படங்கள் மூலம், IFFR
றொட்டர்டாமில் (Rotterdam- The Netherlands) ஒவ்வொரு வருடமும் சர்வதேச திரைப்பட விழா நிகழ்கிறது. பல வருடங்களாகப் போவதற்கான சூழ்நிலை கிடைக்கவில்லை. இவ்வருடம் அது சாத்தியமானதால் எப்படத்திற்குப் போகலாம் எனத் தேடிய பொழுது நெறியாளர் பிரசன்ன விதானகே அவர்களின் திரைப்படமான “காடி- சூரியனின் பிள்ளைகள் “எனப்பொருள்படுவது (Gaadi-children of the sun) திரையிடப்படவுள்ளதை அறிந்து கொண்டேன். உடனடியாகவே நுழைவுச்சீட்டைப் பதிவு செய்து சென்று படத்தினைப் பார்த்தேன்.
ஒரு கலைப்படைப்பை விமர்சிப்பதாயின் அதனைக் குறைந்தது இரு முறையாவது பார்த்திருக்க வேண்டும். இப்படத்தை இரண்டுமுறை சென்று பார்க்கக்கூடிய தூரத்தில் நான் இருக்கவில்லை. சிலவேளை இப்படத்தின் சில காட்சிகளை முழுமையாக விளங்காமல் விடயங்களை நான் தவற விட்டிருக்கக் கூடும் என்பது இங்கு உள்ளுறையாக இருக்க வேண்டியது. வேற்று மொழிப்படங்களைப் பார்க்கும் போது படத்தில் வரக்கூடிய உரையாடல்களுக்கான மொழிபெயர்ப்பு அடியீடுகள் (subtitle) படத்தின் காட்சிகளைப் பார்ப்பதற்கு இடையூறாக இருக்கும். எனவேதான் முதல் முறை படத்தை மட்டும் ஊன்றிக் கவனித்தும் மறுமுறை மொழி பெயர்ப்புப்பகுதிகளைக் கவனித்தும் பார்ப்பது நன்றாகவிருக்கும்.
திரைக்கதையின் களம் பிரித்தானியர்கள் இலங்கைக்குள் நுழைந்து , கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றி இலங்கை முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்த 1814ஆம் ஆண்டில் விரிகிறது. தென்னிந்தியாவை அடியாகக் கொண்ட கண்டி மன்னனை அகற்றி, தமது மரபுகளையும் பௌத்த மதத்தையும் பாதுகாக்க வேண்டும் எனக் கண்டியில் உள்ள திசாவைகளில் (Disawe) ஒரு பகுதியினர் முயற்சி செய்கின்றனர். இச்சந்தர்ப்பத்தில் பிரித்தானியர்கள் தங்களது நோக்கம் வர்த்தகம் செய்தல் மட்டுமே என்றும், அதிகாரத்தைக் கைப்பற்றுதல் தமது நோக்கமல்ல என்றும் கூறி, குறித்த திசாவைகளுக்கு உதவுகின்றனர்.
ஆயினும், இச்சதித்திட்டம் அரசனுக்குத் தெரிந்துவிடச் சில திசாவைகள் கைது செய்யப்படுகின்றனர். சிலர் தப்பித் தலைமறைவாகி விடுகின்றனர். கண்டி மன்னன் இச்சதித்திட்டத்துக்கான தண்டனையை இச்சதித்திட்டங்களுடன் சம்பந்தப்பட திசாவைகளின், மனைவிமார்களுக்கும் அளிக்கிறான். இப்பெண்களுக்கு இரண்டு தெரிவுகள் அளிக்கப்படுகின்றன. ஒன்று அவர்கள் தமது கழுத்திற் கல்லைக்கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்து மரணமடைய வேண்டும் அல்லது எல்லாச் சாதிகளிலும் கடையசாதி எனக் கண்டி உயர்குழாத்தினால் ஒதுக்கி வைக்கப்பட்ட றொடியா (Rodiya) என அவர்களால் அழைக்கப்பட சாதிக்குள் சென்று அச்சாதியாகி வாழ வேண்டும்.
அப்பெண்கள் உண்மையிலும் தங்கள் குலப்பெருமையைக் காப்பாற்ற வேண்டும் என்றால் தாமாகவே ஆற்றிற் குதித்துச் சாக வேண்டும் என்பதே இத்தண்டனையின் உள் நோக்கம். அவ்வாறு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் குதித்துத் தற்கொலை செய்கிறார்கள், ஒருத்தியைத் தவிர. ஆட்சி கவிழ்ப்புக்குத் தலைமை தாங்கிய புலத்கம திசாவையின் (Bulathgama Disawe) மிக இளம் வயது மனைவியான டிக்கிரி (Tikiri) சாவைத் தெரிவு செய்யாமல் வாழ்வைத் தெரிவு செய்கிறாள். பெண்கள் குதித்த ஆற்றின் அக்கரையில் கண்டி மன்னனின் கட்டளையின் படி, றொடியாச் சாதியைச் சேர்ந்த ஆண்கள் வரவழைக்கப்பட்டு காக்க வைக்கப்படுகிறார்கள். சாவைத் தெரிவு செய்யாத டிக்கிரியை, றொடியா ஆண்கள் ஆற்றை நீந்திக்கடந்து வந்து உரிமையாக்கிக்கொள்ள வேண்டும். அவர்களுள் முதலில் நீந்தி வந்த விஜயாவுக்கு (Vijaya) அவள் மனைவியாகிறாள்.
றொடியா என்றால் தூசு என்று அர்த்தப்படும். படத்தில் றொடியாக்களுடன் விளையாடினால் நீ அழுக்காகி விடுவாய் என உயர்குலப்பெண்ணொருவள் கூறுவதையும் அவதானிக்க முடியும். உண்மையிலும் றொடியாக்கள் தங்களைச் சூரியனின் பிள்ளைகள் என அர்த்தப்படும் காடிக் குலமாகவே கருதுகின்றனர். கண்டியின் உயர்சாதியினர் எனக் கூறப்படுபவர்கள் றொடியாக்களை உழைத்து வாழ அனுமதிக்கவில்லை. அவர்கள் இரந்துண்ணவேண்டும்; உயர் சாதியினரைப் பார்த்தால், கூனிக்குறுகிப் பாதைகளின் ஓரங்களுக்குச் சென்று ஒதுங்கி அவர்களுக்கு வழிவிட வேண்டும். பெண்களும் ஆண்களும் அவர்களின் மார்பை மறைக்கும் ஆடைகளை அணிய முடியாது. ஆண்களும் சரி, பெண்களும் சரி வண்ண ஆடைகளை அணிய முடியாது. அவர்கள் வெண் பழுப்புத் துணிகளை மட்டுமே அணிய அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். றொடியாக்கள் ஊரின் ஒதுக்குபுறமான பகுதியில் சிறு குடில்களில் மட்டுமே வசிக்க அனுமதிக்கப்படிருக்கிறார்கள்.
உயர்குலப்பெண்களுக்குரிய துணியணிந்திருந்த டிக்கிரி, அவை பறிக்கப்பட்டு உடலின் மேற்பகுதி நிர்வாணமாக்கப்பட்டு கல்லெறிந்து துரத்தப்படுகிறாள். றொடியா ஆண்கள் அனைவரும் அவளைச் சூழ்ந்து அவள் மீது கற்படாமல் அவளை அழைத்துச் செல்கின்றனர். படம் நெடுகிலும் அன்று சிங்கள சமூகத்தில் நிலவிய சாதியக்கொடுமையின் காட்சிகள் தொடருகின்றன.
காடிச்சாதியைச் சேர்ந்தவர்கள் பிச்சை எடுப்பதற்காகச் சென்று கொண்டிருக்கும் போது, அவர்களின் வழியில், திசாவை ஒருவன் பல்லக்கில் வருகிறான். அதனைக்கண்ட காடிச் சாதியினைச் சேர்ந்த பெரியவர்கள் அனைவரும் பாதை ஓரத்திற்கும் பற்றைகளுக்குள்ளும் சென்று குனிந்து ஒதுங்கிக்கொள்வார்கள். இரு சிறுவர்கள் மட்டும் தாங்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற எண்ணமில்லாமற் இயல்பாக பாதையிற் சென்று கொண்டிருப்பார்கள். உடனே வளர்ந்தவர் ஒருவர் ஓடிச்சென்று அவர்களைத் தூக்கி வந்து அவர்களையும் குனியச்செய்து ஒதுங்கிக் கொள்வார். சாதிய அடையாளம் எவ்வாறு அடுத்த தலைமுறையின் மீதும் கடத்தப்படுகிறது அல்லது சுமத்தப்படுகிறது என்பது இங்கு உணர்த்தப்படுகிறது.
சாதியக்கொடுமைக்குச் சமாந்தரமாகவே, அன்று பெண் எவ்வாறு கண்டிப்பிரபுத்துவச் சூழலுக்குள் நடத்தப்பட்டாள் என்பதும் தெளிவாகக் காட்டப்படுகிறது. டிக்கிரியின் கணவன் வீட்டுக்கு வரும் பொழுது பெண்கள் அனைவரும் மறைந்து கொள்கின்றனர். அவரது இரண்டு பெண்பிள்ளைகளும் கூட மறைவில் நின்று சற்று எட்டிப்பார்த்து, மெல்லியதாகவே புன்னகைக்கின்றனர். டிக்கிரி கூடத் தனது கணவனான புலத்கம திசாவையின் கால்களைக் கழுவிவிடத்தான் தண்ணீர் கொண்டு வெளியே வருகிறாள்.
கண்டி மன்னனுக்கெதிரான சதி நிகழ்வதற்கு முதல் ஓரிரவில் புலத்கம டிக்கிரியை அழைத்துத் தனக்கு ஏதாவது நடந்தால் பிள்ளைகளைப்பாதுகாக்க வேண்டும் எனக்கூறுகிறான். அக்கணத்திலும் டிக்கிரியின் மீதான அன்பின் அல்லது காதலின் ஈரம் சொட்டுக் கூட அவன் கண்ணிற் தெரிவதில்லை. ஒரே படுக்கை அறையில் அவன் கட்டிலிலும் அவள் பாயிலும்தான் படுக்கிறார்கள். பிரபுத்துவ உயர்குழாத்தில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை அவன் வீட்டுக்கு வரும் காட்சியும், படுக்கை அறையில் அவர்களுக்கிடையில் நிகழும் உரையாடற்காட்சியும் மிக அழகாக உணர்த்தி விடுகின்றன.
இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக காடிச் சாதியினுள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவு சமத்துவம் மிக்கதாக இருக்கிறது. குழந்தைகளும் கூடப் பெரியவர்களுடன் பயமற்று ஊடாடுகிறார்கள். இவையெல்லாம் வார்த்தைகளால் உணர்த்தப்படுவதில்லை. காட்சி அமைப்பினாலும் நடிகர்களின் நடிப்பினாலும் பின்புலக்காட்சிகளாலும் மிக அழகாக உணர்த்தப்படுகின்றன. ஆடை அணிகலன்களும் வீடுகளும் காலப்பின்னணியைத் தெளிவாக உணர்த்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரித்தானியருடன் கூட்டுச்சேரும் திசாவைகள் பிரித்தானியப் பிரதிநிதியுடன் ஒப்பந்தம் செய்யும் இரவுக்காட்சி திரிவிளக்கொளியில் துல்லியமாகப் படமாகப்பட்டுள்ளது.
அதிகாரத்தைக் கைப்பற்ற மாட்டோம் எனப் புனித வேதாகமத்தின் மீது சத்தியம் செய்யும் ஆங்கிலேயப் பிரதிநிதி மீது, திசாவை துளி நம்பிக்கையீனத்தையாவது கொண்டிருந்தாரா என்றால் இல்லை. சலனப்பதிவுக்கருவி (Video Camera) விளக்கொளியில் ஆங்கிலேயப் பிரதிநிதி மீது குவிந்து பின் திசாவையின் மீது குவிகிறது. அவரது முகம் கண்டி மன்னனை அகற்றுவதை மட்டுமே சிந்திக்கிறது என்பதைப் புலப்படுத்துகிறது. பிற்பாடு கண்டி மன்னனைக் கைது செய்து கண்டிக் கோட்டையை ஆங்கிலேயரின் தளபதி “தனது கட்டுப்பாட்டில்” கொண்டு வந்து விட்டார் என ஆங்கிலேயப் பிரதிநிதி மிடுக்காகக் கூறும் போது கூட, நாங்கள் எங்கள் மதத்தையும் மரபுகளையும் பாதுகாத்து விட்டோம் என ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்தபோது இருந்த அதே முகபாவத்துடன் திசாவை கூறுகிறார்.
எங்கள் அடையாளங்களைப் பாதுகாக்கிறோம் எனக்கூறி நாட்டை ஆங்கிலேயரிடம் இழந்து விட்டோமே என இயக்குனர் பிரசன்ன விதானகே இங்கே கூறி விடுகிறார். அது மட்டுமல்ல மன்னன் என்ற வகையிற் கண்டி மன்னனும் நல்லவனல்ல என்பதையும் ஓரிடத்தில் காட்சிப்படுத்தி விடுகிறார். மன்னனின் படைகள் அப்படையிற் சேர மறுத்து ஒளிந்து வாழ்ந்த இளைஞர்களின் வீடுகளையும் உடைமைகளையும் அடித்துடைத்து எரித்து விடுகின்றனர்.
காடிச் சாதியினருடன் சென்ற பின்னும் டிக்கிரியால் தனது உயர்சாதி அடையாளத்தை இழந்து அல்லது மறந்து அவர்களுடன் ஒன்ற முடியவில்லை. அவர்களின் சிறு குடிலினுள் சென்று ஒதுங்கி இருக்கிறாள். தனது கீழாடையின் ஒரு பகுதியைப்பிரித்துத் தனது மேலாடையாகவும் ஆக்கிக்கொள்கிறாள்.
அவளுடன் விஜயா உரையாட முற்படும் போது அவனைச் சிறு தடியாற் துரத்தித் துரத்தி அழுகையுடனும் கோபத்துடனும் அடிக்கிறாள். அவனோ சிரித்தபடி துள்ளித்துள்ளி விலகுகிறான். அவளது கோபத்தையும் துயரத்தையும் புரிந்து கொள்கிறான். திசாவை டிக்கிரியை நடத்திய விதம் இக்கணத்தில் மனதில் வந்து போகும்.
காடிச் சாதியினர் பிச்சை எடுக்கச் செல்லும் போது, அவர்களுடன் செல்லும் டிக்கிரி மேலாடையுடன் தான் செல்கிறாள். இதனைக் கண்டுவிட்ட பிரபு ஒருவன் அவர்களைத் தங்களது வளவுக்கு அழைத்து, அவர்கள் எல்லோரையும் தனது அடியாட்களைக் கொண்டு கொடூரமாகத் தாக்குகிறான். குழந்தைகளைக்கூட அவனின் அடியாட்கள் விட்டு வைக்கவில்லை.
டிக்கிரியால் காடிச் சாதியின் பழக்க வழக்கங்களை ஏற்று மாற முடியவில்லை, இந்நிலை தொடர்ந்தால் மீண்டும் மீண்டும் தாங்கள் இன்னற் படவேண்டும் எனக் காடிக் குழுத்தலைவன் கருதுகிறான். அவளை உரிமையாக்கியவன் என்ற வகையில் அவளை மாற்றும் பொறுப்பு தன்னுடையதென்று கூறும் விஜய, அவள் மாறும் வரை தாங்கள் வேறு பகுதியில் சென்று வசிக்கிறோம் எனக்கூறி அவனும் டிக்கிரியும் குழுவை விட்டு விலகிச் செல்கின்றனர். விலகிச் செல்லும் அவர்களைத் தொடரும் அவர்களின் அடையாளங்களும் அவர்கள் இருவருக்கும் இடையில் உருவாகும் உறவும் படத்தின் உயிராகின்றன.
இடம்பெயரும் விஜயா, சந்தர்ப்பம் வாய்த்ததனால் எருமை பிடிப்பவனாக மாறுகிறான். காட்டுக்குள் டிக்கிரிக்கு மரக்கொப்புகளால் கூடாரம் அமைத்துக் கொடுக்கிறான். அவளோ அவனை உள்ளே விடுவதில்லை. எருமை விற்ற காசில் அவளுக்குப் புது உடுப்பும் வாங்கி வருகிறான். கள்ளும் வாங்கி அருந்துகிறான். காதலும் கள்ளும் தந்த மென் போதையில் பாடிச் சிறு நடனமும் ஆடுகிறான். நாட் போக்கில் டிக்கிரியும் அவனுடன் உரையாடுமளவுக்கு நெருங்குகிறாள்.
வெறும் இயற்கை ஒளியில் இரவும் பகலும், காடும் பாறைகுன்றுகளும் நிறைந்த பகுதியில் படமாக்கப்பட்ட காட்சிகள் கதைக்களத்தின் காலத்திற்கும் விஜயவின் காதலுக்குள்ளும் எங்களை இழுத்துச் செல்கின்றன. மென்மையுடனும், கள்ளம் கபடமற்ற முகத்துடனும் ஆழமான காதலுடனும் டிக்கிரியை அணுகும் சஜிதவின் (விஜய) நடிப்பு அருமை. தான் இழந்த உயர் சாதி நிலையை இட்டு ஏங்கினாலும் மெல்ல மெல்ல விஜயவை நோக்கி நகரும் பாத்திர வளர்ச்சியைப் புலப்படுத்துவதில் தினாரவும் (டிக்கிரி) வெற்றி அடைகிறார்.
கதையின் இறுதியில், தப்பியோடிய திசாவைகள் மீண்டும் ஆங்கிலேயரின் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றிக் கண்டி மன்னனுக்கு ஆதரவானவர்களை வேட்டையாடுகின்றனர். அது மட்டுமன்றித் தமது வெற்றியைக் கொண்டாடுவதற்காக காடிச்சாதியினரை அழைத்து வந்து அச்சாதியிலுள்ள நடனப் பெண்களை உயர் குழாத்தின் முன் நடனமாட வைக்கின்றனர். இதற்குச் சற்று முன்னரேயே விஜயவும் டிக்கிரியும் தமது பழைய குழுவை எதிர்பாராத விதமாகக் காட்டுக்குள் சந்தித்து சேர்ந்தும் விட்டிருந்தனர். எனவே, அழைக்கப்பட்ட காடிக்குழுவினுள் அவர்களும் அடங்கியிருக்கின்றனர். இவ்வாறு நடனக் கொண்டாட்டம் நிகழும் போது டிக்கிரி தனது கணவனை உயர் பிரபுக்களிடையே காண்கிறாள். முதலிற் தயங்கினாலும் பின்னர் எதிர்பார்ப்புடன் மெல்ல எழுந்து குழுவுக்கு முன் வந்து தனது கணவனின் கண்ணிற் படுமாறு நிற்கிறாள்.
அன்பையும் கருணையையும் போதித்த பௌத்த மரபுகளைப் பாதுகாப்பதற்காக ஆங்கிலேயருடன் கூட்டுச் சேர்ந்த திசாவை, டிக்கிரி தனது பிள்ளைகளின் தாய், தனது உயிரையும் உடலையும் பகிர்ந்த மனைவி என்ற எந்தவித உணர்வும் இல்லாமற் டிக்கிரியின் மேலாடைகளை அகற்றிவிடுமாறு உத்தர விடுகிறான். காவலர்கள் அவளின் ஆடைகளை அகற்ற முயலும் போது, அவள் அழுது கொண்டு போராடுகிறாள். இதனைப்பார்க்கப் பொறுக்காத விஜய காவலர்களுடன் சண்டையிட்டு அவளின் மீது போர்வையாகிறான். சகல அடிகளையும் தாங்குகிறான். இவ்வளவுக்கும் ஆங்கிலேயர்களும் அவர்களது போர்வீரர்களும் டிக்கிரிக்கு நிகழும் கொடுமையைப் பார்த்தபடியேதான் இருக்கிறார்கள்.
இதனைப்பார்த்த காடிக்குழுத்தலைவன் கற்களைப் பற்றைக்குள் எறிந்து காவலர்களின் கவனத்தைத்திருப்பி விஜயவையும் டிக்கிரியையும் தப்பிச்செல்லுமாறு கூறுகிறான். அவர்களும் தப்பிச் செல்கின்றனர். கொண்டாட்டங்கள் யாவும் ஓய்ந்து அனைவரும் சென்ற பின்னர் டிக்கிரியும் விஜயவும் திரும்பி வருகின்றனர். அங்கே அவர்களின் குழுத்தலைவன் காடிச் சாதியைச் சேர்ந்த அனைவரும் கொல்லப்பட்டுக்கிடக்கின்றனர். விஜய கதறி அழுகிறான். டிக்கிரிக்கு உயர்சாதி வன்மத்தின் கொடூரக் கொலைவெறிக் குணமும் விஜயவின் காதலின் ஆழமும் விளங்குகிறது. அவள் தனது மார்புக்கச்சையைக் கழற்றி வீசிவிட்டு விஜயவை அணைத்துக்கொண்டு அழத்தொடங்குகிறாள். உயர்சாதி என்று கூறப்படும் ஒன்றுக்குள் இருந்து வருகிற ஒருத்தி, அதன் இழிமையை உணர்ந்து தாழ்ந்த சாதி எனக்கூறப்பட ஒன்றின் அன்பையும் காதலையும் பழக்கங்களையும் ஏற்றுக் கொள்ளும் அடையாள மாற்றம் இங்கு நிகழ்கிறது.
யதார்த்தவாதப்புனைவான இப்படம் தனது ஓட்டத்திற் பிறழ்வு தரக்கூடிய கதை இழையையோ காட்சியையோ கொண்டிருக்கவில்லை. திரைப்படம் அல்லது சலனப்படம் என்கிற ஊடகத்தின் பரிமாணங்களையும் ஆழத்தையும் நன்கு விளங்கி அதனைத் தமது படைப்பிலும் அழகாகவும் ஆழமாகவும் பிரசன்ன அவர்கள் கொண்டு வந்திருக்கிறார். நெறியாளனின் சிந்தனை ஒட்டமும் படத்தொகுப்பாளரின் சிந்தனை ஓட்டமும் தெளிவானதாகவும் ஒருங்கிணைந்ததாகவும் இருக்கும் போதுதான் இது சாத்தியம். பெருமளவுக்குப் படம் முழுவதும் ஆரம்பத்தில் சிறு நாட்டார் பாடலும், பின் இயற்கையான ஒலிகளும் மௌனமும் பின்னணி இசையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
படத்தின் இறுதியில்தான் செயற்கையான பின்னணி இசை பாவிக்கப்பட்டிருப்பதை உணர முடியும். சலனப்படத்தின் மொழி என்பதே காட்சிதான். காட்சியை வலுப்படுத்துபவை நடிப்பு, ஒளி, உடை, ஒப்பனை காட்சிக்களம், பின்னணிக் காட்சியமைப்பு மற்றும் பின்னணி இசை போன்றவையே. பேச்சு மொழியின் தேவை சலனப்படத்திற்கு மிகக் குறைவே. உள்ளே விளக்கொளியிலும் வெளியே இயற்கை ஒளியிலும் படமாக்கப்பட்ட துல்லியமான காட்சிகளின் தொகுப்பாக அமைந்த இப்படம் மிகக்குறைந்த உரையாடல்களுடன் எங்களுக்கு எல்லாவற்றையும் உணர்த்திவிடுகிறது.
சிங்கள பௌத்த அடையாளம், காலனித்துவ ஆக்கிரமிப்பு, பெண் ஒடுக்கு முறை, சாதிய ஒடுக்கு முறை ஆகிய நான்கு அம்சங்களும் கருத்தியல் முரண்கள் இன்றி, திரையில் அழகியலாக இழையோடுகின்றன. ஆயினும், படத்தின் முற்பகுதி மெதுவாக நகர்வது இத்தகைய படங்களைப் பார்த்துப் பழகியிராத பார்வையாளர்களுக்கு அயர்ச்சியை உருவாக்கலாம்.
‘சமூகநோக்கு’ தளத்துக்காக தேவ அபிரா எழுதிய கட்டுரையை நன்றியுணர்வுடன் இங்கு பகிர்கிறோம்.