பட மூலம், Aluth Piyapath
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் என்ற வியடமானது தற்போது பெற்றவர்கள் இல்லாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தக் கோஷத்தை வளர்த்தெடுத்த பல தாய்மாறும் தந்தையர்களும் இருந்தனர். முதலில் இந்த விடயம் தொடர்பில் நாட்டுக்கு கூறியவர் கலாநிதி என்.எம்.பெரேரா. அன்று அவருக்கு தொலைதூரப் பார்வை இருந்தது. அதனைத் தொடர்ந்து மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் வேண்டுகோளின் அடிப்படையில் சந்திரிக்கா பண்டாரநாயக்க இந்தக் கோஷத்தை தமது கரம் ஏந்தினார். அதற்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அந்தப் பணியை எடுத்துக் கொண்டார். ஆயினும், அது எப்போதும் மேடைகளை அலங்கரிக்கின்ற கோஷமாகவே வரையறுக்கப்பட்டிருந்தது. இறுதியாக வணக்கத்துக்குரிய மாதுளுவாவே சோபித்த தேரர் அதனை தனியானதொரு கோஷமாக மக்கள் மத்தியில் கொண்டு சென்று, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.
இன்று அவ் இருவரும் ஒளிந்து பிடித்து விளையாடிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரினதும் நூல் சூத்திரம் வெற்றி அடைந்து ஏதேனும் வழியில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்ந்து நாட்டில் இருக்குமாயின், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அப்பதவிக்கு எவ்வகையிலும் பொருத்தமற்றவர்களாக நாம் கருத வேண்டியவர்கள் அவர்கள் இருவருமேயாவர். ஏனெனில், அதனை ஒழிப்பதற்கான அனைத்து வகையிலுமான வாய்ப்புக்கள் கூடியோ குறைந்தோ தம்வசம் இருக்கின்ற போதும் அதனை ஒழிக்காதிருக்கும் பாவத்திற்கு அவர்கள் இருவரும் தற்சமயமும் ஆளாகியிருக்கிறார்கள்.
சிறிசேனவை ஒருபுறம் ஒதுக்கி விடுங்கள். அவர் தற்போது அவ் ஆசனத்தில் அமர்ந்திருக்கின்ற நபர் என்ற வகையில், இதற்கு முன்னர் இதில் அமர்ந்த அனைத்து நபருக்கும் ஏற்பட்ட நோயானது இவரையும் பாதித்துள்ளதென்றே கொள்வோம். ஆனாலும், ரணில் விக்கிரமசிங்க இந்த ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்தான் என்ன? நாட்டின் பிரதமர் என்ற வகையில் அவரது கட்சியின் அரசியல் தலைமைத்துவமானது இதனை ஒழிப்பதற்காக அவசியமானதொன்றென்பது மிகவும் தெளிவான விடயமே. அவ்வாறு செய்யாது, உரிய அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்வொன்றினை பெறவேண்டுமென்ற சூத்திரத்தை அவர் பெரும்பாலும் தற்போது கையாளுகின்ற நிலைமையினை காணக்கூடியதாக உள்ளது. பார்த்த மாத்திரத்திரல் அங்கு ஜனநாயக மாயையே காணப்படுகின்றது. ஆயினும், அது பிரச்சினைகளிலிருந்து நலுவிச் செல்கின்ற கூட்டுமுயற்சியாகவே தற்போது வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடப்பட வேண்டுமென்பது உண்மைதான். ஆயினும், கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்கு முன்னர் தமக்கென ஒரு கருத்து இருத்தல் வேண்டும். “ஆம், நான் ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு இணங்குகிறேன்” என்று கூறுவதோ “எனது கட்சி ஜனாதிபதி முறைமையை ஒழப்பதற்கு இணக்கம்” என்று கூறுவதோ அதற்கு எந்த விதத்திலும் போதுமானதல்ல. அவ்வாறான வாய்மூல உறுதியை வழங்குவதனூடாக திருப்தி அடைய முடிவது அரச அதிகாரத்திற்கு வெளியில் இருக்கும் தரப்பினரால் மாத்திரமே. அரச அதிகாரத்தினைக் கையாளுகின்ற தரப்பினர் என்ற வகையில், அந்தக் கருத்திற்காக செயன்முறை ரீதியாக ஒத்துழைப்பு நல்குவது அவசியமானதாகின்றது. அதற்கான அடிப்படை உறுதிப்பாட்டினை தமக்குள் ஏற்படுத்திக் கொண்ட பிறகே வேறு தரப்பினருடன் அதனைப் பற்றி கலந்துரையாட வேண்டும். அவ்வாறு இல்லாத சூழ்நிலையிலேயே வேறு எந்தவொரு தரப்பினரும் கொண்டுவரும் அதற்கு புறம்பான எந்தவொரு யோசனைக்கும் முதற் சுற்றிலேயே பெறுமதி இழந்து “ஜனநாயகத்தின் பெயரால்” இந்த வேண்டுகோள் அகற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும்.
ஜனாதிபதி முறைமையை அகற்றும் பணியிலிருந்து நழுவிச் செல்லும் ஒரு கபடகரமான அரசியலையே தற்போது பிரதமர் சார்பான விடயத்திலிருந்து உணர முடிகின்றது. “அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வருதல்” எனும் லிச்சாவி மரபுரிமைக்கு (அமைதியாக ஒன்று கூடி, அமைதியாக கலைந்து செல்லும், யாவரது கருத்துக்கும் மதிப்பளிக்கும் ஓர் மரபு) மிகவும் ஒத்ததானதாக அமையும். அதாவது தற்போது நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்படுகின்றதும், ஒரு வகையில் அரசியலமைப்பு செயற்பாடு என்ற வகையில் கலந்துரையாடப்படுகின்றதுமான அதிகாரப் பரவலாக்கத்துடனான விரிவான அரசியலமைப்பு சீர்திருத்த செயற்பாட்டுக்கு தாம் சார்பாக இருப்பதாக காண்பித்துக் கொள்வதான ஒரு செயற்பாடாகும். அங்கும் கூட, அதற்காக உண்மையான மனப்பாங்குடன் தமது அர்ப்பணிப்பை ரணில் விக்கிரமசிங்க செய்வதாக காண்பதற்கு இல்லை. நாடாளுமன்ற செயற்பாடுகளுக்குள் அதற்கு அவசியமான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மேலதிகமாக அது தொடர்பில் அவர் ஏதேனும் செய்திருந்தால் அது மிக மிக சிறிய அளவில் தான். விசேடமாக இவ்வளவு காலம் இழுத்தடிப்பு செய்ததன் காரணமாக ஏற்பட்டிருக்கும் விபரீதமானது மிகப் பெரியது. பல்வேறு தரப்பினரது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறல், செயற்குழுக்கள் மற்றும் உப குழுக்களை அமைத்தல், நிபுணத்துவ அறிக்கைகளைப் பெறல், அவை தொடர்பான விவாதங்களை நடாத்துதல் ஆகியன மாத்திரம் இவ்வளவு காலம் எடுத்ததற்கு ஏதுவாகின எனக் கூறுவது ஏற்றுக் கொள்வதற்கு போதுமான காரணிகளல்ல.
எவ்வாறாயினும் ஜனநாயகம் என்ற விடயம் நாடாளுமன்றத்திற்குள் மாத்திரம் அடைந்து கொள்ளும் ஒரு கொடுக்கல் வாங்கல் அல்ல. அவ்வாறான அதிகாரப் பரவரலாக்கல் பற்றிய விரிவானதொரு அரசியலமைப்பு சீர்திருத்த செயற்பாட்டினை சமூகமயப்படுத்தும் முயற்சியினை ரணில் விக்கிரமசிங்கவோ, அவரது கட்சியோ இதுவரையில் நாட்டுக்குள் கொண்டு செல்லவில்லை. இன்னுமொரு வகையில் கூறுவதாயின் அடிமட்டத்திற்கு கொண்டு செல்லவில்லை என்பதாகும். நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்து நாட்டுக்குள் சென்ற பல சந்தர்ப்பங்களிலும் அவர் கூறியுள்ள விடயமானது, ‘பௌத்த சாசனம் எனப்படும் விடயத்திற்கு புறம்பாக தாம் எதனையும் செய்வதில்லை’ என்பதாகும். பௌத்த சாசனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் மூன்று நிகாயக்களைச் சார்ந்த தலைமைத்துவ குருமார்கள் குறிப்பிட்ட அரசியலமைப்பு சீர்திருத்த யோசனைக்கு தாம் இணக்கம் இல்லை என்பதனை தமது போதனைகளில் தெரிவித்துள்ளனர். அதன்படி, ரணில் விக்கிரமசிங்கவினது கருத்திற்கமைவாக, அந்தப் பணி தொடர்பான இறுதிச் சந்தர்ப்பத்தில் அவரும் ஒத்துழைப்பு நல்கமாட்டார் என்ற விதத்தில் நாம் சிந்திக்கலாம். கடந்த வாரம் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் இங்கு கூறப்படுகின்ற அரசியலமைப்பு சீர்திருத்த செயற்பாட்டினை வெற்றியடைய வைப்பதற்கான வாய்ப்பு நாடாளுமன்றத்திற்குள் இல்லையெனவும், அதனை நிறைவேற்ற முடிவது அடுத்ததாக நியமிக்கப்படுகின்ற நாடாளுமன்றத்தில் தான் எனவும் அவர் கூறியதாக செய்திகள் வந்தன.
‘அரசியல் ரீதியான துல்லியப்பாடு’ எனக் கருதப்படுகின்ற ஒரு விடயம் உள்ளது. முற்போக்கான வியடம் என ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட காரணி தொடர்பில் பாதிப்பினை ஏற்படுத்தும் எந்தவொரு கருத்தையும் தெரிவிப்பதிலிருந்தும் செயற்படுத்துவதிலிருந்தும் தவிர்த்து நடத்தல் என்ற நிலைமை ஏற்படும். உதாரணமாக, முதலாளித்துவ வர்க்கத்தினரை விடவும் தொழிலாள வர்க்கத்தினரே இனவாதிகளாக இருக்கலாம் எனக் கூறுதல், ‘அரசியல் துல்லியப்பாடு’ மீறப்படுகின்ற ஒரு விடயமாக முற்போக்கு களத்தில் கருதப்படலாம். இன்னுமொரு உதாரணத்தைப் பார்த்தால், பெண்களது விடுதலையை இல்லாது செய்வது ஆண்களே என்பது பாதி உண்மை எனவும், உண்மையாகவே பெண்களது விடுதலையை அழிப்பதில் பெரும்பங்கு காணப்படுவது பெண்களிடமே என்றும் கூறுவது, ‘அரசியல் ரீதியான துல்லியப்பாட்டுக்கு’ புறம்பான வியடமாகவே கருதப்படுகின்றது. எனவே, உள்ளார்ந்த ரீதியாக ‘முற்போக்கான’ தன்மையைக் காண்பிக்க விரும்பும் பல தரப்பினரும் இவ்வாறான விடயங்களை விளையாட்டாகக் கூட சொல்வதிலிருந்து தவிர்த்துக் கொள்வர். மிகச் சரளமாக கூறுவதாயின், “ஹா ஹா, அவ்வாறு கூறுவது நல்லதல்ல” என்பதாகும்.
தேசிய பிரச்சினைக்கு அரசியல் ரீதியலான தீர்வு வழங்கப்படுவது தொடர்பான பிரச்சினையிலும், இங்கு கூறப்படுகின்ற ‘அரசியல் ரீதியான துல்லியப்பாடு’ பற்றி முற்போக்குவாதிகள் எச்சரிக்கையாகவே உள்ளனர். அதன்போது, அரசியல் தீர்விற்காக அரசியலமைப்பு சீர்திருத்த பக்கேஜ் என்ற விடயத்தை இந்தச் சந்தர்ப்பத்தில் வெற்றி கொள்வதற்கு வாய்ப்பு இல்லையென கூறுவது, அங்கு கூறப்படுகின்ற ‘அரசியல் ரீதியிலான துல்லியப்பாடு’ மீறப்படுகின்றதொன்றாகவே கருதப்படும். பல்வேறு இனங்கள் வாழ்கின்ற, பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற மக்கள் வாழ்கின்ற, ஒரு நாட்டில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான முறைமையொன்றினை உருவாக்குவது மிகவும் அவசியமானது என்ற வியடத்தினை புதிதாக கூற வேண்டியதில்லை. அதற்குரியதாக அரசியலமைப்பு சீர்திருத்த மாற்றமானது மனிதாபிமான அடிப்படையில் மேற்கொண்டாலும், ஜனநாயக ரீதியான விடயமாக கருதி எடுத்தாலும், நாட்டின் ஒற்றையாட்சி/ ஐக்கிய என்ற பண்பில் எடுத்தாலும், அது முற்போக்கான ஒரு மாற்றமே. ஆயினும், 364 நாட்களும் அதற்கான கீழ்மட்;ட நிபந்தனைகளை உருவாக்காத ஆட்சியாளர்கள், 365ஆவது நாளில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான அரசியலமைப்பு சீர்திருத்த யோசனை தொடர்பில் நாடாளுமன்றத்தில் குலலெழுப்புவது என்பதனைக் காட்டிக் கொள்வதனை முற்போக்கு செயற்பாடாக கருதுவதற்கு, மேலே கூறப்பட்ட ‘அரசியல் ரீதியான துல்லியப்பாடு’ என்ற தடையை நாம் தடங்களாக கருதக்கூடாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கோருவது, அதிகாரங்களைப் பகிர்ந்து, விரிவானதொரு அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான பக்கேஜ் ஒன்றினையே. அதற்குக் குறைவான, ‘நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு’ என்ற கோஷத்திற்கு ஒத்துழைக்க முடியாது. விசேடமாக வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் மற்றும் சிவாஜிலிங்கம் போன்ற தேசியவாதிகளால் தமிழ் மக்களை மென்மேலும் தேசியவாத சிந்தனையினுள் இழுத்தெடுக்கின்ற நிலைமைக்குள், அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற விரிவான அரசியலமைப்பு சீர்திருத்த வேண்டுகோளை புறந்தள்ளிவிட்டு ‘ஜனாதிபதி முறையை ஒழிக்கின்ற’ தெற்கின் கோஷத்திற்கு வரையறையாதல், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஓர் அரசியல் இயக்கமாக மேற்கொள்வது கடினமே. மறுபுறம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களது அன்றாட பிரச்சினைகளுக்கு (காணிப் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினை, யுத்தக் குற்றங்கள் தொடர்பான பிரச்சினை ஆகியன) அவசியமான வகையில் மத்தியஸ்தம் செய்யாத தெற்கின் அரசியலுக்காக சார்பாக செயற்படுவதென்பது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தேர்தல் என்ற கருத்தியலுடன் பார்க்கும் போது அது அபாயகரமானதொரு நிலைமையே ஆகும்.
தற்போது உருவாகும் நிலைமையானது ரணில் விக்கிரமசிங்கவிற்கு பொருத்தமானதொன்றே. தமிழ் மக்களது வேண்டுகோள்கள் ஒருபுறம் உள்ளது. தெற்கில் மகாசங்கத்தினர் உட்பட சிங்களவர்களது எதிர்ப்பு மறுபுறம் உள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் நாம் முகம் கொடுத்த முழுமையான தடைகள் அதே நிலையில் மீண்டும் களத்தில் காணப்படுகின்றது. ஆயினும், இன்று அது அன்றைய தினத்தை விடவும் மாறுபட்ட புதியதொரு காரணியுடன் இணைந்ததாக உள்ளது. அதாவது, இந்த முழுமையான தடைக்கு மத்தியில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் என்ற விடயத்தினை பணயக்கைதியாக பயன்படுத்த முடியுமானதாக இருப்பதேயாகும். அவ்வாறு செய்வது தமிழ் தேசிய கூட்டமைப்பல்ல, மாறாக ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சியினாலேயே அது மேற்கொள்ளப்படுவதே அதன் விசேடமாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, இற்றைக்கு பல தசாப்தங்களுக்கு முன்னதாக காணப்பட்ட பிரதான அரசியல் நீரோட்டத்திலும் வேறு தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்து வேறுபட்டு, தெற்கின் பிரச்சினைகள் தொடர்பில் கூறுணர்வுடன் செயற்படுவதனைக் காண்பித்துள்ளது. அவர்கள் ஒற்றையாட்சி எண்ணக்கருவிற்கும் பௌத்த மத முன்னுரிமைக்கும் எதிர்ப்பு தெரிவிக்காதிருப்பதன் காரணமும் அதுவே. அதே வகையில், ஜனாதிபதி முறைமை ஒழிப்பிற்கான வேண்டுகோளானது தமது விரிவான அரசியலமைப்பு சீர்திருத்த வேண்டுகோளை காரணம் காட்டி அகற்றப்படும் நிலைமை ஏற்படுமாயின் அதனூடாக தமது விரிவான அரசியலமைப்பு சீர்திருத்த வேண்டுகோளுக்கு துளியேனும் நன்மை பயக்காத நிலைமை ஏற்படின், இங்கு கூறப்படுகின்ற ஜனாதிபதி முறைமை ஒழிப்பு விடயம் தொடர்பில் செயன்முறை வாய்ந்த விதமாக சிந்தித்துப் பார்ப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்நிற்கப் போவதில்லை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. விசேடமாக, தம் மீது பழிசுமத்தி தெற்கில் அரசியல்வாதிகள் ஜனாதிபதி முறைமை ஒழிப்பு என்ற உறுதிமொழியை குப்பை கூடைக்குள் எறிவதற்கு தயாராகுவார்களெனில் அவர்கள் இதனை தீவிரமான வியடமாக கருதுவார்கள் என்பதிலும் எவ்வித ஐயப்பாடுமில்லை.
தற்போது நாடாளுமன்றத்தில் கலந்துரையாப்படுகின்ற விரிவான அரசிலமைப்பு கருத்திட்டம் மேலும் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னோக்கி எடுத்துச் செல்லப்படும் எனக் கருதுவோம். பிறகு ஜனாதிபதித் தேர்தலுக்கு மிஞ்சுவது சில மாதங்கள் மட்டுமே. ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் அங்கு காணப்படாது. எனவே, அந்த தேர்தலில் ‘பொது வேட்பாளராக’ ரணில் விக்கிரமசிங்க களத்தில் குதிப்பார். அவரால், ஜனாதிபதி முறைமை அடுத்த நாடாளுமன்றத்தினூடாக ஒழிக்கப்படுமென மீண்டுமொரு தடவை ஏற்றுக் கொள்ளும் வகையில் நமக்கு அழுத்தம் வழங்கப்படும்.
ஐந்து ஆரஞ்சு காய்களை ஒரே நேரத்தில் கையிலெடுக்க முயற்சி செய்து பாருங்கள். ஒரு ஆரஞ்சு கூட உங்களிடம் தங்காது. யாரேனும் ஒருவர் தீவிர மனப்பாங்குடன் அதனை செய்வாராயின் அதன் பொருளாவது, பிடிக்கக் கூடிய ஆரஞ்சையும் கூட தவற விடுவதற்கான தேவைப்பாடு தமக்கு உள்ளது என்பதாகும். மிகச் சரளமான அரசியலமைப்பு திருத்தங்களூடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்ற போதும், ரணில் விக்கிரமசிங்க அதற்கும் மேலதிகமான ஒரு வேலைத்திட்டத்திற்காக போலியாக நடிக்கிறார் என்பதனை நாம் அவ்விதத்தில்தான் புரிந்து கொள்ளுதல் வேண்டும். இறுதியாக விரிவான அரசியலமைப்பு சீர்திருத்த பக்கேஜ் தமிழ் மக்களுக்கு கிடைப்பதும் இல்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுவதற்கான செயற்பாடுகள் இடம்பெறுவதுமில்லை.
ஜனாதிபதி முறைமை ஒழிப்பு என்ற விடயமானது வடக்கை காட்டி புறந்தள்ளப்படுகின்ற நிலைமைக்கு மேலதிகமாக, தெற்கின் பிரதான எதிர்கட்சியான ‘மொட்டு’ மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சியும் அதற்கு எதிர்ப்பு என்ற விடயத்தினையும் இவர்கள் குறிப்பிட்ட காலப்பகுதியிலிருந்து சுட்டிக் காட்டி வருகின்ற ஒரு விடயமாகும். தற்போதைய ‘மொட்டு’ கட்சியின் தலைவர் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையினூடாக, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பிற்கு தமது எவ்வித எதிர்ப்பும் இல்லை என மிகத் தெளிவாக சுட்டிக் காட்டியிருந்தார். அப்படியெனில், ரணில் விக்கிரமசிங்கவிற்கு இனிமேலும் அவசியமாக இருப்பது என்ன?
காமினி வியன்கொட எழுதி ‘அனித்தா’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.