பட மூலம், கட்டுரையாளர்
“நாங்கள் எங்கள் நிலத்திலுள்ள சொந்த வீடு தோட்டத்தில் சமைப்பதற்கும் உண்பதற்கும் உறங்குவதற்கும் விரும்புகின்றோம்.”
இராணுவ முகாமொன்றிற்கு வெளியே 700 நாட்கள் பகலும் இரவும் போராட்டம் என்பது மிக நீண்ட காலம். எனினும், இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவில் உள்ள கேப்பாபிலவு மக்கள் 2017 மார்ச் முதலாம் திகதி முதல் அதனையே செய்து வருகின்றனர். அவர்கள் இராணுவத்திடமிருந்தும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்தும் வரும் அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதற்கு துணிச்சலுடன் இருக்கவேண்டி நிலை ஏற்பட்டது. மேலும், அவர்கள் வெயில், மழை, பனி, புழுதி போன்றவற்றையும் எதிர்த்துப்போராடவேண்டியிருந்தது. அவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தைத் தொடர்வதற்கும், பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கும் முதியவர்களைப் பராமரிப்பதற்கும் பெரும் நெருக்கடியை சவாலை சந்திக்கவேண்டியிருந்தது.
இலங்கையில் நிலத்திற்காக மக்கள் மேற்கொண்ட இரவும் பகலும் தொடர்ந்த மிக நீண்ட இடைவிடாத போராட்டம் இதுவெனலாம். அவர்கள் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் போராடியுள்ளனர். இது தவிரவும் அரசியல்வாதிகள், உள்ளூர் தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், ஊடகங்கள், மதப்பிரதிநிதிகள், சர்வதேச சமூக பிரதிநிதிகள் உட்பட பலருடன் சந்திப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
அவர்களது உறுதியான போராட்டம் மேலும் பல போராட்டங்களிற்கான உத்வேகத்தை வழங்கியது. டிசம்பர் 2017 இல் இராணுவம் கேப்பாபிலவில் சில நிலங்களை விடுவித்தவேளை அவர்கள் சில வெற்றிகளையும் அனுபவித்தனர். எனினும் தங்கள் நிலங்கள் முழுவதையும் விடுவிக்ககோரும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது.
கடந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள நிலங்களை 2018 டிசம்பர் 31ஆம் திகதிக்குள் பொதுமக்களிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதியளித்தார். இந்த வாக்குறுதி மீறப்பட்டவேளை கேப்பாபிலவு மக்கள் இராணுவ முகாம் வாசலிற்குச் சென்று தங்களுடைய நிலங்களைக் கோரினார்கள். இராணுவத்தினர் அவர்களுடன் பேச மறுத்தனர். இதன் பின்னர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் உதவி அரசாங்க அதிபர் 2019 ஜனவரி 25ஆம் திகதிக்குள் நிலங்கள் விடுவிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இதன் பின்னர் புதிதாக நியமிக்கப்பட்ட வட மாகாண ஆளுநரின் பணியாளர் ஒருவர் கேப்பாபிலவு மக்களைச் சந்தித்துள்ளார். அதன் பின்னர் ஜனவரி 20ஆம் திகதி ஆளுநரும் அவர்களைச் சந்தித்துள்ளார். இருவரும் மேலதிக கால அவகாசத்தை கோரியுள்ளனர். எனினும், கடந்த காலங்களில் இதுபோன்ற நேரத்தை வீணடிக்கும் தந்திரோபாயங்களை சந்தித்த அனுபவமுள்ள கேப்பாபிலவு மக்கள் ஜனவரி 25ஆம் திகதியே இறுதி நாள், அன்று அனைத்து நிலத்தையும் ஒப்படைக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
ஒரு பெண்மணி ஆளுநரிடம், நிலங்கள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்யப்போகின்றாரா அல்லது இராணுவத்தினரின் துப்பாக்கி தனக்கு எதிராகவும் ஏனையவர்களிற்கு எதிராகவும் திரும்புவதை பார்க்கப்போகின்றாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
25ஆம் திகதி நிலங்களை எங்களிடம் ஒப்படைக்காவிட்டால் நாங்கள் அவற்றை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என கேப்பாபிலவு மக்கள் என்னிடம் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக இராணுவம், ஆளுநர், வட மாகாண அதிகாரிகள் உட்பட பல தரப்பினருடனும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் அவர்கள் இதனையே தெரிவித்துள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நிலம் புதுக்குடியிருப்பிற்கும் வற்றாப்பளைக்கும் இடையில் உள்ள முக்கிய வீதியில் நந்திக்கடலின் பக்கமாக அமைந்துள்ளது. கேப்பாபிலவு மிகவும் வளமான விளைச்சல் நிலங்களை கொண்டிருப்பதுடன், ஏரி பெருமளவு கடல்வளங்களைக் கொண்டுள்ளது. நாங்கள் வீட்டில் காலையாட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாலும் எங்களிற்கு உண்பதற்கான போதிய உணவு கிடைக்கும் என ஒருவர் என்னிடம் தெரிவித்தார். வீடுகளிற்கு அப்பால் பாடசாலைகள், கிராம அபிவிருத்தி சங்க கட்டடம், தேவாலயம், மயானம் உட்பட உணர்வுடன் பின்னிப்பிணைந்த இடங்களும் படையினரின் பிடியிலுள்ளன.விவசாயம் மீன்பிடி மற்றும் செழிப்புமிக்க கலாச்சார மத நடவடிக்கைகளுடன் பின்னிப்பிணைந்த கிராம வாழ்க்கை முதலில் யுத்தத்தினாலும் பின்னர் இராணுவத்தினாலும் அழிக்கப்பட்டுள்ளது.
துணிச்சலுடன் கருத்துக்களை தெரிவிக்கக்கூடிய சமூகத்தலைவியான இந்திரானி, தனது வீடு, தோட்டம் அமைந்திருந்த பகுதியிலேயே தற்போது படையினரின் தலைமையகமே உள்ளது என தெரிவித்தார். அவரது வீட்டின் வேப்பமரம் தறிக்கப்பட்டுள்ளதை அவர் பார்த்துள்ளார். தான் எப்படி துணிச்சலுடன் முகாம் நோக்கி சென்று ஏன் மரத்தை வெட்டினார்கள் என இராணுவத்தினரிடம் கேள்வி எழுப்பியதை அவர் நினைவுகூர்ந்தார். சிரேஸ்ட அதிகாரியொருவர் அதற்காக அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அதன் பின்னர் தான் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க வெட்டப்பட்ட மரத்தின் பாகங்களை அவர் தனது உறவினரின் வீட்டிற்கு அனுப்பிவைத்தார் எனத் தெரிவித்த இந்திராணி வெட்டப்பட்ட மரத்தின் பாகங்களைக் காண்பித்தார்.
எனது தோட்டத்திலிருந்து எதனையாவது எடுக்கவேண்டுமென்றால் முதலில் என்னைக் கேளுங்கள் என இராணுவத்தினரிடம் தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டார்.
நாங்கள் கஸ்டப்பட்டு உழைக்கின்றோம், மீன்பிடிக்கின்றோம், தோட்டம் செய்கின்றோம். ஆனால், அரசாங்க சம்பளத்தைப் பெறும் இராணுவம் எங்கள் தோட்டத்தில் உள்ள மரங்களில் இருந்து பழங்களை சாப்பிடுகின்றது, எங்கள் வீடுகளில் வாழ்கின்றது, எங்கள் சமூக கட்டடங்களைப் பயன்படுத்துகின்றது என கேப்பாபிலவைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவர் தெரிவித்தார். ஏன் அவர்களால் எங்கள் தோட்டத்தின் கனிகளை நாங்கள் உண்பதற்கு அனுமதிக்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட அவரது வீட்டையும் ஏனையவர்களினது வீடுகளையும் நிலங்களையும் வீதியிலிருந்து பார்க்க முடிகின்றது. அதன் பின்னால் நந்திக்கடலின் அழகிய தோற்றம் தென்படுகின்றது. அவர்கள் தெரிவிப்பதை செவிமடுக்கும் போது மனதில் வேதனையும் சீற்றமும் ஏற்படுகின்றது
அந்தப் பகுதியில் பெருமளவு நிலமிருக்கும்போது ஏன் இராணுவம் எங்கள் வீடுகளில் நிலங்களில் இருக்கின்றது?
நாங்கள் சிங்களவர்களுடன் அமைதியாக வாழ விரும்புகின்றோம், எங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பதன் மூலம் இராணுவம் ஏன் இதற்குத் தடை போடுகின்றது? அவர்கள் பிரபாகரன் மீண்டும் வரவேண்டும் என விரும்புகின்றனரா? என்ற இன்னொரு கேள்வியும் அவர்களிடமிருந்து எழும்பியது.
பல வருடங்களிற்கு முன்னர் எனது விஜயத்தின் போது இதேபோன்ற உணர்வுகள் வெளிப்பட்டதை நான் நினைவுபடுத்திப்பார்த்தேன். “ஒவ்வொரு வருடமும் எங்கள் நிலம் மாறிக்கொண்டிருக்கின்றது, சில வீடுகள் அழிக்கபட்டுவிட்டன, கிணறுகள் மூடப்பட்டுவிட்டன, புதிய கட்டடங்கள் வந்துள்ளன, புதிய எல்லைகோடுகளை வரைந்துள்ளனர். அதேவேளை, நாங்கள் நட்ட வாழை பலா மரங்கள் பழம் கொடுக்க ஆரம்பித்துவிட்டன.”
“நான் எனது வீட்டிற்குள் நுழையும் போது எனது தந்தையினதும் தாயினதும் அன்பை உணர்கின்றேன்.”
எனக்கு இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிலரை அவர்கள் மெனிக்பார்ம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தக காலத்திலிருந்து, கடந்த பத்து வருடங்களிற்கு மேல் தெரியும். அவ்வேளையும் அவர்கள் தங்கள் நிலத்தின் வளம், அழகு குறித்து பேசினார்கள். மீண்டும் தங்கள் நிலத்திற்கு திரும்புவதற்கு ஏங்கினார்கள். அவர்கள் அருகிலுள்ள காட்டில் மாற்று நிலங்களை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டவேளை கூட நான் அவர்களை சந்தித்துள்ளேன். அவ்வேளை கூட அவர்கள் தங்கள் நிலங்களிற்கு மீள திரும்புவதற்கான உரிமையை வலியுறுத்தினார்கள்.
நான் கேப்பாபிலவிற்கு விஜயம் மேற்கொண்ட அன்றைய தினமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேப்பாபிலவிலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ள முள்ளியவளைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். விவசாயியின் மகனான விவசாய பகுதியிலிருந்து வந்தவரான ஜனாதிபதி சிறிசேனவின் கரிசனைக்குரியவர்களாக நீண்டகாலமாக துயரத்திலும் நெருக்கடியிலும் சிக்கியிருக்கும் கேப்பாபிலவு மக்கள் காணப்படவில்லை.
யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் ஆகின்றன. கேப்பாபிலவை இராணுவம் பலவந்தமாக ஆக்கிரமித்து பத்து வருடங்களாகின்றன. கேப்பாபிலவின் அனேக மக்களிற்கு அவர்கள் தங்கள் வீடுகளிற்கு, நிலங்களிற்கு மீள திரும்ப முடியாதவரை நீதி, சமாதானம், நல்லிணக்கம் ஆகியன தொடர்ந்தும் வெற்று வார்த்தைகளாகவே காணப்படும்.
“நாங்கள் யுத்தத்திலிருந்து உயிர்தப்பிவிட்டோம். ஆனால், தற்போது நாங்கள் எங்கள் நிலங்களிற்காக உயிர்துறக்கவேண்டியுள்ளது” என்கிறார்கள் கேப்பாபிலவு மக்கள்.
“Keppapulavu: Land Struggle Reaches Boiling Point after 700 days of protest” என்ற தலைப்பில் ருக்கி பெர்ணான்டோ எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.