பட மூலம், Youtube
இலங்கையில் பெண்கள் மதுபானம் நிலையங்களில் வேலைசெய்வதற்கு இருந்தவந்த தடை மற்றும் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக நிதி அமைச்சால் அறிவிக்கப்பட்டு, அதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரத்துச்செய்து உத்தரவிட்டமை தொடர்பாக ‘அக்கறையுள்ள பிரஜைகள்’ என்ற குழுவினர் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.
கடந்த காலத்திலிருந்து இலங்கையின் ஜனாதிபதியாலும், அரசாங்கத்தாலும் இந்நாட்டில் பெண்களது சமத்துவம் தொடர்பாக வெளிப்படுத்தப்படுகின்ற கூற்றுக்கள் தொடர்பில் நாங்கள் எங்களது ஆழமான கரிசனையை வெளிப்படுத்த விளைகிறோம்.
அமைச்சரவை மட்டத்திலிருந்து 2014இலிருந்து, கூறப்படுகின்ற இக்கூற்றுக்கள், ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கும் தனி மற்றும் பொது வாழ்க்கைக்கான சமத்துவத்துக்கும், பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்படாமலிருத்தலுக்குமான உரிமையின் நவீனகால புரிதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லை என்பதையே சுட்டி நிற்கின்றது. தனக்கே தெரிந்த சிறந்த காரணங்களின் அடிப்படையில் ‘எல்லாப் பெண்களும், தங்களது அடுத்த பிறவியில் ஆண்களாகப் பிறக்கட்டும்’ என்று அமைச்சர் சிறிசேன கூறினார்.
கடந்த வார இறுதியில் ஜனாதிபதி சிறிசேன, 1979ஆம் ஆண்டின் 666ஆம் இலக்க, விசேட வர்த்தமானி மதுவரி அறிவித்தலுக்கான, பெண்கள் மதுபானத்தினைக் கொள்வனவு செய்யலாம் என்ற திருத்தத்தை இரத்து செய்யப்போவதாகத் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி சிறிசேனவுடைய அரசாங்கம் இந்நாட்டிலுள்ள பெண்கள் தொடர்பாக எடுத்து வரும் பகிரங்க நிலைப்பாடுகளின் போக்கினை அவதானிக்கையில், பெண்களது உரிமைகளை உறுதிப்படுத்துதல் என்பது முன்னுரிமைக்குரிய ஒரு விடயமல்ல என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது. ஜனாதிபதி, அடிக்கடி பெண்களை இரண்டாம் பட்ச பிரஜைகளின் ஸ்தானத்துக்கு தள்ளும் வகையில் ஒரு தலைப்பட்சமாக முடிவுகளையும், பிரகடனங்களையும் செய்வதானால் ஒருவேளை தன்னைஅரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளுக்கும் மேலாக கருதுகின்றாரோ? பௌத்த பிக்குகளுக்கும், ஏனைய சமயத் தலைவர்களுக்கும் ஜனாதிபதி சிறிசேன காட்டும் அதீத பணிவின் போக்கினை, அதிலும் குறிப்பாக பெண்களது சுதந்திரம் மற்றும் சுயாதிக்கம் தொடர்பிலான பணிவினைக் கவனத்தில் கொள்கையில் இந்த நாட்டின் தலைவர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டேயாதல் வேண்டும்.
பெண்களது சமத்துவம் மற்றும் பாரபட்சம் காட்டாமை என்பவற்றுக்கான இந்த அர்ப்பணிப்பின்மையும், பெண்களது யதார்த்த வாழ்க்கையிலிருந்தும் எப்போதோ கழிக்கப்பட்ட ‘முன்மாதிரியான இலங்கைப் பெண்மணி’ என்னும் பழைமையான சிந்தனையும், கூடுதலாக அண்மைக் காலங்களில் அரச கொள்கைகள் வரையும் ஊடுருவியுள்ளன. இந்தக் காரணத்தால், அரசாங்கத்தின் உள்ளிருந்து எழும் இறுக்கமான எதிர்ப்பினையும் பொருட்படுத்தாமல் பெண்களுக்கு எதிரான, பாரபட்சமான சட்டங்களையும், கொள்கைகளையும் திருத்துவதற்கான முயற்சிகள் காலத்துக்குக் காலம் மேலெழுகின்றன.
பிள்ளைகளையுடைய புலம்பெயர் பெண்களை பாரபட்சப்படுத்தும் அரசியலமைப்புக்கு முரணான குடும்பப் பின்னணி அறிக்கையானது ராஜபக்ஷவின் காலத்தில் உருவாக்கப்பட்டதெனினும், அதிகமதிகமான பெண்களை ஆவணப்படுத்தலின்றிய, பாதுகாப்பற்ற புலப்பெயர்வுக்கு தள்ளுகின்ற நிலையிலும் இது ஜனாதிபதி சிறிசேன அரசாங்கத்தினால் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது.
சிறுவர் திருமணம், பெண்கள் தமது திருமணத்துக்கு சம்மதம் அளிக்க முடியாமை போன்ற பாரபட்சமான ஏற்பாடுகளைத் திருத்துவதற்கான முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்திற்கான பரிந்துரைகள், முந்தைய ஆட்சிகளாலும் மற்றும் இன்றைய அரசாங்கத்தாலும் இன்றளவும் தாமதிக்கப்பட்டு, பிற்போடப்படுவதுடன், ‘சமூகத்தால்’ தீர்த்துக் கொள்ளப்பட வேண்டிய விடயமாக தாழ்த்தப்பட்டுள்ளது. இன்னும் நாட்டில் இடம்பெற்று வருகின்ற பெண்குறி சிதைவு (கத்னா) பற்றி முஸ்லிம் பெண்கள் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் ஆவணப்படுத்தியுள்ள ஆய்வுகள் தொடர்பில் அரசாங்கமானது இன்னும் அறிக்கை விடவில்லை அல்லது நடவடிக்கை எடுக்கவில்லை.
கருக்கலைப்பு தொடர்பான விடயத்தில், மருத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான சமூகத்தால், பெண்களை பாரிய அபாயத்துக்குள் தள்ளும் பழைமையான கருக்கலைப்புச் சட்டங்களைத் திருத்தும்படி மேற்கொள்ளப்பட்ட வலியுறுத்தல்கள் சமய நிறுவனங்களின் எதிர்ப்பால் ஜனாதிபதியினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் பெண்கள் பற்றிய தமது பழைமையான கண்ணோட்டத்தினை வைத்துக்கொள்ள சுதந்திரம் இருக்கும் அதே சந்தர்ப்பத்தில், அரசாங்க ஊழியர்களாக சம்பளம் பெற்றுக் கொண்டு இந்நாட்டின் பிரஜைகளுக்காக, அதிலும் அரைவாசி பெண்களாக இருக்கும் நிலையில், இத்தகைய நிலைப்பாட்டில் இருப்பது சட்டமுரணானதும், அரசியலமைப்புக்கு முரணானதுமாகும். பெண் வாக்காளர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும், இனி வரவிருக்கும் தேர்தலிலும் இதனைக் கவனத்தில் கொள்வார்கள்.
அக்கறையுள்ள பிரஜைகள்