படம் | News.Mic
“தேர்தலின்போது நீங்கள் முன்வைத்த பிரச்சினைகள் அமெரிக்காவின் எல்லைகளுக்கு அப்பாலும் எதிரொலிக்கின்றன. அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக நீங்கள் இப்போது தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து, சகல தேசங்களினதும் சுயாதிபத்திய சமத்துவம், தேச அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையிலான புதியதொரு உலக ஒழுங்கைக் காண்பதற்கு ஆவல் கொண்டிருக்கின்றோம்.”
டொனால்ட் ட்ரம்புக்கு மஹிந்த ராஜபக்ஷ அனுப்பிய செய்தி[i]
“ஏனைய தேசங்களின் சுதந்திரத்தையும் சுயாதிபத்தியத்தையும் பறித்தெடுக்காத கொள்கையொன்றை அமெரிக்கா வரையவேண்டும் என்பதே எமது செய்தியாகும்.”
டொனால்ட் ட்ரம்புக்கு ஆப்கான் தலிபான் விடுத்த செய்தி.[ii]
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி, வெள்ளையின மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்கையைக் கடைப்பிடிக்கும் அமெரிக்க இயக்கமான கூ குலக்ஸ் கிளான் தொடக்கம் பிரான்ஸின் தீவிர வலதுசாரி கட்சியான தேசிய முன்னணியின் தலைவியான லீ பென் வரை, இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் இந்து தேசியவாதிகள் தொடக்கம் எமது நாட்டின் பொதுபல சேனா வரை சகல வகையான தீவிரவாதிகளுக்கும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம் (Make American Great Again) என்ற சுலோகத்தில் இந்த சகல தீவிரவாதிகளும் தாங்கள் இழந்துபோன சொர்க்கத்தின் (வெள்ளையினத்தவர் மாத்திரம் வாழும் நாடு, இந்து இராச்சியம், சிங்கள பௌத்த இராச்சியம் மற்றும் இஸ்லாமிய இராச்சியம்) வடிவங்களைக் காண்கிறார்கள். ட்ரம்பின் வெற்றி ஒவ்வொரு தீவிர பிற்போக்குவாதியும் காண்கின்ற ஒரு புதிய தேசிய (A New National Order) ஒழுங்கைச் சாத்தியமாக்க முடியுமென்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுக்கிறது. அந்தப் புதிய ஒழுங்கிலே ஆதிக்க நிலையிலுள்ள இன/ மதக் குழுவுக்கு விசேட உரிமைகள் இருக்கும். ‘மற்றையவர்கள்’ வெளிப்படையான அசமத்துவத்துடன் வாழவேண்டியிருக்கும். அந்த ஒழுங்கிலே இந்தத் தீவிரவாதிகள் தங்கள் சொந்த தேசிய எல்லைகளுக்குள் ஆதிக்க நிலையில் உள்ள குழுக்கள் சிறுபான்மையினத்தவர்களை அடக்கியொடுக்குவதையும், பெண்களை அடிமைப்படுத்துவதையும் தொழிலாளர்களைச் சுரண்டுவதையும், விவசாயக் குடிமக்களின் நிலங்களை அபகரிப்பதையும், சுற்றுச் சூழலை நிர்மூலம் செய்வதையும் அனுமதிப்பார்கள். தாங்கள் விரும்பிய விதத்தில் கோலான்மையைச் செய்வார்கள்.
ட்ரம்பின் வெற்றி ‘மற்றையவர்கள்’ மீதான அச்சத்தையும் வெறுப்புணர்வையும் மையமாகக் கொண்டதும் மனித மனதில் இருக்கக்கூடிய இழிவான உணர்வுகள் சகலவற்றையும் உருவகப்படுத்துகின்றதுமான புதியதொரு காலப்பண்பின் வருகைக்குக் கட்டியம் கூறுவதாக அமைகிறது. எம்மில் இருக்கக்கூடிய சிறந்த பண்புகளுடன் அல்ல, மோசமான பண்புகளுடனேயே அது மோதுகிறது. வெளியில் கூறுவதற்கு நாம் அஞ்சிய பீதிகளுக்கும் வெளிப்படுத்துவதற்கு நாம் தயங்கிய வெறுப்புணர்வுகளுக்கும் அது சிறகு கொடுக்கிறது. உண்மையில் அசாதாரணமானவற்றை அது சாதாரணமாக்குகிறது. ஒருபோதுமே நடக்கக்கூடாதவற்றை அது சாத்தியமாக்குகிறது. சர்வசன வாக்குரிமை உட்பட உலகளாவிய கோட்பாடுகளை வெறுத்தொதுக்குகிறது.
2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்ற போது இந்த வெற்றியையும் அவரின் ஜனாதிபதி பதவியையும் ‘முழுமையாக நியாயப்பாடானதல்ல’ என்று ராஜபக்ஷவுக்கு ஆதரவான முகாம் எள்ளி நகையாடியது. சிறிசேனவை விடவும் ராஜபக்ஷவுக்குக் கூடுதலான சிங்கள வாக்குகள் கிடைத்தன. அதனால், சிங்கள மேலாதிக்கவாதிகளின் கண்களுக்கு ஜனாதிபதித் தேர்தலின் உண்மையான வெற்றியாளராக ராஜபக்ஷவே தென்பட்டார். ஆனால், அவர்களின் அந்த வாதம் முற்றிலும் ஜனநாயக விரோதமான ஒன்று. இலங்கை ஒரு சிங்கள நாடு. அதனால், ஆட்சியாளரைத் தீர்மானிப்பதில் சிங்கள வாக்குகளுக்குக் கூடுதல் கனதி இருக்கவேண்டும்; சிங்கள வாக்குகளில் பெரும்பான்மையானவற்றைப் பெறத் தவறியபோதிலும் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கக் கூடிய எவருமே சட்டரீதியான ஜனாதிபதியல்ல, அப்பதவியை அபகரித்தவர் என்பதே அவர்களின் வாதமாக இருந்தது.
இதேபோன்றதொரு இனவெறுப்புணர்வுக்குள்தான் டொனால்ட் ட்ரம்பும் அகப்பட்டிருக்கிறார். வெள்ளையினத்தவர்கள் தங்களது நாட்டை மீளப்பெற்றுக் கொள்வதற்கான கடைசிச் சந்தர்ப்பமாக ஜனாதிபதித் தேர்தலை அவர் காட்சிப்படுத்தினார். ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக அவரது நியமனமும், வெட்கம்கெட்ட முறையில் அவர் தழுவிக்கொண்ட மூதாதைப் பண்புகளுடனான அமெரிக்க நோக்கும், அத்தேர்தலை பல கலாசாரத்துடன் பரிச்சயம் கொண்டதும் திறந்தமனதுடனானதுமான மனித மனத்துக்கும் பழைய குலமரபுக் குணாதிசயத்துக்கும் இடையிலான நேரடி மோதலாக மாற்றிவிட்டன. சிலேட் என்ற அமெரிக்க இணையத்தளச் செய்திச் சஞ்சிகையின் விமர்சகர் ஒருவர் கூறியதைப் போன்று வெள்ளையின குலமரபுவாத அரசியலொன்றை ட்ரம்ப் கட்டமைத்துக்கொண்டார். வெள்ளையர்கள் அதைத் தழுவிக்கொண்டார்கள்[iii].
உலகின் ஒரேயொரு வல்லரசுக்கு மிகவும் நீண்டகாலத்துக்குப் பிறகு முதற்தடவையாக வெளிப்படையான வெள்ளையின வெறியுடன் எந்தப் பிரச்சினையும் இல்லாத ஒருவர் தலைமைத்தாங்கப் போகிறார். உலகில் வாழுகின்ற வெள்ளையர் அல்லாதவர்களை அவர் சமத்துவமான பிறவிகளாகக் கருதவில்லை. வெள்ளையர் அல்லாதவர்கள் சமத்துவத்துக்கோ ஏன் பொதுவான மரியாதைக்கோ கூட அருகதையில்லாதவர்கள் என்பதே அவரின் நினைப்பு. குடியேற்றவாசிகளுக்கு எதிராக ட்ரம்ப் நிகழ்த்திய உரைகளை உன்னிப்பாக அவதானித்தால் அவரின் இந்த மனப்போக்கைத் தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். அவர் இயல்பாகவே குடியேற்றவாசிகளுக்கோ அல்லது சட்டவிரோத குடியேற்றத்துக்கோ எதிரானவரல்ல. அவரின் தற்போதைய மனைவி குடிவரவு சட்டங்களை மீறியதன் மூலமாகவே அமெரிக்காவில் தனது வாழ்வைத் தொடங்கினார். இதை ட்ரம்பின் எதிராளிகள் இது ஒரு பாசாங்குத்தனம் என்று கூச்சல் போட்டார்கள். ஆனால், அவரின் ஆதரவாளர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. இதேபோன்றே அவரின் இனவெறியையும் பெண்ணின பெறுப்பையும் ஆதரவாளர்கள் பொருட்படுத்தவில்லை. அவர் செய்த வரி ஏய்ப்பு, கொச்சைத்தனமான பேச்சுகள், அவரது அறியாமை, இரக்கமற்ற குணம் என்று எதையுமே ஆதரவாளர்கள் பாரதூரமானதாக எடுக்கவில்லை. அவர்கள் சகலதையும் தெரிந்திருந்தார்கள். அவரது பிரச்சினையும் அவர்களது பிரச்சினையும் சகல குடியேற்ற வாசிகளுடனுமானதல்ல. வேற்று இனங்களைச் சேர்ந்த குடியேற்றவாசிகளுடனும், குறிப்பாக மூன்றாமுலக நாடுகளைச் சேர்ந்த வெள்ளையர் அல்லா குடியேற்றவாசிகளுடனுமே அவர்களுக்கும் அவருக்கும் பிரச்சினை. அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம் (Make America Great Again) என்று அவர் கூறியபோது உண்மையில் அவர் அமெரிக்காவை மீண்டும் வெள்ளையினத்தவரின் நாடாக்க வேண்டுமென்ற (Make America White Again) தனது விருப்பத்தையே வெளிக்காட்டினார். சமகாலத்தை நிர்மூலம் செய்து அதன் இடிபாடுகள் மீது கற்பனாவாதமான கடந்த காலமொன்றைக் கட்டியெழுப்ப விரும்புகின்ற சகல தீவிரவாதிகளும் ட்ரம்பின் கூற்றை ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள்.
பொருளாதார அநீதி, பிற்போக்கை உணர்த்துகிறது
‘பிரெக்சிட்’ (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு சர்வஜன வாக்கெடுப்பில் கிடைத்த வெற்றி) ஒரு எச்சரிக்கை அறிகுறி. ஆனால், செம்மஞ்சள் தலைமயிரைக் கொண்ட இந்த கோடீஸ்வரரை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வைத்த பிற்போக்கு பேரவையின் முதல் கொந்தளிப்பு வட மேற்கு ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலுமே ஆரம்பித்தது. அரபு வசந்தத்தின் விபரீதமான தோல்வி அரபுலகின் முன்னேற்றத்துக்கான நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் மாத்திரம் கொன்றுவிடவில்லை, அது ஐரோப்பாவிலும் ஏனைய பகுதிகளிலும் பிற்போக்குத் தீவிரவாதத்துக்கு ஒரு பொருத்தப்பாடு கிடைப்பதற்கான பாதையையும் கூட திறந்துவிட்டது.
எகிப்து, லிபியா, சிரியா மற்றும் யேமனில் எதிர்காலம் அரசியல் ரீதியிலும் மத ரீதியிலும் பாழாக்கப்பட்ட ஒரு கடந்த காலத்துடன் போரிட்டுத் தோல்வி கண்டிருக்கிறது. அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த கொடிய தொடர்ச்சியான போர்கள் – அவற்றைத் தொடர்ந்து இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாத இயக்கத்தின் பிரமாண்டமான வளர்ச்சி – பாரிய அகதிகள் நெருக்கடியொன்றைத் தோற்றுவித்தன. போரினால் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் மக்கள் தாய்நாடுகளில் இருந்து வெளியேறி இலட்சக்கணக்கானவர்கள் ஐரோப்பாவுக்கு அகதிகளாகப் படையெடுத்துக் கொண்டிருந்த நிலையில் ஐரோப்பிய வலதுசாரி தீவிரவாதிகளுக்கு புதுவாழ்வுக்கான வாய்ப்பொன்று கிட்டியது. குடிவரவு பெரிதும் கவனிக்கப்படாத ஒரு பிரச்சினை என்ற நிலையில் இருந்து தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கு முன்னிலைப்படுத்தக் கூடிய ஒரு பிரச்சினையாக மாற்றம் பெற்றது. வெளிநாட்டவர் மீதான வெறுப்புணர்வும் பீதியும் தேசப்பற்றை வெளிப்படுத்துவதற்கான நியாயப்படுத்தக் கூடியதும் மதிப்புக்குரியதுமான ஒரு வழிமுறையாக மாறியது. இதுவரையில் நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்த விவகாரங்கள் எல்லாம் அருவருக்கத்தக்க முறையில் சாத்தியமாகக் கூடியவையாக மாற ஆரம்பித்தன.
கிரேக்கத்தில் இடதுசாரி சிறிசா கட்சியின் தேர்தல் வெற்றி தீவிர வலதுசாரிகளின் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதற்கான யதார்த்தபூர்வமான ஒரேயொரு வாய்ப்பைத் தந்தது. ஆனால், அந்தச் சாத்தியப்பாட்டை ஐரோப்பாவை ஆகர்சிக்கத் தொடங்கிய நவதாராளவாத அடிப்படைவாதிகள் கொன்றுவிட்டார்கள். கிரேக்கத்தின் முற்போக்கு பரீட்சார்த்தத்தை மலினப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்குத் தலைமைதாங்கிய ஜேர்மன் அதிபர் அஞ்சலோ மெர்கெல் தனது சொந்த வெற்றியின் விளைவுகளினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார். பிரெக்சிட்டுடன் தொடங்கிய கீழ்நோக்கிய பாதை மெர்கெலின் அரசியல் அஸ்த்தமனத்துடன் முடிவுக்குக் வரக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அதோடு சேர்த்து சகலரையும் அனுசரிக்கும் – அரவணைக்கும் ஐரோப்பா என்ற அவரது குறிக்கோளும் முடிவுக்கு வரக்கூடும்.
மக்களின் உணர்ச்சிகளைக் கிளறி அரசியல் செய்கின்றவர்கள் எப்போதுமே சீர்குலைக்கின்ற பொருளாதாரத்திலும் சாதாரண மக்களில் பெரும்பாலானவர்களுக்கு பயன்தரத் தவறிய பொருளாதாரத்திலுமே செழுமையடைகிறார்கள் என்று வரலாறு எமக்கு அடிக்கடி எச்சரிக்கை செய்கிறது. அரபு வசந்தத்தின் தோல்வியில் பொருளாதாரம் பிரதானமான ஒரு பாத்திரத்தை வகித்தது. ஐரோப்பா பூராகவும் குடியேற்றவாகிகளுக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டிவிடுவதிலும் பிரெக்சிட்டுக்கு கிடைத்த எதிர்பாராத வெற்றியிலும் பொருளாதாரம் பிரதானமான பாத்திரத்தை வகித்தது. அமெரிக்கப் பொருளாதார மீட்சி ஓரளவுக்கேனும் சமத்துவமாக இருந்திருந்தால் ஒரு சதவீதமானவர்களுக்கு சாதகமான திசையில் சரிவதில் இருந்து ஓரளவேணும் தவிர்த்திருந்தால் மக்களின் உணர்ச்சிகளைக் கிளறுகின்ற டொனால்ட் ட்ரம்ப் இப்போது வெற்றி பெற்றிருக்கின்றதைப் போன்ற வெற்றியைப் பெற்றிருக்க முடியாது போயிருக்கும். ட்ரம்ப் தனது முதல் இலட்சங்களை தந்தையிடமிருந்தே பெற்றார். அந்தத் தந்தையார் தொழிலாளர்களுக்கு பாதகமான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். சட்டத்தில் இருக்கக்கூடிய பலவீனங்களையும் குறைபாடுகளையும் பயன்படுத்தி கோடிக்கணக்கான டாலர்கள் வரியைச் செலுத்தாமல் இருந்த ட்ரம்பினால் வெள்ளையினத் தொழிலாளர் வர்க்கத்தின் பாதுகாவலராக தன்னைக் காட்டிக்கொள்ளக் கூடியதாக இருந்திருக்கின்றதென்றால் அதற்குக் காரணம் அவரின் போட்டியாளர்களிடமிருந்து அவருக்கு இதுவிடயத்தில் சவால் எதுவும் வரவில்லை என்பதேயாகும். ட்ரம்பின் வெற்றியின் அச்சாணி சினமேயாகும். ஆனால், அந்த அச்சாணியை உருவாக்கிக் கொள்வதில் பொருளாதாரம் முக்கியமானதொரு பாத்திரத்தை வகித்திருக்கிறது.
தனது நாட்டுக்கு நேர்ந்த தேர்தல் அனர்த்தத்தைப் பற்றி வானசாஸ்திரவியலாளரான நீல் டி கிறேஸ் டைசன் கருத்துத் தெரிவிக்கையில், அமெரிக்காவை மீண்டும் நேர்த்தியும் மிடுக்குமுடையதாக மாற்றுவதே அடுத்த நான்கு வருடங்களுக்குமான பணியாக இருக்கும் என்று சொன்னார்[iv]. தங்களது வாக்கைப் பதிவு செய்துவிட்டு வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியே வந்தவர்களிடம் கேட்டறிந்துகொள்ளப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட மதிப்பீடுகளின் படி (Exit Polls) நோக்குகையில் படிப்பறிவு குறைந்தவர்கள் மத்தியிலும் காலநிலை மாற்றம் மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி போன்ற விடங்கள் பற்றி எதுவும் அறியாதவர்கள் மத்தியிலும் எதிரொலி கிளின்டனை விடவும் டொனால்ட் ட்ரம்புக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. ட்ரம்பைப் போன்றவர்கள் மீண்டும் ஜனாதிபதித் தேர்தல்களில் வெற்றிபெறுவதை எதிர்காலத்தில் தடுப்பதற்குக் கூடுதலான சவாலுக்கு விவேகமும் அறிவுக் கூர்மையும் கொண்ட வாக்காளர்கள் தேவை. அது மிகவும் அவசியமானதாகும். ஆனால், அதற்கான தொடக்கப்புள்ளி வரலாற்று ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட உண்மையொன்றை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனோநிலை பாதிப்பாக இருக்க முடியும். சகல தரப்பினரையும் அரவணைக்கின்ற அரசியல் என்பது சகல தரப்பினரையும் அரவணைக்கின்ற பொருளாதாரம் ஒன்று இல்லாமல் நிலைபேறானதாக இருக்கமுடியாது. பொருளாதார அசமத்துவம் அரசியல் சமத்துவத்தின் மிகப்பெரிய எதிரியாகும். செல்வந்தர்களுக்கும் சமுதாயத்தின் ஏனைய பிரிவினருக்கும் இடையே உருவாக்குகின்ற பிற்போக்குத்தனமான பொருளாதார பின்னணியில் அரசியல் முன்னேற்றத்தை மேம்படுத்த முயற்சிப்பதென்பது ஒற்றைக்காலுடன் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றுவதற்கு ஒப்பானதாகும்.
அமெரிக்காவில் ஒரு சதவீதமானவர்களின் பொருளாதாரம் டொனால்ட் ட்ரம்பின் எழுச்சியையும் வெற்றியையும் இயலுமானதாக்கியிருக்கிறது. அவரும் கூட அந்த ஒரு சதவீதமானவர்களில் ஒருவரே என்பது அங்கு பொருட்படுத்தப்படவில்லை. மக்களின் உணர்ச்சிகளைக் கிளறி முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் இவ்வாறுதான் செயற்படுகின்றது. ஏனைய நாடுகளில் இத்தகைய அனர்த்தத்தனமான விளைவுகள் வருவதைத் தடுப்பதற்கு ஒரேவழி அங்குள்ள முற்போக்கு அரசியல் கட்சிகளும் சக்திகளும் அரசியலில் சகல தரப்பினரையும் அரவணைக்கின்ற போக்கையும் பொருளாதாரத்தில் சகல தரப்பினரையும் அரவணைக்கின்ற போக்கையும் சமமான தளத்தில் முன்னெடுக்க வேண்டுமென்பதேயாகும்.
உலகளாவிய ஜனநாயக அலையின் இறுதி வெற்றியை இலங்கை குறித்து நிற்கிறது. அரசியல் ரீதியிலான முற்போக்கான காலப்பண்பொன்றின் (Political Progressive Zeigeist) இறுதிப் பயனாளியாக இலங்கையைக் குறிப்பிடலாம். ஆனால், அந்த வெற்றியும் நிலைவேறுடையதல்ல. இந்த உயர் உலகமயமாக்க உலகிலே (Uber – globalized world) எந்த நாடும் அடுத்துவருகின்ற காலப்பண்பின் கோட்பாட்டுக் கொடுக்குகளில் இருந்து தனிமைப்பட்டு இருக்க முடியாது.
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுவிட்டார் என்பதற்காக இலங்கையில் மீண்டும் ராஜபக்ஷ கட்சி வந்துவிடுமென்று கூறிவிட முடியாது. ஆனால், ட்ரம்பின் வெற்றி ராஜபக்ஷவின் மீளெழுச்சிக்கான சாத்தியப்பாட்டைக் கணிசமான அளவுக்கு மேம்படுத்தியிருக்கிறது. ராஜபக்ஷாக்களுக்கு ட்ரம்ப் உதவுவார் என்றுமில்லை. ஆனால், அவரின் வெற்றி முன்னேற்றத்தை வெறுக்கிறவர்களினதும் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கிறவர்களினது செயற்பாடுகளுக்கு ‘ஒரு நியாயப்பாட்டை’ வழங்குகிறது. பலம்பொருந்திய தலைவர் ஒருவரின் வழிகாட்டலில் இன, மத அரசியல் திட்டங்களின் ஊடாக மீட்சிபெற நாட்டம் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுக்கிறது. “ஜனநாயக வழிமுறைகளின் பயன்களை மேம்படுத்துவதில் நாட்டம் கொண்டவர்களுக்கு முகத்தில் அறைந்தது போல இருக்கிறது ட்ரம்பின் வெற்றி” என்று சிரியா நாட்டு ஜிஹாதி குழுவான ஜாபாத் – அல் – ஷாமின் பேச்சாளரான ஹம்சா அல் – கரிபி தனது ருவிட்டரில் பதிவுசெய்திருக்கிறார்[v].
இலங்கையிலே, தலைந்த தமிழர்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் வறிய சிங்களவர்களையும் வறிய பெளத்தர்களையும் சுரண்டிக் கொழுக்கின்றார்கள் என்ற மாயை அநகாரிக தர்மபால சிந்தனையைப் போன்று பழமையானது. ஆனால், அந்தப் பயங்கரமான பொய் ஆழப்பதிந்திருக்கிறது என்பது உண்மையே. அதற்கு பெருமளவுக்குக் காரணம், எந்தவொரு அரசியல் கட்சியுமே அதை எதிர்க்காததுதான். மாறாக, அனேகமாக சகல அரசியல் கட்சிகளுமே அவற்றின் தேர்தல் வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்காக அந்த மாயையை அடிக்கடி பயன்படுத்த முயற்சித்து வந்திருக்கின்றன. மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ராஜபக்ஷாக்களின் திட்டத்தில் அந்தப் பொய் ஒரு அடிப்படையான அம்சமாக விளங்குகிறது. ஆனால், பொருளாதார நீதியை குறைந்தபட்சமேனும் மக்களுக்கு வழங்குவதற்கு சிறிசேன – விக்கிரமசிங்க நிருவாகம் தவறும் பட்சத்தில் மாத்திரமே அந்தப் பொய் சிங்களப் பெரும்பான்மையினர் மத்தியில் பெரிதாக எடுபடக்கூடியதாயிருக்கும்.
இதுவரையான சமிக்ஞைகள் மிகவும் உற்சாகம் தருபவையாக இல்லை. இந்த அரசாங்கமும் கூட மறைமுக வரிகளை அதிகரிக்கும் சுலபமான பாதையில் செல்வதையே விரும்புகிறது என்பதை பெறுமதிசேர் வரி (வற்) அதிகரிப்பு உணர்த்துகிறது. மறைமுக வரி அதிகரிப்புகளின் மூலமாக பொருளாதார மீட்சிக்கான சுமையின் பெரும்பங்கை வறியவர்கள் மீதும் நடுத்தரவர்க்கத்தவர்கள் மீதும் சுமத்துவதிலேயே அரசாங்கம் நாட்டம் காட்டுகிறது. அத்தியாவசியப் பாவனைப் பொருட்கள் பலவற்றின் மீதான வரிகளில் குறைப்பைச் செய்திருப்பதன் மூலமாக புதிய வரவு – செலவுத்திட்டத்தில் சில சொற்ப நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அரசாங்கத்துக்கு ஒரு பொருளாதார நோக்கு இல்லை என்பதையும் வரவு – செலவுத் திட்டம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. அதன் காரணத்தினால் இந்த அரசாங்கமும் ராஜபக்ஷாக்கள் முன்னெடுத்ததைப் போன்ற பிராண்டமான பௌதீக உட்கட்டமைப்பு திட்டங்களைச் செயற்படுத்தும் தந்திரோபாயத்தையே பின்பற்றுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அந்த உட்கட்டமைப்புத் திட்டங்கள் சாதாரண மக்களுக்கு பெரிதாக எந்தப் பயனையும் தந்ததில்லை.
பத்து இலட்சம் தொழில் வாய்ப்புகள் தொடர்பான உறுதிமொழி பத்து இலட்சம் தொழில் வாய்ப்புகளை தந்துவிடவில்லை. நம்மிடம் இருக்கின்ற மனிதவளத்துக்கு பொருந்திவரக்கூடியதாக தொழில்வாய்ப்புக்களை உருவாக்கவல்ல தொழில்துறைகளை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டியது அவசியமானதாகும். அரசாங்க நிதியுதவிடனான பௌதீக உட்கட்டமைப்பு கட்டட நிர்மானத்துறை அத்தகைய தொழில்வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஆற்றலை இனிமேலும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எனவே, வேலையில்லாத் திண்டாட்டம் குறையப்போவதில்லை. குறிப்பாக இளைஞர் யுவதிகள் மத்தியிலான வேலைவாய்ப்பின்மை தொடர்ந்தும் தற்போதைய பயங்கரமான மட்டத்திலேயே இருக்கப்போகிறது. இதேவேளை, கட்டட நிர்மானத்துறையின் குறுகிய காலத் தேவைக்காக சீன மற்றும் இந்திய தொழிலாளர்களை கூடுதல் எண்ணிக்கையில் நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டியிருக்கும்.
தற்போதுள்ள ஏற்றுமதி தொழில்துறையைப் பாதுகாப்பதற்கோ அல்லது புதியவற்றை அபிவிருத்தி செய்வதற்கோ தெளிவான பாதையொன்றை வகுப்பதற்கு அரசாங்கம் தவறிவிட்டது என்பதை வரவு – செலவுத்திட்டம் கோடிட்டுக் காட்டியிருக்கிறது. சிறந்த வகையான தனியார் – அரசாங்க கூட்டுப்பங்காண்மையை உருவாக்கியதும் கிராமி மட்டத்தில் தொழில்வாய்ப்பு உருவாக்கத்துக்கும் வருமான பெருக்கத்துக்கும் வகைசெய்த பொருளாதார செயற்பாட்டை ஊக்குவித்ததுமான 200 ஆடை தயாரிப்புத் தொழிற்சாலை போன்ற திட்டமெதுவும் இப்போது இல்லை. அம்பாந்தோட்டையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை சீன முதலீட்டாளர்களுக்கு கையளிப்பது என்பது அபிவிருத்தியல்ல. மனித – யானை மோதல்களைத் தீவிரப்படுத்துவது உட்பட மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை அது மேலும் மோசமாக்கும். ராஜபக்ஷாக்கள் பேராசையுடன் முன்னெடுத்த நெடுஞ்சாலை நிர்மானத்தை தொடருவதும் இதேபோன்று பிரச்சினைகளையே பெருக்கும்.
பொருளாதார நியாயப்பாட்டை உணருகின்ற எந்தவொரு அரசாங்கமும் இன்டர்நெற் பயன்பாட்டுக்கான செலவை அதிகரிக்கின்ற அதேவேளை, உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக டெப்பை வழங்காது. குறைந்தபட்ச அரசியல் உணர்வுத்திறம் கொண்ட அரசாங்கமொன்று கத்தோலிக்க மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில், கடல் பகுதியில் பெருமளவில் மண்ணை அள்ளிக்கொண்டு அவர்களின் வாழ்தாராத்தைப் பாழடிக்கின்ற அதேவேளை, உலகிலேயே மிகவும் உயர்ந்த கிறிஸ்மஸ் மரத்தை அமைக்கும் பணியை முன்னெடுக்காது.
சுகாதாரப் பராமரிப்பு மீதான பெறுமதிசேர் வரி உட்பட பல வரி விதிப்புகள் அரசாங்கத்தின் மக்கள் செல்வாக்கை பரீட்சித்துப் பார்க்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது, உயர்மட்டத்திலான ஊழல் விவகாரங்களினால் ஏற்கனவே அரசாங்கம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது என்று அவதானியொருவர் எச்சரிக்கை செய்திருக்கிறார்[vi]. இது வரவு – செலவுத்திட்டம் அல்ல, பணம் சம்பாதிக்கும் திட்டமேயாகும். கூடுதலான மறைமுக வரிகளின் மூலமாக பெறப்படுகின்ற பணம் பளபளப்பான உட்கட்டமைப்புத் திட்டங்களிலும் சிறுபிள்ளைத்தனமான இலவச கொடுப்பனவுகளிலும் செலவிடப்படுகின்றது.
அது பொருளாதார மற்றும் அரசியல் அனர்த்தத்துக்கான ஒரு பாதையாகும். அதன் முடிவு ராஜபக்ஷாக்களின் வரவை காத்துநிற்கிறது.
Regaining Paradise with Donald Trump என்ற தலைப்பில் திஸரணி குணசேகரவால் எழுதப்பட்டு கிரவுண்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.
[i] https://www.facebook.com/notes/mahinda-rajapaksa/former-president-rajapaksa-congratulates-us-president-elect-donald-j-trump/10154273277253285
[ii] http://www.inquisitr.com/3698166/islamist-extremists-celebrate-the-win-of-trump-along-with-former-kkk-leader/
[iii] http://www.slate.com/articles/news_and_politics/politics/2016/11/white_won.html?wpsrc=newsletter_tis&sid=5820d99ebcb59cfc208b459
[iv] http://www.huffingtonpost.com/entry/neil-degrasse-tysons-cosmic-perspective-is-what-you-need-right-now_us_58241e45e4b0e80b02ced189
[v] http://www.inquisitr.com/3698166/islamist-extremists-celebrate-the-win-of-trump-along-with-former-kkk-leader/
[vi] http://www.economynext.com/Sri_Lanka_hikes_taxes,_targets_lower_deficit_in_2017-3-6603-1.html