படம் | @AzzamAmeen

கொழும்பு கோல் பேஸ் திடல் மஹிந்தவின் ஆதரவாளர்களால் நிரம்பிவழிந்தது. இதன் மூலம் மஹிந்த தனது மக்கள் செல்வாக்கை மீளவும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றார். இதேபோன்று ஜக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கூட மே தினத்திற்கென பெருந்தொகையான மக்களை அணிதிரட்டியிருந்தன. ஆனால், இதில் உள்ள அடிப்படையான வேறுபாடு – மஹிந்த ஒரு தோல்வியடைந்த ஜனாதிபதி ஆவார். ஒரு தோல்வியடைந்த ஜனாதிபதியின் பின்னால் ஏன் இவ்வளவு மக்கள் கூட்டம்?

ஆட்சி மாற்றத்தால் மஹிந்தவை அதிகாரத்திலிருந்து அகற்ற முடிந்தாலும் கூட, தெற்கின் அரசியல் அரங்கிலிருந்து அகற்ற முடியவில்லை என்பதுதான் இதன் பின்னாலுள்ள செய்தி. ஆரம்பத்தில் புதுச்செருப்பு கடிக்கும் என்பது போல், மஹிந்த மற்றும் அவரது சகாக்கள் மீது புதிய அரசாங்கம் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியது. அவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்பதான ஒரு தோற்றமும் காண்பிக்கப்பட்டது. ஆனால், பின்னர் எதுவும் நடைபெறவில்லை. ஆனால், மஹிந்தவோ எதையும் பொருட்படுத்தாமல் மக்களுடன் தொடர்ச்சியாக ஊடாடிக் கொண்டிருந்தார். அந்த ஊடாட்டமே மஹிந்தவின் பலமாக மாறியது. அது மஹிந்தவை தொடர்ந்தும் அரசியல் அரங்கில் தவிர்க்கமுடியாத சக்தியாக உருமாற்றியது. இதற்கு அடிப்படையான காரணம் மஹிந்தவிற்கு ஏற்கனவே இருந்த ஜனவசியமாகும். இந்த ஜனவசியத்தை தனித்து எதிர்கொள்ள முடியாத காரணத்தினால்தான் சிறிலங்கா சுதத்திரக்கட்சியின் ஒரு பகுதியை உடைத்து மஹிந்தவிற்கு எதிராக களமிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், அப்போதும் கூட மஹிந்தவை சிங்கள மக்கள் மத்தியிலிருந்து அதிகம் அந்நியப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாகத்தான் இன்றும் மஹிந்தவால் சாதாரண சிங்கள மக்களை தன்னை நோக்கி இலகுவாக ஈர்க்க முடிகிறது. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மஹிந்த அடிப்படையில் சாதாரண சிங்கள சனத்திற்கு நெருக்கமான ஒரு தலைவராக இருக்கின்றார். அந்த ஆளுமை ஏனைய சிங்களத் தலைவர்களிடம் இல்லை. இதற்கு யுத்தத்தை வெற்றிகொண்டமையும் ஒரு பிரதான காரணமாகும். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் மைத்திரி ஜனாதிபதியாக இருந்தும் கூட, சிறிலங்கா சுதத்திரக் கட்சியை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றார். இதன் காரணமாகவே உள்ளூராட்சித் தேர்தல் ஒன்றிக்குக் கூட அரசாங்கத்தால் துனிந்து முகம்கொடுக்க முடியாமல் இருக்கிறது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் மஹிந்த அணியினால் ஒழுங்குசெய்யப்பட்ட மேதின ஊர்வலமானது, மீளவும் மஹிந்தவை திரும்பிப் பார்க்குமாறு நிர்பந்தித்திருக்கிறது.

அன்மையில் World Is One  என்னும் சர்வதேச ஊடகமொன்று உலகத் தலைவர்களை நேர்க்காணல் செய்யும் தொடரொன்றிற்காக, மஹிந்த ராஜபக்‌ஷவையும் சந்தித்திருந்தது. இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் மஹிந்த பேசியிருந்தார். இதன்போது அவரிடம் இவ்வாறு கேட்கப்படுகிறது  – உங்களுடைய செல்வாக்கு குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவாறான தனித்தன்மையுடன் இருக்கிறது. புதிய கட்சியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களை தலைமை தாங்குமாறு அழைக்கின்றனர். இந்த நிலையில், அடுத்த தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவின் மீள்வருகையை பார்க்கலாமா? இதற்கு மஹிந்தவின் பதில் இதுதான் – நான் ஒருபோதும் போட்டிக் களத்தை விட்டு வெளியேறப் போவதில்லை. மஹிந்த அரசியல் போட்டிக் களத்தை விட்டு வெளியாறாதுவிட்டால், மைத்திரியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? மைத்திரி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த போதிலும்கூட, கட்சி அவரது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இல்லை. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரு தலைமைகளைக் கொண்ட கட்சியாகிவிட்டது. உண்மையில் ஆட்சி மாற்றம் மஹிந்தவை ஆட்சியதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதில் வெற்றிபெற்றிருந்தாலும் கூட, சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேற்றவில்லை. இதனை இன்னொரு வகையில் நோக்கினால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பலவீனமடைந்தது எனலாம். ஆட்சி மாற்றம் ஜக்கிய தேசியக் கட்சியையே பலப்படுத்தியது.

இவ்வாறானதொரு சூழலில் இடம்பெறவுள்ள தேர்தல்களை மைத்திரிபால எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதுதான் தற்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாலுள்ள பிரதான கேள்வி? இந்தக் கேள்விக்கு இரண்டு பதில்கள்தான் இருக்க முடியும். ஒன்று மஹிந்த ராஜபக்‌ஷவை ஓரங்கட்டிவிட்டு தேர்தலை எதிர்கொள்வது. இரண்டு, மஹிந்த ராஜபக்‌ஷவுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளுவது. மஹிந்தவை ஓரங்கட்டும் முடிவை எடுத்தால், மஹிந்தவின் தலைமையிலான அணி தனியாக களமிறங்கும். இதன் காரணமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குவங்கி உடைவுறும். இது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு மோசமான பின்னடைவை ஏற்படுத்தும். இதிலிருந்து தப்ப வேண்டுமாயின் மஹிந்தவுடன் ஒரு உடன்பாட்டுக்குச் செல்வது தவிர்க்க முடியாதது. மஹிந்த – மைத்திரிக்கு இடையில் ஒரு உடன்பாடு ஏற்படுமிடத்து ஜக்கிய தேசியக் கட்சி பலவீனமடையும். ரணிலின் நரித்தனமோ ஆரம்பத்திலிருந்தே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உடைவையே மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தது. இப்போதும் அதனை எதிர்பார்த்தே காத்திருக்கிறது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதை அனைவருமே அறிவர். இதே விடயத்தைத்தான் மஹிந்தவும் தனக்கான வாய்ப்பாக கருதிவருகிறார் போலும். ஏனெனில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பேணிப்பாதுகாக்க வேண்டுமாயின் மைத்திரி தன்னை நோக்கி வருவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை மஹிந்த நன்கறிவார். இவ்வாறானதொரு சூழலில்தான் உள்ளூராட்சி அல்லது மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பாக மைத்திரி – மஹிந்த கூட்டு சாத்தியப்படக் கூடிய வாய்புக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகிறது.

ஆனால், அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயமொன்றும் உண்டு. 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் என்பது ஏற்பட்ட ஒன்றல்ல. மாறாக, ஏற்படுத்தப்பட்ட ஒன்று. இதற்கு பின்னால் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற பலம்பொருந்திய சக்திகள் இருந்தன என்பதும் கூட சூடாறிப்போன விடயம்தான். அந்த ஆட்சி மாற்றத்தின் பிரதான இலக்கு சீனாவை நோக்கி முற்றிலுமாக சாய்ந்துகொண்டிருந்த மஹிந்தவை அதிகாரத்திலிருந்து அகற்றுவது ஒன்றுதான். எனவே, அன்று திரைமறைவில் இருந்து இயக்கிய சக்திகள் ஒரு வேளை மைத்திரி – மஹிந்த கூட்டு உருவாகினால் அதனை எவ்வாறு நோக்குவர். ஏனெனில், ஆட்சி மாற்றத்தின் பின்னரான மைத்திரி -ரணில் கூட்டரசாங்கம் என்பது அதிகம் இந்திய – அமெரிக்க கூட்டு நலன்களின் வழியாக கையாளப்படும் ஒரு அரசாங்கம்தான். இதன் காரணமாகவே புதிய அரசாங்கத்தை பேணிப் பாதுகாக்கும் வகையில் ஜெனிவாவிலும் ஏனைய சர்வதேச அரங்குகளிலும் மேற்படி சக்திகள் முக்கியமாக அமெரிக்கா முண்டுகொடுத்து வருகிறது. இந்த ஒன்றே அமெரிக்கா ஆட்சி மாற்றத்தின் பின்னால் இருந்தது என்பதற்கு சான்றாகும். எனவே, இந்தப் பின்புலத்தில் எந்த மஹிந்தவை அகற்றுவதற்கு இவர்கள் பின்னாலிருந்தனரோ, அந்த மஹிந்த மீளவும் எழுவதை இவர்கள் அனுமதிப்பார்களா? ஆனால், இலங்கை விவகாரத்தை பொறுத்தவரையில் தங்களால் கையாளப்படக் கூடிய ஒரு ஆளும் குழுமத்திடம் கொழும்பு இருப்பதையே இந்தியா விரும்பும். இந்தியாவால் கையாளப்படக்கூடிய ஒரு அரசாங்கம் என்பது அமெரிக்காவாலும் கையாளப்படக் கூடிய ஒன்றாகவே இருக்கும். இந்தியாவை பொறுத்தவரையில் தனது அயல்நாடுகளில் இருக்கும் ஆட்சியாளர்கள் தங்களை மீறிச் செல்பவர்களாக இருக்கக் கூடாது என்றே கருதுகிறது. முக்கியமாக தனக்கு 39 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் இலங்கையின் ஆட்சி எப்போதுமே இந்தியாவிற்கு முக்கியமானது. அந்த வகையில் இந்தியா மஹிந்தவின் மீளெழுச்சியை அவதானித்துவரும்.

நான் மேலே குறிப்பிட்ட நேர்காணலில் கேட்கப்படும் பிறிதொரு கேள்வி முக்கியமானது. அதாவது, மஹிந்தவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்‌ஷவை, இலங்கை விவகாரங்களை கையாளுவதற்கென நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்டிருக்கும் விசேட பிரதிநிதி ராம் மகாதேவ் சந்தித்தாகவும், இந்திய நலன்களை முன்னிறுத்தி பணியாற்றுவது தொடர்பில் பேசப்பட்டதாகவும் அதற்கு கோட்டாபய இணங்கியதாகவும் கூறப்படுகிறதே – இது பற்றி உங்களின் அபிப்பிராயம் என்ன? இதற்கு மஹிந்த – அது ஊடங்களின் தகவல் என்றவாறே பதலளித்தார். ஆனால், நெருப்பிலாமல் புகைவதில்லை. விடயங்கள் எவ்வாறு நகர்ந்தாலும் இலங்கையின் ஆட்சியாளர் யார் என்பது தொடர்பில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை அமைதியாக இருக்காது என்பது மட்டும் உண்மை. இந்த நிலையில், தென்னிலங்கையின் அரசியல் எவ்வாறு மாற்றமுறும் என்பதை பொறுத்திருந்துதான் நோக்க வேண்டும். தென்னிலங்கையின் மாற்றங்களை உற்றுநோக்குவதன் மூலம், தமிழர் தரப்பு தனது அரசியல் நகர்வுகளை திட்டமிட்டுக் கொள்வதும் அவசியம்.

   யதீந்திரா


சமூக ஊடகங்களில் மாற்றம்:

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : மாற்றம் பேஸ்புக் பக்கம்

ருவிட்டரில் மாற்றத்தைத் பின்தொடர : மாற்றம் ருவிட்டர் தளம்

இன்ஸ்டகிராமில் கருத்து/விருப்பம் தெரிவிக்க : மாற்றம் இன்ஸ்டகிரம்