பட மூலம், WBUR

கொடூரமான உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் உட்பட பெரும்பாலானோர் கிறிஸ்தவ ஆலயங்களுக்குள்ளேயே கொல்லப்பட்டனர். மேலும், இந்தக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர்கள் முஸ்லிம்களே. தாக்குதல்களின் பின்னர் உடனடியாக முஸ்லிம்கள் பலரும் இந்தத் தாக்குதலை தயக்கமின்றி கண்டித்ததோடு, தாக்குதல்களில் தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் அதிகமான குடும்பங்களுக்கு ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் வழங்கினர். குண்டு வெடிப்பின் பின்னர் நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மூடப்பட்ட நிலையில், குறைந்தது ஒரு பள்ளிவாயிலேனும் கிறிஸ்தவ பிரார்த்தனை சேவைகளை மேற்கொள்ள இடமளித்தது. குண்டுத் தாக்குதல்களுக்குப் பல வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம்கள், குற்றம்சாட்டப்பட்டுள்ள தலைவர் உட்பட தமது சமூகத்தில் ஒரு சிலரிடையே வளர்ந்து வரும் தீவிரவாதம் மற்றும் வன்முறைகளை நோக்கிய போக்குகள் குறித்து அரச அதிகாரிகளுக்கு அறிவித்திருந்ததோடு, அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்களும் மேற்கொண்டிருந்தனர்.

எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்கள் வெறுப்புணர்வு, பாகுபாடு போன்றவற்றை எதிர்கொண்டதோடு, அவர்களது வணக்கஸ்தளங்கள், வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்டன. பழிதீர்க்கும் தாக்குதல்களால் ஒருவர் கொல்லப்பட்டார்.  முஸ்லிம் தீவிரவாதிகளின் துன்புறுத்தல்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி, இலங்கையில் தற்காலிகமாக வசித்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பிற நாட்டு அகதிகளும், புகலிடக் கோரிக்கையாளர்களும் கூட தீவிரவாதத்தை ஆதரிக்கின்றவர்களாகக் கருதப்பட்டு, பழிவாங்கல்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்பிருந்த முஸ்லிம் விரோத, பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் புத்துயிர் கொடுத்தது. இந்த முஸ்லிம் எதிர்ப்புணர்வு கொவிட்-19 நிலைமையில் மேலும் அதிகரித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்திய சர்வ கட்சி நாடாளுமன்ற தெரிவுக் குழு கடந்த ஆண்டு பல விசாரணைகளையும் மேற்கொண்டது. 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை உயர் அதிகாரிகள் மற்றும் உயர் அரசியல்வாதிகள் தாக்குதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. இதனைத் தொடர்ந்து சட்ட அமுலாக்க நிறுவனங்கள் மற்றும் சட்டத் துறையினரால் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதில் தெளிவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஏனைய சந்தேக நபர்களின் கைது

குண்டு வெடிப்பின் ஒரு வருட நிறைவு மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கும் போது, உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக புதிய கைதுகள் இடம்பெற்றன. 197 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இவ்வருடம் ஏப்ரல் 15ஆம் திகதி பொலிஸார் அறிவித்தனர். எவ்வித முறையான சட்ட நடவடிக்கைகளும் இன்றி சிலர் ஒரு வருடத்துக்கும் மேலாக சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் கைதுசெய்யப்பட்டவர்களில், இன நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வும் உள்ளடங்குகின்றார். அவரும் அவரது உடன்பிறந்தவர்களும் கிறிஸ்தவ பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளதோடு, அதிகமான கிறிஸ்தவ நண்பர்களையும் கொண்டிருக்கின்றனர். அவரது குடும்பத்தினர் தமது வீட்டிற்கு அருகில் உள்ள கத்தோலிக்க ஆலயத்தின் விழாக்களுக்கு தவறாமல் உதவி வந்துள்ளனர். அவர்களுக்குச் சொந்தமான பாடசாலையில் கிறிஸ்தவ அகதிக் குழந்தைகளை சலுகை அடிப்படையில் அனுமதித்தனர். ஹிஜாஸ் அங்கத்துவம் வகிக்கும் சமூக அமைப்பொன்றின் மூலம் நகர்ப்புற ஏழைகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு கத்தோலிக்க அமைப்புக்கு உதவிகளைப் பெற்றுக்கொடுத்திருந்தார். இன மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக கிறிஸ்தவ ஆலயங்களின் முன்முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு ஹிஜாஸ் அழைக்கப்பட்டுள்ளதோடு, அங்கு அவர் சில முஸ்லிம்களிடையே உள்ள தீவிரவாதத்தை விமர்சித்தும் உரையாற்றியுள்ளார்.

குண்டுத் தாக்குதல்களுக்கு ஹிஜாஸின் உடனடி எதிர்வினையாக, “அவர்கள் எம்மைச் சார்ந்தவர்கள் அல்ல. பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு, வழக்குத் தொடரப்பட வேண்டும். சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என டுவீட் செய்திருந்தார். இரண்டு நாட்களின் பின்னர், “இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு (இலங்கை) முஸ்லிம் இளைஞர்கள் தீவிரமயமாகுவதில் பங்காற்றியது, எனினும், வன்முறையை நியாயப்படுத்தவில்லை” என்று அவர் டுவீட் செய்திருந்தார்.

தன்னிச்சையாக மற்றும் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் ஹிஜாஸ் கைதுசெய்யப்பட்டமை கடுமையாக கண்டிக்கப்பட்டதோடு, இதுவரையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பெரும்பான்மையானோருக்கு இது அவ்வாறே பொருந்தக்கூடியது.

ஹிஜாஸின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது இளைய சட்டத்தரணிகளின் கூற்றுப்படி, கைதுசெய்ய வந்த அதிகாரிகள் தாம் சுகாதாரத் துறையினர் என்று கூறிக்கொண்டு வந்து ஹிஜாஸின் வாடிக்கையாளர்களின் ஆவணங்களை அணுகியதாகவும், இதனால் வாடிக்கையாளர் இரகசியத் தன்மை மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், தடுத்து வைக்கும் உத்தரவின் பேரில் தடுத்து வைக்க முடியுமான 72 மணி நேர கால எல்லை மற்றும் நீதவான் ஒருவர் முன்னிலையில் ஆஜர்படுத்துவது போன்ற சட்ட விடயங்கள் மீறப்பட்டுள்ளன. ஒரு மாதம் கடந்துள்ள நிலைமையிலும் அவரை நீதவான் ஒருவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படாமையால் இலங்கை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டல்கள் மீறப்பட்டுள்ளதாக 185 சட்டத்தரணிகள் கையொப்பமிட்டு சட்டத்தரணிகள் சங்கத்துக்கு முன்வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்காக முன்வைக்கப்பட்டுள்ள ஹேபியாஸ் கோர்பஸ் மனு தொடர்ந்தும் தீர்மானிக்கப்படாத நிலையில் இருப்பதோடு, மனித உரிமை மனு தொடர்ந்தும் அதன் ஆரம்ப கட்டத்திலேயே காணப்படுகின்றது. நியாயமான வழக்கு விசாரணைக்கு அவரது சட்டத்தரணிகளுக்கான அணுகல் அவசியமாகின்றபோதும், பொலிஸ் அதிகாரிகளின் முன்னிலையில் வழங்கப்பட்ட குறுகிய காலத்தைத் தவிர்த்து, சட்டத்தரணிகளுக்கான அணுகல் மறுக்கப்பட்டுள்ளது. அவர் கைதுசெய்யப்பட்டமை குறித்து பொலிஸார் வெளியிட்ட பல அறிக்கைகளையும் நான் ஊடகங்களில் கண்டிருந்தாலும், அவர் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாக எந்த அறிக்கையிலும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கவில்லை. அண்மையில், அவர் குறித்த தவறான தகவல்களைப் பரப்பும் மோசமான ஊடகப் பிரச்சாரங்களுக்கு எதிராக செயற்படுவதற்கும் அவரது குடும்பம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

ஹிஜாஸ் கைதுசெய்யப்பட்டதன் பின்னர், 11, 13 மற்றும் 16 வயதுடைய சிறுவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் தம்மை இனந்தெரியாத ஒரு இடத்திற்கு பலவந்தமாக அழைத்துச் சென்றதாக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர். அவர்களுடன் அவர்களின் பொறுப்பாளர்கள் அழைத்துச் செல்லப்படவில்லை என்பதோடு, தமது குழந்தைகளை கைதுசெய்து அழைத்துச் சென்றது எங்கே என்பது தொடர்பான பதிவோ அல்லது தகவல்களோ பொறுப்பாளர்களுக்கு வழங்கப்படவில்லை. தமக்கு சிலரது புகைப்படங்கள் காட்டப்பட்டதாகவும், படங்களில் இருந்தவர்கள் தமக்கு புலமைப் பரிசில் வழங்கப்பட்டுள்ள பாடசாலைக்கு வந்து தீவிரவாதம் மற்றும் வன்முறைகளைப் போதித்ததாக ஒத்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் சிறுவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுவர்களிடம் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதா என்று வினவப்பட்டுள்ளதோடு, அதற்கு அவர்கள் இல்லை என்று பதிலளித்துள்ளனர். அவர்களை வீடியோ எடுத்துள்ளதோடு, அவர்களுக்கு வாசித்து விளங்கிக்கொள்ள முடியாத ஆவணங்களை வழங்கி கையொப்பமும் பெற்றுள்ளனர். இந்த மூன்று ஆண் பிள்ளைகளும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, ஹிஜாஸும் நம்பிக்கையாளராக உள்ள ஒரு சமூக நல அமைப்பும் குறித்த பாடசாலைக்கு புலமைப் பரிசில்களை வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு குறித்த சிறுவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பயங்கரம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடைபெறும் வரையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம்  பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்த யுத்தத்தின் கீழ் தமிழர்களை கைதுசெய்வதற்கும் தடுத்து வைப்பதற்கும் ஆகும். ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் மதஸ்தளங்களில் சேவையாற்றுவோர் உட்பட அரசாங்கத்தை விமர்சிப்போருக்கு எதிரான கருவியாகவே இது பயன்படுத்தப்பட்டு வந்தது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் மூலம் தன்னிச்சையாக கைதுசெய்தல், குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்படாமல் நீண்ட காலம் தடுத்து வைத்தல், நீண்டு செல்கின்ற நீதிமன்ற செயற்பாடுகள் மற்றும் வழக்குகள், ஒரே சந்தேக நபருக்கு பல வழக்குதல் தாக்கல் செய்யப்படல், மனிதாபிமானமற்ற தடுப்பு நிலைமைகள், சித்திரவதைகள், குற்றவாளிகள் அல்லாத மற்றும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய நீண்ட காலம் எடுத்தல் என்பன இதில் உள்ளடங்கும். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, கைதியாக 15 வருடங்கள் குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி சிறைப்படுத்தப்பட்டு, அண்ணளவாக 20 ஆண்டுகளின் பின்னர் வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்த செய்திகள் பதிவாகியுள்ளன. அதேபோன்று, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் பல வருடங்கள் சென்ற பின்னர் நீதிமன்றம் மூலம் நிரபராதியாக அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும், அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு கைதி 15 வருடங்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த செய்திகளும் அறிக்கையிடப்பட்டிருந்தன.

வேறு பல குற்றங்களின் போன்றல்லாது, சித்திரவதைகள் செய்தல் அல்லது சித்திரவதைகள் மேற்கொள்வதாக அச்சுறுத்தல் விடுத்து, ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தாலும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் பொலிஸ் தடுப்பில் உள்ளபோது பெறப்படும் வாக்குமூலத்தை வழக்கு விசாரணையுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும் என்பதோடு அதன் காரணமாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வழக்கு விசாரணைகள் பெரும்பாலும் நீண்ட காலமுடையதாகும். அதிகமான தமிழ் கைதிகள், அவர்களுக்குப் புரிந்துகொள்ள முடியாத சிங்கள மொழி மூலம் எழுதப்பட்ட வாக்குமூலங்களுக்குக் கையொப்பமிட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு, இந்த செயன்முறையே ஒரு தண்டனையாகும்.

அனைவருக்குமான கௌரவம், உரிமைகளுடன் உரிய செயன்முறைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி வழியாக நீதியை நிலைநாட்டிக்கொள்ளல்

போலி குற்றச்சாட்டின் அடிப்படையில் கொடூரமாக, மனிதநேயமற்ற, தாழ்ந்த சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பொதுநலன் என்ற பெயரில் நடத்தப்பட்ட அநீயான வழக்கு விசாரணையின் பின்னரே இயேசு சிலுவையில் அரையப்பட்டார். இயேசுவின் சீடர்களில் ஒருவரான போல் அவர்களையும் போலி குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அமானுஷ்யமான விதத்தில் தாக்கி, சிறைப்படுத்தி வைத்திருந்த ஆட்சியாளர்கள் இவர் என்ன சொல்கின்றார் என்பதைக் கேட்க, பல்வேறு நீதவான்கள் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

இரண்டாம் ஜோன் போன் போப் ஆண்டகைக்கு ஏற்ப, “வழக்கு விசாரணைகள் மற்றும் குற்றம் புரிவதற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பது தனிமனித பெறுமானத்தின் அடிப்படையில் வேரூன்றிய தத்துவங்கள் என்பதோடு, அவை இயக்கத்தன்மை கொண்ட அரசொன்றின் விழுமிய ரீதியான தேவைகளை சம்பூரணப்படுத்தும்”, அதேபோன்று “இந்த அடிப்படைத் தத்துவங்கள் முறையாகப் பின்பற்றப்படாத போது, அரசியல் சகவாழ்வின் அடிப்படைத் தத்துவங்கள் பலவீனமடைவதோடு, சமூக உயிர்ப்புத் தன்மை படிப்படியாக பாதாளத்துக்கு வீழ்ந்து, அச்சுறுத்தலுக்குட்பட்டு, அதன் பின்னர் அழிந்துபோகும்.” பிரான்ஸிஸ் போப் ஆண்டகை வலியுறுத்தியுள்ளதாவது, “மனித உரிமைகள் தொடர்பாக கதைப்பதன் ஊடாக ஏனைய அனைத்துக்கும் மேலாக குறிப்பதாவது, இறைவன் மூலம் அவரது விருப்பத்திற்கமைய அவரது விம்பமாக மற்றும் அவரது தேவைக்கேற்ப படைக்கப்பட்ட மனிதர்களில் முக்கியமான குணாதிசயங்களை மீண்டும் கட்டியெழுப்புவதாகும்.”

நீதிக்காக போராடுவது கிறிஸ்தவ மதத்தின் பிரதான பகுதியொன்றாகும். அது விட்டுவிடக்கூடிய மாற்றீடொன்றல்ல. முறையே 1995 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் யாழ். மாவட்டத்தின் நாவலி மற்றும் அல்லைபிட்டி கத்தோலிக்க ஆலயங்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்களைப் போன்றே கடந்த வருடம் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் போதும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், அவர்களின் உரிமைகள் மற்றும் கௌரவத்தைப் பாதுகாப்பதும் கிறிஸ்தவர்களின் புனிதமான கடமையாகும்.

எனினும், கிறிஸ்தவர்களாகிய நாம் ஹிஜாஸ் போன்ற சந்தேக நபர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் உரிமைகள் மற்றும் கௌரவத்தை மேம்படுத்துவதும் பாதுகாப்பதும் அத்தியாவசியமாகின்றது. அது விசேடமாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில் பெரும்பான்மையானோர் நீதிமன்றம் மூலம் இறுதியில் நிரபராதிகள் என தெரிவிக்கப்பட்டாலும், அவர்களது இளமைப் பருவத்தின் பெரும் பகுதியை சிறையில் கடத்த வேண்டியேற்படுவதோடு, அவர்களது குடும்பத்தவர்களின் வாழ்க்கையும் மீண்டும் திருப்ப முடியாத அளவுக்கு மோசமடைவதும், நீண்ட காலமாக சித்திரவதைகளுடன் சிறைப்படுத்தப்பட்டு இருப்பதால் அவர்களது உடல் உள சுகாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதும் கவலையான வரலாற்று சம்பவங்களாகும். அதேபோன்று, உரிய செயன்முறைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பொருட்படுத்தாமல் செயற்படுவதையும் மற்றும் நீதியை நிலைநாட்டும் போர்வையில் தன்னிச்சையாக செயற்படுவதையும் எம்மால் ஒருபோதும் நியாயப்படுத்தவோ அல்லது பொறுமை காக்கவோ முடியாது.

அந்தப் பயங்கர தாக்குதலில் உயிர் தப்பியவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் அழுத்தங்களுக்குள்ளான சமூகங்களின் உரிமைகள் மற்றும் அனைவருக்கும் நீதி நிலைநாட்டப்படல் என்ற விடயம் மேலும் பலமாக, அர்த்தமுள்ளதாக அமைவது சந்தேக நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதன் ஊடாக மாத்திரமன்றி, அவை தன்னிச்சையற்ற, சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கின்ற, உரிமை முறைப்படி பெற்றுக்கொள்ளப்பட்ட நீதியாக அமையுமாயின் மாத்திரமே.

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதலின் பின்னர், அரசியல் மற்றும் சமூக ரீதியாக பலமுடைய கொழும்பு பேராயர் மெல்கம் காதினல் ரஞ்சித் அவர்கள் காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு உதவும் போதும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று குரலெழுப்பும் போதும், அனைத்து இலங்கையர்களும், விசேடமாக கத்தோலிக்கர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்றும் அப்பாவிகளிடம் பழிதீர்த்துக்கொள்ள வேண்டாமென்றும் வேண்டிக்கொள்வதில் முன்னணி வகித்தார். ஒரு வருடத்தின் பின்னர், முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்பு தொடர்கின்ற நிலையில் மற்றும் ஹிஜாஸ் தொடர்பான விடயத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளின் ஊடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியை நிலைநாட்டுவது பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காதினல் உட்பட அனைத்து கிறிஸ்தவ தலைவர்கள் மற்றும் சமூகம் சட்டவாட்சி வரையறைகளுக்குள் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கே அழுத்தம் கொடுக்க வேண்டும். கிறிஸ்தவர்களாகிய நாம், எமது மத நம்பிக்கைகளின் பூரணத்துவம், எமது மனிதநேயம் மற்றும் ஜனநாயகத்தை அவ்வாறே உறுதிப்படுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். எனினும், ஹிஜாஸ் உட்பட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் தன்னிச்சையாக கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள, வேறு விதத்தில் வன்முறைகள், துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மற்றும் வேறுபடுத்திப் பார்க்கும் நிலைமைகளுக்குத் தள்ளப்பட்டவர்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

ருகி பெர்னாண்டோ

கத்தோலிக்க மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ருகி பெர்னாண்டோ, பல்வேறு கிறிஸ்தவ மற்றும் மதச்சார்பற்ற உரிமை அமைப்புகளுடன் செயற்பட்டு வருகின்றார். அவர் இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பிரதான மத உயரதிகாரிகள் மாநாட்டு உருவாக்கத்தின் நீதி, சமாதானம், நேர்மைக்கான ஆணைக்குழுவின் உறுப்பினரும், ஆசிய பசுபிக் கத்தோலிக்க மாணவர்கள் சர்வதேச இயக்கத்தின் தேவாலய குழுவின் (IMCS) உறுப்பினராகவும் இருந்துள்ளார்.


Justice for Easter Sunday and Justice for Hejaaz: A Christian perspective என்ற தலைப்பில் 2020 மே மாதம் 24ஆம் திகதி ஆங்கிலத்தில் EconomyNext இணையத்தளத்தில் பிரசுரமான கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு.