பட மூலம், @PEARLAlert

வட மாகாண சபையில் ஏற்பட்ட நெருக்கடிக்கு இணக்கபூர்வமான முடிவு காணப்பட்டதாகக் கூறப்பட்ட கையோடு நாடாளுமன்றத்தில் காணாமல்போனோர் விவகார அலுவலக திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழ் மக்களை அழுத்துகின்ற பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வுகாணுமாறு அரசாங்கத்துக்கு கூட்டமைப்பு நெருக்குதல்களைக் கொடுக்கவில்லை என்ற விசனம் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரிவினர் மத்தியில் நிலவுவதாகவும் தேர்தலில் தோல்விகண்ட அரசியல்வாதிகள் கூட்டமைப்புக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண்பதில் அரசாங்கம் மேலும் காலதாமதத்தைச் செய்தால் அது அரசியல் ஸ்திரத்தன்மைக்குப் பதிலாக குழப்பநிலையை விரும்புகின்ற சக்திகளுக்கும், மக்கள் ஒருவரை மற்றவர் பகைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்று விரும்புகிற சக்திகளுக்கும் வாய்ப்பாகிப்போய்விடும் என்றும் சம்பந்தன் தனதுரையில் குறிப்பிட்டார். தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழ் அரசியல்வாதிகள் என்று தான் கூறுகின்றவர்கள் 2010, 2015 நாடாளுமன்றத் தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டவர்கள் என்றும் எதிர்காலத் தேர்தல்களிலும் அவர்கள் தோல்வியையே தழுவுவார்கள் என்றும் அவர் கூறினார்.

சம்பந்தன் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதைச் சொல்லிக்காட்டித்தான் எவரும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றில்லை. எது எவ்வாறிருந்தாலும், வடக்கின் தற்போதைய அரசியல் நிகழ்வுப் போக்குகள் கூட்டமைப்புக்கு குறிப்பாக அதன் பிரதான அங்கத்துவக் கட்சியான தமிழரசுக் கட்சிக்கு பெரும் சஞ்சலத்தைக் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன என்பதை சம்பந்தனின் நாடாளுமன்ற உரை தெளிவாக வெளிக்காட்டுகிறது. அத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் உருப்படியான செயன்முறைகளை முன்னெடுக்காமல் காலத்தை இழுத்தடிப்பதால் தங்களது தற்போதைய அரசியல் அணுகுமுறையைத் தமிழ் மக்கள் மத்தியில் நியாயப்படுத்த முடியாத சங்கடமான நிலை தமிழரசு கட்சியின் தலைவர்களுக்கு ஏற்படுகிறது என்பதையும் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு கொழும்பு அரசாங்கங்களுடன் ஒத்துழைத்த தமிழ்த் தலைவர்கள் எல்லோரும் ஏமாற்றப்பட்டதே வரலாறாகும். இந்த வரலாற்றுப் போக்கை மாற்றியமைக்கக் கூடியவர்களாக இன்றைய ஜனாதிபதியையும் பிரதமரையும் சம்பந்தனும் அவரைச் சார்ந்தவர்களும் இன்னமும் நம்புகிறார்களா என்பது முக்கியமான கேள்வி. ஆட்சி மாற்றத்தின் ஆரம்பக் கட்டங்களைப் போலன்றி மைத்திரி – ரணில் அரசாங்கம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்துக்கு அடிபணிந்துபோகத் தொடங்கியிருப்பதிலிருந்து தமிழரசுத் தலைமை எதைப் புரிந்துகொள்கிறது?

அரை நூற்றாண்டு கால அரசியல் வாழ்வைக் கொண்டவராக சம்பந்தன் இருக்கின்ற போதிலும் அவரின் இதுவரைகால அரசியல் அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டல்ல, உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான இன்றைய காலகட்டத்தில் தமிழர் அரசியலில் அவர் வகிக்கின்ற பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அவரை வரலாறு மதிப்பீடு செய்யப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.

அதேவேளை, கூட்டமைப்பினரை விடவும் தங்களை கடுமையான கோட்பாட்டுப் பிடிவாதமுடைய தமிழ்த் தேசியவாதிகளாகக் காட்டிக்கொள்கின்ற தமிழ் மக்கள் பேரவையுடன் சேர்ந்து நிற்கின்ற அரசியல்வாதிகள் வெறுமனே தேசியம், தாயகம், சுயநிர்ணயம், சுயாட்சி என்று உணர்வெழுச்சியாகப் பேசி தமிழ் மக்களை வீதிப் போராட்டங்களில் இறக்குவதில் அக்கறை காட்டுகிறார்களே தவிர, அவற்றை வென்றெடுப்பதற்கு கடந்த பல தசாப்தகால போராட்டங்களில் இருந்து பெறக்கூடியதாக இருக்கின்ற படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு விவேகமானதும் ஒப்பேறக்கூடியதுமான அரசியல் பயணத்திட்டத்தை தமிழ் மக்கள் முன்னிலையில் வைக்கக்கூடியவர்களாகத் தெரியவில்லை. இன்று சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்புக்கு நாடாளுமன்றத்தில் இருக்கின்றதைப் போன்று தமிழ் மக்கள் பேரவையின் பின்னணியில் இருக்கின்ற அரசியல்வாதிகளின் அணிக்கு 16 உறுப்பினர்கள் இருந்தால் என்ன செய்வார்கள் என்பதையாவது அவர்கள் தமிழ் மக்களுக்குக் கூறட்டுமே. மூன்று தசாப்தகால உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பிறகு தங்களது உரிமைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு உகந்த பாதை எது என்பது குறித்து தமிழ் மக்களுக்கு தெளிவான பதிலைக் கொடுக்க இயலாத அரசியல்வாதிகளின் மாச்சரியங்களுக்குள் அந்த மக்கள் மாட்டுப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை நிலை.

வீ. தனபாலசிங்கம்