பட மூலம், Selvaraja Rajasegar
1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரசகரும மொழிச் சட்டம் தமிழர்களின் மொழியுரிமையை மீறியதுடன் அவர்களின் ஏனைய உரிமைகளின் மீறல்கள் ஆரம்பமாகின. இதன்பின் தொடர் விளைவாக 1958, 1977, 1983 முதலிய ஆண்டுகளில் தமிழருக்கு எதிரான வன்முறைகளும், 2008 – 2009இல் கோர சம்பவங்களும் நடைபெற்றன.
இதனோடு தொடர்புபட்ட சட்டத்தை துச்சமாக கருதி செயற்படும் சம்பவங்களும் ஆட்கள் கடத்தப்பட்டு காணாமல் போகும் நிகழ்வுகள் தொடர்பிலான விடயங்களை விளங்கிக்கொள்ள 1971ஆம் ஆண்டு சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியை உற்று நோக்குதல் வேண்டும். அக்கிளர்ச்சியின் போது பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் கிளிர்ச்சியில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த கொடூர முயற்சிகளை எடுத்திருந்தனர். அச்சமயம் சிங்கள இளைஞர்கள் 65,000 பேர் அளவில் மாண்டனர். அந்தக் காலப்பகுதியே இலங்கையின் இராணுவத்தினரும் பொலிஸாரும் நபர்களுக்கெதிராக கொடூரமான செயல்களில் ஈடுபடும் அனுபவத்தை பெற்றுக்கொடுத்தது மாத்திரமன்றி, தமது இனத்தைச் சேர்ந்தவர்களையே வன்முறை மூலம் அடக்கும் அனுபவத்தையும் பெற்றுக்கொடுத்தது. அக்காலத்தில் அவர்கள் அவ்வாறு நடப்பதற்கு அரசின் மௌன அங்கீகாரம் இருந்தது. அச்சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஏதும் நடைபெறவும் இல்லை. அவற்றிக்குப் பொறுப்பான எவரும் தண்டிக்கப்படவும் இல்லை. இதற்கு விதிவிலக்காக ஒரேயொரு சம்பவம் மாத்திரம் உள்ளது. மாத்தறையில் அழகுராணியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த ஒருவர், இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, நிர்வாணமாக வீதி வழியாக நடத்தி கொண்டு செல்லப்பட்டு கொடுரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மட்டுமே உள்ளது. சில வருடங்களுக்குப் பின்னர் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். அப்படியிருந்தும் அக்காலத்தில்தான் சட்டத்தை துச்சமாகக் கருதி செயற்படும் கலாச்சாரத்திற்கு வித்திடப்பட்டது.
1980களில் ஜேவிபி என அழைக்கப்பட்ட சிங்கள இளைஞர் அமைப்பு மீண்டும் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தது. கல்விகற்ற இளைஞர் மத்தியில் வேலையின்மையையும் அரசின் பொருளாதார கொள்கைகளினால் வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம் ஏற்படாமைதான் இதற்குக் காரணமாயிற்று. அவர்களின் இக்கிளர்ச்சி 1987இல் இலங்கை இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பொழுது உச்ச நிலையை அடைந்தது. இதற்கமைய உருவாக்கப்பட்ட மாகாண சபைகளும் அதிகாரப்பகிர்வும் நாட்டை பிளவுபடுத்தும் என அவர்கள் அஞ்சியதனால்தான் இக்கிளர்ச்சி வலுவடைந்தது. இதனைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. ஆதலால் பொலிஸாருக்கும் இராணுத்தினருக்கும் தெரிந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி கிளர்ச்சியை அடக்கும் படி பணிக்கப்பட்டனர். அத்தருவாயில் பொலிஸாரினதும் இராணுவத்தினரினதும் மனங்களில் சட்டத்தை துச்சமாக மதித்து செய்யப்படும் மன நிலை முதிர்மையடைந்த நிலையில் இருந்தது. அதன் விளைவால் கிளர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜேவிபியினரில் பலரின் தலைகளைத் துண்டித்து வீதி ஓரங்களிலும் சந்திகளிலும் ஏனையோருக்கு அச்சம் எற்படும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தனர். அத்துடன், சந்தேக நபர்களை கடத்திச்சென்று சித்திரவதை செய்தலும் கொலைசெய்தலும் காணாமல் போகச்செய்தலும் பரவலாக நிகழ்ந்தன. இதனால், 1985 முதல் 1995 வரையிலான காலம் தெற்கில் அச்சம் நிறைந்தயுகமாகக் கருதப்படுகிறது. இவ்வகையிலான சம்பவங்கள் 1989/90 களில் நடைபெற்ற நாடாளுமன்ற/ ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் உச்ச நிலையில் இருந்தது. குறித்த காலத்தில் சுமார் 60,000 சிங்கள இளைஞர்கள் காணாமல்போனதாக கணிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில்தான் இலங்கையில் சட்டத்தை துச்சமாகக் கருதி பொலிஸாரும் இராணுவத்தினரும் வேறு நபர்களும் செயற்பட்ட நிலை தலை விரித்தாடியது.
இவ்வகையிலான சூழ்நிலையில்தான் 1994இல் சந்திரிகா பண்டாரநாயக அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். தனது தேர்தல் பிரச்சார காலத்த்தில் தன்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தால் குறித்த காலத்தில் சட்டத்தை துச்சமாக கருதி செயற்பட்டவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். அவ்வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாக 1994இல் பிராந்திய அடிப்படையில் காணாமல்போன சம்பவங்களை விசாரணை செய்வென மூன்று ஆணைக்குழுக்களை நியமித்தார். பின்னர் அவ் ஆணைக்குழுக்களால் விசாரிக்க முடியாது எஞ்சியிருந்த சுமார் 10,000 முறைப்பாடுகளை விசாரித்து முடிக்க சகல மாகாணங்களுக்கும் சென்று விசாரிக்கும் அதிகாரம் கொண்ட மற்றும் ஒரு ஆணைக்குழுவை 1998இல் நியமித்தார்.
ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் உண்மையைக் கண்டறியும் பொறுப்பைக் கொண்டனவே ஒழிய அவை நீதி வழங்கும் அதிகாரங்களைக் கொண்டவை அல்ல. குறித்த ஆணைக்குழுக்கள் காணாமல் போனவர்களைப் பற்றி தமக்குக் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரித்து அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார பத்திரத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தன. அவற்றுள் குறித்த காணாமல்போனமைகளுக்கு பொறுப்பு எனக் கருதக்கூடிய நம்பகரமான ஆதாரங்கள் எவர் தொடர்பிலாவது வெளிப்பட்டிருப்பின் அவர்களின் பெயர் பட்டியலை வழங்கும் பொறுப்பும் அளிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பில் தீர்மானம் எடுக்கையில் ஐயத்திற்கப்பாற்பட்ட ஆதாரங்களைத் தேடவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. மேலும், அவர்கள் கண்டறிந்த விடயங்கள் தொடர்பிலான அறிக்கையினை ஜனாதிபதிக்கே வழங்கும் பொறுப்பு இருக்கிறதே ஒழிய பொதுமக்களுக்கல்ல. அவ்வறிக்கையில் உள்ள விடயங்கள் யாவையுமோ அல்லது சில பகுதிகளையோ எவருக்கும் தெரியப்படுத்தாது வைத்திருக்கும் அதிகாரம் சட்டப்படி ஜனாதிபதிக்கு உண்டு. மேலும், அவ்வகையான அறிக்கைகளில் உள்ள சிபாரிசுகள் எதனையேனும் நடைமுறைபடுத்த வேண்டிய நிர்பந்தமும் அவருக்கில்லை. அதன் விளைவாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் உள்ள விபரங்கள் எவருக்கும் முழுமையாகத் தெரியவராது. ஆதலால், எந்தவொரு காணாமல் போனமைக்காவது எவரேனும் பொறுப்பு என அறிக்கையில் இருப்பின் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலே ஒழிய, எவருக்கும் அவரின் பெயர் தெரியவராது. அவ்வகையில் குறித்த ஆணைக்குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட, பொறுப்புக் கூறவேண்டியவர்களின் பெயர் பட்டியலில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெயர்களும், இராணுவத்தினர்களின் பெயர்களும் மாத்திரமன்றி, அரசியல்வாதிகளினதும் சாதாரண குடிமக்களினதும் பெயர்களும் உள்ளன (கட்டுரையாளர் இரு ஆணைக்குழுக்களின் செயலாளராக பணிபுரிந்துள்ளமையால் அவருக்கு தெரியும்). குறித்த நபர்களின் பெயர்பட்டியல் எத்தருணத்திலும் வெளிப்படுத்தப்படவே இல்லை. மேலும், ஆணைக்குழுக்களின் அறிக்கைகளின் சிபாரிசுகளுக்கமைய எந்த ஒரு நபருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவுமில்லை. மாறாக குறித்த பட்டியலில் உள்ள சில நபர்கள் தற்போழுது கூட அரசு அமைப்புகளின் சில முக்கிய பதவிகளில் உள்ளனர்.
இவ்வாணைக்குழுக்களின் அறிக்கைகளில் குறித்த காலத்தில் பல பாரிய புதைகுழிகள் பற்றிய விபரங்களும், சித்திரவதை முகாம்கள் பற்றிய விபரங்களும் உள்ளன. இது தொடர்பில் அவ்வகையிலான புதைகுழிகளுக்கு அருகாமையில் வசித்தவர்களும் சித்திரவதைக்குள்ளாகி உயிர் தப்பியவர்களின் சாட்சியங்களும் உள்ளன. அவற்றுடன் தொடர்புபட்டவர்கள் பற்றிய விபரங்களும் பதியப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் இதுவரையில் இவ்விடயங்கள் தொடர்பில் சம்பந்தபட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சித்திரத்தைக்கு உள்ளாகி தப்பி வந்து சாட்சியம் அளித்தவர்கள் இந்த நிலையினால் மன கஷ்டத்துடன் விரக்தியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுள் சிலர் சித்திரவதையின் பொழுது ஊனமடைந்த நிலையில் வந்து சாட்சியம் அளித்தனர்.
இவற்றினால் ஏற்கனவே சட்டத்தை துச்சமாகக் கருதி செயற்பட்டவர்களின் மனம் மேலும் உந்துதல் பெற்றது. அதனால் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் ஏற்பட்ட முரண்பாடுகளின் பொழுது அவர்கள் மேலும் துணிகரமாக அவ்வகையான செயல்களில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இவ்வகையான செயல்கள் தொடர்பில் சிங்கள மக்களும் இளைஞர்களும் அளித்த சாட்சியங்களைப் பொருட்படுத்தாது இருக்கையில் போர்க்காலத்தில் நடைபெற்ற மீறல்கள் தொடபில் விசாரணை ஒன்று நடைபெறும் தருவாயில் தமிழர்கள் அளிக்கும் சாட்சியங்களுக்கு என்ன நடக்கும் என்பதை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
இவையாவற்றிலிருந்து தெரியவருவது யாதெனில் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் எக்காரணத்திற்காக நியமிக்கப்பட்டனவோ அக்காரணங்கள் பூர்த்தியாகவில்லை என்பதேயாகும். எனினும், பாதிப்புற்றோரின் புலம்பலுக்கும் சர்வதேச ரீதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அவற்றைக் காட்டி சாட்டு போக்கு சொல்ல உதவி உள்ளன. இதன் பின்னர் வந்த அரசாங்கங்களுக்கு அவை இன்னொரு விதத்தில் உதவி உள்ளன. அதாவது, குறித்த வகையிலான குற்றச்செயல்களைச் செய்வதில் வல்லமை உள்ள பொலிஸ்/ இராணுவ அலுவலர்களை இலகுவில் கண்டுகொள்ளக்கூடிய பட்டியல் ஒன்றைத் தயார்படுத்திக் கொடுத்துள்ளது.
2006இலும் 2013இலும் முறையே நியமிக்கப்பட்ட மஹாநாம திலகரத்தின ஆணைக்குழுவுக்கும் உடலகம ஆணைக்குழுவுக்கும் அதே கதியே ஏற்பட்டது. எனினும், 2013இல் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றங்களை விசாரிக்கவென உடலகம ஆணைக்குழு நியமிக்கப்பட்ட பொழுது அதுவும் ஒரு போலி எனக் கூறப்பட்டதனால் அதன் செயற்பாடுகள் சர்வதேச பிரமாணங்களுக்கு அமைய நடைபெறுகின்றனவா என உறுதிப்படுத்துவதற்கு அரசு சர்வதேச நிபுணர் குழு ஒன்றினை வரவழைத்தது. அப்படியிருந்தும் அவ்வாணைக்குழுவும் தோல்வியில் முடிவற்றது. இது தொடர்பில் அந்த நிபுணர்குழு அவர்களினது இறுதி அறிக்கையில் – “மனித உரிமை மீறல்களை சர்வதேச வழிமுறைகளும் பிரமாணங்களுக்கமைய விசாரணை செய்ய தேவைப்படும் மன உறுதியும் அதற்கான கட்டமைப்புகளை அமைத்துக்கொள்ள முடியாமையும்” இவ்வாறு கூறி உள்ளது.
அக்குழு அதன் பணியினை முழுமையாகச் செய்யாது இடைநிறுத்தி விட்டு செல்ல நேர்ந்தது. அவ்வாறே அந்த ஆணைக்குழுவும் தனது விசாரணைகளை இடைநிறுத்த நேரிட்டது. இவ்வாணைக் குழு பற்றி குறித்த நிபுணர்களின் கருத்து இலங்கையில் நியமிக்கப்பட்ட ஏனைய ஆணைக்குழுக்களுக்கும் பொருந்தும். இப்படியான இந்த நிலை நிலவியதனாலேயே பொலிஸாரும் இராணுத்தினரும் 2009 நடைபெற்ற யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் அவர்களது செயற்பாடுகளின் பொழுது பரவலாக சட்டத்திற்கு சற்றேனும் மதிப்பளியாது செயற்பட்டமை ஆச்சரிய படவேண்டிய ஒரு விடயமன்று. யுத்தம் முடிவுற்ற பின் ஐநாவினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அன்றைய நிலைமை பற்றி இவ்வாறு கூறியது –
“யுத்தம் நடாத்தப்பட்ட முறை யுத்தக்காலத்திலும் சமாதானம் நிலவும் காலத்திலும் பேணப்பட வேண்டிய தனிமனித கௌரவத்தைப் பாதுகாப்பதற்கென வடிவமைக்கப்பட்ட சர்வதேச ஒழுங்குவிதிகளைப் பாரிய அளவில் முழுமையாக மீறி உள்ளது.”
இவ்வகையிலான கூற்றுகள் பல இருப்பினும் இவ்விடயம் தமது உள்விவகாரம் என இலங்கை அரசு தொடர்ந்து கூறி தட்டிக்கழித்து அவ்வகையான சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவையற்றது எனவும் போர்க்குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் கூறி வருகிறது. மேலும் “போர்வீரர்களாகக் கருதப்படும் இராணுவத்தினருக்கெதிராக எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்க விடமாட்டேன்” என பல தடவைகள் மேடைகளில் ஜனாதிபதி கூறி வருகின்றார். இவ்வகையில் இராணுவத்தினரைப் போற்றிப்புகழ்வது அவர்களிடம் இருக்கும் சட்டத்தை துச்சமாக மதித்து நடக்கும் இயல்பினை மேலும் வலுவடையச் செய்யாதா?
இலங்கையில் மனித உரிமை மீறல்களினால் பாதிப்புற்றோர் நிவாரணம் பெற உள்ள யாப்பு ரீதியான பொறிமுறைகளை சற்று நோக்குவோம். இலங்கையின் அரசியல் யாப்பின் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பிலான அத்தியாயத்தில் ஐ.நாவின் மனித உரிமை சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பல சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் பின்வரும் உரிமைகளும் சேர்க்கப்பட்டுள்ளன – சித்திரவதைக்கு உள்ளாகாமல் இருக்கும் உரிமை, சட்டத்திற்கு முரணாக கைது செய்யப்படாது இருக்கும் உரிமை, நீதி ஒழுங்குகளுக்கு அமைவாக குற்றம் காணப்படும் வரை நிரபராதியாகக் கருதப்படவேண்டும் என்ற நிலை, சகலருக்கும் சட்டத்தின் பாதுகாப்பு சமமாக கிடைக்கக் கூடிய நிலை முதலியனவாகும். இவை யாவும் இலங்கை யாப்பில் இருந்தும், இவ்வுரிமைகள்தான் அதிக அளவில் வெளிப்படியாகவே அன்றும் இன்றும் மீறப்பட்டுவரும் உரிமைகளாகும்.
யாப்பின் அதே அத்தியாயத்தில் இன்னுமொரு பகுதியில் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நிலை இருக்கும் தருவாயில் அவர்களைப் பாதுகாக்கவென அமுலில் இருக்கும் சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் காலங்களில் இவ்வுரிமைகள் மறுக்கப்படலாம் என உள்ளது. இவ்வேற்பாடு அரசு உரிமைகளை மீறி செயற்பட வசதி செய்து அவற்றை நியாயப்படுத்த உதவியாக இருந்து வருகிறது. முரண்பாடுகள் இருந்த பெருமளவு காலங்களில் விரும்பத்தகாத ஒழுங்குவிதிகளைக் கொண்ட அவசரகால நிலைமை சட்டமும் வெறுக்கத்தக்க விதிகளைக் கொண்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் அமுலில் இருந்தன என்பது யாவரும் அறிந்த விடயமே. இச்சட்டங்கள் சகலராலும் சர்வதேச ரீதியில் கூட கண்டனத்திற்குள்ளான சட்டங்கள் ஆகும். அதன் விளைவாக இலங்கையரசு அவசரகால விதிகளைத் தப்பட்டம் அடித்து நீக்கியது. ஆனால், அதேவேளையில் அச்சட்டத்தில் இருந்த விரும்பத்தகாத ஏற்பாடுகள் பலவற்றை மறைமுகமாக பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்துக் கொண்டுள்ளது. இதனை கூடிய விரைவில் நீக்குவதாக ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு இலங்கை வாக்குறுதி கொடுத்திருந்தும் இன்றுவரை அச்சட்டம் நீக்கப்படவில்லை .
இவ்வகையிலான இன்னும் ஒரு சட்டமானது சித்திரவதைகளை தடுப்பதற்கென நிறைவேற்றப்பட்ட சட்டமாகும். அச்சசட்டம் 1994லில் இலங்கை ஏற்றுக்கொண்ட சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா. சமவாயத்திற்கு அமைவானதாகும். சித்திரவதைகளைத் தடுக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தில் சித்திரவதை தொடர்பிலான வழக்குகள் சட்டமா அதிபரினால் மாத்திரமே தாக்கல் செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் பயனற்றதாகப்பட்டுள்ளது. இவ்வகையிலான ஏற்பாடுகள்தான் இப்பேற்பட்ட உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தை துச்சமென மதித்து செயற்படுவதற்கு ஒத்தாசையாக இருந்து வருகிறது.
ஐ.நா. சபையில் வருடாந்தம் நடைபெறும் UPR என அழைக்கப்படும் நாடுகளின் மனித உரிமைகள் விடயங்களின் முன்னேற்ற மீளாய்வு செய்யும் தொடர் கூட்டங்களின் பொழுது இலங்கை தவறாது நாட்டின் நிலைமைகள் பற்றி யாவையும் சிறப்பாக உள்ளதென்ற போலி அறிக்கையினையே சமர்ப்பித்து வந்துள்ளது. குறைகூறப்படும் விடயங்கள் தொடர்பானவற்றை திருத்திக்கொள்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவதாக உறுதியினை தவறாது கூறிக்கொண்டு வந்துள்ளது. பல வேளைகளில் முன்னேற்றம் அடைந்து வருவது போன்ற தோற்றத்தைக் காட்டக்கூடிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவ்வாறான செயற்பாட்டிற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் அண்மையில் அமைக்கப்பட்ட OMP என அழைக்கப்படும் காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகமாகும். அதற்கான சட்டம் ஏற்பாடு செய்து இரு வருடங்களுக்குப் பின்னரே இவ்வலுவலகம் நிர்மாணிக்கப்பட்டது. எடுத்த பார்வையிலேயே இவ்வலுவலகம் போர்க்காலத்தில் காணாமல்போனமைகளினால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யும் போன்று தோன்றுகிறது. எனினும், குறித்த சட்டத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்குமிடத்து அது அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய அமைப்பு அல்ல என புலப்படும். குறித்த சட்டத்தின்படி அதன் செயற்பாடுகள் அதிரகசியமாகவே வைக்கபடவேண்டியது. அவ்வலுவலகத்தின் புலனாய்வுகளால் கண்டுகொள்ளப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எவருக்கும் எதிராக குற்றவியல் அல்லது சிவில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. மேலும், அவ்வலுவலகத்தின் செலவுக்கான நிதி ஜனாதிபதியின் செயலாளரின் பொறுப்பில் உள்ள திரட்டிய நீதி மூலமே வழங்கப்பட உள்ளதாலும், அங்கத்தவர்களின் 3 வருடகாலம் முடிவடைந்த பின் தொடர்ந்தும் பதவிக்கமர்த்தப்படலாம் என உள்ளதாலும் அவ்வலுவலகத்தின் சுயாதீனத் தன்மை கேள்விக்குரியதாகிறது.
இது இவ்வாறிருக்க இதுவரை நபர் ஒருவரை காணாமல்போகச் செய்வது என்பது இலங்கையின் தண்டனை கோவையில் ஒரு குற்றச்செயலாக்கப்படவில்லை. அத்துடன், குறித்த நபர் ஒருவர் இன்னொருவரின் பணியாளராகப் பணிபுரிந்த பொழுது செய்யும் தவறுகளுக்கு அவரை பணிக்கு அமர்த்தியவரும் பொறுப்பு கூற வேண்டும் என்ற கோட்பாடு (Command Responsibility) இதுவரை இலங்கை சட்டத்தில் இல்லை. இவற்றின் விளைவாக இலங்கையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் சட்டத்திற்கு உரிய மதிப்பளியாது செயற்படுவது தற்காலத்திலும் சர்வ சாதாரணமாக உள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபை கூட இலங்கை அரசின் செயற்பாடுகளை கண்டும் காணாது உள்ளது போல் தெரிகிறது. அதனாலோ என்னவோ ஐ.நா. மனித உரிமைகள் சபையின் இலக்கம் 30/1 கொண்ட தீர்மானத்திற்கு இணங்கிக் கொண்டவாறு இலங்கை செயற்பட தொடர்ந்தும் கால அவகாசம் கொடுத்து வருகிறது. இவ்வகையிலான தாராளமயத்தன்மை ஐரோப்பிய யூனியனுக்கும் உள்ளது போல் தெரிகிறது. அது இலங்கையின் கூற்றுகளை நம்பி இடைநிறுத்தப்பட்டிருந்த வர்த்தக வரி சலுகையிற்கான தடையை நீக்கி உள்ளது. இவ்வகையான நிகழ்வுகள் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பு அமைப்புகள் உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களில் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கு இடமளிக்கின்றன. இதனால் தான் 2015ஆம் ஆண்டு புதியதொரு அரசு பதவியேற்ற பின்னும் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் பலர் ஐக்கிய இராச்சியத்திலும் வேறுநாடுகளிலும் தஞ்சம் கோரியுள்ளனர்.
ஆதலால், இவ்விடயம் தொடர்பில் சர்வதேச சமூகம் தனது கவனத்தைச் செலுத்தி இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான செயற்பாடுகளை அடையாளம் கண்டு இலங்கை வெளியிடும் உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை நம்பாது, உரிமை மீறப்பட்டவர்களைப் பாதுகாக்க ஐ.நாவின் “உரிமை மீறப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு” (Right to protect) தொடர்பான கோற்பாட்டிற்கமையவாவது அவர்களைப் பாதுகாக்க முன்வரவேண்டும்.
எம்.சி.எம். இக்பால்
ஆசிரியர் குறிப்பு: கட்டுரையாளர் முன்னைநாள் காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழுக்கள் இரண்டில் செயலாளராக கடமைபுரிந்திருக்கிறார்.
கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் “Impunity in Sri Lanka and the Commissions of Inquiry into Disappearances” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கமே மேல் தரப்பட்டுள்ளது.
தொடர்புபட்ட கட்டுரைகள்: “காணாமல்போனவர்களைத் தேடிக்கொண்டிருப்போரின் அபிலாசைகளை OMP பூர்த்தி செய்யுமா?”, “ஆகாயத்தில் ஒரு வாக்கு”