பட மூலம், FIRSTPOST

2018 ஒக்டோபர் 26ஆம் திகதி முன்னிரவில் இலங்கையின் பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்தமையோடு இலங்கையின் ஒரு அரசியலமைப்பு நெருக்கடி உருவானது. இதன் அரசியல் பார்வை ஒருபுறமிருக்க, இது பல்வேறுபட்ட அரசியலமைப்புச்சட்ட வியாக்கியானங்களுக்கும், அபிப்ராயங்களுக்கும் வழிவகுத்தது. ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கையானது அரசியலமைப்புக்கு முரணாணது என்ற கருத்து பல்வேறு சட்ட மற்றும் நீதியியல் நிபுணர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மறுதரப்பிலும் குறித்த நடவடிக்கையானது அரசியலமைப்புக்கு முரணாணது அல்ல என்பதற்கான நியாயங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசியலமைப்புச் சட்ட சிக்கலை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

  1. ஜனாதிபதியினால், பிரதமரை பதவி நீக்க முடியுமா?

இலங்கையில் தற்போது வலுவிலுள்ள அரசியலமைப்பானது, “நல்லாட்சி அரசாங்கத்தினால்” நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பிற்கான 19ஆம் சீர்திருத்தத்திற்குப் பின்னரான அரசியலமைப்பாகும். 19ஆம் சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கமானது ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்தை மட்டுப்படுத்துவதுடன், ஒரு நபர் இருமுறை மட்டுமே ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும் என்று 18ஆம் சீர்திருத்தத்திற்கு முன்னிருந்த மட்டுப்பாட்டை மீள அறிமுகப்படுத்தலுமாகும். 2015 ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக களம் கண்டிருந்த தற்போதைய மைத்திரிபால சிறிசேன தனது தேர்தலறிக்கை உள்ளிட்டு தனது பிரச்சாரம் முழுவதும் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்தை மட்டுப்படுத்துவதை தனது முக்கிய கொள்கையாக முன்னிறுத்தியதுடன், அவர் பெற்ற வெற்றியின் மூலம், ஜனநாயக ரீதியில் அதற்கான மக்களாணையையும் பெற்றிருந்தார். அந்த மக்களாணையின்படிதான், 215 பாராளுமன்ற உறுப்பினர்களின் அமோக ஆதரவுடன் வெறும் ஒரேயொரு எதிர்ப்பு வாக்குடன், இலங்கை அரசியலமைப்பிற்கான 19ஆம் சீர்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நிற்க.

புதிய பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றதும், ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, அவரை அரசியலமைப்பின் சரத்து 42(4)ன் கீழ் தனக்களிக்கப்பட்ட அதிகாரத்தின் படி பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதான கடிதத்தை அனுப்பிவைத்தார். அரசியலமைப்பின் 42(4) சரத்தானது பின்வருமாறு உரைக்கிறது:

“சனாதிபதி, அவரது கருத்துப்படி நாடாளுமன்றத்தின் எந்த உறுப்பினர் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளவராக இருக்கின்றாரோ அந்த உறுப்பினரை பிரதம அமைச்சராக நியமித்தல் வேண்டும்.”

இவ்வாறுரைக்கும் 42(4) உறுப்புரையானது பிரதமரை நியமிக்கும் அதிகாரம் பற்றி மட்டுமே உரைக்கின்றதே அன்றி, பிரதமரைப் பதவி விலக்க ஜனாதிபதிக்கு எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை.

அப்படியானால் அதிகாரி ஒருவரை நியமிப்பவருக்கு, அவரைப் பதவி விலக்கும் அதிகாரமும் இருக்கிறது என்ற பொருள்கோடல் கட்டளைச் சட்டத்தின் 14(f) சரத்தை முன்னிறுத்திய வாதத்தை சிலர் முன்வைக்கலாம். ஒரு நாட்டினுடைய அரசியலமைப்புச் சட்டமானது, அது உருவாக்கப்பட பல தசாப்தங்கள் முன்பு வேறொரு அரசியலமைப்பின் கீழான சட்டவாக்கச் சபையினால் நிறைவேற்றப்பட்டதொரு பொருள்கோடல் சட்டத்தின்மூலம் பொருள்கோடல் செய்யப்பட வேண்டும் என்பது, குறித்த அரசியலமைப்பை உருவாக்கிய மக்கள் இறைமையை கேலிக்குட்படுத்துவதாகவே அமையும். அரசியலமைப்பு என்பது அதன் கீழ்ப்பட்ட சட்டங்களால் மட்டும் பொருள்கோடல்செய்யப்படக்கூடியதல்ல. நிற்க. அவ்வாறே பொருள்கோடல் கட்டளைச் சட்டத்தின் மேற்குறித்த பொருள்கோடல் வலிதானது என்று கருதிக்கொண்டாலும், பொருள்கோடல் கட்டளைச் சட்டத்தின் 14(f) சரத்தின் படி அதிகாரி ஒருவரை நியமிக்கவருக்கு அவரை பதவி நீக்கும் அதிகாரம் மட்டுமல்லாது, அவரை இடைநிறுத்தும் அதிகாரமும் உண்டு என்கிறது. அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதியினால் பிரதமரை இடைநிறுத்த முடியாது, அதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை. ஆகவே, பொருள்கோடல் கட்டளைச் சட்டத்தின் 14(f)-ஐ மேற்கோள் காட்டி அரசியலமைப்பிற்கான பொருள்கோடல் தொடர்பிலானதொரு வாதத்தை முன்வைப்பதானது வேடிக்கையானது மட்டுமல்ல, அது ஒரு கேலிக்கூத்தாகவும் அமையும். மேலும், பொருள்கோடல் கட்டளைச் சட்டத்தின் 14(f) சரத்தானது, ‘அதிகாரி’ ஒருவரை நியமித்தல் பற்றி பேசுகிறது, அப்படியானால் பிரதமர் என்பவர் அதிகாரியா என்ற கேள்வியும் இங்கு எழுவது தவிர்க்க முடியாதது.

மேலும் மிகமுக்கியமாக குறித்ததொரு சட்டத்தின் விடயதானத்தில் அல்லது அமைவுச்சூழலில் குறித்த பொருளுக்கு முரணாக அமையுமானால், குறித்த பொருள்கோடல் கட்டளைச் சட்டம் அத்தகைய இடத்தில் பொருந்தாது என பொருள்கோடல் கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்து விவரிக்கிறது. ஆகவே இதன்படி, பிரதமரை நீக்குவது தொடர்பில் அரசியலமைப்பு வேறு சரத்துக்களில் வௌிப்படையாக குறிப்பிட்டிருப்பின், பொருள்கோடல் கட்டளைச் சட்டத்தின் 14(f) சரத்தின் படியான ஒருவரை நியமிப்பவருக்கு, அவரைப் பதவி விலக்கும் அதிகாரமும் இருக்கிறது என்ற பொருள்கோடல் அவ்விடத்தில் ஏற்புடையதாகதுபோகிறது.

அரசியலமைப்பின் உறுப்புரை 46(2) ஆனது பின்வருமாறு உரைக்கிறது:

“பிரதம அமைச்சர் –

  • சனாதிபதிக்கு முகவரியிட்டனுப்பும் தம் கைப்பட்ட கடிதத்தின் மூலம் அவரது பதவியை துறந்தாலொழிய அல்லது
  • பாராளுமன்ற உறுப்பினரொருவராக இல்லாதொழிந்தாலொழிய;

அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் கீழ் அமைச்சரவை தொடர்ந்தும் பணியாற்றும் காலம் முழுவதும் அவர் தொடர்ந்து பதவிவகித்தல் வேண்டும்.”

மேற்குறித்த 46(2) உறுப்புரையின்படி அமைச்சரவை தொடர்ந்தும் பணியாற்றும் வரை, அதாவது அமைச்சரவை கலையாத வரை, பிரதமராக நியமிக்கப்பட்டவரே பிரதமராகத் தொடர்வார். அவர் பதவியிழக்கும் மூன்று சந்தர்ப்பங்களே உள்ளன: 1) அவர் பதவி விலகுவதாக கடிதம் வழங்குதல், 2) அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழத்தல், 3) அமைச்சரவை கலைதல். குறித்த சந்தர்ப்பங்களைத் தவிர பிரதமர் தொடர்ந்து பதவி வகித்தல் வேண்டும் என்று அரசியலமைப்பு தெளிவுறக் குறிப்பிட்டிருப்பதானது, பிரதமரை பதவி விலக்குவதற்கு 19ஆம் சீர்திருத்தத்திற்கு முன்னராக ஜனாதிபதியிடமிருந்த அதிகாரத்தை உட்கிடையாக நீக்கியுள்ளது.

அரசியலமைப்பில் வேறெங்கேனும் பிரதமரை பதவி நீக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதென்று குறிப்பிடப்படவில்லை.

  1. அரசியலமைப்பின் சிங்கள மொழிப் பதிப்பில் பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கிறதா?

அரசியலமைப்பென்பது ஒரு அரசின் அடிப்படைச் சட்டமாகும். அரசியலமைப்போ, அதற்கான திருத்தங்களோ நிதானித்து ஆராய்ந்து எழுதப்படவேண்டியவை. இலங்கையின் துரதிஷ்டம் அநேகமாக அனைத்து அரசியலமைப்பு திருத்தங்களுமே அவசரகதியிலேயே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அந்த அவசரம் சிலவேளைகளில் சில சிக்கல்களையும் பிழைகளையும் உருவாக்கிவிடுவதும் உண்டு.

அரசியலமைப்பிற்கான 19ஆம் திருத்தத்தின் பின்னர், அரசியலமைப்பின் 48(1) உறுப்புரையில், ஆங்கில மொழிப்பதிப்பிற்கும், தமிழ் மற்றும் சிங்கள மொழிப்பதிப்புகளுக்குமிடையில் சிறு வேறுபாடொன்று தற்போது அடையாளங்காணப்பட்டிருக்கிறது.

அமைச்சரவையை கலைத்தல் பற்றிய அரசியலமைப்பின் தமிழ்ப்பிரதியின் உறுப்புரை 48(1) பின்வருமாறு உரைக்கிறது:

“பிரதம அமைச்சர், பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கும் பொதுத்தேர்தல் முடிவுறுதலுக்கும் இடைப்பட்ட காலத்தின் போது தவிர, இறப்பதன் மூலம் அல்லது பதவியிலிருந்து அகற்றப்படுவதன் மூலம் அல்லது பதவி துறப்பதன் மூலம் அல்ல வேறு வகையாக பதவி வகிக்காதொழிந்ததன் மேல், சனாதிபதி 70ஆம் உறுப்புரையின் கீழ் தமது தத்துவங்களைப் பிரயோகிக்கையில் பாராளுமன்றத்தைக் கலைத்திருந்தாலொழிய, அமைச்சரவை கலைக்கப்பட்டதாயிருக்கும் என்பதுடன், சனாதிபதி 42,43,44 மற்றும் 45 என்னும் உறுப்புரைகளின் நியதிகளிள் படி ஒரு பிரதம அமைச்சரையும், அமைச்சரவையின் அமைச்சர்களையும் அமைச்சரவையின் உறுப்பினர்களல்லாத அமைச்சர்களையும் பிரதி அமைச்சர்களையும் நியமித்தலும் வேண்டும்….”

சிங்களப்பதிப்பும், மேற்குறித்த தமிழ்ப்பதிப்பை ஒத்தே அமைந்திருக்கிறது. ஆனால் ஆங்கிலப்பதிப்பில் “அல்லது பதவியிலிருந்து அகற்றப்படுவதன் மூலம்” என்பது காணப்படவில்லை. ஆகவே அரசியலமைப்பின் சிங்கள மற்றும் தமிழ்ப்பதிப்புகளுக்கும், ஆங்கிலப்பதிப்பிற்கும் இடையிலான இந்த வேறுபாட்டைச் சுட்டிக்காட்டி, அரசியலமைப்பின் உறுப்புரை 23-ஐ மேற்கோள்காட்டி ஆங்கிலப் பதிப்பு என்பது வெறும் மொழிமாற்றுப் பதிப்பு மட்டுமே, உத்தியோகபூர்வ மொழியில் எழுதப்பட்டதே வலிதுடைய பதிப்பு என்று வாதத்தை சிலர் முன்வைக்கிறார்கள்.

என்னதான் நடைமுறையில் பொதுவாக ஆங்கில மொழிப்பயன்பாடே மேன்முறையீட்டு நீதிமன்றம், மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு பொருள்கோடல் வழங்கும் அதிகாரத்தைக் கொண்ட உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் காணப்பட்டாலும், ஆங்கிலமொழி மூல பதிப்பு என்பது மொழிபெயர்ப்பு பதிப்பு என்பதும், ஒரு சட்டம் அது வலுவுடையது என வெளிப்படையாகக் குறிக்கும் மொழிப்பிரதி அல்லது அவ்வாறு குறிப்பிடாதவிடத்து அச்சட்டம் நிறைவேற்றப்பட்ட உத்தியோகபூர்வ மொழிதான் வலுவுடையது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சட்டங்களைப் பொறுத்தவரையில் இது உண்மை எனினும், இது அரசியலமைப்பிற்கும் பொருந்துமா என்பது வாதத்திற்குரியது. எவ்வாறாயினும், 48(1) உறுப்புரையின் தமிழ் மற்றும் சிங்கள பதிப்புக்களில் உரைக்கப்பட்டிருப்பதே வலுவுடையது என்று நாம் கருதிக்கொண்டாலும், இங்கு எழும் கேள்வியானது அரசியலமைப்பின் 48(1) உறுப்புரையானது ஜனாதிபதிக்கு பிரதமரை பதவி நீக்கும் அதிகாரத்தை வழங்குகிறதா என்பதாகும். இந்தக் கேள்விக்கான பதில் இல்லை என்பதாகும்.

உறுப்புரை 48(1) பிரதமர் இறந்தால், பதவி துறந்தால், பதவியிலிருந்து அகற்றப்பட்டால், அல்லது வேறுவகையாக பதவி வகிக்காது ஒழிந்தால் அதன் வினைவுகளைப் பற்றி மற்றுமே குறிப்பிடுகிறதே தவிர, பிரதமரை பதவி விலக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கவில்லை. ஆகவே, இதன்படி பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டால் அமைச்சரவை கலையும் என்பது உண்மை. எனினும், பிரதமரை அவ்வாறு பதிவியிலிருந்து அகற்றும் அதிகாரம் அரசியலமைப்பில் எங்கும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆகவே, ஜனாதிபதியினால் பிரதமரை பதவிநீக்க முடியாது என்பதை இந்த சரத்து எந்த வகையிலும் மாற்றவோ, பாதிக்கவோ இல்லை என்பதுதான் நிதர்சனம்.

  1. தேசிய அரசாங்கத்திலிருந்துஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியேறியமையானது அமைச்சரவையைக் கலைக்கவில்லையா?

ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவி நீக்கம் சரியானது என்று வாதிடுபவர்களின் ஆரம்ப விவாதங்கள் அதற்கெதிரான பிரதிவாதங்களின் முன்னர் தாக்குப்பிடிக்காத நிலையில், தற்போது ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவி நீக்கத்தை நியாயப்படுத்தி புதியதொரு விவாதத்தை சிலர் முன்வைக்கிறார்கள். அந்த விவாதத்தின் சாரம் இதுதான்: அரசியலமைப்பின் உறுப்புரை 46(1) ஆனது, அமைச்சரவையில் அங்கம் வகிப்போரின் எண்ணிக்கை 30ஐ விஞ்சக்கூடாது என்று உரைக்கிறது. ஆனால், உறுப்புரை 46(4)ன் படி, நாடாளுமன்றத்தில் ஆகக்கூடுதலான ஆசனங்களைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி அல்லது சுயேட்சைக் குழு ஒன்று தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கும் போது உறுப்புரை 46(1)இல் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையானது நாடாளுமன்றத்தின் தீர்மானமொன்றினால் மாற்றியமைக்கப்பட அனுமதிக்கிறது. ஆகவே தேசிய அரசாங்கம் ஒன்று அமைந்தால் மட்டுமே 30ஐ விட அதிகமான அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை அமைக்கப்படலாம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி தாம் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததுடன் “தேசிய அரசாங்கம்” என்பது முடிவுக்கு வந்துள்ளது. ஆகவே, 30ஐ விட அதிக எண்ணிக்கையை கொண்ட அமைச்சரவை அரசியலமைப்பின் கீழ் தொடரமுடியாது, ஆகவே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெளியேற்றத்துடன் குறித்த “தேசிய அரசாங்கத்தின்” அமைச்சரவையும் கலைந்துவிட்டது, ஆகவே, ஜனாதிபதி அரசியலமைப்பின் 42(4) உறுப்புரையின் கீழ் தனக்களிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் தனது கருத்துப்படி நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளவராக மஹிந்த ராஜபக்‌ஷவைக் கருதியதால், அவரை பிரதமராக நியமித்தார்.

எடுத்த எடுப்பில் இந்த வாதம் சிலருக்கு சரியானதாகத் தோன்றலாம். ஆனால், முறையாக ஆராயும் போது இந்த வாதத்திலுள்ள வழுக்கள் வெளிப்படும்.

அரசியலமைப்பின் உறுப்புரை 46(1) மற்றும் 46(4) குறிப்பிடுபவை தொடர்பில் மாற்றுக் கருத்தில்லை. அது வெளிப்படையான சரத்துக்கள். அரசியலமைப்பின் உறுப்புரை 46(5) ஆனது, “தேசிய அரசாங்கம்” என்பதை, நாடாளுமன்றத்தில் ஆகக்கூடுதலான ஆசனங்களைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவும் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவும் ஒன்று சேர்ந்து உருவாக்கும் ஓர் அரசாங்கம் என்று வரையறுக்கிறது. இதன் மூலம் இரண்டு விடயங்களை தெளிவாகின்றன. 1) தேசிய அரசாங்கம் என்பது நாடாளுமன்றத்தில் ஆகக்கூடுதலான ஆசனங்களைப் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவினால் மட்டுமே உருவாக்கப்பட முடியும். 2) ஆகக்கூடுதலான ஆசனங்களைப் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழு ஏனையதொரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவுடன் ஒன்று சேர்ந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியும். ஆகவே, ஆகக்கூடுதலான ஆசனங்களைப் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவோடு வேறு எத்தனை கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் இணைந்துள்ளன என்பது முக்கியமல்ல. இங்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் மட்டும் இணைந்து “தேசிய அரசாங்கத்தை” உருவாக்கவில்லை. மாறாக அதனுள் ஒரு உறுப்பினரைக் கொண்ட இலங்கை முஸ்லிம் காங்கிரஸூம் இருக்கிறது. ஆகவே, ஆகக்கூடுதலான ஆசனங்களைப் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவொன்றுடன் குறைந்தபட்சம் இன்னொரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழு சேர்ந்திருக்கும் வரை அரசியலமைப்பின் 46(5) உறுப்புரை தரும் வரைவிலக்கணத்தின்படி “தேசிய அரசாங்கம்” என்பது தொடரும். ஆகவே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெளியேற்றத்துடன் “தேசிய அரசாங்கம்” கலைந்துவிட்டது என்ற வாதம் இங்கு செல்லுபடியற்றதாகிறது.

அவ்வாறே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெளியேற்றத்துடன் “தேசிய அரசாங்கம்” கலைகிறது என்று கருதிக்கொண்டாலும், அதனால் அமைச்சரவை கலையும் என்ற விவாதமும் ஏற்புடையதல்ல. ஏனெனில், அரசியலமைப்பின் 43(1) உறுப்புரையானது ஜனாதிபதி காலத்துக்குக்காலம் பிரதமரின் கலந்தாலோசனையுடன், அமைச்சரவையின் அமைச்சர்களினதும், அமைச்சுக்களதும் எண்ணிக்கையையும் அத்தகைய அமைச்சர்களுக்குக் குறித்தொதுக்கப்படவுள்ள பணிகளையும், விடயங்களையும் தீர்மானித்தல் வேண்டும் என்று உரைப்பதுடன், 43(3) உறுப்புரையானது, ஜனாதிபதி எந்தநேரத்திலும் அமைச்சரவையின் விடயங்களதும் பணிகளதும் குறித்தொதுக்குதல்களையும், அமைப்பையும் மாற்றலாம் என்றும், அத்தகைய மாற்றங்களை அமைச்சரவையின் இடையறாத் தொடர்ச்சியையும் நாடாளுமன்றத்துக்கு அதற்குள்ள பொறுப்புடைமையை இடையறா தொடர்ச்சியையும் பாதித்தல் ஆகாது என்றும் உரைக்கிறது.

ஆகவே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெளியேற்றத்துடன் “தேசிய அரசாங்கம்” கலைகிறது என்று கருதிக்கொண்டால், அப்போது அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஐ விட அதிகமாக இருக்க முடியாது. ஆகவே, அமைச்சரவையின் தொடர்ச்சியைப் பாதிக்காது அந்த எண்ணிக்கையை மாற்றியமைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது என்பது 43(1) உறுப்புரையுடன், 43(3) உறுப்புரையை இணைத்து வாசிக்கும்போது தெளிவாகிறது. ஆகவே, ஜனாதிபதி அமைச்சுக்களின் எண்ணிக்கையையும், அமைச்சரவையின் விடயங்கள் மற்றும் பணிக்குறித்தொதுக்குதல்களையும், அமைப்பையும் மாற்றியமைத்திருக்கவேண்டுமேயன்றி, அத்தோடு அமைச்சரவை கலைந்து விடுகிறது என்ற அடிப்படையில் புதிய பிரதமரை நியமித்தமையானது அரசியலமைப்பிற்கு ஏற்புடையதொன்றல்ல என்பது தெளிவாகிறது.

ஆகவே, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமித்தமையானது அரசியலமைப்பிற்கு, அதன் எண்ணத்திற்கு, நோக்கத்திற்கு, குறிப்பாக 19ஆம் திருத்தத்தின் அடிப்படைகளுக்கு முரணானது என்பது என்னுடைய அபிப்ராயமாகும்.

என்.கே.அஷோக்பரன்

LLB (Hon), LLM Candidate – University of Edinburgh (Chevening Scholar), Attorney-at-Law (Sri Lanka)

தொடர்புபட்ட கட்டுரை: “ஆபத்தைச் சந்தித்திருக்கும் ஜனநாயகம்”