படம் | asiantribune

தமிழ்த் தலைமைகளின் விரலை வைத்து சிங்கள பெரும்பான்மை தலைமைகள் தமிழ் இனத்தின் கண்களை குத்திக் குருடாக்கிய பல நூறு சம்பவங்கள் இந்த நாட்டில் நிகழ்ந்தேறியுள்ளன.

தமிழ் இளைஞர்களையும், பேரம் பேசும் சக்திகளையும் இல்லாமல் செய்வதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தை ஜே.ஆர். ஜெயவர்த்தன தமிழ் புத்திஐீவிகளைக்கொண்டு அங்கீகரிக்க வைத்து தமிழ் அரசியல் தலைமைகளின் ஆசீர்வாத பெருவிழாவுடன் நாடாளுமன்றத்தில் நிகழ்த்தி பெரு வெற்றிகண்டார். தமிழ் மக்களின் உரிமைகளை இதோ வென்றெடுக்கின்றோம் பாருங்கள் என்று பாவனை காட்டியவர்கள், தமது அரசியல் சுயநலன்களுக்காக மௌனிகளாய் இருந்த தமிழ்த்தலைமைகளின் மெத்தனப்போக்கினால் தமிழினம்பட்ட துன்ப துயரங்களை சொல்லிமாளா.

தமிழினத்தின் அரசியல் உரிமைப்போராட்டம் பயங்கரவாதப்போராட்டம் என்ற நாமத்தோடு முள்ளிவாய்க்காலில் கருவறுக்கப்பட்ட நிகழ்வு மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசினால் மாத்திரம் ஏற்பட்டது மட்டுமன்று, மாறாக தமிழ்த்தேசிய போராட்டத்தையே பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் பயங்கரவாத முத்திரை குத்தி அடக்கி ஒடுக்க தமிழ்த்தலைமைத்துவங்களே முழுக்காரண கர்த்தாக்கலாக இருந்துள்ளன.

சட்டத்தரணி சி.வி.விவேகானந்தன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கோரமுகத்தினை ஆரம்ப காலத்திலேயே இனங்கண்டு வெளிப்படுத்திய வேளை அக்கருத்துக்கள் தமிழ் சட்டமேதைகளின் முன்னால் எடுபடவில்லை. ஆனால், அன்றைய சூழலில் தமிழ்த்தலைமைகள் தெரிவித்த கருத்து வரலாற்றில் இன்று பொறிக்கப்பட வேண்டியது. “ஜே.ஆர். ஜெயவர்த்தன தமிழ் மக்களுக்கு நிறைய செய்வதாக வாக்குறுதியளித்துள்ளார்” என்ற கருத்தேயாகும்.

ஆனால், நிகழ்ந்தது என்ன, சுயநல அரசியல் இருப்பிற்காக இவர்கள் செய்த திருகுதாளத்தின் வெளிப்பாடு பயங்கரவாத தடைச்சட்டம் என்ற சாத்தானே வெளிவந்தான். ஆனால், சகலதும் அறிந்த தமிழ் புத்திஐீவிகள் இலகுவாக கூறிய பதில் “ஜெயவர்த்தன எங்களை ஏமாற்றிவிட்டார்”, நாம் ஏமாந்துவிட்டோம் என்று தமது மார்பில் அடித்து முதலைக்கண்ணீர் விட்டது மாத்திரமே.

இது வரலாற்றின் ஒரு பகுதி மாத்திரமே, இதுபோன்ற பல சம்பவங்களை அடிக்கிக்கொண்டெ போக முடியும். 2001 ஆண்டு புலிகளோடு ரணில் விக்கிரமசிங்க செய்துகொண்ட ஒப்பந்தம்தான் முள்ளிவாய்க்கால் கோரத்திற்கு வித்திட்டது என்பதை அண்மைய ரணிலின் கருத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னா் ஊடகவியலாளர்களை சந்தித்த ரணில் புலிகளின் கடற்படையின் முதுகெழும்பை தாமே முறித்ததாக வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

புலிகளோடு சமபல ஒப்பந்தம் செய்துகொண்டவர்கள் ஏக காலத்தில் அதாவது ஒப்பந்த காலத்தில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் இவர்கள் முனைப்பு காட்டியிருக்கவில்லை. புலிகளைப் பலவீனப்படுத்தவே இந்த ஒப்பந்தம் என்பதை இன்று ரணில் தாமாகவே ஒப்புக்கொண்டிருக்கின்றார்.

இத்தகைய பாடங்களை தமிழ்த்தலைமைகள் சிங்கள தலைமைகளிடம் இருந்து திரும்ப திரும்ப கற்றுக்கொண்டாலும் திருந்தியதாக வரலாறு இல்லை. நந்திக்கடலில் வைத்து ஆயிரமாயிரம் தமிழ்மக்களின் அழிவோடு, புதைப்போடு தமிழினத்தின் அரசியல் உரிமைப்போராட்டம் அழிக்கப்பட்டதாக, தமிழ் மக்களின் அபிலாஷைகள் இல்லாது செய்துவிட்டதாக இலங்கை பெரும்பான்மை தலைமைகள் வீரநடைபோடுகின்றனர்.

ஆனால், இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழினத்தின் அபிலாஷைகள் இன்னமும் சிதையவில்லை என்பதை நாசுக்காக அவ்வப்போது தமிழகமும் புலம்பெயர் தமிழர்களும் கையில் எடுக்கின்றனர். புதைந்து போனவர்கள் சனல்4 வழியாக நீதிகேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், இலங்கையில் இருக்கின்ற தமிழ்த்தலைமைகளின் நிலையை நினைக்கும்போது மூலையிலிருந்து குந்தி அழும் நிலைமையாகவுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் வடமாகாண முதலமைச்சர் யார் என்ற தெரிவின் போது ஒன்றுகூடிய ஐந்து கட்சிகளின் தலைமைகள், அமைச்சுக்காக ஒன்று கூடிய தலைமைகள் ஜெனீவா பிரச்சினைக்கு மாத்திரம் ஒன்றுகூடாமல் போனது உலக அதிசயம் தான். தமது இராணுவத்திற்கு எதிராக, நாட்டிற்கு எதிராக சர்வதேசம் சதி செய்கின்றது என்ற பேச்சோடு கட்சி பேதம் பாராமல் சிங்கள தலைமைகள் கருத்தொருமைப்பாட்டிற்கு வரும் இன ஒற்றுமையை எப்போதுதான் தமிழ்த்தலைமைகள் கற்றுக்கொள்ளப்போகின்றனவோ யார் அறிவர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இரு உறுப்பினர்கள் ஜெனீவா பயணமானதாக தகவல். ஒருவா் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், மற்றையவர் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.

இதில் தமிழ்த்தேசியத்தின் ஒற்றுமை யாதெனில் இருவரும் தனித்தனியே சென்று பேசப்போகின்றார்களாம். சாத்தான்கள் எல்லாம் வெளியில் இருந்து தமிழினத்திற்கு வெளிவரவில்லை என்பதை நாம் புரிந்துகொள்வோம். அதுவரை இவர்கள் வேதங்கள் ஓதட்டும்.

புவி