படம் | THARAKA BASNAYAKA Photo

சிங்கள பெரும்பான்மைவாத அரசியலில் ‘பாதயாத்திரை’ என்பது ஆட்சியை அல்லது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு வலுவான அரசியல் ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டுவருகிறது. 1957இல் மேற்கொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து அப்போது ஜக்கிய தேசியக் கட்சியின் பலமான நபரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பாதயாத்திரை (Pilgrims March) ஒன்றை ஆரம்பித்தார். இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவே ‘பாதயாத்திரை அரசியல்’ ஆட்சியாளருக்கு எதிராக பிரயோகிப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும். இதன் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெற்கின் அரசியல் சக்திகள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஆயுதமாக பாதயாத்திரையை பயன்படுத்தியிருக்கின்றனர்.

1990இல் அப்போதிருந்த பிரேமதாச அரசாங்கத்திற்கு எதிராக மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் ‘ஜனகோச’ என்னும் தலைப்பில் பாதயாத்திரையொன்று இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ஜக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக 1992இல் மீண்டும் மஹிந்த தலைமையில் பாயாத்திரையொன்று இடம்பெற்றிருந்தது. இலங்கை அரசியல் வராலாற்றில் இடம்பெற்ற மிகவும் பிரமாண்டமான பாதயாத்திரையாக அது அமைந்திருந்தது. கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் ஆரம்பித்த மேற்படி பாதயாத்திரை 18 நாள் வரை நீடித்து, கத்தரகமவில் நிறைவுற்றது. ஜக்கிய தேசிய கட்சி அரசாங்கம் வட கிழக்கு பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முற்பட்டமை, விலைவாசி ஏற்றம், தனியார் மயப்படுத்தல் கொள்கை மற்றும் தெற்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குதல் ஆகிய நான்கு விடயங்களே குறித்த பாதயாத்திரை அரசியலின் உள்ளடக்கமாக இருந்தன.

1992 நவம்பரில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க மனிதச்சங்கிலி போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தார். பின்னர் 2001இல் சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கத்திற்கு எதிராக ரணில் தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி ஒருவாரகால பாதயாத்திரை ஒன்றை முன்னெடுத்திருந்தது. ‘ஜனபல’ என்னும் தலைப்பில் இடம்பெற்ற மேற்படி பாதயாத்திரை கண்டியில் ஆரம்பித்து கொழும்பில் நிறைவுற்றது. அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதே மேற்படி பாதயாத்திரை அரசியலின் கோசமாக இருந்தது. விலைவாசி ஏற்றம், நல்லாட்சியை உறுதிப்படுத்துதல் மற்றும் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான தேர்தல் ஆகிய கோசங்களை முன்வைத்தே ஜக்கிய தேசியக் கட்சி மக்களை அணிதிரட்டியிருந்தது. இந்த பாதயாத்திரையின் போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் காரணமாக இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறானதொரு அரசியல் சூழல் உருவாக்கப்பட்டதன் பின்புலத்தில்தான் 2001இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றது. 2004இல் ஜக்கிய தேசியக் கட்சி மீண்டுமொரு பாதயாத்திரையை கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி முன்னெடுத்திருந்தது. கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்த ஜக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திஸாநாயக்கவை விடுதலை செய்யுமாறு கோரியே, மேற்படி பாதயாத்திரையை ஜக்கிய தேசியக் கட்சி ஒழுங்குசெய்திருந்தது. இவ்வாறான பாதயாத்திரை அனுபவங்களுக்கு மத்தியில்தான் மஹிந்த ராஜபக்‌ஷ தற்போது கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி, ஜந்து நாள் பாதயாத்திரை ஒன்றை ஆரம்பத்திருக்கிறார்.

மஹிந்த ராஜபக்‌ஷ ஏன் தற்போது இவ்வாறானதொரு பாதயாத்திரையை ஆரம்பத்திருக்கின்றார்? இப்படி கேட்டால் அனைவரது நாவும் ஒருசொல்லையே உச்சரிக்கும் – அது ஆட்சி கவிழ்ப்பிற்கான சூழ்சியாகும். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. நிச்சயமாக அதுதான் ராஜபக்‌ஷவின் திட்டம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் தான் அரசியலிலிருந்து ஒதுங்கப் போவதில்லை என்பதை மஹிந்த தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார். ஆட்சி மாற்றத்துடன் ஒதுங்கக் கூடிய ஒரு நபராக இருந்திருப்பின், மஹிந்த நிச்சயமாக மீளவும் தேர்தலில் போட்டியிட்டிருக்க மாட்டார். இன்றைய கூட்டு அரசாங்கத்திற்கு முன்னாலுள்ள ஒரேயொரு சவால் மஹிந்த ராஜபக்‌ஷதான். மஹிந்த தொடர்ந்தும் ஒரு சவாலாக இருக்கின்ற காரணத்தினால்தான் கூட்டணி அரசாங்கமும் தொடர்ந்தும் ஒரு கூட்டணியாகவே நீடித்துவருகிறது. இன்றைய சூழலில் தெற்கில் தனித்து எந்தவொரு கட்சியாலும் தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்பதை மஹிந்தவும் துல்லியமாக மதிப்பிட்டு வைத்திருப்பதன் காரணமாகவே ஆட்சியை அசைப்பதற்கான தன்னுடைய முயற்சிகளில் மஹிந்த சற்றும் தளராத விக்கிரமாதித்தியனாக இருக்கிறார். முன்னைய பாதயாத்திரைகளில் வைக்கப்பட்டது போன்றே, இந்தப் பாதயாத்திரையிலும் மக்களை போய் சேரக் கூடியவாறான சுலோகங்களே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. வரியேற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்திகள், அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட தொழில்நிபுணர்கள் இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ள (Economic and Technological Cooperation Agreement | ETCA) எக்டா உடன்பாடு தொடர்பில் காண்பித்துவரும் எதிர்ப்புணர்வு ஆகிவற்றையே அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களாக முன்வைத்திருக்கின்றார்.

ஒருவேளை பாதயாத்திரையின் போது எதிர்பாராத அசம்பாவிதங்கள் ஏதும் இடம்பெறுமாயின் அது இலங்கையின் அமைதிநிலையில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். மேலும், அது ஆட்சியின் மீதான நெருக்கடியாகவும் மாறலாம். மஹிந்த ராஜபக்‌ஷவைப் பொறுத்தவரையில், அவர் ஒரு ஆடிப்பார்ப்போமே அதனால் என்ன வந்துவிடப்போகிறது! என்னும் மனோபாவம் கொண்ட அரசியல் வாதி. எனவே, மஹிந்த தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. சம்பந்தன் அடிக்கடி உச்சரிப்பது போன்று தமிழர் தரப்பு மிகவும் பக்குவமாக இருந்தாலும் கூட மஹிந்த தன்னுடைய ஆட்டத்தை நிறுத்தப் போவதில்லை. அவர் தொடர்ந்தும் ஆடுகளத்தில் இருந்து கொண்டேயிருப்பார். மஹிந்தவை ஆடுகளத்திலிருந்து அகற்ற வேண்டுமாயின் ஒரேயொரு வழிதான் உண்டு. மஹிந்தவை தற்காலிமாக ஆடுகளத்தை விட்டு அகற்ற வேண்டும். அவ்வாறு நிகழவேண்டுமாயின் மஹிந்தவை கைதுசெய்து சிறையிலடைக்க வேண்டும். ஆனால், யுத்த வெற்றி நாயகனை கைதுசெய்யும் வல்லமை நிலையில் கூட்டு அரசாங்கம் இல்லை. பின்னர் மஹிந்தவை கட்டுப்படுத்த என்ன வழி?

இலங்கையின் பாதயாத்திரை அரசியலின் விளைவுகளை எடுத்து நோக்கினால் ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, ஆட்சியாளருக்கு எதிராக தென்னிலங்கையில் எழும்பும் எதிர்பலைகளை தமிழர்களை பலிகொடுத்தே அடக்குவதுண்டு. இப்போதும் அதுதானா நிகழப் போகிறது? தனது ஆட்சிக்கு ஆபத்து வரப்போகிறது என்றவுடன் பண்டாரநாயக்க தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தை கிழித்துவீசினார். அவர் அரசியல் நேர்மை குறித்தெல்லாம் சிந்தித்து நேரத்தை வீணாக்கவில்லை. சில தினங்களுக்கு முன்னர் மன்னாரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய சம்பந்தன் நாங்கள் எதிர்பார்ப்பதைவிடவும் கூட்டரசாங்கம் அதிகம் செய்யுமென்று நம்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால், மஹிந்த தரப்பு அதனை எதிர்த்தால் என்ன நிகழும்? தங்களின் தலையை கொடுத்து தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க மைத்திரிபால மற்றும் ரணில் முற்படுவாரா அல்லது தமிழ் மக்களை பலியாக்குவார்களா? இந்த நிலைமையை தமிழர் தலைமைகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன?

ஆட்சியில் இருப்பவர்களைக் கொண்டு சில விடயங்களை முன்னெடுக்க முடியாதபோது, ஆட்சி மாற்றமொன்றிற்கு அனுசரனை வழங்குவதன் மூலம் விடயங்களைக் கையாள முற்படும் அரசியல் அணுகுமுறையொன்று இருக்கிறதுதான். அதனை மறுப்பதற்கில்லை. ஆனால், இங்கு இடம்பெற்ற ஆட்சி மாற்றம் உண்மையிலேயே ஒரு அரைபிரசவத்தில் பிறந்த குழந்தை போன்றது. அரைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை பேணிப்பாதுகாப்பது மிகவும் கடினமான பணி. அந்தக் குழந்தை செத்துவிடுமோ என்பதை எண்ணிக் கொண்டே ஒவ்வொரு காரியத்தையும் மேற்கொள்ள வேண்டிவரும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சிமாற்றமென்பது ஒரு அரைப்பிரசவத்தின் பெறுபேறான குழந்தை போன்றதுதான். தங்களின் பூகோள நலன்களுக்காக மேற்குலக சக்திகளும் இந்தியாவும் அவசர அவசரமாக உந்தித்தள்ளியதன் விளைவாக பிறந்த குழந்தைதான் இந்த ஆட்சிமாற்றம். இதனால்தான் அந்தக் குழந்தை செத்துவிடுமோ என்னும் பதற்றமும் பரபரப்புமே இன்றுவரை இத்தீவின் அரசியலாக இருக்கிறது. இந்தப் பதற்றத்தின் பலிக்கடாக்களாக தமிழ் மக்கள் இருக்கின்றனர். உண்மையில் ஆட்சி மாற்றம் தமிழர் தரப்பை வாய்பேச முடியாதவர்களாக முடக்கியிருக்கிறது. எனவே, தொடர்ந்தும் தமிழர் தரப்பு அரசியல் உரையாடல்களில் பக்குவாக இருக்க வேண்டும் – நிதானமாக இருக்க வேண்டும் என்றவாறு இனியும் சொல்லிக் கொண்டிருப்பது சரியானதொரு அசியல் அணுகுமுறைதானா? தெற்கில் நிகழ்வது போன்று ஒரு தமிழ் பாதயாத்திரையை வட கிழக்கு தழுவி தமிழர் தலைமையால் முன்னெடுக்க முடியாதா? தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை, அன்றாட பிரச்சினைகளை, மத்தியின் தொடர்ச்சியான அத்துமீறல்களை முன்னிறுத்தி ஒரு பாதயாத்திரையை தமிழ் அரசியல் தலைமைகளால் முன்னெடுக்க முடியாதா? ஒருவேளை அவ்வாறானதொரு பாதயாத்திரையை வட கிழக்கு தழுவி முன்னெடுப்பதற்கு சில தமிழ் தலைவர்கள் ஒத்துழைக்காதுவிட்டால் அவர்களை அரசியல் அரங்கிலிருந்து அகற்றும் ஒரு உபாயமாகவும் கூட இந்தப் பாதயாத்திரையை பயன்படுத்தலாமல்லவா? இது வெறுமனே கூட்டமைக்கு மட்டுமான கேள்வியல்ல மாறாக, தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுக்கொண்டிருக்கும் அனைத்து தரப்பினருக்குமுரியதாகும்.

யதீந்திரா எழுதிய இந்தக் கட்டுரை முதலில் தினக்குரல் பத்திரிகையில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.