படம் | Khabarsouthasia

யுத்தத்தினால் பெற்றோர்களை இழந்த மற்றும் குடும்பப் பிணக்குகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பராமரிப்போர் தொடர்பான உண்மை நிலையை முறைப்படி அறிந்துகொள்ளாது அவர்களின் ஒப்புதலுடன் பணத்தைப் பெற்றுக்கொண்டு பிள்ளைகளை சிறுவர் இல்லங்களில் தங்க வைப்பதாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.

பதியப்படாமல் இயங்கி வரும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள சிறுமிகள் தொடர்பிலும் அவர்களைக் கொண்டு வந்து இணைந்து விடுவோர் தொடர்பிலும் நிர்வாகத்தினர் தகுந்த ஆதாரங்களைக் கேட்டு ஆராயாமல் இணைத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இவ்வாறானதொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வவுனியா அருகில் இயங்கி வரும் மடத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமிகளும், குடும்பப் பிணக்குகளாலும் மற்றும் பெற்றோருக்குத் தெரியாமலும் ஆள் மாறாட்டங்களுடனும் இணைக்கப்பட்ட சிறுமிகளும் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இக்கன்னியர் மடத்தில் 12 வயது சிறுமி ஒருவர் அவரின் தந்தைக்குத் தெரியாமல் தாயினாலும் அவருடன் குடும்பம் நடத்தி வருபவராலும் சிறுமியின் பெற்றோர்கள் தாங்கள்தான் எனக் கூறி இணைக்கப்பட்டுள்ளார். தாயின் உறவு முறையான அருட்சகோதரியின் உதவியுடனேயே அப்பிள்ளை சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிறுமிகளை இணைக்கும்போது நிர்வாகிகள் பெற்றோரின் உறுதிப்படுத்தல் ஆவணங்களை உரிய முறையில் பரிசீலிக்கத் தவறுகின்றனர். அச்சிறுமியின் தாயுடன் குடும்பம் நடத்துபவர் தானே சிறுமியின் தந்தை என நிர்வாகிகளை ஏமாற்றியுள்ளார். சிறுமியின் தந்தையின் பெயரையே அவர் இங்கு பயன்படுத்தி வந்துள்ளார்.

இதேவேளை, தனது பிள்ளை வவுனியா அருகில் இருப்பதை அறிந்த தந்தை குறித்த கன்னியர் மடத்திற்குச் சென்று பிள்ளையைப் பார்த்துள்ளார். அப்போது அவருக்கு தன்னுடைய பிள்ளை ஏன் இணைக்கப்பட்டுள்ளது என்ற உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் தனது தாயாருடனும் சகோதரியுடனும் சென்று சிறுமிகளுக்குப் பொறுப்பானவரைச் சந்தித்து உண்மை நிலவரத்தைக் கூறியுள்ளார். தனது அடையாள அட்டை முதலான தனது அடையாள ஆவணங்களை அவர்களுக்குக் காட்டி உள்ளார். இதன்போது அவர் பிள்ளைக்கு தாயுடன் இருப்பவரால் ஏற்படப்போகும் ஆபத்தைச் சுட்டிக்காட்டி விடுமுறை நாட்களில் பிள்ளையை அவர்களுடன் அனுப்பி வைக்கவேண்டாம் எனவும் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அதனை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். தங்களிடம் பிள்ளையை ஒப்படைத்தவர்களிடமே பிள்ளையை ஒப்படைப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.

ஆதரவற்ற பிள்ளைகளையும் பல்வேறு பிரச்சினைகளுக்குள் அகப்பட்டுள்ள பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கொடுத்து பிள்ளைகளின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள வேண்டும். தங்களிடம் இணைக்கப்படும் பிள்ளைகள் தொடர்பிலும் அவர்களை இணைத்து விடுவோர் தொடர்பிலும் இவர்கள் சரியான தகவல்களை ஆவணங்கள் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இவை தொடர்பில் அக்கறை காட்டுவதில்லை எனத் தெரிகிறது. பெண் பிள்ளைகளை கொண்டு வந்து இணைப்பவர்கள் உண்மையில் அவர்களின் பெற்றோர்களா என இவர்கள் அறிய முற்படுவதில்லை.

இன்றைய காலகட்டத்தில் யுத்தத்தினால் பெற்றோர்களை இழந்த வயது குறைந்த பல சிறுமிகள் யாருடன் இருக்கிறார்கள் என்பதை சரியாக அறிந்து கொள்ள முடிவதில்லை. பதிவுசெய்யப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சிறுமிகளை இணைப்பதானால் தகுந்த ஆதாரங்களைக் காட்டவேண்டும். உறவுமுறை ஆதாரங்களைக் காட்டவேண்டும். சில பதிவுசெய்யப்படாத பாரமரிப்பு நிலையங்களும் அதன் நிர்வாகிகளும் பிள்ளைகளை இணைப்போர் தொடர்பான ஆவணங்களை ஆராயாமல் இணைத்துக் கொள்கின்றனர். இவ்வாறான பிள்ளைகளினதும் அவர்களை இணைத்து விடுவோர் தொடர்பிலும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவையினர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேற்படி சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் முறைப்படி ஆராயாமலும் உண்மையைக் கண்டறியாமலும் அச்சிறுமியின் தந்தையின் கோரிக்கைக்கு மாறாக சிறுமியை மூன்றாம் தரப்பானவரும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருமான ஒருவருடனும் அவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் அச்சிறுமியின் தாயிடமும் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுவதால் சிறுமிக்கு ஆபத்து உள்ளது, அதனைத் தடுக்குமாறு சிறுமியின் தந்தை வவுனியா நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்திடம் முறையிட்டபோதும் அவர்கள், மேற்படி பராமரிப்பு நிலையம் பதிவுசெய்யப்படாத ஒன்று. அதனால் தங்களால் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ள முடியாது என கைவிரித்துள்ளனர். யுத்தத்தினால் பெற்றோரை இழந்த சிறுவர்கள் பலர் பல தரப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகின்றனர். இவர்களில் பலர் சிறுமிகளுடன் உறவுமுறையில் தொடர்பில்லாதவர்களாக இருக்கக்கூடும். அவர்களின் பராமரிப்பாளர்கள் தொடர்பாக சிறுமிகளிடம் கேட்டறிந்து கொள்ள முற்படுவதுமில்லை. எனவே, பதியப்படாத இவ்வாறான இல்லங்கள் தொடர்பாக நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினர் அக்கறை காட்ட வேண்டும். யுத்தத்தினால் பெற்றோரை இழந்த சிறுமிகள் எந்தகையோரின் பிடியில் உள்ளனர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

மனிதநேயன்