படம் | Virakesari
இறந்தாலும் இறவாப் புகழுடைய கலைஞர்கள் வரிசையில் ஸ்ரீதர் பிச்சையப்பாவும் ஒருவர். ஸ்ரீதர் 1975ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இலங்கை வானொலியின் சிறுவர் நிகழ்ச்சியூடாக எனக்கு அறிமுகமானார். அந்த சிறிய வயதிலேயே க.செல்வராஜன் அவர்களால் மேடை நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார்.
‘உறவுகள்’ என்ற அந்த நாடகத்தின் மூலம் மேடை நடிகராக அங்கீகாரம் பெற்றபின் ஏராளமான மேடை நாடகங்களில் நடித்தார் ஸ்ரீதர். அவற்றில் பிரபல நாடக இயக்குனர் சுஹைர் அமீட் அவர்களின் ‘தோட்டத்து ராணி பல்தீஸ் உம்மா’, லடீஸ் வீரமணியின் ‘ஊசியும் நூலும்’ போன்றவை சிறப்பாகப் பேசப்படும் நாடகங்களாகும். ஒரு சில மேடை நாடகங்களுக்கு இவர் உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார்.
கவிதை எழுதுவதிலும் ஓவியம் வரைவதிலும் அதீத ஈடுபாடு கொண்டிருந்த ஸ்ரீதர், நகைச்சுவை உணர்வு ததும்ப பேசுவதில் மட்டுமல்ல நடிப்பதிலும் துணுக்குகளை எழுதுவதிலும் திறமை பெற்றவராயிருந்தார்.
1978ஆம் ஆண்டு காலப்பகுதியில் நான் ஆரம்பித்த ‘ஜெய்ஸீஸ்’ இசைக் குழுவில் இவரது பாடும் திறமையை அறிந்து முதன்முதலாக பாடகராக அறிமுகப்படுத்தினேன். பின்னர் இவர் சிறந்த பாடகராக வலம் வந்தது அனைவரும் அறிந்ததே.
மேடை வானொலி தொலைக்காட்சி என்று மட்டுப்படுத்தாது தனது இசைத்திறமையை உலகின் பல பாகங்களிலும் வெளிப்படுத்திய திறமைசாலி ஸ்ரீதர்.
தொலைக்காட்சித் தொடர்களிலும் சிங்களத் திரைப்படங்களிலும் நடிகராக மிளிர்ந்த ஸ்ரீதர் எழுத்துத் துறையிலும் முத்திரை பதித்தவர்.
ஒரு கவிஞராக இவர் பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் தந்த கவிதைகள் பலராலும் பேசப்பட்டவை. இவருடைய கவிதைகளாகட்டும் பாடல்களாகட்டும் சமூகம் சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்துவனவாகவே இருந்தன.
பல்வகைப்பட்ட ஓவியங்களை வரையும் தகைமை பெற்றிருந்த ஸ்ரீதரின் நவீன ஓவியங்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றவை.
இப்படி பன்முகத் திறமை பெற்றிருந்த ஸ்ரீதர் என்கின்ற சிறந்த கலைஞன் பழகுதற்கினிய சிறந்த நண்பன். நல்ல நண்பன் என்ற வகையிலும் சிறந்த கலைஞன் என்ற வகையிலும் ஸ்ரீதர் நம் நெஞ்சங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.
சீதாராமன் பெரியசாமி