் பேராயராவர். அவர், உயிர்த் ஞாயிறுக் குண்டுத் தாக்குதல்களுக்கு இலங்கையில் நீதி இல்லையாயின், சர்வதேச நீதிமன்றத்திடமிருந்து நீதியை நாடுவதற்கும் மற்றும் சர்வதேச ஸ்தாபனங்களிடமிருந்து உதவிகளை நாடுவதற்கும் தான் கவனம் கொள்வதாக ஊடகத்திற்கு பேசும் பொழுது கூறினார்.
கடந்தகால பிளவுகளும் நீதிக்கான ஒன்றுபட்ட முன்னணி ஒன்றுக்கான எதிர்கால வாய்ப்புகளும்
போர்க் காலத் துஷ்பிரயோகங்கள், போரின் பின்னான துஷ்பிரயோகங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் உயிர் பிழைத்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் என்பவற்றின் துயரங்கள் மற்றும் நீதிக்கான அவர்களின் எதிர்பார்ப்புகள் அநேகம் ஒருமித்தவை. உயிர் பிழைத்த சிலர், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் என்பவற்றுக்கு மற்றைவர்களை விட நீதியின் அடிப்படையில் (அங்கீகரித்தல், நட்ட ஈடு, நினைவுகூரும் உரிமை, புலன்விசாரணைகள், வழக்குத் தொடர்தல்கள் மற்றும் தண்டனை பெற்றுக் கொடுத்தல் உட்பட) சிறப்புரிமையளிப்பது மனவுளைச்சல்களை அதிகரிப்பதுடன் சமூகங்களை மேலும் துருவப்படுத்துவதாக அமையும்.
சில விதிவிலக்குகளுடன கத்தோலிக்கர்கள் உட்பட சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் போர்க் காலம் மற்றும் போருக்குப் பிந்திய காலக் குற்றங்களுக்கான நீதியைத் தேடுவதில் வேறுபட்ட தெரிவினைக் கொண்டவர்களாக உள்ளனர். நீதிக்காக சர்வதேச ஈடுபாட்டை நாடுவதில் அவர்கள் பிரிவுபட்டுள்ளனர். ஒரு தசாப்தத்திற்கு முன்னர் யுத்தத்தின் போதும் யுத்தத்தின் பின்னரும் நிகழ்ந்த ஆயிரக் கணக்கானவர்களின் படுகொலைகள், காணாமற் போதல்கள் மற்றும் ஏனைய குற்றங்களுக்காக நீதியை நாடுவதில் சர்வதேசத்தின் ஈடுபாட்டை மன்னார் கத்தோலிக்க ஆயரும், தமிழ் கத்தோலிக்க மதகுருக்கள் மற்றும் ஏனையவர்களும் கோரி நின்ற ஒரு சமயத்தில், இதே கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள், சர்வதேச ஈடுபாட்டுக்கு எதிர்ப்பை வெளியிட்டதுடன், “அவ்வாறான முயற்சிகள் இலங்கை மக்களின் அறிவுடைமைக்கு ஓர் இழுக்காக அமையும்” என்று கூறினார். ஆனால், பெப்ரெவரி 11 அன்று, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு உள்நாட்டில் நீதி இல்லையேல், நீதிக்காக சர்வதேச நீதிமன்றத்திற்கு போவதற்கும், ஸ்தாபனங்களின் உதவியை நாடுவதற்கும் தான் தயார் என்று கர்தினால் கூறினார். கர்தினாலின் இந்தக் கூற்று, திருகோணமலை கத்தோலிக்க ஆயர் உட்பட தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் குழுக்கள் மற்றும் தமிழ் மத குருமார்கள் ஆகியோரால் போர்க் காலக் குற்றங்களுக்காக சர்வதேச நீதிக்காக மீளவும் புதிதாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட சில வார காலங்களின் பின்னர் முன்வைக்கப்பட்டது.
உயிர்த் ஞாயிறுத் தாக்குதல்கள் நிகழ்ந்த பின் இரண்டு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதியில் இலங்கையில் நீதியை நாடுவதில் உள்ள மட்டுப்பாடுகள், பின்னடைவுகள் மற்றும் சவால்கள் என்பவற்றை கர்தினால் அடையாளம் கண்டுள்ளார். நீதி என்பது, கத்தோலிக்க நம்பிக்கைக்கு மையப் பகுதியானது என்பதுடன், குறைந்தது இப்பொழுதாவது, சிங்கள மற்றும் தமிழ் கத்தோலிக்கர்கள் நீதிக்கான தேடுதலில் ஒருத்தருக்கொருத்தர் உதவி கொள்வதற்கு முடியும். ஞாயிறுக் கிழமை, மார்ச் 7 ஆம் திகதி, அதற்கான ஒரு ஆரம்பமாக அமையட்டும்.
ருக்கி பெர்ணான்டோ
பிரதான படம்: Tamilgurdian