பட மூலம், Groundviews

“தேசிய அடையாள அட்டை திட்டம் ஆட்சி முறையின் மிகமோசமான வடிவத்தை பிரதிபலிக்கின்றது” என பிரிட்டனின் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவேளை தெரேசா மே கருத்து தெரிவித்திருந்தார். பிரிட்டனில் தேசிய பயோமெட்ரிக் திட்டத்தை இரத்துச்செய்யும் சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்தி உரையாற்றியவேளையே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “அது நபர்களின் தனிப்பட்ட வாழ்கைக்குள் ஊருடுவும் தன்மை கொண்டது, அடாவடித்தனமானது, பயனற்றது, மிகவும் செலவானது’’ என அவர் குறிப்பிட்டிருந்தார். இது தனிமனித சுதந்திரம் மீதான தாக்குதல் என்றும், இதன் காரணமாக பெருமளவு நன்மைகள் எவையும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். சிவில் உரிமைகள் தொடர்பான மேயின் செயற்பாடுகள் குழப்பகரமானவை என்றபோதிலும், 2010 இல் கொன்சவேர்ட்டிவ் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவேளை பிரிட்டனின் தேசிய அடையாள அட்டை திட்டத்தை இரத்துச்செய்வதே அவரது முதல் நடவடிக்கையாக காணப்பட்டது. இதன் மூலம் பிரிட்டனில் தேசிய அடையாள அட்டை குறித்து காணப்பட்ட வலுவான விவாதம் முடிவிற்கு வந்தது.

இந்தத் திட்டம் வழமையான அரசியல் பகையாளிகள் மத்தியில் மோதலை உருவாக்கியதுடன் சிவில் சமூகத்தினர் மற்றும் கல்விமான்களின் கடும் எதிர்ப்பையும் சந்தித்திருந்தது. தேசிய அடையாள அட்டை திட்டம் அரசாங்கத்திற்கும் அதன் பிரஜைகளுக்கும் இடையிலான உறவில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அதனை எதிர்ப்பவர்கள் தெரிவித்தார்கள்.

பிரிட்டன் பிரஜைகளைப் போல இல்லாமல் இலங்கை மக்கள் அரசாங்கத்துடனான தங்கள் உறவை ஒருவித பலிக்கடா போன்று ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக தேசிய டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவது அரசாங்கத்திற்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள உறவில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை. இந்த புதிய திட்டம் கைவிரல் அடையாளங்கள், ஐரிஸ் ஸ்கான் (Iris scan)  – பயோமெட்ரிக்ஸ் – மத்திய தரவுத்தளம் உட்பட பல விடயங்களை அறிமுகப்படுத்தினாலும் இந்த மாற்றம் ஏற்படப்போவதில்லை.

இதன் காரணமாகவே கடந்த வாரம் உள்துறை அமைச்சர் எஸ்.பி. நாவின்ன இதனை அறிமுகப்படுத்தியவேளை எதிர்க்கட்சிகளிடமிருந்து சிறிய எதிர்ப்பு கூட வெளியாகவில்லை. மையநீரோட்ட ஊடகங்களும் சிவில் சமூகத்தினரும் இது குறித்து சிறிய விமர்சனத்தைக் கூட முன்வைக்கவில்லை. அரசாங்கத்தில் உள்ள சிவில் உரிமை போராளிகள் மற்றும் கூட்டு எதிரணியிடமிருந்தும் எந்தக் கருத்தும் வெளியாகவில்லை. அந்த நிகழ்வே மிகவும் சுவாரஸ்யமற்றதாக காணப்பட்டது. அமைச்சர் இப்போது நடைமுறையில் இருக்கும் அடையாள அட்டை தற்போதைய காலத்திற்குப் பொருத்தமற்றது என வாதிட்டதுடன், புதிய டிஜிட்டல் அடையாள அட்டை பயோமெட்ரிக் – குடும்பவிபரங்கள் போன்றவற்றை கொண்டிருப்பதால் அரசாங்கத்தின் சேவை வழங்கலின் திறன் அதிகரிக்கும், தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும், பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தும் எனத் தெரிவித்தார்.

மேலோட்டமாகப் பார்த்தால் அமைச்சரின் கருத்து அர்த்தமுள்ளதாகத் தோன்றலாம். நாங்கள் சுமந்து திரியும் தேசிய அடையாள அட்டை பழங்காலத்து தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, லமினேட் செய்யப்பட்ட அட்டை, ஒரு புகைப்படம் மற்றும் சில விபரங்களை மாத்திரம் அது உள்ளடக்கியுள்ளது, அரசாங்கத்துடன் நாளாந்த தொடர்பாடுதல் என்பது மிகவும் கடினமானதாக மாறியுள்ளது என்பது இன்று அனைத்து இலங்கையர்களுக்கும் பழகிவிட்ட ஒரு உண்மையாகக் காணப்படுகிறது. ஒருவர் தனது அடையாளத்தையும் ஏனைய விபரங்களையும் உறுதிசெய்வதற்கு பல ஆவணங்களை நிரப்பவேண்டும். பல இடங்களிற்கு அலைந்து திரியவேண்டும். 21ஆம் நூற்றாண்டிற்குள் நுழைந்து இரண்டு தசாப்தங்கள் ஆகியும் நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய முறை இதுவல்ல.

பட மூலம், Sunday Times

இலத்திரனியல் அடையாள அட்டை இவை அனைத்தையும் மாற்றும் எனத் தெரிவிக்கின்றனர். இலத்திரனியல் அடையாள அட்டை எச்.டி.எ.ம் முறையின் (Household Transfer Management (HTM) System) ஒரு பகுதி – இதன் மூலம் சமுர்த்தி உட்பட அரச உதவிகளை பெறுபவர்கள் தங்கள் பணத்தை சிறந்த முறையில் பெறமுடிகின்றது, ஊழல்களை தடுக்கமுடிகின்றது, மேலும், இது வரி சேமிப்பை இலகுவாக்குகின்றது, இது என்.பி.பியின் (National Payment Platform) முதுகெலும்பாக விளங்கவுள்ளதுடன் வங்கிக் கணக்குகளை கையாள்வதை இலகுவாக்குகின்றது, புதிய டிஜிட்டல் இலங்கைக்கு இலத்திரனியல் அடையாள அட்டை தேவை என இதனை ஆதரிப்பவர்கள் தெரிவிப்பார்கள்.  உங்கள் கைவிரல் அடையாளம் மற்றும் அடையாளங்கள் குறித்த தகவல்கள் உள்ளடங்கிய மத்திய தரவுத்தளம் சிறந்த சேவைகள் வழங்கப்படுவதை உறுதிசெய்கின்றது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், சந்தேகப்படுவதற்கான பல காரணங்கள் உள்ளன. முதலில் அரசாங்கத்தின்  தரவுத்தளங்கள் உட்பட அனேகமான மென்பொருள் அமைப்புகள் அடையாள அட்டை இலக்கத்தைத் தங்களுடைய தரவுதளங்களில் தனித்துவமான இலக்கமாகப் பயன்படுத்திவருகின்றன. சேவை வழங்குதலை தரமுயர்த்துவதே அரசாங்கத்தின்  முக்கிய நோக்கமாகயிருந்தால் தற்போது அரசாங்கத்திடமுள்ள தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவதும், தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையை ஏற்படுத்துவமே இலகுவான நடைமுறையாக விளங்கக்கூடும். இதனை சாத்தியமாக்குவதற்கோ பயோமெட்ரிக்கோ அல்லது உங்கள் அடையாள அட்டையில் இல்லாத விபரங்களோ அவசியமில்லை.

உலகின் உயர்தர டிஜிட்டல் சேவை வழங்கலைக் கொண்டுள்ள நாடுகள் தேசிய தரவுத்தளங்கள்  அல்லது  பயோமெட்ரிக் இல்லாமலே இதனை சாதித்துள்ளன. அதேவேளை, எங்கெல்லாம் பயோமெட்ரிக் முறை காணப்படுகின்றதோ அங்கெல்லாம் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தில் பெரும் வித்தியாசம் ஏற்படவில்லை.

பயோமெட்ரிக்கிற்கு அப்பால் – ஒரு தேசத்தின் முழுமையான அடையாள விபரங்களை மத்திய தரவுத்தளத்தில் சேகரித்துவைத்திருப்பது ஆபத்தானது. அதனை அரசாங்கமும் தனியாரும் பார்க்க முடியும். மேலும், இந்த அமைப்பு உடனடியாக கனிணிகளிற்குள் ஊடுருவுபவர்களின் இலக்காகலாம். சைபர் யுத்தம் இடம்பெறும் இந்த யுகத்தில் இலங்கை அரசாங்கம் தகவல் பாதுகாப்பில் எவ்வளவு அலட்சியமாக உள்ளது  என்பதையும் கருத்தில் கொள்ளும்போது இது நிச்சயமாக கரிசனைக்குரிய விடயமாக உள்ளது.

மேலும், முழுமையாக இந்த அமைப்பு முறை பிழையான நோக்கம்கொண்ட தனிநபர்கள் மற்றும் திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் கரங்களில் சிக்கக்கூடியதாக காணப்படுகின்றது. ஒரு நபர் அரசாங்கத்துடன் கொண்டிருக்கும் அனைத்து தொடர்புகள் குறித்த விபரங்களை வைத்திருப்பதும் – அவர்களுடைய வங்கி கணக்குகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் குறித்த விபரங்களை கொண்டிருப்பதும் ஆபத்தானதாகும்.

இந்த இலத்திரனியல் அடையாள அட்டை திட்டத்தைப் பாரிய கண்காணிப்பு நடவடிக்கைக்கும் பயன்படுத்தலாம். இதன் மூலம் அரசியல் எதிராளிகள், மாற்றுக்கருத்துக்களை கொண்டவர்கள், ஏனையவர்களை இலக்குவைக்க முடியும். சரியான அரசியல் தருணமும் பிழையானவர்கள் ஆட்சியில் இருப்பதும் இதற்கு போதுமானதாகும். இது  இலங்கைக்கு நீடித்த நிரந்தரமான ஆபத்தை  ஏற்படுத்துகின்றது என்பதைச் சொல்லத்தேவையில்லை.

உண்மையில் குறிப்பிட்ட இலத்திரனியல் அடையாள அட்டை பற்றிய கருத்து என்பது யுத்தத்திற்குப் பிந்திய தேசிய பாதுகாப்புச் சிந்தனையின் கீழ் உருவான விடயம். ‘நல்லாட்சி’ அரசாங்கம் அதனை சிறப்பான சேவை வழங்குதல் என்ற பெயர் மாற்றத்துடன் முன்வைக்க முயல்கின்றது.

இங்கே குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தும் பல நாடுகளில் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானில் அந்த நாட்டின் தேசிய அடையாள அட்டை திட்டத்தை சாத்தியமாக்கும் NADRA தகவல்தளம் பலமுறை ஹக்கர்களின் தாக்குதலிற்கு உள்ளானது. அதில் சில வெற்றியும் அளித்தன. கண்காணிப்பு தேசத்தின் புதிய கண்டுபிடிப்புகள் என வர்ணிக்கப்படக்கூடிய விடயங்களிற்கும் இந்தத் திட்டம் வித்திட்டுள்ளது. பாகிஸ்தானின் காவல்துறையினர் தற்போது இதற்கு மேலும் புதிய வடிவத்தை வழங்கியுள்ளனர். உதாரணத்திற்கு, பாகிஸ்தானிய ஹோட்டல்கள் மற்றும் அங்கு தங்கியிருப்பவர்களை கண்காணிப்பதற்காக அவர்கள் ‘ஹோட்டல் ஐ’ என்ற அப்பினை உருவாக்கியுள்ளனர். அத்தோடு, ‘முன்னறிவிக்கும் குற்ற மென்பொருள்’, டிஜிட்டல் அடையாள அட்டைக்குள் நுழைந்தவுடன் குடும்பவிபரம், ஏடிம் அட்டை விபரம், ஹோட்டல் பதிவு, இருக்கும் இடம் போன்ற அனைத்து விபரங்களையும் தெரிவிக்ககூடியது.

இலங்கையின் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்திற்கு பாகிஸ்தான் நார்டாவின் உதவி கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தத் திட்டத்தின் முதற்கட்டத்தினை பாகிஸ்தானே நிறைவேற்றியிருந்தது. இதன் பின்னரே தற்போதைய அரசாங்கம் இரண்டாம் கட்டத் திட்டத்திற்காக புதிய கேள்விப்பத்திர அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அட்டை திட்டம் என இந்தியாவின் ஆதார் அட்டையைக் குறிப்பிடலாம். எனினும், இது துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அது தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரந்துபட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியதற்கான முக்கிய காரணங்களாக முன்வைக்கப்படும் கதைகள் நிரூபிக்கப்படாதவையாகக் காணப்படுகின்றன. ஆதார் அட்டையின் எல்லை விரிவடையத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அதனை ஆதரித்தவர்களும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். தனிமனித இரகசியத்திற்கான அல்லது அந்தரங்கத்திற்கான உரிமை என்பது அடிப்படை உரிமையே என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பொன்றையும் வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு காரணமாக ஆதார் அட்டையை நடைமுறைப்படுத்த முடியாது எனவும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் தனிமனித இரகசியம், தரவுப் பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கான போதிய சட்டங்கள் இல்லாததை கருத்தில்கொள்ளும்போது துஷ்பிரயோகத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. தரவுகளை இலத்திரனியல் மயப்படுத்தும்போது தனியார் மற்றும் பொதுத் துறையில் தனிமனித இரகசியம், தரவுப் பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு போன்ற விடயங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். ஆனால் இலத்திரனியல் அடையாள அட்டை என்பது விடயங்களை அவசரமானதாக மாற்றியுள்ளது.

இலத்திரனியல் அடையாள அட்டையை உருவாக்குவது குறித்த சட்டமூலம் பல விடயங்கள் குறித்த வெற்றிடங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. இதனைப் பயன்படுத்திய பாரிய கண்காணிப்பு அமைப்பை உருவாக்கலாம். இந்தச் சட்டமூலம் அரசாங்கத்திற்கு தனது பிரஜைகளின் கைவிரல் அடையாளங்கள், குடும்பத்தினர் குறித்த விபரங்கள் உட்பட ஏனைய பல விடயங்களைச் சேகரித்து தேசிய ஆட்பதிவு என்ற மத்திய தரவுத்தளத்தில் சேர்ப்பதற்கான அனுமதியை வழங்குகின்றது. மேலும், தேசிய பாதுகாப்பு, குற்றங்களைத் தடுத்தல் போன்ற அடிப்படையில் அனுமதியளிக்கப்பட்ட சிலர் இவற்றைப் பயன்படுத்துவதற்கும் அனுமதியளிக்கின்றது.

நாங்கள் தற்போது பயன்படுத்தும் அடையாள அட்டை பொதுமக்களின் விருப்பத்துடன் அடையாளத்தை உறுதிசெய்யும் முக்கியமான கொள்கையை பாதுகாத்தது. நீங்கள் யார் என கோருபவர்களிடம் நீங்கள் யார் என்பதை நிரூபிக்க முற்படும்போது நீங்கள் உங்கள் அடையாள அட்டையைக் காண்பிக்கின்றீர்கள். அதனை பயன்படுத்தி உங்கள் தோற்றம் உறுதிப்படுத்தப்படுகின்றது. இது முழுமையற்றதாகக் காணப்பட்டாலும் அது ஓரளவிற்கு அந்தரங்கத்தினைப் பாதுகாக்கின்றது. தற்போதைய அடையாள அட்டை ஓரளவிற்கு உங்கள் தனிப்பட்ட இரகசியங்களைப் பாதுகாத்து வருகின்றது. இலத்திரனியல் அடையாள அட்டை மூலம் குறிப்பிட்ட பிரஜையின் விருப்பமின்றியே அவர் பற்றிய தகவல்களைப் பெறமுடியும்.

இதற்கு அப்பால் இந்தியா அல்லது பிரிட்டன் போன்ற நாடுகளில் காணப்பட்டது போன்ற விவாதங்கள் கருத்துப்பரிமாற்றங்கள் இன்றி இலங்கையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த ஒரு வருட காலப்பகுதியில் எழுதப்பட்ட மிகக்குறைந்த அளவிலான கட்டுரைகளிற்கு அப்பால் இலங்கையர்கள் இந்த விடயம் குறித்து விவாதிக்க விரும்பவில்லை அல்லது இது குறித்து அறியாமல் உள்ளனர்.

இந்தியாவில் சிவில் சமூகத்தினரின் கடும் அழுத்தம் காரணமாக ஆதார் அட்டையின் முகாமைத்துவ நிர்வாக சபை பெருமளவு தகவல்களை வெளியிட்டது, நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொண்டது, தன்னிடமுள்ள ஆவணங்களை வெளியிட்டது. இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் இந்தத் திட்டம் தொடர்பாக பழைய வெப் பக்கமொன்றை மாத்திரமே கொண்டுள்ளது.

இலங்கையின் இலத்திரனியல் அடையாள அட்டையின் தொழில்நுட்ப கட்டமைப்பு குறித்து எதுவும் தெரியாத நிலை காணப்படுகின்றது. தகவல் எவ்வாறு சேமிக்கப்படுகின்றது, பாதுகாக்கப்படுகின்றது, பகிர்ந்துகொள்ளப்படுகின்றது மற்றும் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றது என்பது தெரியாத நிலை காணப்படுகின்றது. தரவுகளை பயன்படுத்துவதற்கு யாரிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, தனிநபர்களின் இரகசியங்கள் எவ்வாறு பாதுகாக்கப்படும், பிரஜைகள் கண்காணிக்கப்படுவதை தடைசெய்வதற்கான என்ன ஏற்பாடுகள் உள்ளன போன்ற விபரங்களும் எவருக்கும் தெரியாத நிலை காணப்படுகின்றது.

இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இது தவிர கொள்கையை அடிப்படையாகக் கொண்ட முக்கிய கேள்விகள் காணப்படுகின்றன. இதன் மூலம் ஏற்படும் நன்மைக்கும், இதனை முன்னெடுப்பதால் உண்டாகக்கூடிய செலவீனங்களிற்கும் இடையிலான  இடைவெளி மதிப்பிடப்பட்டுள்ளதா? இந்தியாவின் ஆதார் அட்டை நடைமுறைப்படுத்தலினால் கிடைக்கப்பெற்ற அனுகூலங்கள் எவை என்பது குறிப்பிடப்படவில்லை, இலக்கங்கள் முன்வைக்கப்படவில்லை. இலங்கை அறிமுகப்படுத்தப்படவுள்ள முறை சீனாவினால் பின்பற்றப்படும் முறையா? அல்லது தனிமனித இரகசியம், அந்தரங்கம் போன்றவற்றை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றதா அல்லது இரண்டிற்கும் இடைப்பட்டதா? ஏற்றுக்கொள்ளக்கூடிய சேவை வழங்கல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக எங்கள் தனிமனித அந்தரங்கத்தில் எவ்வளவை நாங்கள் இழக்கவேண்டும்? தொழில்நுட்பத்தைத் தழுவுதல் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்துதல் போன்றவற்றினால் உருவாகக்கூடிய சவால்களிற்கு தீர்வைக் காண்பதற்கு என்ன சட்டங்களை நாங்கள் உருவாக்கவேண்டும்?

இவற்றில் சிலவற்றிற்கு பல குழப்பகரமான விடைகள் காணப்படலாம். விட்டுக்கொடுப்புகள் காணப்படவேண்டும். அதேவேளை, ஆட்சிமுறையில் டிஜிட்டலிற்கு மாறுதல் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பேணுதல் ஆகியவற்றை சாத்தியமாக்குவதற்கான வழிவகைகளை கண்டறியவேண்டும். இதனை எவ்வாறு சாத்தியமாக்குவது?

இலத்திரனியல் அடையாள அட்டை குறித்த எங்களது தற்போதைய மௌனங்கள் இதற்கான விடைகளை பெற்றுத்தரப்போவதில்லை.

We need to talk about that e-NIC project” என்ற தலைப்பில் டி.ஏ. ஜயமான்ன என்பரால் எழுதப்பட்டு Groundviews தளத்தில் வௌியான கட்டுரையின் தமிழாக்கம்.