பட மூலம், Selvaraja Rajasegar

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலப்பகுதியில் ஆயுதம் தரித்த குண்டர்களினால் தாக்கப்பட்டு, அவர்களது வீடுகளைத் தீக்கிரையாக்கி, பூர்வீக நிலங்களில் இருந்து விரப்பட்ட பாணம மக்கள், நல்லாட்சியின் கீழும் இன்னும் நிலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள்.

2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு அடித்து விரட்டப்பட்டதிலிருந்து இன்று வரை பல்வேறு போராட்டங்களை பாணம மக்கள்  நடத்தி வருகிறார்கள். ரணில் – மைத்திரி அரசாங்கம் அதிகாரத்துக்கு வருவதற்கு இவர்களது போராட்டமும் முக்கிய காரணமாக இருந்தது.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி அதிகாரத்தைக் கைப்பற்றிய நல்லாட்சி அரசாங்கம் அதே ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி பாணம மக்களின் காணி விவகாரம் தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானமொன்றை நிறைவேற்றியிருந்தது. தற்போது இராணுவம் பயன்படுத்திவரும் 25 ஏக்கர் காணியைத் தவிர மற்றைய நிலத்தை மக்களுக்கு விடுவிக்குமாறே அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று இந்த அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டு 853 நாட்களாகின்றது. ஆனால், இதுநாள் வரை இதனை நிறைவேற்றுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் அக்கறைக்காட்டுவதாகத் தெரியவில்லை.


தொடர்புபட்ட கட்டுரைகள்:

நல்லாட்சியின் பிடியில் ஒரு சிங்கள கிராமம்

“எமது வீட்டில், கிராமத்தில் நல்லாட்சி ஹோட்டல் நிர்மாணிக்கட்டும்”


அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றுமாறும், காணியை மீண்டும் தங்களுக்கே தருமாறு வலியுறுத்தி 20,000 கையெழுத்துக்களுடனான மனுவொன்றை ஜனாதிபதியைச் சந்தித்து வழங்கவும் பாணம மக்கள் இன்று (14) கொழும்புக்கு வந்திருந்தனர். கொழும்பு கோட்டைப் பகுதியிலிருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி செல்லவிருந்த மக்களை தடுத்துநிறுத்திய பொலிஸார், தங்களுக்கு இந்த இடத்திற்கு அப்பால் யாரையும் அனுமதிக்க முடியாது என்று கூறினர். இதன் பின்னர் பாணம மக்கள் சார்பில் 14 பேர் ஜனாதிபதி காரியாலத்துக்குச் சென்று மனுவை கையளித்தனர்.

“நாங்கள் 400 கிலோமீற்றர் தூரத்தில் இருந்து வந்திருக்கிறோம். ஜனாதிபதியைச் சந்திக்க முடியாவிட்டாலும் ஜனாதிபதி காரியாலயத்திலிருந்து உயர் அதிகாரி ஒருவராவது இங்கு வந்து எங்களைச் சந்தித்திருக்கலாம். காணியை மீட்டுத்தருவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்காக வீடு வீடாக சென்றோம். இந்தப் பொலிஸாரையும் அரசாங்கத்தையும் நினைத்து வெட்கப்படுகிறோம். தாங்கள் நிறைவேற்றிய அமைச்சரவை தீர்மானத்தையே நடைமுறைப்படுத்த முடியாத கையாளாகாத நல்லாட்சி அரசாங்கம் இது” என்று கூறுகிறார் பாணம நிலத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளர் புஞ்சிறால சோமசிறி.

எங்களது வாழ்வே அந்த நிலம்தான், அதனை மீட்பதற்காக எத்தனைக்காலம் ஆனாலும் போராடிக் கொண்டிருப்போம் என்றும் அவர் கூறுகிறார்.

இன்று இடம்பெற்ற போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள்