பட மூலம், SrilankaBrief

எமது வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வாரந்தோறும் அரசியல் நிலைவரங்கள் குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்கள் என்ற வடிவில் தனது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி முரசொலி பத்திரிகையில் ‘உடன்பிறப்புகளுக்கு’ என்ற தலைப்பில் எழுதிய கடிதங்களை நினைவுபடுத்துவதாக எமது முதலமைச்சரின் இந்தக் கேள்வி பதில்கள் அமைந்திருக்கின்றன.

தனது ‘உடன்பிறப்புகளுக்கு’ விக்னேஸ்வரன் கூறுகின்ற அரசியல் ஆலோசனைகள் அல்லது செய்கின்ற போதனைகள் என்று இதை வர்ணிக்கலாம். அதை எமது தமிழ்ப் பத்திரிகைகள் ஒரு சொல் தவறாது செம்மையாகப் பிரசுரித்துவருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

கடந்த வாரம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களுக்குப் பிறகு தோன்றியிருக்கும் அரசியல் நிலைவரங்கள் குறித்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முதலமைச்சர் தனது ‘உடன்பிறப்புகளுக்கு’ விளக்கமளித்திருந்தார். அதில் அவர் “எமது உரிமைகளையும் உரித்துக்களையும் பெற்றுக்கொள்வதில் சமரசத்துக்கு இடமின்றி தீர்க்கதரிசனத்துடன் செயற்பட்டிருந்தால் தெற்கில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும், சிங்கள மக்களின் காவலனாக மஹிந்த ராஜபக்‌ஷ இன்னமும் அடையாளப்படுத்தப்படுவதை இனவாதத்தின் பிரதிபலிப்பாகப் பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பல காரணிகள் ஒன்றாகச் சேர்ந்தே ராஜபக்‌ஷவை முன்னிலைப்படுத்தியுள்ளன என்று கூறியிருக்கும் விக்னேஸ்வரன், மேற்கு நாடுகள் ராஜபக்‌ஷவை எதிர்ப்பது சீனா எமது நாட்டில் காலூன்றக்கூடாது என்பதாலேயே. நாளைக்கு மேற்குலகுடன் சேர அவர் முன்வந்தால் மைத்திரியும் ரணிலும் தூக்கியெறியப்படுவார்கள். ஆகவே, இனவாதத்தைத் தூண்டுபவையாக ராஜபக்‌ஷவின் செயல்களைப் பார்க்கவில்லை. அவர் இனவாதக் கருத்துக்களை வெளியிடுகிறார் என்பதற்காக அவரை எதிர்க்கவேண்டியதில்லை என்று ஒரு விளக்கத்தையும் அளித்திருக்கிறார்.

இதைவிட வேறு ஒன்றையும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். அதுவே மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும். அதாவது, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பேய் பிசாசாகக் காட்டவேண்டிய தேவை மேற்கு நாட்டவர்களுக்கும் தற்போதைய இலங்கை அரசாங்கத்துக்கும் மேற்குலக மதங்களுக்குக் கட்டுப்பட்டிருப்பவர்களுக்கும் இருக்கலாம். அது அவர்களின் சுயநலன்களுக்கானது என்பதை நாம் மறத்தலாகாது என்றும் விக்னேஸ்வரன் கூறுகிறார்.

ராஜபக்‌ஷ இன்று தென்னிலங்கையில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவதற்கு பல காரணிகள் இருக்கின்றன என்ற முதலமைச்சரின் கருத்து சரியானதாக இருந்தாலும் கூட சிங்கள பௌத்த தேசியவாத அரசியல் சக்திகளின் பாதுகாவலனாக அவர் தன்னைக் காட்டிக்கொள்வதாலும் சிறுபான்மையினங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற்றைக் கூட ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத பேரினவாத அரசியல் நிலைப்பாடுடையவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவதாலுமே அவர் தென்னிலங்கையில் மிகுந்த செல்வாக்குடைய அரசியல் தலைவராக இருக்கமுடிகிறது. இனப்பிரச்சினைக்குத் தமிழர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயபூர்வமான அரசியல் தீர்வொன்று காணப்படவேண்டுமென்ற நிலைப்பாட்டை எடுத்து தனது தற்போதைய போக்கில் ஒரு தளர்வைக் காட்டுவாரேயானால் ராஜபக்‌ஷவினால் செல்வாக்கை நிலைநிறுத்த முடியாமல் போகும் என்பது நிச்சயம். அடிப்படையில் அவரின் செல்வாக்கு இனவாதத் தளத்தைக் கொண்டதே.

இதைப் புரிந்துகொள்ள முடியாதவரல்ல முதலமைச்சர் விக்னேஸ்வரன். ஆனால், ஏனோ அவர் சிங்கள மக்களின் காவலனாக அடையாளப்படுத்தப்படும் ராஜபக்‌ஷவின் செயல்களை இனவாதத்தின் பிரதிபலிப்பாகப் பார்க்கவில்லை என்று கூறி தன்னை ஒரு பொருந்தாத் தன்மைக்குள்ளாக்குகிறார். ராஜபக்‌ஷவுக்கு தமிழர்கள் மத்தியில் இருந்து எவரும் எதிர்பாராத நேசசக்தி ஒன்று கிடைத்திருக்கிறதோ?

ராஜபக்‌ஷவைப் பேய் பிசாசாகக் காட்டவேண்டியதேவை மேற்குலக மதங்களுக்குக் கட்டுப்பட்டிருப்பவர்களுக்கும் இருக்கலாம் என்று கூறியிருப்பதன் மூலம் விக்னேஸ்வரன் தமிழர்களுக்கு உணர்த்த முற்படுகின்ற செய்தி என்ன? மேற்குலக மதங்கள் என்று அவர் கூறுவது கிறிஸ்துவத்தைத் தவிர வேறொன்றுமாக இருக்கமுடியாது. ராஜபக்‌ஷவை தமிழர்களின் நியாயபூர்வமான அபிலாசைகளுக்கு எதிரானவர் (முதலமைச்சரின் பாசையில் பேய் பிசாசு) என்று காட்டுபவர்கள் கிறிஸ்தவர்களே என்று தமிழ்ச் சமூகத்துக்கு அவர் கூறுகிறாரா? யாரை மனதிற்கொண்டு அப்படி அவர் கூறுகிறார்?

இலங்கையில் தமிழ்த் தேசியவாத அரசியலில் இருந்திருக்கக்கூடிய ஆரோக்கியமான அம்சங்களில் ஒன்று மதச்சார்பின்மை என்பது எனது அபிப்பிராயம். இந்துவான ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை நிராகரித்து கிறிஸ்தவரான தந்தை செல்வாவை இறுதிவரை அரவணைத்தவர்கள் தமிழ் மக்கள். விக்னேஸ்வரனின் கருத்தில் தமிழ் தேசியவாத அரசியலில் ‘ஒரு இந்துத்வாவைத்’ திணிக்கும் நோக்கம் உட்கிடையாக இருக்கிறதோ?

வீ. தனபாலசிங்கம்