“ஆடிக் கலவரம் இடம்பெற்று 35 வருடங்கள் கடந்துள்ள போதிலும் உயிரிழந்த மக்களை நினைவுகூர்வதற்கான வாய்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. ஒரு நினைவுத்தூபி கூட இல்லை. இந்த விடயத்தில் அரசாங்கத்தையோ அல்லது சிங்கள மக்களையோ குறைகூற முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். நாங்கள்தான் நினைவுத்தூபியொன்றை உருவாக்கியிருக்க வேண்டும்.
நாங்கள் என்ன செய்திருக்கிறோம்? இந்த ஆடி மாதத்தில், இந்த நாளில் மட்டும்தான் நினைவுகூருவோம். பிறகு வேறு விடயங்கள் வர அதை நோக்கி பயணிப்போம். இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற கலவரங்களை இனச் சுத்திகரிப்பாக முதன்மைப்படுத்தி அவற்றை நினைவுகூரக்கூடிய வகையில் வரலாற்று மையத்தையோ அல்லது நினைவுத்தூபியொன்றையோ நிறுவ வேண்டும்.”
ஜூலை கலவரம் இடம்பெற்று 35 வருடங்களாவதை முன்னிட்டு ‘மாற்றம்’ பல்வேறு துறைசார்ந்தவர்களை நேர்க்காணல் கண்டுவருகிறது. சிறுபான்மை மக்களுக்கெதிரான சிங்கள பெளத்த மேலாதிக்கச் சிந்தனை, நினைவுச்சின்னமொன்றை அமைக்கும் விடயத்தில் தமிழ் மக்களின் இயலாமை, 83 உட்பட ஏனைய கலவரங்களை இனச்சுத்திகரிப்பாக முதன்மைப்படுத்துவதன் அவசியம் குறித்து ஆவணப்பட இயக்குனர் ஜெரா பேசுகிறார்.
ஆசிரியர் குறிப்பு: கறுப்பு ஜூலை தொடர்பாக மாற்றம் வௌியிட்டுள்ள கட்டுரைகளைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.