படம் | Laruwan Wanniarachi, AFP, blogs.ft | சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவருக்கும் சி்ங்கள சிப்பாய் ஒருவருக்கும் கிளிநொச்சியில் இடம்பெற்ற திருமணத்தின்போது எடுக்கப்பட்ட படம்.

ஆத்மார்த்தியின் கட்டில் அசைந்து கொண்டேயிருந்தது. தூக்கம் வரவேயில்லை. தாதியர் அடிக்கடி வந்து விசாரித்தனர். அவளுக்கு நாளை சுகப் பிரசவம் என்பதைத் தவிர வேறு எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்றே கட்டிலுக்கு கீழே படுத்திருக்கும் அவளின் அம்மா நினைத்துக் கொண்டிருப்பார். அங்குள்ளவர்களும் அப்படித்தான் நினைத்திருக்க வாய்ப்புண்டு. திடகாத்திரமான உடல் அவளுக்கு சுகப்பிரசவம் என்பதை உறுதிப்படுத்தியும் இருந்தது. “இன்டைக்கு கொஞ்சமாவது நித்திர கொள்ளவேணும்” என்ற எண்ணம் அடிக்கடி குட்டு வைத்தாலும், சரியான நேர இடைவெளியில் கத்தியபடி, காற்றை வீசியடிக்கும் காற்றாடியை வெறித்து பார்த்தபடி படுத்துக்கிடக்கிறாள் ஆத்மார்த்தி. அவளால் நிமிர்ந்து மட்டுமே படுக்க முடியுமாயினும் அசைகிறாள்.  நாளை பிரசவத்துக்காக அவளுடன் காத்திருக்கும் எல்லா கர்ப்பிணிப் பெண்களையும் போல அவளுக்கு வலியும் இருக்கவில்லை. அந்த வார்டில் இருந்த அநேக கன்னித் தாய்கள் வலியால் துடித்துக் கொண்டிருந்தனர். நாளை நிலம் தொடப் போகும் சந்தோஷத்தில் குழந்தைகளின் குட்டிக்கால்கள் அடிவயிற்றை எட்டி உதைத்துக் கொண்டிருந்தன. ஆனால், இவளின் மகனோ, மகளோ அவ்வப்போது ஒரு முனகல்மாதிரியான அசைவோடு வயிற்றுப் பையுக்குள் உறங்கிக் கொண்டிருந்தாள் அல்லது உறங்கிக் கொண்டிருந்தான்.

கர்ப்பம் தரித்த சில மாதங்களே அவள் பணியிடத்தில் பணியாற்றினாள். அந்தப் பணியிடத்தில் கணவனுக்கு இருந்த பதவி செல்வாக்கினால் வழமையைவிட சற்றுக் காலத்துக்கு முன்னரே பிள்ளைப்பெறு ஓய்வும் பெற்றுக்கொண்டாள். ஆயினும், வீட்டில் ஏதோ வேலைசெய்துகொண்டேயிருந்தாள். ஆனாலும், இருப்புக் கொள்ளாத மனசு எப்போதாவது வீடு வரும் கணவனிடம் பிடிவாதம் பிடித்தது. அந்தப் பணியாளர்களுக்கான குடியிருப்பிலிருந்து சில மைல்கள் தொலைவிலுள்ள அவளின் சொந்த கிராமத்துக்குப் போய் முதல் குழந்தையை பிரசவித்துக் கொள்ள அவனிடம் மன்றாடினாள். சில கால தாமதத்திற்குப் பின் அதற்கான அனுமதியை அவன் கொடுத்தான். நீண்ட காலத்துக்குப் பின்னர் அவளது சொந்தக் கிராமத்துக்கு திரும்பியிருந்ததாலும், தாய்மையடைந்த காலத்தில் இயல்பாய் எழும் ஆசைகள் காரணமாகவும் தன் முதல் குழந்தையை சொந்த மண்ணில் பிரசவிக்கவே விரும்பினாள். அதற்காக ஊரவர் என்ன பேசினாலும் கவனத்தில் எடுக்கப்போவதில்லை என்ற முடிவோடு தன் கிராமத்துக்கு வந்திருந்தாள். நீண்டகாலத்தின் பின் தன் சொந்த மொழியை காது குளிர கேட்டு, கருவிலிருந்த தன் குழந்தைக்கும் கேட்கும்படி செய்தாள். என்றோ வற்றி வறண்ட வயல்தரைகளை நடந்தே கடந்தாள். உப்புக் காற்றை அனுபவித்தாள். சிசுவுக்கும் பருகக் கொடுத்தாள். அகன்று விரிந்த பாலை மர நிழல்களை, அதற்கு கீழ் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை, கச்சான் விற்கும் கிழவியை, இன்னமும் செருப்புக்காக ஏங்கும் வெயில்கால பள்ளி சிறுசுகளின் குறும்போசையை என ஆத்மார்த்தி அந்த மண்ணில் அனுபவித்த ஒவ்வொரு விடயத்தையும் சிசுவுக்கு அறிமுகப்படுத்தினாள்.

சிசுவை வயிற்றில் சுமந்துகொண்டு தன் பூர்வீக கிராமத்தின் ஒவ்வொரு சந்திலும் ஆழ இறங்கினாள். கிராமம் இன்னும் அழுக்கேறியிருந்தது. புது மனிதர்களும், புது இடங்களும் ஆங்காங்கே தோன்றியிருந்தன. அந்த ஒவ்வொரு இடமும், இவள் தாங்கிய பழைய அவமானங்களை நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தன.

சிசுவுக்கு சொன்னாள், “இதுதான் பிள்ளையாரடி. இங்கதான் அம்மா பள்ளிக்கூடம் போகேக்க பெடியங்கள் இருந்து நக்கலடிக்கிறவங்கள். அம்மா திரும்பியும் பாக்கமாட்டன். ஆனா, பாவம் அந்த பெடியங்கள். நிறையபேர் கடவுளிட்ட போயிட்டாங்கள்” என்று சொல்லியவாறு தன் வயிற்றை தொட்டுப் பார்த்துக் கொள்வாள்.

ஒற்றைத் தூண் மட்டும் இருந்த இடத்தை கடக்கையில் நின்றுகொண்டாள். சிசு எதையோ எதிர்பார்ப்பதை உணர்ந்தாள். வயிற்றை தொட்டுக்கொண்டே புலம்பினாள். “இந்த இடம்தான் அம்மாவின் தலைவிதியையே மாத்திய இடம். இங்கதான் அந்த நோட்டீஸ் ஒட்டியிருந்தவ. அதை வாசிச்சிட்டுதான் அம்மா இந்த வேலைக்கு போனன். வேலைக்கு எடுக்கேக்க கைநிறைய உழக்கலாம் என்டும், வீடு கட்டி சந்தோசமா இருக்கலாம் என்டும் அம்மா நினைச்சன்..ம்… என்று முடிக்க முன்பே எட்டி உதைத்தது சிசு. வெயில் வானைப் பிளந்து அவள் தலையில் கொட்டியது.

கொஞ்சம் நடந்தாள். பேரவமானப்பட்ட பள்ளிக்கூடம் வந்தது. கொஞ்சம் நினைவுதான் அது. ஆனாலும் கொடியது. சிசு கேட்காவிட்டாலும் சொல்லியே ஆகவேண்டும். “…வேலைக்காக பெரிய பயிற்சி குடுத்தவ அம்மாக்கு. அம்மா ஈசியா பயிற்சிய முடிச்சிட்டன். பயிற்சி தந்த எல்லாரும் நல்லா சொன்னவ. பெருமையா இருந்தது அப்ப… அதுக்காக நான் படிச்ச பள்ளிக்கூடத்திலயே விழா வைச்சவினம். என்னோட பயிற்சி எடுத்த எல்லாரையும் அங்க வச்சி பெரிய நிகழ்வு செய்தவ. எங்கட ஊராக்கள், பள்ளிக்கூட பிள்ளையள், எனக்கு வேலை தந்த பெரிய ஆக்கள் எல்லாரும் இங்க வந்திருந்தவ. அதில பேரம்பலம் ஐயா எழும்பி என்னையவும், இந்த வேலைக்கு சேர்ந்த என் மாதிரியான ஆக்களையும் மோசமா பேசினார். கெட்டவார்த்தையில எல்லாம் கேட்டார். அம்மா விபச்சாரி ஆகிருவன் என்டு சத்தம்போட்டார். அங்க இருந்த எல்லாரும் பேரம்பலத்தாருக்கு வெறி என்டு சொல்லி வெளிய அனுப்ப முயற்சி எடுத்தவ. அதோட நிகழ்வு குழம்பீற்றுது…” சிசு உறங்கியிருக்க வேண்டும். அவளும் நினைவு சொல்லி அலுத்துப் போனாள்.

அடுத்து அந்த வீட்டைக் கடந்தாள். அந்த மரத்தடியில் எப்போதும் வைக்கப்பட்டிருக்கும் மண் பானை தண்ணீர் இப்போதும் வைக்கப்பட்டிருந்தது. குளிரான அந்த தண்ணீரை அள்ளிப் பருகிக் கொண்டிருக்கையில், சிசு உறக்கத்தில் இருந்து எழுந்திருந்ததை உதைத்து அறிவித்தது.

“ம்… இந்த வீட்டில இருந்தவனதான் நான் காதலிச்சிருந்தன். கலியாணமும் அவனோடதான் என்டு இருவீட்டுக்காரரும் பேசியிருந்தவ. லீவில ஒரு காலத்தில நான் வந்திருந்தன். அப்ப கலியாணத்துக்கு கேட்க என் அப்பா இந்த வீட்டுக்கு போயிருந்தார். அங்க அவர அடிக்காத குறைய துரத்திவிட்டிட்டினம். நான் போன வேலைக்காக அம்மாவ பிழையா சொல்லிச்சினம். அந்தக் கதை ஊரே பரவி, அம்மாவ எங்கட ஊராக்கள் யாரும் கலியாணம் செய்துகொள்ள மாட்டன் என்டிட்டினம். தெருவில போன புழவ மாதிரி பாக்க தொடங்கீட்டினம். அதுக்குப் பிறகு வேலைக்கு போய் அங்கயே இருந்திட்டன். கலியாணமே வேணாம். காசு மட்டும்போதும் என்டு வீட்டுக்கு அனுப்பிக் கொண்டு இருந்தன்” அம்மா என்ன அதிகம் பேசுகிறார் என்று சிசு உணர்ந்திருக்க வேண்டும். மறுபடியும் உறங்கிவிட்டது.

கட்டிலுக்கு கீழே படுத்திருந்த அம்மா அப்போதுதான் எழுந்து பார்த்தார். “என்ன பிள்ளை இன்னும் நித்திர கொள்ளேல்லயா… ஏதும் செய்யுதா?” எதுவும் சொல்லாத ஆத்மார்த்தி மறுவலம் சற்று சரிந்து படுக்க முயற்சித்தாள்.

சிசுவுக்கு அதன் அப்பாவை பற்றி சொல்லியே ஆகவேண்டும் என்று எண்ணினாள். அவள் சரிந்து படுக்கையில் சிசு கதைகேட்பதற்கு தயாரானது.

ஊரில அம்மாவ கலியாணம் செய்ய யாரும் இருக்கேல்ல. எல்லாரும் மாட்டன் என்டிட்டினம். கொஞ்ச நாள் கவலபட்டன். பிறகுதான் அப்பாவ கண்டன். எங்கட அலுவலகத்துக்கு அடிக்கடி வாறவர். முதல் அவர் பேசுறது எனக்கு விளங்காது. பிறகு பிறகு அவர் பேசுறத புரிஞ்சிகொண்டன். அவர விட நல்லா பேசுறளவுக்கு அம்மா வளர்ந்திட்டன். நல்ல நண்பர்களாதான் இருந்தம். ரெண்டுபேரும் ஒரே வேலை செய்துகொண்டும், ஒரே நிறுவனத்தில இருந்ததால இன்னும் நல்ல நெருக்கம் இருந்தது. மன ஒற்றுமை இயல்பாகவே வந்திட்டு. கலியாணம் செய்துகொள்ள அப்பாதான் முதல் கேட்டார். அம்மாக்கு கொஞ்சம் பயம் இருந்தது. பிறகு எல்லாத்தையும் யோசிச்சன். ஒரே வேலை. ஒரே மாதிரி இருக்கிறம். அப்பாவ எங்க ஊருக்கு குடியிருக்க கூப்பிட்டன். வாறன் என்டார். அவர கலியாணம் கட்டினா ஊராக்கள் ஏதுவும் கதைக்கமாட்டினம் என்டு தெரியும். அப்பாவின்ர வேலை சரியான அதிகாரம் இருந்தது. எந்தப் பிரச்சினையும் எங்களுக்குள்ள இல்லாத மாதிரியிருந்தது. அதோட காதல் என் கண்ண நல்லா இறுக்கி கட்டிப்போட்டுது. கலியாணத்த கட்டிக்கொண்டம். ஆனாலும், நாங்க ஊருக்குள்ள இருக்கேல்ல. எங்களுக்கென்டு, எங்கட ஊருக்கு பக்கத்திலயே பெரிய கிராமம் மாதிரி ஒன்ட எங்கட கம்பெனி கட்டித்தந்தவ. அங்க வாழத் தொடங்கீற்றம். அப்பதான் உனக்கு என்னோட ஊர காட்டி, அங்கயே உன்னை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டன்… என்று பெருமூச்சு விட்ட ஆத்மார்த்திக்கு மறுபக்கம் திரும்பி படுக்க வேண்டும் போலிருந்தது.

சரிந்து படுக்கையில் மெல்லிதான கண்ணீர் தலைணையில் விழுந்தது. ஏன் அழுதாள் என்று தெரியவில்லை. என்றுமில்லாத கேள்விகளை,  நாளை பிறக்கப்போகும் சிசு கேட்பதாக உணர்ந்தாள். அந்தக் கேள்விகள் அவளைக் குத்திக் குடைந்தன.

அம்மா எனக்கு என்ன பேர் வைப்ப? என்ன மொழியிலம்மா எனக்கு பேர் வரும்?

என்ர பேர கேட்டு பள்ளிக்கூடத்தில நக்கலடிக்க மாட்டினமா?

அதுக்காக என்னையும் தனிப்பள்ளிக்கூடத்தில சேர்ப்பியா?

நான் எந்த மொழியில அம்மா படிக்கிறது? கதைக்கிறது

என் சாமி எப்பிடியம்மா இருப்பார்?

என் சொந்த ஊர் எது அம்மா?

இப்படியே ஓர் ஆயிரம் கேள்விகளை சிசு கேட்டுக்கொண்டேயிருந்தது. அந்தக் கேள்விகள் அலைவடிவம் பெற்றுக்கொண்டிருக்க அவள் உணர்வையிழந்திருக்க வேண்டும்.

அப்போது ஆத்மார்த்தியைப் பார்த்து, பக்கத்து கட்டிலில் பிறப்பு சூடாறாத குழந்தையோடு படுத்திருந்த குமுதாயினியினி, தன் அம்மாவின் காதில் கிசுகிசுக்கிறாள்.

“அந்த ஆமிக்காரிக்கு குழந்த செத்தே பிறந்திட்டு”

ஆத்மார்த்திக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. கட்டில் கம்பியை பிடித்துக் கொண்டிருக்கும் ஆத்மார்த்தியின் அம்மாவினது கண்ணீர் இன்னும் பெருக்கெடுக்கிறது.

(யாவும் கற்பனை)

ஜெரா

Jera