பட மூலம், NYTimes
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அயல் நாடுகளுடன் பலத்தைக் காட்டுவது மாத்திரமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியிலும் தனது தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு இம்மாத பிற்பகுதியில் கூடவிருக்கிறது. கட்சியின் உயர்மட்டக் குழுக்களின் கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரல் தனது ஆணையின் படியே அமைவதை அனுமதிக்கக்கூடிய புதிய ஒழுங்கு விதிகளை மத்திய குழுவைக் கொண்டு ஷி ஜின்பிங் அங்கீகரிக்க வைப்பாரென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய அதிகாரங்கள் கம்யூனிஸ்ட் சீனாவின் ஸ்தாபகத் தந்தை மாவோ சேதுங்கிற்கு நிகரானவராகத் தன்னை அமர்த்தக்கூடிய பதவியொன்றை ஜனாதிபதி தனக்குத்தானே வழங்குவதற்கான ஒரு முன்னோடி நடவடிக்கையாகத் தோன்றுகின்றன என்று இந்த விவகாரங்களுடன் பரிச்சயமானவர்கள் கூறினார்கள். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் தலைவர் என்று அதியயுர் அந்தஸ்து கொடுக்கப்பட்ட ஒரேயொரு தலைவர் மாவோ சேதுங் மாத்திரமே.
“தனது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி ஷி ஜின்பிங் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் அவர் தனது அந்தஸ்தை உயர்த்துவதற்குத் தீர்மானித்திருக்கிறார்” என்று மிகவும் தெளிவாக வெளிக்காட்டுகிறது என்று டில்லியிலுள்ள சீன அவதானியொருவர் கூறினார்.
புதிய ஒழுங்குவிதிகளை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு அங்கீகரிக்குமானால் 45 வருடங்களுக்குப் பிறகு, வருகின்ற கட்சியின் முதலாவது தலைவராக சி ஜின்பிங் வருவார். மாவோ சேதுங்கைப் போன்று ஷி ஜின்பிங்கும் தன்னை ஏற்கனவே மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதம தளபதியாகவும் சீனாவின் அதிமுதன்மையான தலைவராகவும் பிரகடனம் செய்திருக்கிறார்.
2017 அக்டோபரில் அவர் கட்சியின் சாசனத்தில் தனது கோட்பாட்டை புகுத்தினார். பதவியிலிருக்கும் போது முதலில் மாவோ சேதுங்கே தனது கோட்பாட்டைக் கட்சியின் சாசனத்தில் புகுத்தியவர். மாவோ சேதுங்கிற்குப் பிறகு, அதேபோன்று செய்த இரண்டாவது சீனத் தலைவர் ஷி ஜின்பிங் மாத்திரமே. இவ்வருடம் தலைநகர் பெய்ஜிங்கில் இராஜதந்திர சிந்தனைகளுக்கான ஷி ஜின்பிங் ஆராய்ச்சி நிலையமொன்றும் திறக்கப்பட்டது (XI Jinping Research Center for Diplomatic Thought).
சீனாவின் அரசியல் மீதும் ஆயுதப்படைகள் மத்தியிலும் தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்கான முன்னேற்பாட்டு வேலைகளை ஜனாதிபதி ஷி ஜின்பிங் பல வருடங்களாக செய்து வந்திருக்கிறார். 2016ஆம் ஆண்டில் அவர் சீனப்படைகளின் பிரதம தளபதி என்ற வகையில் மக்கள் விடுதலை இராணுவத்தின் 73 ஜெனரல் தர அதிகாரிகளைக் கொடூரமான முறையில் களையெடுத்தார். இதில் நான்கு நட்சத்திர ஜெனரல்களும் அடங்குவர். மக்கள் விடுதலை இராணுவம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அல்ல, தனக்கே முற்றுமுழுதாகப் பணிந்து நடப்பதை உறுதி செய்வதற்காகத் தனக்கு விசுவாசமான படை அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்குவதை ஜனாதிபதி துரிதப்படுத்தினார்.
2017ஆம் ஆண்டளவில் கட்சியின் 25 அரசியல் குழு உறுப்பினர்களில் 18 பேரை தனது தனிப்பட்டக் கட்டமைப்பிலிருந்து ஷி ஜின்பிங்கினால் நியமிக்கக்கூடியதாக இருந்தது. கட்சியின் 18ஆவது மாநாடு 2012 இல் நடைபெற்ற போது அரசியல் குழுவில் தனது சொந்த விசுவாசிகள் என்று அவர் கணிக்கக் கூடியதாக 5 உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தனர். 20ஆவது மாநாட்டை அடுத்த வருடம் ஜூனில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இம்மாத ஆரம்பத்தில் ஷி ஜின்பிங் துணை ஜனாதிபதி வாங் கிஷானை இலக்கு வைக்கத் தொடங்கினார். துணை ஜனாதிபதியின் நெருங்கிய சகாவான டொங் ஹொங்கை ஒழுக்காற்று மீளாய்வு மற்றும் மேற்பார்வை விசாரணைக்கு உட்படுத்தினார். டொங் துணை ஜனாதிபதி வாங்குடன் முதன்முதலில் சந்தித்த பிறகு, 1990 களில் இருந்து நெருக்கமாகப் பணியாற்றியிருந்தார். சீனாவின் ஊழல் எதிர்ப்பு நிறுவனத்தின் தலைவராக வாங் இருந்தபோது அவரின் கீழ் சிரேஷ்ட ஒழுக்காற்றுப் பரிசோதகராக டொங் பணியாற்றினார். இவர்கள் இருவரும் ஷி ஜின்பிங்கின் முதலாவது ஐந்து வருடப் பதவிக் காலத்தின் போது அவரது ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உரம் சேர்த்தனர். அந்த நடவடிக்கைகள் அடிக்கடி எதிராளிகளையே இலக்கு வைத்தன என்று சீன அரசாங்க ஊடகத்தில் வெளியான கட்டுரையொன்றின் மூலம் தெரிந்துகொள்ளக்கூடியதாயிருந்தது.
ஷி ஜின்பிங்கிற்கும் வாங்கிற்கும் இடையிலான உறவுகள் மாற்றமடையக்கூடும் என்று ஜப்பானின் ஏசியன் நிக்கி ரிவியூ என்ற இணையச்செய்திச் சேவையில் வெளியிடப்பட்ட அண்மைய ஆய்வொன்று கூறியது.
டொங் ஹொங் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்ற துணை ஜனாதிபதி வாங்கின் இரண்டாவது நெருக்கமான சகாவாவார். டொங்கின் மேல்நிலையப் பள்ளி நண்பரும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினருமான றென் ஷிகியாங்கிற்கு அண்மையில் 18 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அரசுக்குச் சொந்தமான மனைவணிகக் குழுமமான ஹூயுவானின் முன்னாள் தலைவரான 69 வயதான றென், 112 மில்லியன் யுவானை சட்ட விரோதமாகப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். அவர் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை, “நிர்வாணமாக நின்று கொண்டு தொடர்ந்தும் சக்கரவர்த்தியாக இருப்பதாக கூறுகின்ற ஒரு கோமாளி” என்று மார்ச் மாதம் வர்ணித்திருந்தார். அதற்குப் பிறகே அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
றென் உடனடியாகக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுக் கடுமையான ஒழுக்காற்று மீறலைச் செய்த குற்றச்சாட்டின் பெயரில் விசாரிக்கப்பட்டார். கொல்வ் விளையாட்டுக்கான செலவினங்களுக்கு உத்தியோகபூர்வ நிதியைப் பயன்படுத்தியதாகவும் இலவசமாக வர்த்தகப் பிரமுகர்களினால் வழங்கப்பட்ட வசிப்பிடங்களைப் பயன்படுத்தியது போன்ற குற்றங்களும் அவர் மீது சுமத்தப்பட்டன.
லியூ ஷோசி போன்ற தனது நெருங்கிய சகாக்களைக் கலாசாரப் புரட்சியின் போது, தலைவர் மாவோ களையெடுத்ததைப் போன்று 2021 சீனக் கனவை நனவாக்க அவரது பாதச்சுவட்டைஷி ஜின்பிங்கும் பின்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷிசிர் குப்தா
“Prez Xi Jinping pushes limits, not just with neighbours but at home too” என்ற தலைப்பில் ‘இந்துஸ்தான் ரைம்ஸ்’ இல் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.