படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

இலங்கையை ஆளுகின்ற இன்றைய கூட்டரசாங்கத்தின் பிரசவிப்பிற்குத் தான் ஆற்றிய பங்களிப்பினை வெறுமனே ஒரு மருத்துவிச்சியின் சேவை என்ற அளவோடு சுருக்கிவிட நிகழும் எத்தனிப்புகளைத் தமிழ் தேசம் அனுமதிக்க முடியாது.

மருத்துவிச்சி என்றால், அவரின் தொழிலே, யாரோ பெறுகின்ற குழந்தையின் பிரசவத்திற்குப் பணியாற்றுவதுதான். ஒரு குழந்தையின் பிறப்பிற்குப் பணியாற்றிய பின்பு, அடுத்த குழந்தையின் பிரசவத்திற்குப் பணியாற்ற அவர் போய்விடுவார் – போய்விட வேண்டும். அது மட்டுமே அவரது கடமை. ஒரு “மருத்துவிச்சி” என்ற பரிமாணத்தில் வேறு அர்த்தங்கள் அவருக்குக் கிடையாது. குழந்தைப் பிரசவத்திற்குப் பணியாற்ற ஒரு மருத்துவிச்சி மறுத்துவிட்டால், வேறு மருத்துவிச்சியை நாடி பிரசவத்திற்கான பணிவிடைகளைப் பெற்றுவிடலாம்.

இலங்கைத் தமிழர்களையும், இதுபோல – ஒரு மருத்துவிச்சி என்ற அளவோடு பாவித்து – இன்றைய கூட்டரசாங்கத்தைப் பிரசவித்துவிட்டுக் கழற்றிவிடுவதற்குத் தான் அமெரிக்காவும், இந்தியாவும், கொழும்பும் விரும்பின. இப்போதும் அந்த விருப்பத்துடனேயே செயற்படுகின்றன. ஆனால், தமிழர்களின் அர்த்தம், அவர்கள் ஒரு ‘தேசம்’ என்ற பரிமாணத்தில், வெறுமனே இந்தக் கூட்டரசாங்கத்தை உருவாக்குவதோடு மட்டும் முடிந்துவிடவில்லை.

ஐக்கிய தேசிய கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நடந்தது ஒரு காதல் திருமணம் அல்ல; அது ஓர் ஏற்பாட்டுத் திருமணம். அது ஓர் ஒரே-பாற் திருமணம் கூட. அமெரிக்காவும் இந்தியாவும் மற்றும் வேறு நலன்நாடிகளும் செய்த ஏற்பாடு அது. இரண்டு கட்சிகளுமே மணம் முடித்துக்கொள்ள இணங்கிய போதிலும், தாமாகவே ஓர் அரசாங்கத்தைப் பிரசவிக்கும் அக வல்லமை அற்றவையாகவே இருந்தன. எனவே – இவ்விரண்டு கட்சிகளையும் இணைத்துத் தாம் பிறப்பிக்கத் தீர்மானித்த கூட்டரசாங்கத்தைச் சுமந்து பிரசவிக்க – இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சேர்ந்தியங்கிய ஆட்களுக்கும் ஒரு வாடகைத்தாய் தேவைப்பட்டாள். அந்தப் பணியைச் செய்வதற்கு இணங்கக்கூடிய நிலையில் – இணங்க வைக்கப்படக் கூடிய நிலையில் – இருந்தது ஒரே ஒரு வாடகைத்தாய் மட்டும் தான். அது தான் தமிழ் தேசம். தமிழ் தேசத்தின் சார்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, அந்தப் பணியைச் செய்துமுடிக்கும் பொறுப்பை ஏற்றது.

தனது இறைமை மறுக்கப்பட்டு, தனது தனித்துவ தேச அங்கீகாரம் பறிக்கப்பட்டு – சில நூறு ஆண்டுகளாகவே அரசியல் நிர்க்கதி நிலையிலிருக்கும் தமிழ் தாய் – மறுக்கப்பட்டுப் பறிக்கப்பட்ட தனது பிறப்புரிமைகள் மீள உறுதிப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியினதும், நம்பிக்கையினதும் அடிப்படையில் — நடக்கவிருந்த ஏற்பாட்டுத் திருமணத்தின் கூட்டரசாங்கக் குழந்தையைத் தன் வயிற்றிலே சுமந்து ஈன்றெடுக்கும் வாடகைத் தாய் என்ற தற்காலிகப் பாத்திரத்தை ஏற்க நிபந்தனையற்றுச் சம்மதித்தாள்.

இலங்கைத் தமிழ் தேசத்தைப் பொறுத்தவரையில் — இந்த கூட்டரசாங்கத்தைப் பிரசவித்த தாயே அவர்கள் தான். தமிழர்களின் வயிற்றிலிருந்து – தமிழர்களின் வலிகளிலிருந்து – தமிழர்களின் தீர்மானத்திலிருந்துதான் இந்த கூட்டரசாங்கம் பிறந்தது.

இந்தக் கூட்டரசாங்கக் குழந்தையைத் தன் வயிற்றிலே சுமந்து பெற்றெடுக்கத் தமிழ்த் தாய் மறுத்திருந்தால், இந்தக் குழந்தையின் கருவையே உருவாக்கியிருக்க முடியாது — மஹிந்த ராஜபக்‌ஷ விட்டிருக்கமாட்டார். இந்தக் கூட்டரசாங்கமே பிரசவிக்கப்பட்டிருக்காது என்பதற்கும் மேலாக, இந்தத் திருமணத்தையே ஏற்பாடு செய்திருக்க முடியாது — மஹிந்த ராஜபக்‌ஷவே தொடர்ந்தும் இந்தத் தீவை ஆண்டிருப்பார். ஆட்சியிலிருந்து அவரை அகற்றுவதற்குத் துணை செய்ய, தமிழ் தேசத்தின் சார்பில் இரா. சம்பந்தன் வழங்கிய ஒப்புதலே – அதன்பின்பு நடந்த எல்லாவற்றுக்கும் ஆணி வேர்.

இப்போது – இந்தக் கூட்டரசாங்கக் குழந்தை பிரசவிக்கப்பட்டு, அதற்கு இரண்டு வயதும் ஆகப்போகின்றது. ஆனால், ஒரு சராசரி நிலை ஆரோக்கியத்தோடு கூடப் பிறந்திருக்காத இந்த குழந்தை, இருக்கின்ற ஆரோக்கியத்தையும் இழந்தபடியே இருக்கின்றது.

வேலை முடிந்ததும் ஒரு மருத்துவிச்சியைக் கழற்றிவிடுவது போலத் தமிழ் தாயைத் தவிர்த்துவிட்டுப் பச்சைக் குழந்தையான இந்த கூட்டரசாங்கத்தை வளர்க்க அதன் தந்தையர்களால் முடியாதுள்ளது. தாயை கைவிட்டுவிட்டு – தாய்ப் பாலின் இன்றியமையாத ஊட்டச் சத்தைப் புறக்கணித்துவிட்டு – தாய் அணைப்பின் அடிப்படையை உதாசீனப்படுத்திவிட்டு – மேற்குலகிலும் இந்தியாவிலும் தயாரிப்பான இறக்குமதி செய்யப்பட்ட செயற்கைப் பால்மாவை உள்நாட்டின் மாசடைந்த தண்ணீரில் கரைத்து ஊட்டி – அரைகுறை ஆரோக்கியத்தோடு பிரசவிக்கப்பட்டிருக்கும் இந்த கூட்டரசாங்கக் குழந்தையைப் பாதுகாக்கவோ வளர்த்தெடுக்கவோ அவர்களால் முடியாதுள்ளது.

இந்தக் கூட்டரசாங்கக் குழந்தையைத் தொடர்ந்து பாதுகாத்து – அது திடகாத்திரமாக எழுந்து நிற்பதற்குத் தாயும், தாய்ப் பாலும், தாயின் ஆதரவும் அரவணைப்பும் – இன்றியமையாத கட்டாயத் தேவைகளாய் இருக்கின்றன. “பெற்றெடுத்துத் தந்துவிட்டு, தருவதைப் பெற்றுக்கொண்டு ஒதுங்கி இரு” என்று வாடகைத்தாயை வெட்டி அனுப்பிவிடவே குழந்தையின் தந்தையர்கள் விரும்புகின்ற போதிலும், அவ்வாறு செய்துவிடமுடியாத அளவுக்கு அவர்களுக்கு அவள் தொடர்ந்தும் தேவைப்படுகின்றாள்.

எனவே, இந்த வாடகைத் தாய் குழம்பி விட்டால், குழந்தைப் பராமரிப்பு சிக்கலாகிவிடும். குழந்தையின் ஆரோக்கியம் மேலும் மோசமடைந்தால், ஏற்பாட்டுத் திருமணக் குடும்பம் பெரும் பிரளயமாகிவிடும். குடும்பத்தில் கலகம் ஏற்பட்டால், வீட்டுக்கும் அயலுக்கும் ஊருக்கும் அது நல்லதல்ல. எனவேதான், தாயின் தேவை தொடர்ந்தும் இன்றியமையாதது ஆகின்றது. அதனால் தான் – நிதானமாகவும் பொறுமையாகவும் இருக்கும்படியாகவும், குழந்தைக்காகத் தொடர்ந்தும் தனது சுகங்களை அர்ப்பணம் செய்யும்படியாகவும், தொடர்ந்தும் துயரங்களைத் தாங்கும்படியாகவும் தாய் அறிவுறுத்தப்படுகின்றாள். தனது நலன்களை எல்லாம் தியாகம் செய்துவிட்டு – தான் பெற்ற குழந்தையத் தானே பாதுகாப்பதே ஒரு தாயின் தலையாய கடமை என அவள் அறிவுறுத்தப்படுகின்றாள்.

“இது உன்னுடைய குழந்தை. வேண்டி விரும்பி நீ பெற்றெடுத்த செல்லம். அது நோயுற்று நலிவுற்று இறந்து போவதற்கு நீயே விடலாமா…? நீ பெற்றெடுத்த குழந்தையைப் பாதுகாப்பது உனது கடமை அல்லவா…? எவ்வளவு வலிகளுக்குப் பிறகு நீ பிரசவித்த குழந்தை இது. நீயே இதனைப் பாதுகாக்க மறுத்தால், நீ பட்ட வேதனைகள் எல்லாம் பெறுமதி அற்றவை ஆகிவிடும் அல்லவா…?” என்று தமிழ் தாய் மந்திரிக்கப்படுகின்றாள். 60 ஆண்டுகாலமாக அவள் பட்ட கொடுமைகள் எல்லாமே – இந்தக் கூட்டரசாங்க குழந்தையைப் பிரசவித்துப் பாதுகாக்க மட்டுமே என்றவாறாக அவள் நம்பவைக்கப்படுகின்றாள். ஒரு தாயாகப் பெருமைப்படுத்தப்படுவது போலப் பூசித்துப் பாவிக்கப்பட்டு, உண்மையில் ஒரு பொருட்டற்ற பொருள் போல அவள் சிறுமைப்படுத்தப்படுகிறாள்.

ஒரு மானிடப் பிறவியாக – ஒரு பெண்ணாக – தனித்து – சார்ந்திராது – தன்னாதிக்கத்துடனும் இறைமையுடனும் – தனது பூர்வீக நிலத்தில் வாழுவதற்கு அவளுக்கே உரித்தாக உள்ள உரிமைகள் மீள அங்கீகரிக்கப்படும் என்று வழங்கப்பட்ட நம்பிக்கைகள் கைவிடப்பட்டு — குழந்தைக்குப் பாலும், அரவணைப்பும், பாதுகாப்பும் கொடுப்பதற்குத் தேவையான அளவுக்கு மட்டும் ஆரோக்கியத்துடன் வாழுவதற்குப் போதுமான சலுகைகளும் வசதிகளும் மட்டுமே அவள் வழங்கப்படுகின்றாள்.

இவ்வாறாகத் தாம் அவளைத் தொடர்ந்து ஏமாற்றிப் பயன்பெற முனைவதால் – தான் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை இந்தத் தமிழ் தாய் எந்த எல்லை வரை பொறுப்பாள் என்ற பதற்றமே, அவளை ஒரு தாயாக வாடகைக்கு அமர்த்தியவர்களிடம் இருக்கின்றது. அதனால் – தொடர்ந்தும் அவளைப் பொறுமையின் எல்லைக்குள்ளேயே வைத்திருப்பதற்கு எவ்வகையான சலுகைகளை இன்னும் அள்ளி வழங்கலாம் என்றே அவர்கள் சதா சிந்தித்தபடி இருக்கின்றார்கள். ஆனாலும் – அவள் குழம்பிவிடாமல் இருப்பதற்கான அதியுச்ச உத்தரவாதமாக – அவளுக்குத் தாம் முன்னர் அளித்த நம்பிக்கைகளின் அடிப்படையில் – அவளின் பிறப்புரிமைகளை அங்கீகரித்து, அவளுக்கு மதிப்பளிப்பதற்கான மார்க்கங்களை அவர்கள் மனவிருப்போடு தேடுகிறார்கள் இல்லை.

###

இந்த “நல்லாட்சி” அரசாங்கத்தை ஒரு முக்கூட்டு இணக்கமாக  வெளித்தரப்புக்கள் ஏற்படுத்தி வைத்துள்ளன. ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிரிசேன, இரா. சம்பந்தன் ஆகியோரைத் தலைவர்களாகக் கொண்ட கட்சிகளுக்கு இடையிலே இந்த முக்கூட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு கட்சிகளும் – தமக்கிடையே ஆன புற முரண்பாடுகளாலேயோ அல்லது தம்முள்ளேயே ஆன அக முரண்பாடுகளாலேயோ குழம்பிவிடாதபடி – விட்டுப் பிரிந்துவிடாதபடி – இந்த முக்கூட்டைப் பேணுவதே இந்த வெளித்தரப்புக்களின் தலையாய கரிசனையாக இருந்து வருகின்றது. ஏனெனில் – இந்த முக்கூட்டு அரசாங்கத்தின் இருப்பே – இத்தகைய அக மற்றும் புற முரண்பாடுகளைத் தவிர்ப்பதிலேயே தங்கியிருக்கின்றது. இன்னொரு வகையில் எடுத்துக் காட்டுவதானால் — இரா. சம்பந்தனின் கட்சி ரணிலோடும் மைத்திரிபாலவோடும் முரண்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய அதே சம நேரத்தில், அந்தக் கட்சி, தனக்குள்ளேயான அக முரண்பாடுகளால் பலவீனப்பட்டுவிடாமலும் அவர்கள் கவனிக்க வேண்டும்.

இன்றைய தருணத்தில் – அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில், வேறேதும் விடயங்களில் புடுங்குப்பாடுகள் இருப்பினும், இலங்கை தொடர்பில் எத்தகைய கொள்கை வேறுபாடும் கிடையாது. இந்த இரண்டு நாடுகளினதும் நோக்கமும், அந்த நோக்கத்தை அடைவதற்கான ஊக்கமும், அந்த ஊக்கத்தின் அடிப்படையிலான ஆக்கமும் ஒன்றே தான். இந்த இரண்டு நாடுகளுக்கும், இலங்கைத் தீவில் இன்றைய தேவை, தாம் ஏற்படுத்தியிருக்கும் இந்த முக்கூட்டு அரசாங்கத்தைப் பாதுகாத்து, அதில் குலைவுகள் ஏற்படாது பேணி, தாம் வகுத்திருக்கும் பாதையிலிருந்து விலகிவிடாமல் அதனைப் பயணிக்க வைப்பது. அதற்காக – தமக்குப் பாதகம் இல்லாத எதைச் செய்யவேண்டும் எனினும் செய்வது. இன்னொரு வகையில் எடுத்துக்காட்டுவதானால் – இரா. சம்பந்தனின் கட்சிக்கு உள்ளேயே எழக்கூடிய முரண்பாடுகளால் தமது நோக்கத்திட்டங்கள் பாதிக்கப்படும் எனின், அவ்வாறான முரண்பாடுகளைக் களைவதற்காகத் தமது நலனிற்குக் கேடில்லாத எதனையும் செய்வது. தத்தமது நலன்களில் அவர்கள் அக்கறையாக உள்ளார்கள் – அதில் ஏதும் பிரச்சனைகள் இல்லை.

ஆனால், இங்கே பிரச்சனை என்னவென்றால் — தாம் உருவாக்கிய கூட்டரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக எதையும் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பவர்களிடம், தமிழ் தேசத்தின் இறைமைக்கான அங்கீகாரத்தை வலியுறுத்திப் பெறுவதற்குப் பொருத்தமான தந்திரோபாயம் எதனையும் – அதே கூட்டரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் இரா. சம்பந்தனின் கட்சி கொண்டிருக்காததுதான். இன்னொரு வகையில் சொல்லுவதானால் — வெறும் சலுகைகளுக்கும் வசதிகளுக்கும் கைமாறாக, எந்த எல்லை வரையும் இறங்கிப் பணிவிடைகள் செய்து, இந்த கூட்டரசாங்கத்தைப் பாதுகாக்கத் தாம் தயாராய் இருப்பதான நம்பிக்கையை இந்த கூட்டரசாங்கத்தின் தந்தையர்களிடத்தில் இரா. சம்பந்தனின் கட்சி ஏற்பத்தியிருப்பது தான். இன்னொரு வகையில் சொல்லுவதானால் – தமிழ் தேசத்தின் இறைமையும் தன்னாதிக்க உரிமையும் அங்கீகரிக்கப்படாதவிடத்து – தமது கட்சிக்குள்ளும் தமிழ் தேசத்திலும் குழப்பங்கள் நிகழும் என்ற அச்சத்தையும், அவ்வாறான குழப்பங்களின் நிமித்தமாக, இந்த கூட்டரசாங்கத்தைப் பராமரிப்பதிலிருந்து தாம் விலக நேரும் என்ற பயத்தையும் அந்தக் கூட்டரசாங்கத்தின் தந்தையர்களிடத்தில் இரா. சம்பந்தனின் கட்சி ஏற்படுத்தாதது இருப்பதுதான்.

தமிழ் தேசத்தின் இறையாண்மைப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றெடுக்கும் முயற்சியில் திடகாத்திரமான ஒரு கட்டத்தை நாம் இப்போது அண்மித்திருக்கின்றோம் என்று சொல்லப்படுகின்ற வேளையில் — அனேகர் எழுப்புகின்ற கேள்வி – “எந்த பலத்தின் அடிப்படையில் எமது  உரிமைகளை வலியுறுத்தும் அதிகார அழுத்தத்தை நாம் பிரயோகிக்க முடியும்?” என்பதும், “எம்மிடம் அவ்வாறான பலம் எதுவும் உள்ளதா?” என்பதுமாகும்.

ஆசியாவின் தென் மையத்தில் – இந்து சமுத்திரத்தின் நடுவில் – முதன்மையான கடற் பாதையின் அருகில் அமைந்திருக்கும் ஒரு தனியான நிலப் பகுதி என்ற வகையிலும், அது ஒரு தனியான நாடாக இருப்பதன் காரணமாகவும் – இலங்கை எப்போதுமே உலக வல்லரசுகளால் கையாளப்படும் ஒரு தீவாகவே இருந்து வந்தது; இப்போதும் இருக்கின்றது; இனியும் இருக்கப் போகின்றது என்ற உண்மையை ஓர் உப்புச்சப்பில்லாத விடயமாக எவருமே உதாசீனப்படுத்திவிடக்கூடாது.

ஏனெனில் – நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் – நாம் ஏற்றாலும் ஏற்காதுவிட்டாலும் – இதை எழுதுகிற எனது விதியையும், இதை வாசிக்கின்ற உங்கள் ஒவ்வொருவரது விதியையும் அந்த உண்மைதான் தீர்மானித்துச் செல்கின்றது. ஆகக் கடைசியாக — எம் ஒவ்வொருவரது பாவனையிலும் இருக்கும் தொலைபேசியின் கட்டணங்கள் 49.6 வீதத்தால் அதிகமாகியிருப்பது வரை – எமது விதியை அந்த உண்மையே தீர்மானித்திருக்கின்றது.

இலங்கைத் தீவைக் கையாள முனைகின்ற உலகத் தரப்புக்களுக்கு – இலங்கைத் தமிழ்த் தேசம் எப்போதுமே தேவையாக உள்ள ஓர் இன்றியமையாத தந்திரக் கருவி. இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் – குறிப்பாக, வாக்குரிமை பெற்ற தமிழர்கள் ஒவ்வொருவரும் – தம் ஒவ்வொருவரது தனிப்பட்ட மூலோபாய முக்கியத்துவத்தைப் புரிந்திருக்க வேண்டும். 2015ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்‌ஷவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு வெளித்தரப்புக்கள் நகர்வுகளைச் செய்தபோது, ஒவ்வொரு தனித்த தமிழ் மகனினதும் மகளினதும் வாக்குரிமையை மட்டும் நம்பியே அவர்கள் அந்த நகர்வினைச்  செய்தார்கள்.

பூலோகப் பெரும் சக்திகள் தமது நலன்களுக்காகப் பயன்படுத்தும் ஒரு தந்திரோபாயக் கருவியாகத் திகழ்கின்ற தமிழ் தேசம், தனது நலனுக்காகப் பயன்படுத்தவல்ல சுய வலுவாகவும் – அதே தந்திரோபாயக் கருவி என்ற பாத்திரமே திகழ்கின்றது என்பதுவே நாம் அறிந்துணர வேண்டிய நுட்பமான உண்மையாகும்.

இன்றைய பொழுதில் எம்மிடமிருக்கும் “வலு” எதுவெனில் – தனக்கே உரிய அரசியற் பிறப்புரிமை அங்கீகரிக்கப்படாதவிடத்து – இந்த கூட்டரசாங்கக் குழந்தையின் பராமரிப்பிலிருந்த தான் விலகிவிடுவேன் என்ற அச்சத்தை, இந்த குழந்தையின் தந்தையர்களிடத்தில் தமிழ் தாய் ஏற்படுத்துவதுதான். அந்த வகையில் – என்னைப் பொறுத்தவரையில் – தமது 30 வருட ஆயுதப் போராட்டத்தின் எந்த ஒரு தருணத்திலும் விடுதலைப் புலிகளால் கூட ஏற்படுத்த முடியாதிருந்த அளவுக்கான பீதியை, சம்மந்தப்பட்ட தரப்புக்கள் எல்லோரிடத்திலும் இப்போது ஏற்படுத்தவல்ல தகுதியோடு இரா. சம்பந்தனின் கட்சி இருக்கின்றது – பல காரணங்களின் நிமித்தம்.

தமிழ் தேசத்தின் “பலம்” அல்லது “வலு” அல்லது “சக்தி” என்ன என்ற கேள்விக்கு விடை தேடும் எத்தனங்களில் ஜோசெப் நை (Joseph Nye) என்ற அமெரிக்க அறிஞர் இப்போது பேசப்படுகின்றார். “வலு” தொடர்பான அவரது கோட்பாடுகளின் ஊடாக தமிழர்களின் “வலு” என்ன என்பது தேடப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு – போர் முடிவடைந்த பின்பு – பிரபாகரன் அவர்களின் இறப்பு தொடர்பாக ‘புதினம்’ இணைய தளத்தில், நான் எழுதி சர்ச்சையாகிப் போன ஒரு கட்டுரைத் தொடரில், ஜோசெப் நை அவர்களின் கோட்பாடுகள் பற்றி குறிப்பிட்டு, தமிழ் தேசத்தின் அரசியலில் இனி “சாதுர்ய வலு” என்பதன் தேவைப்பாடு குறித்து எழுதியிருந்தேன்.

வரலாறு எம்மை நிறுத்தியுள்ள இன்றைய இடத்திலிருந்து – அரசறிவியலாளர் ஜோசெப் நை சொல்லுகின்ற “சாதுர்ய வலு” பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

மிகச் சுருக்கமாக, “மென் வலு” (Soft Power) என்றால் – பறப் பாசத்தைக் காட்டியோ அல்லது அகக் கவர்ச்சியைக் காட்டியோ எமது காரியங்களை அடுத்தவர்களைக் கொண்டு சாதித்துக் கொள்வது.

மிகச் சுருக்கமாக, “வன் வலு” (Hard Power) என்றால் – பயமுறுத்திப் பணியவைத்தோ அல்லது பணம் பொருளைக் கொடுத்து மயக்கியோ எமது தேவைகளை அடுத்தவர்களிடத்தில் ஈடேற்றிக் கொள்வது.

மிகச் சுருக்கமாக, “சாதுர்ய வலு” (Smart Power) என்றால் – பாசம் போலப் பாசாங்கு செய்தும், பயமுறுத்தலைப் பாசாங்கு இல்லாமல் செய்தும் – “மென் வலு” மற்றும் “வன் வலு” என்பவற்றைத் தேவையான விகிதாசாரத்தில் கலந்து பிரயோகித்து – எமது காரியங்களை அடுத்தவர்களிடத்தில் பூர்த்திசெய்துகொள்வது.

“சாதுர்ய வலு” தொடர்பில் பேசுகின்ற ஜோசெப் நை, 2ஆம் உலகப் போருக்குப் பின்னர் “வன் வலு” மற்றும் “மென் வலு” கோட்பாடுகளைத் தான் அறிமுகம் செய்ததாகவும், ஆனால் 2000ஆம் ஆண்டுக்குப் பின்னதான பூலோக ஓட்டத்தில் — அவையிரண்டும் ஒன்றை மற்றது பிரதியீடு செய்யமுடியாது என்று கண்டறிந்த பின்பு — இந்த “சாதுர்ய வலு” என்ற கோட்பாட்டைத் தான் உருவாக்கியதாகவும் குறிப்பிடுகின்றார். “சர்வதேச உறவுகளில் வலு என்பது எது?” என்பது தொடர்பில் அவர் நிகழ்த்திய சில விரிவுரைகளிலும் நான் அமர்ந்திருந்திருக்கிறேன்.

###

சிறீலங்காவை இன்று ஆளும் கூட்டரசாங்க குழந்தையின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் தமிழ் தேசத் தாயின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாக இருக்கும் போது, அந்த குழந்தையின் ஆரோக்கியமும் முன்னேற்றமும் யாருகெல்லாம் அவசியமாய் உள்ளதோ, அவர்கள் இந்த தமிழ் தேசத் தாய் குழம்பிவிடாமல் இருப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். செய்யத் தான் வேண்டும். ஆனால், அது, அவ்வாறு அவள் குழம்பிவிடுவாள் என்றோ, அல்லது ஏற்கெனவே குழம்பத் தொடங்கிவிட்டாள் என்றோ ஒரு பீதி ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்.

அத்தகைய பீதியை ஏற்படுத்தவல்லதுதான் தமிழ் தேசத்தின் “சாதுர்ய வலு”. ஆனால், சிக்கல் எங்கு வந்தது எனில் – தமிழ் தேசத்தின் இந்த இன்றியமையாத் தன்மை கொண்ட அரசியல் மகத்துவத்தைச் சரிவரப் பயன்படுத்தி – “சாதுர்ய வலு”வைப் பிரயோகித்து – எமக்கே உரித்தான அடிப்படை உரிமைகளை வலியுறுத்திப் பெற்றுக்கொள்ளத் தவறுகின்றது இரா. சம்பந்தனின் கட்சி. “தரக்கூடியதைத் தாருங்கள்; ஒரு வீதம் தந்தாலும் பரவாயில்லை; நாம் உங்கள் கூட்டரசாங்கத்தைப் பாதுகாத்துத் தருகின்றோம்” என்று கீழிறங்கி – தரம் தாழ்ந்து – போய்க்கொண்டேயிருக்கிறார்கள் தமிழ் தலைவர்கள். அதே வேளையில் – மறு புறத்தில் – சிங்களத் தலைவர்களோ – தமது “மென் வலு”வைப் பாவித்துத் தமிழர் தலைவர்களுக்குப் பதவிகளையும் படாடோபங்களையும் வழங்கியும், தமது “வன் வலு”வைப் பாவித்து அவர்களுக்கு இன்னபிற சலுகைகளை வழங்கியும் – தமிழர்களை இப்போது தமது “சாதுர்ய வலு”வால் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள். குறிப்பாகச் சொன்னால் – சொல்லுவதற்கெல்லாம் தலையாட்ட வைத்துவிட்டார்கள். தமிழ் தலைவர்களை வைத்தே, தமிழ் தேசத்தவர்களைச் “சிறீ லங்கர்களாக” சிந்திக்க வைக்கும் மாற்றத்தைச் சிறுகச் சிறுக ஏற்படுத்திவருகின்றார்கள். இப்படியே போய்க்கொண்டிருக்குமானால் – ஆகக் கடைசி ஆராய்வில் வரப் போகும் முடிவு என்னவெனில் — ஒருபுறத்தில் இந்த “மென் வலு”, “வன் வலு”, “சாதுர்ய வலு” பற்றியெல்லாம் நாம் வெறுமனே வியாக்கியானங்கள் கொடுத்துக்கொண்டிருக்கையில் — உண்மையில் இவை எல்லாவற்றையும் ஒரேயடியாகப் பிரயோகித்து, மீண்டுமொருமுறை தமிழினத்தை ஏமாற்றித் தமது காரியங்களைச் சாதித்து முடித்த வல்லவர்கள் சிங்களத் தலைவர்களே என்பதாகும்.

அத்தகைய முடிவினை மாற்றுவதற்கான வழி தமிழ் தேசம் சாதுர்யமாகச் சிந்தித்துச் செயலாற்றுவதுதான்.

தமிழர்களிடத்தில் இன்னமும் ‘வன்சக்தி’ உண்டு. எவற்றையெல்லாம் வைத்துப் பேரங்கள் பேச முடியுமோ, அவை எல்லாமேதான் “வன் சக்தி”. எம்மிடம் உள்ள அந்த “வன்சக்தி”யின் காரணமாகத் தான், இன்றைய கூட்டரசாங்கத்தின் பிறப்பில் நாம் தாயாகப் பங்களிக்க வேண்டி வந்தது. ஆனால், பேரங்கள் பேசாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாம் எமது பங்களிப்பை அப்போது வழங்கியிருந்தோம் என்பது வேறு கதை. எமது அந்த “வன்சக்தி” – ஒவ்வொரு தமிழ் மகனிடமும் மகளிடமும் இருக்கும் வாக்குரிமையும், அந்த வாக்குகள் மூலமாக நாம் பெற்றுள்ள தமிழ் நாடாளுமன்ற ஆசனங்களும் ஆகும்.

அதே போன்று, தமிழ் தேசத்திடம் இருக்கும் பிறிதொரு வன்சக்தி — மக்கள் இயக்கங்களும், அவற்றின் தலைமைகளும், அவற்றின் செயற்பாடுகளும் ஆகும். தமிழர்களை ஏமாற்ற எண்ணுபவர்கள் எவற்றையெல்லாம் கண்டு பயப்படுகின்றார்களோ, எவற்றின் தாக்கங்களால் தமது நோக்கத் திட்டங்களை மாற்றியமைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றாகளோ — அவை எல்லாமே “வன் சக்தி”. தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்கள், அவறுக்குத் தலைமையேற்க முன்வந்த விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்ற மனிதர்கள், தமிழ் தேசத்தின் இறைமையை வலியுறுத்தி அவை முன்வைக்கும் தீர்வுத் திட்டங்கள், அந்தத் தீர்வு திட்டங்களின் அடிப்படையில் அவை முன்னெடுக்கும் ‘எழுக தமிழ்!’ போன்ற மக்கள் பேரணிகள்… என எல்லாமே – தமிழர்களை எமாற்ற எண்ணுபவர்களைப் பதற வைக்கும் தமிழ் தேசத்தின் “வன் சக்தி.”

தமிழ் தேசத்திடம், மிகப் பலமான “மென் வலு”வும் இருக்கின்றது. “மென் வலு” எனப்படுவது, தமிழ் தேசத்திற்கு மாறானவர்களையும் தமிழர் நலனில் அக்கறை கொள்ள வைக்கும் கவர்ச்சி. எம்மை வெறுக்காமல் எம்மீது அவர்களை நம்பிக்கை கொள்ளவைக்கக்கூடிய ஈர்ப்பு. எங்களுக்கு மாறான தங்களுடைய நிலைப்பாடுகளை மீறியும், நாங்கள் வேண்டுவதைச் செய்வதற்கு, ஏதோ ஒன்று அவர்களைத் தூண்ட வேண்டும். அவ்வாறு அவர்களைத் தூண்டவல்லதாக எம்மிடமிருப்பதுதான் “மென் சக்தி.” கொழும்பு ஆட்சியாளர்களின் மனதைப் புண்படுத்திவிடக்கூடாது என்ற அவதானத்துடன் – நிதானமாகவும், கொழும்புக் கூட்டரசாங்கத்தை குழப்பிவிடக்கூடாது என்ற பக்குவத்துடன் – கவனமாகவும், கொழும்பு ஆட்சியாளர்களுடைய அன்பையும் நம்பிக்கையையும் பெறுவதற்காக – பொறுமையாகவும் செயற்படுவதால், இன்றிருக்கும் எந்த ஒரு தமிழ் அரசியலாளரை விடவும், சம்பந்தன் ஐயாவும் சுமந்திரனுமே கொழும்பால் விரும்பப்படுகின்ற தலைவர்களாகத் திகழ்கின்றார்கள். அதனால், அவர்களே, இன்று தமிழ் தேசத்தின் “மென்சக்தி”.

தமிழ் தேசத்தின் இந்த “வன் வலு”வையும், “மென் வலு”வையும் பொருத்தமான விகிதாசாரத்தில் சாதுர்யமாகக் கலந்து பிரயோப்பது எவ்வாறு என்பதுவே எம் முன்னால் உள்ள கேள்வி.

###

சிறீலங்கா நாட்டுக்காக எழுதப்படுவதாகச் சொல்லப்படுகின்ற புதிய அரசமைப்பு யாப்பில் மூன்று விடயங்களில் கவனம் செலுத்தப்படுவதாகச் சொல்லப்படுகின்றது:

(1) நிறைவேற்று ஆட்சியதிபர் முறைமையை நீக்குவது;

(2) தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது;

(3) தமிழர் பிரச்சினைக்குத் தீர்வான அதிகாரப் பகிர்வினைச் செய்வது.

ஆனால், அறியக் கிடைப்பவற்றிலிருந்து நாம் அறிந்துகொள்வது என்னவெனில் — முதலிரண்டு விடயங்களிலும் தத்தமக்கிருக்கும் சாதக பாதகங்கள் தொடர்பில் மட்டுமே கவலைப்படும் ரணிலும் மைத்திரிபாலவும், மூன்றாவது விடயத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. ஏதோ ஒரு வகையில் – இந்த மூன்றாவது விடயத்தைத் தொடாமலேயே, முதலிரண்டு விடயங்களில் மட்டுமே இணக்கப்பாட்டுக்கு வந்து, புதிய அரசியலமைப்பை உருவாக்கிமுடித்துவிட அவர்கள் முயற்சிக்கின்றார்கள். அவ்வாறு அவர்கள் செய்திடுவார்களெனில் — இந்த கூட்டரசாங்கக் குழந்தையைப் பெற்றெடுத்து, ஏதோ ஓர் எதிர்பார்ப்பில் இன்றுவரை அதற்கு நிபந்தனையற்ற அரவணைப்பைக் கொடுத்துவரும் தமிழ் தேசத்திற்குக் கிடைக்கப் போவது எதுவுமே இல்லையா…?

எழுதப்படுகின்ற இந்த அரசமைப்பு யாப்பினைத் தமிழ் மக்களிடம் தாம் எடுத்துவருவோம் என்கிறார் சம்பந்தன் ஐயா. தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எத்தகைய தீர்வினையும் தனது கட்சி ஏற்றுக்கொள்ளாது என்கிறார் அவர். தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால், தமிழ் மக்களோடு சேர்ந்து, அந்தத் தீர்வு யோசனை மீது நிகழ்த்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பின்போது, அதற்கு எதராகத் தமது கட்சியும் வாக்களிக்கும் என்றும் சொல்லுகிறார் ஐயா. ஆனால், கேள்வி என்னவெனில் — தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்ட பின்பு ஐயாவின் கட்சி என்ன செய்யும் என்பதல்ல; மாறாக — தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதான ஒரு தீர்வைப் பெற்றெடுப்பதற்கு ஐயாவின் கட்சி இப்போது என்ன செய்கின்றது என்பதேயாகும். இவ்வளவு காலமும் கூட்டரசாங்கத்தோடு அரவணைத்துக் கிடந்ததன் பெறுபேறு — வெறுமனே, எதிர்க்கட்சி தலைவர், மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்கள் என்ற பதவிகள் மட்டும் தானா…? தமிழ் தேசத்திற்கு மிஞ்சப் போவது – இன்னுமொரு தடவை தென்னிலங்கையால் ஏமாற்றப்பட்டார்கள் என்ற அவப்பெயர் மட்டும் தானா…?

இந்தக் கூட்டரசாங்கக் குழந்தையைப் பிரசவிப்பது தமிழ் தாய் ஏற்றுக் கொண்ட ஒரு தற்காலிகப் பணி. வாடகைத் தாய் பணிக்கான உடன்பாடு இதயங்களில் எழுதப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. குழந்தையைப் பிரசவிப்பதற்கான பிரதியுபகாரமாகத் தமிழ் தாயின் இறைமை அங்கீகரிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அது நம்பிக்கையின் அடிப்படையிலான உடன்பாடு என விபரிக்கப்பட்டது. ஆனால், இப்போது, வெறுமனே சலுகைகளுடனும் வசதிகளுடனும் மட்டுமே கழற்றிவிடப்படக்கூடிய ஏது நிலைகள் தெரிகின்றபோது — இனியாவது நாம் பேரங்கள் பேசத் தொடங்க வேண்டும். இதயங்கள் நேர்மையாகச் செயலாற்ற மறுக்கின்ற போது, மூளையைக் களத்தில் இறக்கி சாதுர்யமாகச் செயலாற்ற வேண்டும். எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வைத் தருகின்றார்கள் என்று பின்னர் புலம்புவதற்குப் பதிலாக, ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை முன்னரே உறுதிப்படுத்திப் பெற்றுக்கொள்வதற்கான வழிகளைத் தேட வேண்டும்.

தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கினால் மஹிந்த ராஜபக்‌ஷ சிங்களவர்களைக் குழம்புவார் என்று கொழும்பு சொல்லுமானால், தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கப்படாதவிடத்து விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் தமிழர்களைக் குழப்புவார்கள் என்று திருப்பிக் கூறும் திராணி இருக்க வேண்டும். ‘எழுக தமிழ்!’ போன்ற பேரணிகளால் சிங்களவர்கள் பிரச்சினைப்படுகின்றார்கள் என்று கொழும்பு கூறுமானால், முதலில் பிரச்சினைப்பட்டுப் பேரணி போனது தமிழர்கள் அல்ல என்பதை உரைக்கும் துணிவு இருக்க வேண்டும். தமிழ் அரசியலைத் தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல கொழும்புக்கும் பிற நாடுகளுக்கும் பாசாங்கு செய்யாமல், உரியதை உரிய முறையில் கொழும்பு செய்யாதவிடத்து, தமிழ் தேசத்தில் விடயங்கள் கைமீறிப் போகும் என்று பயமுறுத்தும் தினாவெட்டு இருக்க வேண்டும். இதயபூர்வ உடன்பாடுகளுக்குத் துரோகம் இழைக்கப்பட்டால், நேரக்கூடிய ஆபத்தை எடுத்துரைக்கும் ஆற்றல் இருக்க வேண்டும்.

விக்னேஸ்வரனையும் கஜேந்திரகுமாரையும் பகைவர்களாகப் பார்க்காமல், தமிழ் “வன் சக்தி”யின் குறியீடாக நோக்கப்படும் அவர்களின்பால் தமிழ் தேசம் ஈர்க்கப்பட்டால், தாம் அங்கம் வகிக்கும் கூட்டரசாங்கத்திற்கு வரக்கூடிய நெருக்கடியைத் தேவையான எல்லாத் தரப்புக்களுக்கும் விளக்கி — தமது “மென் வலு”வால் ஏற்படுத்தியுள்ள நல்லுறவுகளையும் பயன்படுத்தி — சம்பந்தன் ஐயாவும் சுமந்திரனும் சாதுர்யமாகக் காரியங்களைச் சாதிக்க வேண்டும்.

‘எழுக தமிழ்!’, தமிழ் மக்கள் பேரவை, விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்ற வகையறாக்களையெல்லாம் – பிரச்சினைகளாகவும், தொல்லைகளாகவும் கருத்திலெடுத்துச் செயலிழக்கச் செய்ய முயற்சிப்பதில் தலைமைத்துவப் பண்பு எதுவுமே இல்லை. தமக்கு வாக்களித்த மக்களுக்குள்ளிருந்தே தன்னியல்பாக எழுகின்ற இந்த எழுச்சிகளையெல்லாம் நேர்மையாக ஊக்குவித்து, அந்த மக்களால் தமக்கு அளிக்கப்பட்ட ஆணைகளை நிறைவேற்றுவதற்கான பலமாகவும் ஆதரவாகவும் மாற்றியெடுப்பதில்தான் தலைமைத்துவச் சிறப்பு இருக்கின்றது.

சம்பந்தன் ஐயாவின் கட்சிக்கு வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பித் தமிழ் தேசம் வழங்கிய ஆணை — என்னவிதத்திலாவது தனது இறைமையை மீட்டெடுக்கும்படியாகவே அல்லாமல், மீண்டுமொருமுறை தாம் ஏமாற்றப்பட்டதான செய்தியைக் கொண்டுவரும்படியாக அல்ல. அவ்வாறான ஒரு செய்தியோடுதான் நாளை அவர்கள் வருவார்களெனில் – இன்று அவர்கள் மெளனமாக இருப்பதற்கான காரணம் நக்குண்டு நாவிழந்ததே என்றுதான் நாளைய வரலாறு எழுதும்.

அவ்வாறாகவேதான் வரலாறு எழுதப்பட்டுவிடுமாயின் – தமிழ் தேசத்தின் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கான பிரதான மூலோபாயத்தின் ஒரு கூறாக மட்டுமே இருக்கவேண்டிய வன் போக்கு அணுகுமுறையே, பிரதான மூலோபாயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடக்கூடிய ஏது நிலைகள் உருவாகலாம். நல்லதே நடக்கவேண்டும் என விரும்புகின்ற எவராலுமே விரும்பப்படும் ஒரு கட்டவிழ்வாக அது இருக்காது.

திருச்சிற்றம்பலம் பரந்தாமன்