புதைக்குழி தொடர்பான கருத்துக்களை கேள்விக்கு உட்படுத்தல்
சில மாதங்களுக்கு முன்பு மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக அரச அதிகாரிகளால் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
புதைகுழி அகழ்வதை மேற்பார்வை செய்த அரச மருத்துவ அதிகாரியான தனஞ்சய வைத்தியரத்ன, உடலங்கள் அடுக்கடுக்காக புதைக்கப்பட்டிருந்தனவென்றும், புதைகுழியில் எந்தவொரு உடைகள் அல்லது மனிதனால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் எதனினதும் அறிகுறிகள் காணப்படாததையிட்டு தான் “மிகவும் கவலையடைந்தார்” என்றும் தெரிவித்தார் என பிபிசி ஜனவரியில் அறிவித்தது. பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் என 83 பேர்களின் எலும்பு எச்சங்கள் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்டன. The Republic Square notes என்ற தளம், “அரச அதிகாரிகள், அப்பிரதேசம் நீண்டகாலம் தமிழ் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருந்ததினால், அவை தமிழீழ விடுதலைப் புலிகளின் படுகொலைகளினால் ஏற்பட்டவை என ஆரம்பத்தில் கூறினார்கள். அத்தோடு, பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் கூட, இந்த உடலங்கள் 1930களில் அந்தப் பிரதேசங்களில் ஏற்பட்ட ஒரு மலேரியா நோய்த் தொற்றுகையினால் இறந்திருக்கலாம் என உறுதிபடக் கூறினார்” எனக் குறிப்பிட்டிருந்தது.
மார்ச் 9ஆம் திகதி, புதைகுழி தோண்டப்படுவது நிறுத்தப்பட்டது. ரொய்டர்ஸ் வெளியிட்ட ஒரு செய்தியில், அரச நிர்வாகத்தின் கீழான தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செனரத் திசாநாயக்க, உடலங்கள் ஒரு “திட்டவொழுங்கில் புதைக்கப்பட்டிருப்பதால்” அது ஒரு மனிதப் புதைகுழியல்ல என்று தெரிவித்தார்.
“இவை சுமார் 50 வருடங்கள் பழமையானவை. அது ஒரு மயான பூமி. கல்லறைகளின் அடையாளங்களை எங்களது உத்தியோகத்தர்கள் கூட இணங்காணுவர். இதுவரை 83 எலும்புக்கூடுகளை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். நாளையிலிருந்து மேலும் அகழுவதை நாங்கள் நிறுத்தி விடுவோம்” என அவர் ரொய்டர்ஸுக்கு கூறினார்.
மார்ச் 10ஆம் திகதி இவரது கருத்தை அதன் முதல் பக்கத்தில் டெய்லிநியூஸ் பத்திரிகை வெளியிட்டதுடன் ஏனைய அரச ஊடகங்களும் அவரின் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்திருந்தன.
புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரச படைகள் மீது பல்வேறு தரப்புகளும் விரலை நீட்டுகின்ற இந்த சந்தர்ப்பத்தில், அது ஒரு சாதாரண மயான பூமி என உறுதிப்படுத்தி பணிப்பாளர் நாயகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“இந்த இடம் 1940இலிருந்து 1953க்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த ஒரு மயானம்” எனவும், மற்றும் சிரேஷ்ட ஆராய்ச்சித் தொல்பொருளியலாளர்களான நாமல் கொடித்துவக்கு மற்றும் ஏ.ஏ.விஜயரட்ன ஆகியோரும் கூட அந்த இடம் மிகவும் பழமையான ஒரு மயான பூமி என்ற முடிவுக்கே வந்துள்ளனர் என கலாநிதி. திசாநாயக்க கூறினார் என டெய்லி நியூஸ் அந்தச் செய்தியில் தெரிவித்துள்ளது.
இத்கையதொரு பின்னணியில், Groundviewsக்கு 1955 இல் வரையப்பட்ட, அப்பிரதேசத்தின் அளவீட்டு வரைபடம் (survey plan) அனுப்பப்பட்டது.
தெளிவாக காண படத்தை கிளிக் செய்யவும். மஞ்சள் வர்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியே புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டு அகழ்வு வேலைகள் நடைபெற்ற இடமாகும்.
திருக்கேதீஸ்வரக் கிராமத்தின் வரைபடம் P.Plan S 677, வரையப்படுவதற்கு அளவிடப்பட்ட சமயத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ அந்தப் பிரதேசம் ஏதேனும் மயானத்தைக் கொண்டிருந்தமையைப் பதிவு செய்திருக்கவில்லை. அப்பிரதேசத்திலிருந்த காணிகள் 1954, 1955 மற்றும் 1961 இலிருந்தான அளவீட்டு ஆவணங்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
தெளிவாக காண படத்தை கிளிக் செய்யவும்.
காணித் துண்டு 32க்கு எதிரே, 80களின் பிற்பகுதியிலான சண்டைகளில் அது அழிக்கப்படும் வரை அந்த இடத்தில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒரு சுற்றுலா விடுதி இருந்ததாகவும், ஏதோ ஒரு சமயத்தில் அதே இடத்தில் ஒரு கூட்டுறவுக் கடை ஒன்று இருந்ததாகவும் Groundviewsக்கு அறியத்தரப்பட்டது. இந்த விடயம் சவாலுக்கு உட்படுத்தக்கூடியதும் தவறானது என நிராகரிக்கப்படக்கூடியதுமானதுதான். ஆனால், தற்போதைய மயான பூமியான காணித் துண்டு 32, அளவையாளர் நாயகத்தின் ஆவணங்களில், ஒரு கட்டப்பட்ட கிணற்றுடன் கூடிய அடர்ந்த காட்டுப் பகுதியாகவே காட்டப்பட்டுள்ளது. அதனையொட்டிய காணிகளும் கூட, ஒரு மயானம் அல்லது புதை பூமி என்பதற்கான எந்தப் பதிவையும் காண்பிக்கவில்லை.
இதனால், தொல்பொருளியல் திணைக்களத்தின் கூற்றுக்கள் சந்தேகத்திற்குரியதாகும். கலாநிதி. திசாநாயக்க மற்றும் தொல்பொருளியல் திணைக்களம் என்பன, இந்த இடம் உண்மையிலேயே ஒரு மயான பூமிதான் எனவும், கண்டெடுக்கப்பட்ட அனைத்து மனித எச்சங்களும் அந்த நிலம் மயான பூமியாக உபயோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் காலப்பகுதியைச் சேர்ந்தவை என காபன் கதிர்வீச்சு மூலம் மிகவும் துல்லியமாக நிரூபித்துக் காண்பிக்க வேண்டும். அவ்வாறு நடந்தேறாவிட்டால் மன்னார் புதைகுழிகள் தொடர்பாக மேலும் உறுதியான சுயாதீனமான புலன்விசாரணையைக் கோருவோர்கள் திருப்தியுறுவது அல்லது மௌனமாவது மிகவும் அசாத்தியமேயாகும்.
Groundviews தளத்தில் வௌியான கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.