படம் | Selvaraja Rajasegar Photo

18 வயதில் நான் திருமணம் முடித்தேன். திருமணம் முடிந்த அன்றே அவர் என்னை விட்டுப் பிரிந்துச் சென்றார். இப்போது வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

ஆனால், நான் இங்கு எவருடைய உதவியும் இல்லாமல் வாழ்ந்து வருகிறேன்.

விவாகரத்து கோரி காதி நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். நானும் வழக்குக்குப் போய் எனக்கு செலுத்த வேண்டிய மனைவி தாபரிப்பு, இத்தா தாபரிப்பு, நஷ்டஈடை பெற்றுத் தருமாறு காதி நீதிபதியிடம் கேட்டேன். அதற்குக் கணவர் உடன்படவில்லை. “என்னுடன் வாழாததால் நஷ்டஈடு எதுவும் தரமுடியாது, சமரசமாக போக விரும்புகிறேன்” என்று கொழும்பு காதிகள் சபையிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

ஆனால், விவாகரத்து கிடைக்கும் முன்னரே அவர் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.

காதிகள் சபையில் விசாரணை நடந்தபோது, கணவர் முன்வைக்கும் சமரசத்துக்கு ஏன் உடன்பட மறுக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. 5 வருடகாலமாக மனைவி தாபரிப்பு, இத்தா தாபரிப்பு, நஷ்டஈடு பெற்றுக்கொள்வதற்காக அழைந்துகொண்டிருக்கிறேன். என்னால் வேறு திருமணம் ஏதும் செய்துகொள்ள முடியாது. எனக்கு நீதி கிடைக்காமல் எவ்வாறு சமரசத்துக்குப் போவது என்று கேட்டேன்.

பைல் கிளியராக இல்லை என்று மாவட்ட காதி நீதிமன்றிடம் காதிகள் சபையினர் அனுப்பிவைத்தார்கள்.

அவர்கள் கூறுவது உண்மைதான், மனைவி தாபரிப்பு, இத்தா தாபரிப்பு, நஷ்டஈட்டுக்காக என்ற மூன்று விடயங்களுக்காக தனித்தனியாக பைல்களை தயாரிக்காமல் மூன்று விடயத்துக்காகவும் ஒரே பைலை முன்னர் இருந்த காதி நீதிபதி பேணி வந்திருக்கிறார். இருந்தபோதிலும் அவர் நீதியாகச் செயற்பட்டார்.

இப்போது இருக்கும் புதிய நீதிபதி மூன்று விடயங்களுக்காகவும் தனித்தனியாக பைல்களை தயாரித்திருந்தார்.

நீண்ட இழுபறிக்கு மத்தியில் 2014ஆம் ஆண்டு எனக்கு விவாகரத்து கிடைத்தது. நஷ்டஈடு விடயத்தில் என் கணவர் எவ்வளவு குறைத்துக் கேட்கிறாரோ அதற்கு நீதிபதியும் தலையாட்டிக் கொண்டிருந்தார். அப்போது, கூடுதலான தொகையொன்றை கணவரிடம் கேட்டால், அந்தத் தொகையை கணவர் ஏற்றுக்கொள்வாரா என்று நான் நீதிபதியிடம் கேட்டேன். அதற்கு அவர், நீ அதிகமாக வாயடிக்கிறாய் என்று கூறினார்.

இறுதியில் எனக்கு நஷ்டஈடாக 5 இலட்சத்தை வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், இன்னும் எனது கணவர் இந்த நஷ்டஈட்டை வழங்கவில்லை. மனைவி தாபரிப்பையும் வழங்கவில்லை. இத்தா தாபரிப்பை மட்டும்தான் வழங்கியிருக்கிறார்.

இப்போது எனது வழக்கு நிலைமை எந்தநிலையில் இருக்கிறது என்பது கூட தெரியாது. தொடர்ந்து போய் வருவதால் எந்தப் பயனும் இல்லை. நீதி கிடைப்பதும் இல்லை. தந்தையும் உயிரிழந்துள்ள நிலையில் வயதான தாயுடன்தான் வாழ்ந்து வருகிறேன். என்ன செய்வதென்றே அறியாதிருக்கிறேன்.

முஸ்லிம் தனியாள் சட்டத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக ‘மாற்றம்’ தளத்தின் ஊடாக ஏற்கனவே மூன்று நேர்க்காணல்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்று நான்காவது நேர்க்காணல் வெளியாகிறது.


ஆசிரியர் குறிப்புதொடர்புபட்ட கட்டுரை, “நீதியைத் தேடும் பெண்கள்” நேர்க்காணல்கள் 123