தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு எந்தவொரு தேசிய விவகாரம் தொடர்பாகவும் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு முழு உரிமையும் உள்ளது. தமிழ் மக்கள் தொடர்பான எந்த விவகாரத்திலும் நிலைப்பாட்டை எடுப்பதற்கு  அவர்களிற்கு விசேட கடப்பாடும் உரிமையுமுள்ளது. மாறுகின்ற நிலைவரங்களுக்கும் பின்புலங்களுக்கும் ஏற்ற முறையில் தங்களது நிலைப்பாட்டை மாற்றுவதற்கோ அல்லது திருத்தம் செய்வதற்கோ அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், பொறுப்பு வாய்ந்த தலைமைத்துவம் என்ற வகையில் ஒவ்வொரு விவகாரம் தொடர்பிலும் தாங்கள் என்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளோம் என மக்களுக்கு தெரிவிப்பதற்கான கடப்பாடு அவர்களுக்கு உள்ளது.

இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சர்வதேச பிரகடனத்துக்கும் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்துக்கும் இசைவான முறையில் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பிரகடனத்தை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளது.

முன்னர் இருந்ததைப் போன்றே வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி முறையின் அடிப்படையில் அதிகாரப் பரவலாக்க ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். வடக்கு கிழக்கில் வரலாற்று ரீதியான தொடர்பை கொண்டுள்ள தமிழ் பேசும் முஸ்லிம்கள் வடக்கு கிழக்கில் ஏற்படுத்தப்படும் அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் மூலம் நன்மையை பெறுவதற்கு உரித்துடையவர்களாவர். இது எந்தவகையிலும் அவர்களைப் பாதிக்காது என்று 2015 ஆகஸ்ட் பொதுத் தேர்தலின்போது வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

இந்த அடிப்படையிலேயே 56 வருட அரசியல் அனுபவத்தை கொண்ட மூத்த அரசியல்வாதி சம்பந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் 2016ஆம் ஆண்டிற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளிற்குத் தீர்வை காண்பதற்காக தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதன் காரணமாக கூட்டமைப்புக்கு ஆகக்கூடிய வாக்குகள் கிடைத்தன. வடக்கில் கிட்டத்தட்ட 63 வீதமானவர்களும் கிழக்கில் 39 வீத சனத்தொகையை கொண்ட தமிழர்களில் 31 வீதமானவர்களும் வாக்களித்தனர்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் முழுமையான ஆதிக்கத்தில் இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவ்வேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தது. ரணில் விக்கிரமசிங்க தமிழர் விவகாரங்களிற்கு நிரந்தர தீர்வை காண்பார் என்ற நம்பிக்கை கொழும்பின் மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் காணப்பட்டது.

அரசியலில் தனிநபர்களிற்கும் ஆளுமைகளிற்கும் முக்கியத்துவம் இல்லை. குறிப்பாக பல்வேறுபட்ட நிகழ்ச்சிநிரலுடன் காணப்படும் பல்வேறுபட்ட சமூக பொருளாதார குழுக்கள் வெல்லும். ராஜபக்‌ஷவிற்கு மாற்றீடாக போட்டியிட ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்தவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு எச்சரிக்கை அடைந்திருக்கவேண்டும். மாறாக அவர்கள் பேச்சுவார்த்தைகளுக்காக ரணில் விக்கிரமசிங்கவின் ஆளுமையை நம்பினர்.

ராஜபக்‌ஷ எதிர்ப்பு அரசியல் என்பது ஒருபோதும் சிறுபான்மையினத்தவர் ஆதரவு அரசியல் அல்ல. கடந்த வருடம் நவம்பர் 29ஆம் திகதி நான் எனது புளொக்கில் இவ்வாறு நான் எழுதினேன்

‘‘ராஜபக்‌ஷவுக்கு எதிரான முழுமையான பிரச்சாரம் (2015 ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தல் – ஆகஸ்ட் நாடாளுமன்றத் தேர்தல் வரை) சமூக ஐக்கியம், நிலைமாற்றுக்கால நீதி, நல்லிணக்கம், ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு குறித்த தமிழ் மக்களின் கோரிக்கைகள் என அனைத்து விடயங்களையும் கைவிட்டது, உண்மையில் அது ஆட்சிமாற்றத்திற்கான தெற்கின் ஒரு திட்டமே, (ஜனவரி 8 மாற்றம் என்பது சிங்களவர்களுக்கான மாற்றமே தவிர அது தமிழர்களிற்கு உரியதல்ல).

அது மேலும் விஸ்தரிக்கப்பட்டது, ‘‘இந்த அரசாங்கம் ராஜபக்‌ஷ பாணியிலான சிங்கள அரசாங்கமாகவே காணப்பட்டது. இந்த அரசாங்கத்தின் அரசியல் கோட்பாட்டை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வளர்ந்த மைத்திரிபால சிறிசேன மட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்க அணியினரும் வரையறை செய்தார்கள். ஆகவே, இந்த அரசாங்கம் நல்லிணக்கம், இராணுவமயமாக்கல், அதிகாரப்பகிர்வு மற்றும் யுத்தக் குற்றத்துக்கான சர்வதேச விசாரணைக் கோரிக்கை உட்பட தேசிய விடயங்கள் அனைத்தையும் ராஜபக்‌ஷ பாணியிலேயே கையாண்டது” என்றும் நான் அப்போது குறிப்பிட்டிருந்தேன்.

சரியாக ஒரு வருடத்திற்குப் பின்னர் தற்போதைய ஐக்கிய அரசாங்கம் குறித்த எனது கருத்து சரியானது என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் ஒக்டோபர் முதலாம் திகதி மீண்டும் நான் எனது புளொக்கில் இவ்வாறு எழுதினேன்,

‘‘அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முடியாது என்பது உண்மையாகும். புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். அது தற்போது கடினமான விடயம் போல தோன்றுகின்றது. மேலும், சர்வஜன வாக்கெடுப்பை எதிர்கொள்வதற்கான நம்பிக்கையும், துணிச்சலும் அவர்களுக்கு இல்லை. இதன் காரணமாக அவர்கள் விக்கிரமசிங்க பாணியில் இந்த செயற்பாடுகளை மேலும் இழுத்துச்செல்வார்கள் (முடிவற்ற குழுக்கள், வரைவுகள் மூலம்).

இவ்வாறான பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களிற்கான சமஸ்டியை நிராகரிப்பதாக தெரிவித்தார் என இந்தியாவின் ‘பிசினஸ் ஸ்டார்ன்டட்’ ஒக்டோபர் 7ஆம் திகதி தெரிவித்தது. வட கிழக்கு இணைப்புடன் கூடிய சமஸ்டி குறித்து வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தி வருவது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “எவருக்கும் தாங்கள் விரும்பிய கருத்தை வெளியிட உரிமையுள்ளது. ஆனால், அரசியல் அமைப்பு உருவாக்க முயற்சிகள் என்பது நாடாளுமன்றத்தின் நடவடிக்கை” எனக் குறிப்பிட்டுள்ளார். விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை, இதனால் அவர் அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் பங்குபெற முடியாது என்பதையே பிரதமர் தனது உரையின் மூலம் தெரிவித்துள்ளார். சிங்கள வாக்காளர்களின் ஆதரவைப் பெறக்கூடிய அரசியலமைப்பு ஏற்பாடுகள் தொடர்பில் தன்னால் நாடாளுமன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தங்குதடையின்றி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியும் என்ற நம்பிக்கையை விக்கிரமசிங்க கொண்டிருக்கிறார் என உணர முடிகிறது.

விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ள படி இணைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற்றுள்ள ஒரு விடயம். அப்படியானால் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கில் சமஸ்டி என்ற கோரிக்கையை முன்வைப்பதற்காக விக்னேஸ்வரனை ஏன் தீவிரவாதி என அழைக்கவேண்டும்? ஏன் விக்னேஸ்வரனின் சமஸ்டி கோரிக்கையை தமிழ் அரசுக் கட்சியின் தலைமைத்துவம் அங்கீகரிக்கவில்லை? சமஸ்டி தீர்வை விக்கிரமசிங்க நிராகரித்தமைக்கு எதிராக ஏன் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் ஏன் உத்தியோகபூர்வமாக கண்டனம் தெரிவிக்கவில்லை?

இலங்கை தமிழரசு கட்சியால் தனது சொந்த தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்கமுடியாத நிலை காணப்படுவது அந்த கட்சி திரிசங்கு நிலையில் இருப்பதை புலப்படுத்துகின்றது. எழுக தமிழில் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்களை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் மாவை சேனாதிராஜா அங்கீகரித்தவேளை, அவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தின் மத்தியில் காணப்படும் குழப்பங்களை வெளிப்படுத்தியுள்ளார். புதிய இளந்தலைமுறையினரும், கொழும்பில் தங்களை நன்கு ஸ்தாபித்துக்கொண்டுள்ள உள்ள மத்திய தரவர்க்கத்தினரும் இந்தத் தீர்வுகள் குறித்து ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்றே தோன்றுகிறது. விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் பலப்படுத்த தேசிய ஐக்கிய அரசாங்கத்துடன் இணையும் சௌமிய மூர்த்தி தொண்டமானின் பாணியே இன்று தமிழர்களுக்கு உள்ள ஒரு வழி என அவர்கள் வலியுறுத்தலாம். கொழும்பு வாழ்வை தாங்கள் தொடர்ந்தும் அனுபவிப்பதற்காக, ரணில் விக்கிரமசிங்க சமஸ்டி தீர்வை நிராகரித்துள்ள போதிலும் அவரை தொடர்ந்தும் நம்பவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

எனினும், சம்பந்தன், மாவை போன்றவர்களிற்கு இது சாத்தியமில்லை. அவர்கள், தாங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட சிங்களத் தலைவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை கண்டறிய வேண்டிய நிலையில் உள்ளனர். வார்த்தைகள் மூலம் சமஸ்டி தீர்விற்கு அழுத்தம்கொடுப்பதில்லை என்பதே அவர்களினது தற்போதைய தந்திரோபாயமாக காணப்படுகின்றது. சம்பந்தன் கௌரவமான நீடிக்கக் கூடிய, பேச்சுவார்த்தை மூலமான, நடைமுறை சாத்தியமான தீர்வு குறித்து பேசுவதில் திருப்தியடைகின்றார். விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுடனான தீர்வை பரிசீலிப்பதற்கே தயாரில்லை.

மங்கள சமரவீரவிற்கு நெருக்கடியை ஏற்படுத்திய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 31/1 தீர்மானத்தில் காணப்படும் முரண்பாடுகளில் அவர்களின் சிங்களச் சார்பு பிரதிபலிக்கிறது. அதனால், மங்கள சமரவீர பெரும் அசெளகரியத்துக்கு உள்ளாகியிருக்கிறார். பிரதமரும், ஜனாதிபதியும், மங்கள சமரவீரவும் ஒன்றுக்கொன்று முரணான நிலைப்பாடுகளை எடுத்துள்ளமை தற்போது வெளிப்படையாகத் தெரிகிறது. ஜனாதிபதியும், பிரதமரும் சிங்களவர்களின் நிலைப்பாட்டை பின்பற்றுகின்றனர், அதன் மூலம் ராஜபக்‌ஷ அரசியலை அவர்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனர். மல்வத்தை பீடாதிபதி திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கள தேரர் தன்னைச் சந்தித்த சுவிஸர்லாந்து நாடாளுமன்ற சபாநாயகர் கிறிஸ்டா மக்வோல்டரிடம் – நாட்டிற்கோ அல்லது மக்களிற்கோ பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ எடுக்கமாட்டார்கள் என தெரிவித்தமை இந்த விடயத்தில் அவரது நம்பிக்கையை புலப்படுத்தியுள்ளது. சிங்கள அரசியலைப் பொறுத்தவரையில் ‘நாடும் மக்களும்’ என்பது ‘சிங்களத் தெற்கு என்பதையே குறிக்கிறது.

சிங்கள பெளத்த மேலாதிக்கத்துக்கு அடிபணிகின்ற இந்தப் போக்கு இருவாரங்களுக்கு முன்னர் சகித்துக்கொள்ள முடியாக அளவுக்கு வெளிப்பட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இரு வாரத்திற்கு முன்னர் நாடாளுமன்ற விவாதத்திற்கான அமைச்சரவையின் அனுமதிகோரி முன்வைக்கப்பட்ட இரு சட்டமூலங்களை எந்தவித தயக்கமும், வெட்கமும் இன்றி விலக்கிக்கொள்வதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் இணங்கியமை சிங்கள பௌத்த ஆதிக்கத்திடம் அவர்கள் அடிபணிந்துள்ளதை புலப்படுத்தியது. மல்வத்தை பீடாதிபதி அந்த சட்டமூலங்களை விலக்கிக்கொள்ளுமாறு விடுத்தவேண்டுகோளை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் (சிங்கள பெரும்பான்மையால் என்றாலும்) சிங்கள பௌத்த மதகுருமாரை திருப்திப்படுத்துவதற்காக அர்த்தமற்றதாக்கப்பட்டது. பௌத்த மத தலைவர்களிடம் பொதுமக்களின் இறைமையை பணயம் வைப்பதன் மூலம் ஆபத்தான ஜனநாயகத் தன்மையற்ற முன்னுதாரணத்தை ஏற்படுத்திய இந்தத் தலைவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்படுவார்கள் எனக் கருத முடியாது.

மிகவும் பெருமதி மிக்க சிங்கள தலைமைத்துவத்திற்காக ராஜபக்‌ஷவுடன் பேராடிக்கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்தின் தலைமைகள் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று தமிழர்களின் அபிலாசைகளை எந்த வடிவத்திலாவது உள்வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுமென்று எதிர்பார்க்க முடியாது. 13ஆவது திருத்தத்தை நீக்கவேண்டும் என சிங்கள எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்து வரும் சூழமைவில் இது சாத்தியமில்லை. எதிர்கட்சியில் இருந்தவேளை காணப்பட்ட கறைபடியாத, லிபரல் விக்கிரமசிங்க தற்போது இல்லை என்பதை இது புலப்படுத்தியுள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி ஊழல்கள் தொடக்கம் மக்கின்ஸி ஒப்பந்தங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை பொது நிதி மூலமும், தனது அமைச்சரவை சகாக்களை ஊழல் மூலமும் திருப்திப்படுத்தும் அவரது புதிய தந்திரோபாயம் அவரது நம்பகதன்மை மற்றும் நேர்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அவரது முதல் வரவு செலவுத்திட்டம் (2016) முதல் நாளிலேயே பாரிய தோல்வியைத் தழுவியது. வட் சட்டமூலம் தொடர்பில் அவரது அரசாங்கம் இரு முறை தவறிழைத்தது. அவரது 100 நாள் திட்டம் பூர்த்தியாகவில்லை. அதன் பின்னர் அவரது இடைக்கால இரண்டு வருட பொருளாதார திட்டம் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது அவர் 4 வருட பொருளாதார திட்டத்தை முன்வைக்கின்றார். முன்னைய அரசாங்கத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து சீனா திட்டங்களும் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அவரது அரசாங்கம் மீண்டும் ராஜபக்‌ஷ காலத்திற்கு சென்றுள்ளது.

இவ்வாறான பொருளாதார குழப்பநிலை காணப்படுகின்ற சூழலில், மத்தியதரவர்க்கம் விக்கிரமசிங்கவிற்கு தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தை இன்னமும் வழங்கலாம் என கருதுகின்ற நிலையில், கீழ்நிலையுள்ள நகர சமூகமும் தென்பகுதி கிராமங்களும் ஏமாற்றமடைந்துள்ளதுடன், அரசியலமைப்பு குறித்த விடயங்களில் ஆர்வமற்றவர்களாக உள்ளனர். அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தான் எதிர்நோக்கும் ஸ்திரமற்ற நிலை காரணமாக ஜனாதிபதி சிறிசேன உள்ளூராட்சி தேர்தல்களை பிற்போடும் அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியும் உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து எந்த வேண்டுகோள்களையும் விடுப்பதில்லை. அவர்களும் தங்கள் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக உணர்கின்றனர்.

இவற்றையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது சம்பந்தனின் நீடிக்கக்கூடிய ,நடைமுறைப்படுத்தப்படக் கூடிய, பேச்சுவார்த்தைகள் மூலமான அதிகாரப் பகிர்விற்கான வேண்டுகோளை இந்த அரசாங்கம் எந்த வகையிலும் ஏற்கும் நிலையில் இல்லை என்பதே உண்மை.

அதேவேளை, தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தாங்கள் என்ன தீர்வை வலியுறுத்துகின்றனர் என்பதை தமிழ் மக்களிற்கு தெரியப்படுத்தவேண்டிய தேவை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்குள்ளது. மேலும் இது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என தாங்கள் கருதுவதையும், அவர்கள் மக்களிடம் தெரிவிக்கவேண்டும்.

profileWhere does TNA leadership stand on “Federalism and Merger”? என்ற தலைப்பில் ஊடகவியலாளர் குசல் பெரேரா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.