படம் | Omlanka
தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் ஒரு உண்மை வெள்ளிடைமலையாகும். அதாவது, இரண்டு வேறுபட்ட நபர்கள் அல்லது தரப்புக்களுக்கிடையிலான முரண்பாட்டின் வழியாகவே தமிழ்த் தேசிய அரசியல் உயிர்வாழ்ந்து வந்திருக்கிறது. முதலில் அது ஜி.ஜி.பொன்னம்பலத்திற்கும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் விழைவாக உருப்பெற்று, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. அந்த முரண்பாட்டின் நீட்சியாகவே இலங்கை தமிழரசு கட்சி உருவாகியது. ஜி.ஜி.பொன்னம்பலம் ஜக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லுகின்றார் என்பதே மேற்படி முரண்பாட்டின் அடிப்படையாக இருந்தது. இதன் விழைவாகவே தமிழ்த் தேசிய இனத்திற்கென ஒரு தனிக்கட்சி தேவை என்னும் முடிவுக்கு செல்வநாயகம் வரநேர்ந்தது. இதே செல்வநாயகம் 1968இல் அப்போதிருந்த டட்லி சேனாநாயக்க தலைமையிலான தேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் முடிவை எடுத்த போது, அதுவரை தமிழரசு கட்சியின் மூளையாக (தங்க மூளையென்று வர்ணிக்கப்பட்ட) கருதப்பட்ட வி.நவரட்னம் பிரிந்து சென்று சுயாட்சிக் கழகத்தை உருவாக்கினார்.
ஆனாலும், அவரால் தமிழரசு கட்சியை தோற்றகடிக்குமளவிற்கு தன்னை பலப்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஆனால், நவரட்ணம் முன்வைத்த சுயாட்சியை எதிர்த்துநின்ற தமிழரசு கட்சியே பின்னர், 1976இல் தமிழ் மக்களுக்கு தனிநாடு ஒன்றுதான் தீர்வென்னும் முடிவுக்கு வந்திருந்தது. இதன் பின்னரான தமிழ்த் தேசியவாத அரசியலின் இலக்கு என்பது, இலங்கைத் தீவை இரண்டு துண்டுகளாக்கி ஒரு தனிநாட்டை நிறுவுதல் என்னும் இலட்சிய அரசியலாகவே நீடித்திருந்தது. இந்தக் காலகட்டத்திலும் இரு முரண்பட்ட போக்குகள் அசியலில் மோதிக் கொண்டதையும் இறுதியில் அது முழுமையாக பிரபாகரன் என்னும் தனிமனிதரின் ஆளுமையால் தீர்மானிக்கப்பட்டதும் லரலாறு.
இதனை இன்னும் சற்று ஆழமாக நோக்கினால் 1949 தொடக்கம் 2009 வரையான தமிழ்த் தேசியவாத அரசியல் எழுச்சியென்பது இரண்டு தனிமனித ஆளுமைகளின் செல்வாக்கிற்குட்படிருந்தது. அதாவது, 1949 தொடக்கம் 1976 வரையான காலப்பகுதியில் நிகழ்ந்த தமிழ்த் தேசிய எழுச்சிக்கு எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமை தாங்கியிருந்தார். அதன் பின்னர் 2009 வரையிலான காலமென்பது பிரபாகரனின் முழுமையான ஆளுகைக்குட்பட்டிருந்தது. பிரபாகரனின் காலத்தில்தான் தமிழ்த் தேசியம் என்பது அதன் உச்ச எழுச்சியை பெற்றிருந்தது. இந்த எழுச்சிக்கு முன்னால் அனைவரும் பிரபாகரனை நோக்கி இழுத்தெடுக்கப்பட்டனர். இந்த பின்புலத்தில்தான் அதுவரை விடுதலைப் புலிகளுடன் முற்றிலும் முரண்பாடு கொண்டிருந்த கட்சிகளை தங்களின் நிலைப்பாடு நோக்கி இழுத்தெடுக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் நிகழ்ந்தது.
2009இல் விடுதலைப் புலிகளின் அதிர்ச்சிகரமான வீழ்ச்சியைத் தொடர்ந்து அதுவரை விடுதலைப் புலிகளின் தலைமையினால் வழிநடத்தப்பட்ட தமிழ்த் தேசியவாத அரசியலை முன்கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான ஆளுகைக்குள் வந்தது. இந்த இடத்தில்தான் தமிழ்த் தேசியவாத அரசியல் தொடர்பில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றன. தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையை எவ்வாறு முன்வைப்பது என்பது தொடர்பில் விவாதங்கள் மேலெழுந்தன. இதன் விழைவாக தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் நிற்க முடியாது என்னும் வாதத்தை முன்வைத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார். அன்று செல்வநாயகம் தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சி ஜக்கிய தேசிய கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த போது எவ்வாறு அதில் உடன்பட முடியாதென்று கூறி, நவரட்ணம் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியொன்றை உருவாக்கினாரோ, அதே போன்றே கஜேந்திரகுமாரும் கொள்கை முரண்பாட்டினால் வெளியேறி புதிய அரசியல் கூட்டொன்றை உருவாக்கினார். இரண்டு விடயத்திற்குமுள்ள பிரிக்க முடியாத ஒற்றுமை இரண்டுமே பதவி நலன்களுக்காகவோ சொந்த நலன்களுக்காகவோ மேற்கொண்ட முடிவுகளல்ல. இரண்டுமே கொள்கை நிலைப்பாட்டுக்காக மேற்கொண்ட முடிவுகள்.
பதவி என்று பார்த்திருந்தால் கஜேந்திரகுமார் தொடர்ந்தும் கூட்டமைப்புக்குள் இருந்திருந்தால் அவர் இன்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருப்பார். மேற்படி இரண்டு சம்பவங்களிலும் இன்னொரு ஒற்றுமையும் உண்டு. அதாவது, செல்வநாயகத்தின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து வெளியேறிய நவரட்ணமும் தேர்தலில் தோல்வியடைந்தார். சம்பந்தனின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து வெளியேறிய கஜேந்திரகுமாரும் தேர்தலில் தோல்வியடைந்தார். ஆனால், எந்தக் கொள்கையை முன்வைத்து நவரட்ணம் தேர்தலில் தோற்றுப் போனாரோ அதே கொள்கையை முன்வைத்து எட்டு வருடங்களுக்கு பின்னர் 1977இல் தமிழர் விடுதலைக் கூட்டணி அமோக வெற்றியை பெற்று, அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார். மேற்படி இரண்டு சந்தர்ப்பங்களிலும் கொள்கை என்பதற்கும் அப்பால் மக்கள் ஒற்றுமைக்கே வாக்களித்திருக்கின்றனர். இதனைக் கொண்டு கொள்கையை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்னும் முடிவுக்கு வருவது சரியானதொரு அரசியல் புரிதலாக இருக்க முடியாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2010இல் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 14 ஆசனங்களை பெற்று, தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலை கையாளுவதற்கான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டது. அதுவரை தமிழ்த் தேசியவாத அரசியல் பரப்பில் எந்தவொரு இடத்திலும் செல்வாக்குச் செலுத்தியிராத அல்லது அதற்கான வாய்புக்களற்றிருந்த இராஜவரோதயம் சம்பந்தன் அரங்கிற்கு வருகின்றார். இதன் பின்னரான காலமென்பது பெருமளவிற்கு சம்பந்தனின் காலமாகமே இன்றுவரை நீண்டு செல்கிறது. தமிழ் மக்கள் தொடர்பான அனைத்து முடிவுகளையும் கட்டுப்படுத்துபவராகவே அவரே இருக்கின்றார். ஆனால், கூட்டமைப்பிலுள்ள அனைத்து கட்சிகளையும் தனது கொள்கையை நோக்கி ஈர்த்தெடுக்கக் கூடியதொரு ஆளுமைமிக்க தலைவராக தன்னை நிறுவுவதில் அவர் தோல்வியடைந்திருக்கின்றார். ஆரம்பத்தில், சம்பந்தன் தலைமை தொடர்பில் எவருக்குமே முரண்பாடுகள் இருந்திருக்கவில்லை. அனுபவம் மற்றும் ஆளுமை கொண்ட ஒரு தலைவராகவே சம்பந்தன் அனைவராலும் நோக்கப்பட்டிருந்தார். கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் அனைவருமே சம்பந்தனை தங்களின் தலைவராகவே ஏற்றுக் கொண்டிருந்தனர். பிரபாகரன் தனது தொடர்ச்சியான இராணுவ வெற்றிகளாலும் கடின உழைப்பினாலும் தன்னை நோக்கி மற்றவர்களை ஈர்த்திருந்தார். ஆனால், சம்பந்தனுக்கோ தலைவர் என்னும் தகுதிநிலை எவ்வித உழைப்புமற்று மிகவும் சாதாரணமாக அவர் வசமானது.
ஆனால், சம்பந்தனோ அந்தத் தகுதிநிலையைக் கொண்டு முதலில் கூட்டமைப்புக்குள் இருந்த விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை கழையெடுத்தார். பின்னர் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவந்த முன்னாள் விடுதலை இயக்கங்களை உள்ளுக்குள் வைத்துக் கொண்டே, பலவீனப்படுத்தும் காரியங்களை மெது மெதுவாக அரங்கேற்றினார். தேர்தல் காலத்தில் கூட்டமைப்பின் தலைவராக காண்பித்துக் கொண்டு, தேர்தல் முடிந்ததும் தமிழரசு கட்சியின் தலைவராக மாறி, ஏனைய கட்சிகளின் தலைவர்களை குரல்லற்றவர்களாக்கினார். அதில் கணிசமான வெற்றியும் பெற்றார். ஆரம்பத்தில் சம்பந்தனை ஆதரித்து நின்ற – இந்தப் பத்தியாளர் உட்பட, பலரும் ஒன்றை அறியவில்லை. அதாவது, பொதுவாக அப்போது இப்பதியாளர் உள்ளிட்ட பலரிடமும், இருந்த பார்வை சம்பந்தன் காலத்தின் தேவை கருதி கூட்டமைப்பை புலிநீக்கம் செய்ய முற்படுகின்றார். சர்வதேச சக்திகளை எதிர்கொள்ளுதல் என்னும் நோக்கில் அதனை தவறென்றும் வாதிட முடியாது – இப்படியானதொரு புரிதல்தான் அப்போது பலரிடமும் இருந்தது. ஆனால், விடயங்களை ஆழமாக நோக்கினால் சம்பந்தனின் இலக்கு புலிநீக்கமல் மாறாக தமிழ்த் தேசிய நீக்கமாகும் என்பது பின்னர்தான் பலருக்கும் விளங்கியது.
இவ்வாறானதொரு சூழலில்தான் வடக்கு முதலமைச்சர் பலருக்கும் நம்பிக்கையளிக்கக் கூடிய ஒரு தமிழ்த் தேசியத்தில் உறுதிகொண்ட, தலைவராக வெளித்தெரியத் தொடங்கினார். ஆரம்பத்தில் அவரது நேர்காணல் மற்றும் சில கருத்துக்களால், அவர் தொடர்பில் சந்தேகம் கொண்டிருந்தவர்களும் கூட, பின்னர் அவரது உறுதியான முடிவுகள், வாதங்கள் கண்டு அவர் தொடர்பில் கரிசனை கொண்டனர். எவ்வாறு ஆரம்பத்தில் பிரபாகரனுடன் முரண்பாடு கொண்டிருந்தவர்கள் அனைவரும் பிரபாகரனின் உறுதி கண்டு அவர் பக்கமாக திரும்பினரோ, அவ்வாறுதான் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியத்தின் மீது காண்பித்துவரும் உறுதியான நிலைப்பாடு அவரை நோக்கி அனைவரையுமே திருப்பியிருக்கிறது. ‘எழுக தமிழ்’ வடக்கில் மக்கள் அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் தெளிவாகக் காண்பித்தது. இன்று கொழும்பாலும், கொழும்புடன் இராஜதந்திர தொடர்புகளை பேணிவரும் இராஜதந்திர சமூகத்தினர் அனைவராலும் திரும்பிப் பார்க்கப்படும் ஒருவராகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இருக்கின்றார். உண்மையில் அவ்வாறானதொரு நிலைமையை அவரது உறுதியான நிலைப்பாட்டால் தோற்றுவித்திருக்கின்றார். பிறிதொரு வகையில் கொழும்பு விக்னேஸ்வரன் தொடர்பில் அச்சப்படுகிறது. அவர் தமிழ் மக்களின் அரசியலுக்கு தலைமை தாங்கிவிடுவாரோ என்னும் அச்சமும் பலரை ஆட்கொண்டிருக்கிறது.
சில தினங்களுக்கு முன்னர் கொழும்பின் உயர் அடுக்கை சேர்ந்த ஒரு முக்கிய புத்திஜீவியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தையே கேட்டுக் கொண்டிருந்தார். விக்னேஸ்வரன் ஒரு புதிய தமிழ் அரசியல் அணிக்குத் தலைமை தாங்குவாரா? – அண்மைய எழுக தமிழில் திரண்ட மக்களை வைத்தே இவ்வாறானதொரு அச்சம் கொழும்பிற்கு ஏற்பட்டிருக்கின்றது. கொழும்பு ஏன் இவ்வாறு அச்சப்படுகிறது? கொழும்மை பொறுத்தவரையில், “பிரபாகரனின் வீழ்சிக்குப் பின்னர் தமிழ்த் தேசிய வாதம் செத்துவிட்டது, அதனை உயிர்ப்பிக்கும் ஆற்றல் கொண்ட ஒருவரும் தமிழர்களிடத்தில் இல்லை, சம்பந்தனோ தங்களால் லாவகமாக கையாளக் கூடிய ஒருவர். எனவே, இனி இலங்கைத் தீவில் தமிழர்களுக்கென ஒரு தனித்துவமான அரசியல் போக்கு இருக்க வாய்ப்பில்லை” என்ற எண்ணங்கள் இருந்தன. ஆனால், வடக்கு முதலமைச்சரின் எழுச்சி அந்த எண்ணத்தை உடைத்துவிட்டது. இவ்வாறானதொரு நிலையில்தான் கொழும்பு சம்பந்தனை புகழ்கின்றது. ஆனால், விக்னேஸ்வரனை கண்டு மிரளுகின்றது.
இந்த இடத்தில் இந்த வரலாற்றுப் போக்கிலுள்ள விமர்சன பூர்வமான பக்கங்களை நான் பார்க்கவில்லை. வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்தவை என்ன? அதன் அடிப்படையில் நிகழக் கூடியது எதுவாக இருக்கலாம் என்பதையே இப்பத்தி ஆராய விழைகிறது. தமிழ்த் தேசிய வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு சிந்திப்பதானால், ஜி.ஜி.பொன்னம்பலம் ஜக்கிய தேசிக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து செல்லும் முடிவை எடுத்தபோது, செல்வநாயகம் புதிய கட்சியொன்றை உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியவாத அரசியல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. வட்டுக் கோட்டையில் முடிந்த செல்வநாயகத்தின் அரசியல் நிலைப்பாட்டுக்கு பிரபாகரன் செயல்வடிவம் கொடுத்தார். அந்த வகையில் பிரபாகரன்தான் செல்வநாயகத்தின் அசலான அரசியல் வாரிசு ஆவார்.
2009ற்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் போக்கில் ஒரு புறம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவும், அதற்கான நீதி என்ன என்னும் கேள்வியுடனும், இன்னொரு புறம் தமிழ்த் தேசிய அரசியலை அதன் வீரியம் கெடாமல் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பது எவ்வாறு என்னும் கேள்வியுடனும் தமிழ்த் தேசியவாத சக்திகள் காத்துக்கிடக்கின்றனர். அவ்வாறானவர்கள் அனைவரதும் பார்வை தற்போது விக்னேஸ்வரனை நோக்கியே திரும்பியிருக்கிறது. விக்னேஸ்வரன் தன்னுடைய உறுதியான நிலைப்பாட்டை தன்னுடனேயே கொண்டு செல்லப் போகிறாரா அல்லது அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையில் அவர்களுக்கான ஒரு புதிய தலைமைத்துவத்தை வழங்கப் போகின்றாரா? ஒருவேளை விக்னேஸ்வரன் இதிலிருந்து பின்வாங்குவாராக இருந்தால் கொழும்பின் நிகழ்சிநிரலை வெற்றிகொள்வதில் எந்தவொரு தடையும் இருக்கப் போவதில்லை. பெரும்பாலும் அடுத்த ஆண்டுடன் தமிழ்த் தேசியவாத அரசியல் அதன் புதைகுழியை நோக்கி நகரலாம். இந்த இடத்தில் அப்படிக் கூற முடியாதென்று வாதிடுவோரும் உண்டு. வரலாற்றோட்டத்தில், அவ்வப்போது தமிழ்த் தேசியத்தை தூக்கி நிறுத்துவதற்கான தலைமையொன்று தோன்றவே செய்யும். ஆனாலும், வரலாற்றுப் போக்கில் சில அரசியல் நிலைப்பாடுகள் தூக்கிநிறுத்துவதற்கு ஆட்களற்று, அழிந்து போயிருப்பதற்கும் கூட வரலாற்றில் பதிவுண்டு.