பட மூலம், Getty Images

இலங்கையின் சக்தி வாய்ந்த பௌத்த மத பீடங்களான சியாம், அமரபுர, ராமாண்ய ஆகிய மூன்றும், இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பொன்று தேவையில்லை என்று, ஒரு மனதாக தீர்மானித்திருக்கின்றன. மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் யோசனையையும் மாகாநாயக்கர்கள் நிராகரித்திருக்கின்றனர். இந்த நிலையில், புதிய அரசியல் யாப்பு தொடர்பான எதிர்பார்ப்புக்கள் மீது ஒரு பெரிய கேள்விக் குறி விழுந்துள்ளது. சிங்கள அரசியல் என்பதும், சிங்கள பௌத்தம் என்பதும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றே. இதுவே இத்தீவின் சிங்கள அரசியல் வரலாறு. இந்த வரலாற்றுப் போக்கை முன்னிறுத்தி சிந்தித்தால் தற்போது, மகாநாயக்கர்கள் நிறைவேற்றியிருக்கும் தீர்மானம் தொடர்பில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தெற்கின் அரசியல் விகாரைகளுடன் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. எவ்வாறு? மகுடி ஓசைக்கு முன்பு பாம்பு கட்டுண்டு கிடக்கிறதோ, அதே போன்றுதான் சிங்கள தலைவர்களும் விகாரைகளுக்குள்ளிருந்து வரும் தீர்மானங்களுக்கு ஏற்பவே வளைவர்.

சிங்கள பௌத்த தேசியவாதம் மிகவும் பலமானது. பாரதூரமான நெருக்கடிகள் ஏற்பட்டாலன்றி, அது ஒரு போதுமே கீழறங்கிவராது. இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் அது இறங்கிவந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ ஆற்றல் மீது கொண்ட அச்சத்தால், அது சற்று கீழிறங்கத் தயாராக இருந்தது. 2009இற்குப் பின்னர் ஏற்பட்ட சர்வதேச அழுத்தங்கள் அதனை சிந்திக்கத் தூண்டியது. மஹிந்த ராஜபக்‌ஷவின் நடவடிக்கைகளால் தாம் சர்வதேச அரங்கிலிருந்து தனிமைப்பட நேரிடுமோ என்னும் அச்சமும் அதனை பீடித்துக்கொண்டது. இவ்வாறானதொரு சூழலில்தான் 2015இல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. ராஜபக்‌ஷ, மூன்று தசாப்தகால விடுதலைப் புலிகளின் எழுச்சியை முடிவுக்கு கொண்டுவந்த ஒருவர். சிங்கள தேசியவாதத்தை பொறுத்தவரையில் ராஜபக்‌ஷ எக்காலத்திற்கும் கொண்டாடப்பட வேண்டிய ஒருவர். ஆனாலும், அப்படியான ஒருவரை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்ற போது கூட, அது தொடர்பில் இன்று தீர்மானம் நிறைவேற்றிய பௌத்த பீடங்கள் எவையும் வாய்திறக்கவில்லை. ஒருவேளை பௌத்தபீடங்கள் ராஜபக்‌ஷவிற்கு ஆதரவான தீர்மானமொன்றை நிறைவேற்றியிருந்தால் சிங்கள மக்களின் மனநிலை மாற்றமடைந்திருக்கும். அவர்கள் ஒரு பக்கமாக சாய்ந்திருப்பர். ஆனால், அவ்வாறு எதுவும் நிகழவில்லை. ராஜபக்‌ஷவை அகற்றுதல் என்பதை தங்கள் தலையின் மீது தொங்கிக் கொண்டிருக்கும் சர்வதேச அழுத்தம் என்னும் கத்தியை விலக்கிவைக்கும் ஒரு செயற்பாடாகவே இந்த பீடங்கள் கருதின. ஆட்சிமாற்றத்திற்காக ஒன்றுபட்டுநின்ற சிங்கள தலைவர்கள் அனைவரும் மகாநாயக்கர்கள் முன்னால் அவ்வாறானதொரு தர்க்கத்தையே முன்வைத்திருப்பர். இறுதியில் அதற்கு அமைவாகவே விடயங்கள் அனைத்தும் நடந்தேறின.

புதிய ஆட்சி மேற்குலகிற்கு இனிப்பான ஒன்றாக அமைந்தது. அமெரிக்க தலைமையிலான மேற்குலக சக்திகள் கொழும்பு தொடர்பில் அதுவரை கடைப்பிடிந்துவந்த இறுக்கத்தை தளர்த்தினர். புதிய அரசாங்கம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக மேற்குலகுடன் இணைந்தே செயற்பட்டுவருகிறது. ராஜபக்‌ஷ சர்வதேசத்துடன் ஒத்துழைப்பதை முற்றிலுமாக நிராகரித்துச் செயற்பட்டார். ஆனால், மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் அவ்வாறு செயப்படவில்லை. இதுதான் இரண்டிற்கும் இடையிலுள்ள வித்தியாசம். ஆனால், இந்த வித்தியாசத்திற்குப் பின்னாலுள்ள அரசியல் மிகவும் சிக்கலானது. ராஜபக்‌ஷ இருக்கின்ற போது தமிழர்கள் ஒரு தரப்பாக இருந்தனர் ஆனால், கடந்த இரண்டரை வருடகால அரசியலில் தமிழர்கள் ஒரு தரப்பாக எந்தவொரு இடத்திலும் வெளித்தெரியவில்லை. கூட்டமைப்பு இலங்கையிலுள்ள ஏனைய சிறுபான்மை கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தேசிய முற்போக்கு கூட்டணி போன்ற கட்சிகளின் வரிசையில் ஒரு பக்கமாக நிற்கும் அமைப்பாகவே இருக்கிறது. இது ஒரு அரசியல் தவறின் விளைவு. இந்தத் தவறுக்கான பிள்ளையார் சுழி ஆட்சி மாற்றத்திற்கான தயாரிப்புகளின் போதுதான் நிகழ்ந்தது. இந்த தவறுக்கான அனைத்துப் பொறுப்பும் இரா.சம்பந்தனையே சாரும்.

ஆட்சி மாற்றத்தின் போது கூட்டமைப்பு எந்தவொரு எழுத்து மூல உடன்பாட்டையும் மேற்கொண்டிருக்கவில்லை. இந்த இடம்தான் கூட்டமைப்பு தாம் இலங்கைத் தீவில் ஒரு தனித்தரப்பு என்பதை இழந்துபோன இடம். 1949இல் இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து, தமிழ் மக்கள் ஒரு தனித்தரப்பு என்பதை இழக்காத வகையிலேயே ஒவ்வொரு அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. பண்டா – செல்வா உடன்பாடு, திம்புப் பேச்சுவார்த்தை, ஒஸ்லோப் பேச்சுவார்த்தை என ஒவ்வொரு முக்கிய வரலாற்று நிகழ்வுகளின்போதும், தமிழ் மக்கள் ஒரு தனியான அரசியல் தரப்பாகவே இருந்திருக்கின்றனர். இதன்போது பங்குகொண்ட அமைப்புக்களையும், அந்த அமைப்புக்கள் ஒவ்வொன்றினதும் பிற்கால அரசியல் செயற்பாடுகளையும் ஒரு புறமாக வைத்துவிட்டு நோக்கினால், தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய இனம், அவர்களின் பிரச்சினைகள் தனித்துவமானவை என்னும் அரசியல் அடிப்படையை எந்தவொரு இடத்திலும் எவருமே விட்டுக்கொடுக்கவில்லை. விடுதலைப் புலிகளது வீழ்ச்சியின் பின்னரும் கூட கூட்டமைப்பு ஒரு தனித்தரப்பு என்பதை இழக்காத வகையிலேயே செயற்பட்டுவந்தது. அந்த அடிப்படையிலேயே கூட்டமைப்பு, ராஜபக்‌ஷ அரசாங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தது.

ஆனால், 2015இன் ஆட்சி மாற்றத்தின் போது சம்பந்தன் இந்த நிலைமையை தலை கீழாக்கினார். இதில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான டி.பி.எல்.எப் (புளொட்), ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் டெலோ ஆகிய கட்சிகளுக்கு எந்தவொரு பங்கும் இல்லை. அவர்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றார்கள் என்பதைத் தவிர, அவர்களுக்கும் சம்பந்தனது முடிவுகளுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. தொடர்பு இல்லை என்பதைவிடவும் சம்பந்தன் அவர்களது கருத்துக்களை மதிப்பதில்லை என்பதே உண்மை. உண்மையில் நிபந்தனையற்ற ஆதரவு என்பதில் இந்தக் கட்சிகள் உடன்பட்டிருக்கவில்லை. முக்கியமாக சுரேஸ் பிரேமச்சந்திரன் இதில் கடுமையாக முரண்படும் ஒருவராகவே இருந்தார். இது தொடர்பில் அவர் அப்போது பகிரங்கமாக விமர்சித்துமிருக்கிறார். ஆனால், சம்பந்தன் எவரது கருத்துக்களையும் பொருட்படுத்தாது, தன்னிச்சையாக தமிழ் மக்களின் தனித்துவத்தை கொழும்பிடம் சமர்ப்பணம் செய்தார்.

சம்பந்தன் அரசாங்கத்துடன் பேசுவது தொடர்பில் நாம் முரண்பட ஒன்றுமில்லை. அரசாங்கத்துடன் பேசாமல் எதனையும் செய்ய முடியாது என்பது உண்மைதான். பேச வேண்டும், ஆனால் எப்படிப் பேச வேண்டும் என்பதுதான் பிரச்சினைக்குரியது. ஆட்சிமாற்றத்தின் சிற்பிகளான சந்திரிக்கா – மைத்திரி – ரணில்- சம்பிக்க கூட்டணியானது, மஹிந்தவை காரணம் காட்டி ஒப்பந்தத்தை கவனமாக தவிர்த்துக் கொண்டது. இதன் மூலம் கூட்டமைப்பின் பேரம் பேசும் ஆற்றலை பலவீனப்படுத்தியது. கூட்டமைப்பைக் கொண்டே சர்வதேச அழுத்தங்களை கொழும்பிற்கு சாதகமாகக் கையாண்டது. தங்களுடைய அனைத்து முயற்சிகளுடனும் கூட்டமைப்பும் இருக்கிறது என்பதான தோற்றத்தை ஏற்படுத்துவதில் வெற்றிபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் என்னும் துருப்புச் சீட்டைப் போட்டு சம்பந்தனை கொழும்பின் தலைவர்களில் ஒருவராக்கியது. உண்மையில் இது கூட்டமைப்பின் தனித்துவத்தை இழக்கச் செய்வதற்காக போடப்பட்ட ஒரு அரசியல் பொறி. அதற்குள் சம்பந்தன் விரும்பியே அகப்பட்டுக் கொண்டார். இப்போது கூட்டமைப்பு ஒரு தனித்தரப்பு இல்லை. தமிழ் மக்களுக்கு சாதகமாக இருந்த சர்வதேச அழுத்தத்தின் தீவிரமும் இப்போதில்லை. சுருக்கமாகச் சொன்னால் சம்பந்தன் தலைமையிலான தமிழர் அரசியல் என்பது ஒரு காயடிக்கப்பட்ட அரசியல். சம்பந்தன் நரைத்த முடியுடன் ஒரு பழுத்த அரசியல்வாதி போன்று கம்பீரமாக நிற்கிறார். ஆனாலும், அவரால் அரசாங்கத்துடன் அடித்துப் பேச முடியவில்லை. அந்தளவிற்கு அரசாங்கம் சம்பந்தன் மீது தங்கள் பிடியை இறுக்கிவைத்திருக்கிறது.

தற்போதிருக்கின்ற நிலையில் ஒற்றையாட்சி முறைமை நீக்கப்பட்ட, ஒரு புதிய அரசியல் யாப்பு என்பது ஒரு பெரிய கேள்விக் குறி! புதிய அரசியல் யாப்பு என்பதற்கும் தமிழ் மக்களின் தனித்துவத்தை அங்கீகரிக்கும் ஒரு புதிய அரசியல் யாப்பு என்பதற்கும் இடையில் பெரிய வேறுபாடுண்டு.

யதீந்திரா