பட மூலம், AsianReview
“வாழ்க்கையில் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. அவற்றைப் புரிந்துகொள்வதே தேவையாகும். அதனைச் சரியாகப் புரிந்துகொண்டால் அச்சம் குறையும்’’ – மேரி கியூரி.
வீர சிங்களப் பிள்ளைகள் அண்மையில் கொரோனா நோய் தடுப்புக்காக அமைக்க திட்டமிடப்பட்டிருந்த தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொண்ட போராட்டங்களை நாங்கள் எவ்வாறு புரிந்துகொள்வது? வீர சிங்கள பிள்ளைகள் மட்டுமன்றி வீர தமிழ் மற்றும் முஸ்லிம் பிள்ளைகளும் அவ்வாறான எதிர்ப்பின் பங்குதாரர்களாக இருந்தனர். தனிமைப்படுத்தும் மத்திய நிலையம் என்பது கொவிட் 19 நோயினால் பீடிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையளிக்கும் இடமல்ல. வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் எமது சகோதர சகோதரிகளை தற்காலிகமாக தடுத்துவைக்கும் பாதுகாப்பான இடமாகும். அவர்களை நேரடியாக தமது வீடுகளுக்கு செல்வதற்கோ, வீடுகளுக்குள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கும் அரசாங்கம் இடமளித்தால் நிலைமை எப்படியானதாக இருந்திருக்கும்?
நான் இந்தக் கட்டுரையை எழுதும் போது பீ.பீ.சி. வானொலி சேவையில் கொவிட் 19 வைரஸின் தற்போதைய நிலைமை தொடர்பான நிகழ்ச்சியொன்று ஒலிபரப்பாகியது. அதில் கருத்து தெரிவித்த ஸ்பானிய வைத்தியரொருவர் அந்த நோய் மருத்துவ உதவியாளரிடமிருந்தே தனக்கு தொற்றியதாக கூறினார். தனிமைப்படுத்தலை முறையாகக் கடைப்பிடித்து தனது வீட்டிலேயே தங்கியிருப்பதாகவும் அவரின் பிள்ளைகள் இருவர் மற்றும் மனைவியுடன் இருப்பதாகவே அவர் கூறினார். அவர்களுக்கு நோய் தொற்றாதவாறு தமக்கென இருக்கும் ஒரே மலசல கூடத்தை பயன்படுத்துவதாகவும் அவர் சிரித்துக்கொண்டே கூறியிருந்தார்.
தன்னை பல்வேறு வகையில் வீரர்களாக அடையாளப்படுத்தும் எமது சமூகத்தினர் முன்னெடுக்கும் பிரசாரங்கள் எந்தளவுக்கு கேவலமானது என்பதனை அந்த மனிதரின் கதையை கேட்கும் போது புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. மற்றையவர்களுக்கு அஞ்சுவது எமது சமூகத்தில் எந்தளவுக்கு ஆழமாக இருக்கின்றது என்பதனை அண்மையில் நடைபெற்ற கவலைக்குறிய உதாரணமான வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கையர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்திற்கு எதிராக மேலெழுந்த இங்குள்ள மக்களின் எதிர்ப்பின் மூலம் புரிந்துகொள்ள கூடியதாக இருந்தது.
மற்றையவர் மீது காட்டப்படும் அச்சம் எமது சமூகத்திற்குள் வயது, மதம், இனம், பால் ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் இல்லாதவாறு பரவியுள்ளமை இந்த எதிர்ப்பாளர்களின் செயற்பாடு எமக்கு எடுத்துக்காட்டுகிறது. இந்த தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்திற்கு அனுப்பப்படவிருந்த பெரும்பாலானவர்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நாடுகளில் இருந்து வருகை தந்த இலங்கையர்களாவர். சிலவேளை இந்த மத்திய நிலையத்திற்கு அவ்வாறாக எதிர்ப்பு தெரிவித்தவர்களிடையே அவர்களின் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் இருப்பதற்கும் அதிக இடமுண்டு.
ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலையை தனிமைப்படுத்தும் முகாமாக பயன்படுத்துவதற்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு வெளியிட்டதுடன், அதில் பௌத்த மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர். இவ்வாறாக எதிர்ப்பு வெளியிட்டு இவர்கள் கடந்த மார்ச் 5ஆம் திகதி ஹெந்தளை – ஹேக்கித்த வீதியை மரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
”கொரோனா பரிசோதனையை மட்டக்களப்பில் செய்ய வேண்டாம்” என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பு நகரில் பேரணியொன்றும் நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை தனிமைப்படுத்தும் நிலையமாக பயன்படுத்துவதற்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அந்த நோய் தொற்றியுள்ளதா என பரிசோதனை நடத்துவதற்கும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன. இந்தப் போராட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களும் மற்றும பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
பிள்ளைகள் மற்றும் பாடசாலையின் பாதுகாப்புக்காக உலக சுகாதார தாபனம் , சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் யுனிசெப் ஆகியன ஒன்றிணைந்து கடந்த 10ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுவது தொடர்பாக வழிகாட்டல் ஆலோசனை தொகுதியொன்றை வெளியிட்டிருந்த்து. அதில் குறிப்பிடப்பட்டிருந்த வழிகாட்டுதல்களில் ஒன்றாக “மாணவர்களை ஒருவருக்கொருவர் கருணை காட்ட ஊக்குவிப்பதன் மூலமும் , வைரஸ் பற்றி பேசும் போது பிழையான விடயங்களை தவிர்ப்பதன் மூலமும் பாகுபாட்டைத் தடுக்க உதவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அதற்குப் பதிலாக அரசியல்வாதிகள் பாடசாலை மாணவர்களையும் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு எதிரான பேரணிகளுக்கு இணைத்துக்கொண்டு அவர்களுக்கு தீய உணர்வை ஊட்டும் செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றனர்.
இந்த நோய் தொற்றுக்கு தமது உறவினர்கள் உள்ளாகுவார்களாக இருந்தால் இவ்வாறாக எதிர்ப்பு வெளியிடுவோர் என்ன செய்வர்? அவர்களை தனிமைப்படுத்தி இருண்ட அறைக்குள் கட்டிப் போடுவார்களா? இல்லையென்றால் துரத்தி விடுவார்களா?
எமது சமூகத்தில் அண்மைக்காலமாக அவதானிக்கக் கூடிய பிரதான விடயங்களில் ஒன்று, மற்றையவர்கள் தொடர்பாக அச்சத்தை தம்மில் அதிகரிப்பதாகவே இருக்கின்றது. தமிழன் எனவும், முஸ்லிம் எனவும், சிங்களவன் எனவும் பல்வேறு நிலைமைகளின் கீழ் இவ்வாறாக அந்நியப்படுத்தப்படுகின்றனர். மற்றையவர் தொடர்பாக அச்சம் ஏற்படுவதற்கு பிரதான காரணம் மாயையான நம்பிக்கை, போலி பிரசாரங்கள் மற்றும் புரிந்துணர்வின்மை என்பனவாகும்.
தற்போது இவர்களுக்கு அந்நியனாக புதிய கொரோனா வைரஸ் மற்றும் அதில் உருவாகும் கொவிட் 19 நோய் வந்துள்ளது. இந்த வைரஸ் எவ்வாறு தொற்றுகின்றது என்பது தொடர்பாக துளியளவேனும் தெளிவு இருக்குமாக இருந்தால் இவ்வாறான எதிர்ப்பு உருவாகியிருக்காது. கொரோனா வைரஸ் முதலில் தொற்று ஏற்பட்டவரின் எச்சில் மூலம் அல்லது மூக்கில் வடியும் திரவம் மூலமாக தொற்றுகின்றது. இந்த வைரஸ் காற்றின் மூலம் பறந்து வந்து அண்மையில் இருப்பவர்களுக்கு தொற்றுவதில்லை. இந்த உண்மையை புரிந்துகொள்ள முடியாதளவுக்கு இங்குள்ள மக்கள் முட்டாள்களா?
கைகளில் வசிய வளையல்களை கொண்டுள்ள ராஜபக்ஷக்கள் வேட்பு மனுவில் கையெழுத்திடும் போது அவர்களை சுற்றியிருக்கும் அரசியல்வாதிகளும் அவற்றை கைகளில் அணிந்திருக்கின்றனர். செய்திப் பத்திரிகைகள், வானொலி மற்றும் தொலைகாட்சிகளில் சாஸ்திரக்காரர்கள் குடிகொண்டிருக்கிறார்கள். யதார்த்தமான பகுத்தறிவுக்கு பதிலாக அமானுஷ்ய கூறுகளை நம்புவது இலங்கை அரசியலின் தனிச்சிறப்பாக மாறியுள்ளது. அது அரசியல்வாதிகளின் அடையாளமாக அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க இந்தியாவில் திருப்பதி கோவிலில் கடவுள் படங்களுக்கு முன்னால் மரண அச்சத்தில் வேண்டிக்கொள்ளும் புகைப்படங்கள் அந்த அடையாளங்களையே காட்டுகின்றன.
கடந்த காலத்தில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான நபர்களை எமது சமூகத்தினர் கொடுமையாக பார்ப்பதற்கு இவ்வாறான அச்சமே காரணமாக இருந்தது. அந்த கொடூரத்தில் இந்ந நாட்டின் ஊடகங்களும் தொடர்புபட்டிருந்தன. இன்று கொரோனா வைரஸ் தொடர்பாக நடப்பதும் அதுவேயாகும். இந்த போலியான அச்சுறுத்தலை விற்று தின்பதற்கு பதிலாக ஏற்படக்கூடிய தொற்று நோய்க்கு முகம் கொடுப்பதற்கு இதற்கும் மேல் நோய் பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை மக்கள் மயப்படுத்துவதற்காக ஊடகங்கள் போதுமான அளவுக்கு இடங்களை ஒதுக்கலாம். ஆனால், அப்படி ஒதுக்குவதில்லை.
எவ்வாறாயினும் இந்த சர்வதேச ரீதியிலான தொற்றிலிருந்து முழுமையாக தப்பித்து இருப்பதற்கு இலங்கையால் முடியாது. கொவிட் 19 தீவிரமாக பரவி வரும் தென்கொரியாவிலும் மற்றும் இத்தாலியிலும், அந்த நோய் தீவிரமாக பரவி வரும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நாடுகளிலிருந்து வருபவர்கள் தற்போது 14 நாட்களுக்கு மாத்திரமே தனிமைப்படுத்தப்படுவர். எவ்வாறாயினும், விசேட நிபுணர்கள் இந்த விடயத்தில் சிலவேளை வைரஸ் தொற்றி நோய் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு 20 நாட்களாவது எடுக்கலாம் எனவும் கூறியுள்ளனர். மேலும், இந்த நாட்டுக்கு வரும் சீனர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதில்லை. மேலும் சில நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதில்லை. இந்நிலையில், கொவிட் 19 இந்த நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எங்களால் கருத முடியுமாக இருக்கின்றது.
பக்கத்து நாடான இந்தியா தற்போது எந்தவொரு நாட்டிலிருந்தும் உள்நுழைவதற்கு தடை விதித்துள்ளது. புதிய கொரோனா வைரஸ் சிலவேளை ஒரு வருட காலமாவது பரவலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மன் சனத் தொகையில் 70 வீதம் வரையிலானோருக்கு இந்தத் தொற்று ஏற்படக்கூடுமென அந்த நாட்டின் அரச தலைவரான எஞ்சலா மேர்கல் கடந்த 11ஆம் திகதி கூறியுள்ளார். இத்தாலி முழுமையாக சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் கடந்த 11ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு சகல உணவு மற்றும் மருந்து விற்பனை நிலையங்கள் தவிர்ந்த மற்றைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மற்றும் ஹோட்டல்களையும் மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. டென்மார்க்கில் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. அமெரிக்காவும் கடுமையான நிலைமையொன்றுக்கு முகம்கொடுக்கின்றது.
இதற்காக செய்ய வேண்டியது என்னவென்றால் கொரோனா வைரஸ் மற்றும் கொவிட் 19 நோய் தொடர்பாக யதார்த்த ரீதியிலான கருத்தாடல்களை ஏற்படுத்த வேண்டும். அச்சமில்லாத சாதகமான சிந்தனையே இன்று தேவையாக இருக்கின்றது. வெளியில் சென்று வரும் ஒவ்வொரு தடவையும் 20 செக்கன்கள் வரையில் சவர்க்காரமிட்டு கைகளை கழுவுதல், இருமல் இருக்கும் நபர்களிடமிருந்து இரண்டு மீற்றர் அளவிலான இடைவெளியை பேனுதல் போன்றன ஆரம்ப நோய் தடுப்பு முறைகளாகும். இதனுடன் யார் மீதும் தவறான கவனிப்பை ஏற்படுத்தாத வகையிலான சிந்தனைகளை சமூகமயப்படுத்த வேண்டும்.
மேற் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தும் போது இலங்கையில் அந்த வைரஸ் தீவிரமாக பரவுவதை தடுப்பதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இன்னும் முறையாக எடுக்கப்படவில்லை என்றே தெரிகின்றது. சீனாவில் வைரஸ் சூறாவளியாக இருந்த நிலையில் குறித்த காலத்திற்கு முன்னரே இங்கு நாடாளுமன்றத்தை கலைத்து ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டமை ஒருபோதும் காலத்திற்கு ஏற்ற தீர்மானம் அல்ல. உலகில் மக்கள் ஒன்று கூடல் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கையெடுக்கும் அரசியல்வாதிகள் வல்லுநர்கள் அல்லர், அழிவுகளை கொண்டு வருபவர்களே. இன்றும் தேர்தல் கூட்டங்களை நடத்திக்கொண்டு நாடு பூராகவும் செல்லும் அரசியல்வாதிகளால் கொவிட் 19 தொற்று பரவுமாக இருந்தால், சட்டியில் நீர் கொதிக்கும் வரை நீந்தும் நண்டு என்ற பழமொழி பொறுத்தமாக இருக்கும்.
உலகமே சமூக, பொருளதார, அரசியல் உள்ளிட்ட சகல துறைகளிலும் சர்வதேச தொற்றுக்கு முகம்கொடுப்பதற்கு தயாராகி வருகின்றன. ஆனால், நாங்களோ தேர்தலுக்கே தயாராகி வருகின்றோம்.
(COVID19) කෝවිඩ් 19: අප සූදානම් ද? என்ற தலைப்பில் ராவய பத்திரிகைக்காக சுனந்த தேசப்பிரிய எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.