பட மூலம், Selvaraja Rajasegar Photo
தேசிய பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ள காலத்தில் வட மாகாணத்தின் பொருளாதாரம் எவ்வாறான நிலையில் இருக்கிறது? நிச்சயமாக வட மாகாணத்தின் நிதித்துறை, சேவைத்துறை மற்றும் கைத்தொழில்துறை போன்றவற்றில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டு மாகாணத்தின் மொத்த உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்படும். இங்கு மக்களின் வருமானமும் சரி வாழ்வாதாரமும் சரி குறிப்பாக நாள்கூலி வேலை செய்வோரது நிலை பெரும் பாதிப்பிற்கு உட்படக்கூடும்.
வடமாகாணத்தின் சமூகப் பொருளாதாரத்தை எடுத்துப்பார்க்கும் போது தற்போது வந்திருக்கும் நெருக்கடிக்கு மேலாக நீண்டகால யுத்தம் அதன் பின் மீள்கட்டமைப்பின் தோல்விகள் மக்களை நலிவடையச் செய்துள்ளன. அந்த வகையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி அவர்களை இரட்டிப்பான வகையில் பாதிக்கிறது. கிராமப்புற பொருளாதாரத்தை குறிப்பாக கடற்றொழில் மற்றும் விவசாயத்தை மையப்படுத்திய வட மாகாணத்தின் பொருளாதாரத்தில் யுத்தத்தின் பின் அந்தந்த துறைகளில் போதிய அளவு மற்றும் பொருத்தமான முதலீடுகள் இருக்கவில்லை. வாழ்வாதாரங்களை தேவைக்கேற்ற விதத்தில் மேம்படுத்தாத பின்னணியிலே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
எங்கள் பிரதேசத்தில் போதிய அளவு உள்ளூர் வளங்கள் இருக்கிறது: கடல் வளம், பனை வளம் மற்றும் விவசாயக்காணிகள். ஆனால், அந்த வளங்களைச் சரியாக நாங்கள் பாவிப்பதில்லை. வெளிநாட்டுப் புகழ்ச்சி அல்லது சிங்கப்பூராக மாறலாம் என்கிற ஊகக் கதைகளில்தான் நேரத்தை வீணாக்கினோம். எங்கள் சமூகம் சார்பாக புலம்பெயர்ந்த சமூகங்களின் நிதியும் கோவில்களையும் கட்டடங்களையும் கட்டத்தான் வந்ததே தவிர கிராமப்புற பொருளாதாரத்தின் மேம்பாட்டையோ கைத்தொழில் உற்பத்தியையோ ஊக்குவிக்கவில்லை.
இவ்வாறு வடக்கின் பொருளாதார கட்டமைப்பில் இருக்கும் குறைபாடுகளை எவ்வாறு கையாள்வது என்பதுதான் தற்போது எங்கள் முன்னிருக்கும் பெரும் கேள்வியாகும்.
உடனடிச் சவால்கள்
கொவிட்-19 அனர்த்தத்துடன் கடந்த சில வாரங்களில் அத்தியாவசியப் பொருட்களின் பெருமளவிலான விலை அதிகரிப்பைக் காணகிறோம். மேலும், தொலைதூர கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு அதிகவிலைக்குக் கூட அத்தியவசியப்பொருட்களை வாங்க முடியாததுள்ளது. விளிம்பு நிலையில் உள்ள நாள்கூலி வேலை செய்வோர் ஊரடங்குச்சட்டம் காரணமாக நாளாந்த வருமானத்தை திரட்ட முடியாமல் தவிக்கிறார்கள்.
வர்த்தகத்துறையிலும் சில பிரச்சினைகள் எழுகிறது. உதாரணமாக, சில அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து பெருமளவு விலைக்குறைப்பை செய்துள்ளது. எனினும், அதன் வழங்கல் (Supply) மிகக்குறைவாக இருக்கும் பட்சத்தில் வர்த்தகர்கள் அப்பொருட்களை பதுக்குவதை காணமுடிகிறது. கறுப்புச்சந்தை (Black Market) விலைகளிற்கு விற்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான நிலைமை மக்களை பட்டினிக்கு தள்ளலாம் எனும் அச்சத்தையும் தோற்றுவிக்கிறது.
நோபல் பரிசு பெற்ற இந்தியாவின் மிகப்பிரபலமான பொருளியலாளரான அமர்த்யா சென் (Amartya Sen), வரலாற்று ரீதியாக பஞ்சம் என்பது உணவு தட்டுப்பாடு அல்லது பற்றாக்குறை காரணமாக தோன்றுவதில்லை. மக்களிடம் உணவுகளை வாங்குவதற்கான வருமானம் இல்லாமை அல்லது அதற்கான திறன் இல்லாமை, பொருட்களை விநியோகம் செய்வதில் இருக்கும் பிரச்சினைகள் மற்றும் இந்தப் பிரச்சினைகளை வெளிக் கொண்டுவரக்கூடிய ஐனநாயகத்தன்மை இல்லாத நிலைமைதான் பஞ்சத்தை உருவாக்கியது என்று கூறியுள்ளார். ஆக, ஸ்திரமுள்ள முற்போக்கான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எவ்வாறான சமூக அமைப்புக்கள் உதவும் என்பதை விவாதிக்க வேண்டியுள்ளது.
கூட்டுறவு இயக்கத்தின் தோற்றம்
வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது கூட்டுறவு இயக்கத்தின் தோற்றம் என்பது, விவசாயிகளின் கடன் நெருக்கடி காரணமாக விவசாய உற்பத்தியின் வீழ்ச்சியின் மத்தியில் தான் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் இலங்கையில் 1911ஆம் ஆண்டில் விவசாய நிதிக்கூட்டுறவு சங்கங்களை உருவாக்கியது. இவ்வாறு உருவாக்கப்பட்ட கூட்டுறவுசங்கங்கள் படிப்படியாக வெவ்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து வந்தன. மேலும், கூட்டுறவுத் துறையினுடைய அதிகரிப்பும் வளர்ச்சியும் இரண்டாம் உலக யுத்த காலத்தில் பொருட்களின் தட்டுப்பாட்டை கையாள்வதற்கு காலனித்துவ அரசாங்கம் ஏறத்தாழ ஐயாயிரம் நுகர்ச்சிக் கூட்டுறவு சங்கங்களை மூன்று வருட காலத்திற்குள் உருவாக்கின. இவற்றுக்கூடாக அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலைக்கு விநியோகிக்கக் கூடியதாக இருந்தது. அந்த வரலாறு தற்போதைய சூழலுக்கும் பொருத்தமானது.
மேலும் உள்நாட்டு யுத்த காலத்திலும்கூட கூட்டுறவு அமைப்புகளுக் கூடாகத்தான் அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு விநியோகித்தது. இந்த அண்மைக்கால வரலாற்றையும் விளங்கிக்கொண்ட பட்சத்தில்தான் தற்போதும் மக்கள் கூட்டுறவுத்துறையை அணுகுகிறார்கள்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவேண்டிய தேவையும் உணவுப்பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ள நிலையில்தான் தொலைதூர சிறிய கிராமங்களில் வசிக்கும் மக்களும் நாளாந்த கூலி வேலை செய்வோரும் கூட்டுறவு அமைப்புக்களை நாடக்கூடியதாக இருக்கிறது. இந்த கூட்டுறவு சங்கங்கள் தற்போதும் நியாய விலையில் அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை மற்றும் உள்ளூர் உற்பத்தியை சந்தைப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை சிறிய அளவில் செய்து வருகின்றன. ஆகவே, கூட்டுறவுத்துறைக்கும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை கையாள்வதில் பங்களிக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆனால், அதைச் சரியாகச் செய்வதற்கு கூட்டுறவுத் துறையில் இருக்கும் நிதியையும் மற்றும் வளங்களையும் அரசாங்கமும் நிதி நிறுவனங்களும் பெருப்பிப்பதன் கூடாகத்தான் முழுமையான பொருளாதாரப் பங்களிப்பை செய்யக்கூடியதாக இருக்கும்.
ஐனநாயக செயற்பாடு
அடுத்து தேசிய பொருளாதார நெருக்கடியுடன் உள்ளூர் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படும் போது அதன் அபிவிருத்தியில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஒரு பெரும் பங்கு இருக்கிறது. அதாவது, கடற்றொழில், விவசாயம், கால்நடை, பனை – தென்னை உற்பத்தி மற்றும் கிராமப்புற வாழ்வாதார அபிவிருத்தி குறிப்பாக பெண்கள் வாழ்வாதார மேம்பாடு என்பவற்றில் கூட்டுறவு இயக்கம் மக்களை வழிகாட்டி தீர்வுகளைக் காணவேண்டியிருக்கிறது.
என்னுடைய கடந்த கட்டுரைகளில் கூறியபடி உலக பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கையினுடைய தேசிய பொருளாதார நெருக்கடியும் கூட நிதித்துறை மற்றும் உற்பத்தியின் வழங்கல், நுகர்ச்சியின் கேள்வி (Demand) இவ்வாறான மூன்று விடையங்களின் அடிப்படையில்தான் கூர்மையடைந்து வந்துள்ளது. இங்கு கூட்டுறவுத்துறை கிராமிய உள்ளூர் மட்டங்களில் சிறிய அளவில் இந்த நிதி, உற்பத்தி மற்றும் நுகர்ச்சித் துறைகளை உள்ளடக்கியுள்ளது. அந்தவகையில் அவை சரியாக இயங்குமானால் நெருக்கடியாலும் சந்தையாலும் ஏற்படும் வழங்கலில் மற்றும் கேள்வியில் ஏற்படும் பிரச்சினையை உள்ளூர் மட்டத்தில் ஓரளவு நிவர்த்தி செய்யமுடியும். உதாரணமாக, கூட்டுறவுத்துறையிடம் அறுவடைக்காலத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்கும் நிதி இருக்குமாயின் அவர்கள் நியாயமான விலைக்கு நெல்லை வாங்குவது மட்டுமன்றி அதை அரிசியாக உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு மக்களிடம் நுகர்ச்சி செய்யக்கூடியதாகவும் இருக்கும்.
கூட்டுறவு அமைப்புகள் அடிப்படையில் சமத்துவமான ஐனநாயக செயற்பாட்டை கோட்பாட்டு ரீதியாக கொண்டுள்ளன. அதாவது அங்கத்தவராக இருக்கும் எவருக்கும் ஒரு பங்கும் ஒரு வாக்கும் மட்டுமே இருக்கும் சமத்துவமான ஐனநாயக அமைப்பு. ஆனால், சமூக உறவுகளில் இருக்கும் செல்வாக்கும் ஏற்றத்தாழ்வுகளும் கூட்டுறவுத் துறையிலும் நிச்சயமாக தாக்கம் செலுத்துகிறது. இந்த நிலைமையில் கூட்டுறவுத் தத்துவத்தின் அடிப்படையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு இளம்தலைமுறை கூட்டுறவுத் துறைக்குள் உள்நுளைந்து தீவிரமான மாற்றத்தை கொண்டு வருமானால் அது மேலும் ஐனநாயகத் தன்மை கொண்ட அமைப்பாக மாறும். அமர்த்யா சென் கூறியது போல் எங்கள் பொருளாதாரக் கட்டமைப்பிற்குள்ளும் ஒரு ஐனநாயகத் தன்மையை கொண்டுவர வேண்டும். அதனூடாகத்தான் எதிர்கால பொருளாதார நெருக்கடியிலிருந்து ஓரளவுக்கேனும் எம் மக்களை பாதுகாக்க முடியும்.
கலாநிதி அகிலன் கதிர்காமர்
சிரேஷ்ட விரிவுரையாளர்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்