படம்: ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம்
அரசின் இந்த இராஜதந்திர நகர்வுக்கு பிராந்திய அரசியல் சூழல் சாதகமாக அமைந்தது என்று கூறினாலும், அதனை அறிந்து தமது நலன்களை பிரயோகிக்கின்ற அரசியல் வினைத்திறன் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த வினைத்திறன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைமைகளுக்கு ஏன் இல்லாமல்போனது?
ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை குறித்து இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கடந்த சில தினங்களாக தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தமது வெற்றிகளை மாத்திரம் தற்போது கருத்தில் எடுத்திருப்பதால் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இந்திய நிலைப்பாடு தொடர்பான விடயங்கள் குறித்து சிந்திக்கும் நிலையில் அவர்கள் இல்லை என இந்திய வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு கூறியிருந்தார்.
மாற்றங்கள் வருமா?
இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தேசிய மட்டத்தில் தீர்மானம் எடுப்பவர்கள் இலங்கை தொடர்பான இந்திய நிலைப்பாடு தொடர்பாக காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர். ஏற்கனவே, கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்திய நிலைப்பாட்டில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஆனால், மூன்றாவது முறையாகவும் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இலங்கைக்கு கூடுதல் அழுத்தங்கள் கொடுக்குமானால் இந்திய பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கொள்கை வகுப்பாளர்கள் ஆழமாக சிந்திக்கின்றனர். காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ராகுல்காந்தியுடன் கடந்த வாரம் கொள்கை வகுப்பு அதிகாரிகள் பேசிய விடயங்கள் இலங்கை குறித்த பிரேரணையின் உள்ளடக்கம் பற்றியதாக அமைந்தது என புதிடில்லி தகவல்கள் கூறுகின்றன.
ஜெனீவா பிரேரணை தொடர்பான ஜப்பான் அரசின் ஈடுபாடு இலங்கையில் சீனாவின் தாக்கம் பற்றியதாக இருந்தாலும் ஜப்பானின் நகர்வுகள் இந்திய பிராந்திய நலன்களுக்கு பாதிப்பை எற்படுத்துமா என்பது தொடர்பில் இந்திய கொள்கைவகுப்பாளர்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றனர். அதன் தொடர்ச்சியாகவே இந்தியாவின் பிரதான அரசியல் கட்சிகளுடன் அவர்கள் பேசி வருகின்றனர். புதுடில்லியில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றின் தகவலின்படி இதுவரை நாளும் உறங்கிக் கிடந்த இந்திய கொள்கை வகுப்பாளர்கள் ஜப்பானின் நகர்வை அடுத்து இலங்கை தொடர்பான விடயத்தில் விழிப்படைந்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.
தேர்தல்கால சிந்தனை
எதிர்வரும் ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளமையினால் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் குறித்து இந்தியா பெரியளவில் கரிசனை கொண்டிருக்கவில்லை. அல்லது இலங்கை மீதும் கடும் அழுத்தங்கள் வருமானால் அது தமிழகத்தில் தேர்தல் வெற்றிக்கு சாதமாக அமையும் என்ற எதிர்ப்பார்ப்பு ஒன்று இந்திய அரசியல்வாதிகளிடம் முன்னர் காணப்பட்டது. ஆனால், கடந்த ஒருவாரமாக அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று ஜப்பான் திடீரென இலங்கை குறித்த விடயத்தில் தலையிடுகின்றமை. இரண்டாவது அமெரிக்க – ஜப்பான் உறவு. ஜெனீவா பிரேரணை விடயத்தில் ஜப்பான் ஈடுபட்டமை ஒரு வகையில் இந்தியாவுக்கு ஆறுதலாக இருந்தது.
ஆனால், அமெரிக்கா ஜப்பானுடன் அரசியல் ரீதியாக எதிரான நிலைப்பாட்டை கொண்டிந்தாலும் இலங்கை விடயத்தில் ஒத்துழைப்பு கொடுக்கின்ற ஒரு சார்புத்தன்மை இருப்பதை இந்தியா நன்கு அறிந்துள்ளது. இதுதானால்தான் இந்தியாவுக்கு தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளது. “இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணைக்கு ஜப்பான் ஆதரவு வழங்காது, ஆனால் பிரேரணையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச வேண்டிய நிலை உள்ளது” என ஜப்பான் தூதுவர் யசூசி அகாசி கூறியுள்ளார்.
ஆகவே, பொருளாதார ரீதிapலான உறவின் அடிப்படையில் இலங்கை தொடர்பான பிரேரணையில் கூறப்பட்டுள்ள கடும் வாசகங்களை குறைப்பதற்கு ஜப்பான் அமெரிக்காவுடன் பேசி ஒரு இணக்கத்துக்கு வரக்கூடிய அரசியல் சூழல் காணப்படுகின்றது. இது இலங்கை தொடர்பான இந்திய நிலைப்பாட்டுக்கு ஆபத்து என்பதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கருதியதனால் ஒருவகையான மாற்றம் இந்தியாவில் உருவாகியுள்ளதாக இந்திய ஆங்கில நாளேடு ஒன்று விமர்சித்துள்ளது
யசூசி அகாசியின் முயற்சி
யசூசி அகாசி போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராயும் அமெரிக்காவின் சிறப்பு தூதுவர் மற்றும் மனித பேரவையில் உள்ள அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரை சந்தித்து உரையாடியுள்ளார். போருக்கு பின்னரான இலங்கை அரசின் செயற்பாடுகள், முன்னேங்கள் பற்றி அவர் விளக்கமளித்தார் என கொழும்பில் ஆங்கில நாளேடு ஒன்றில் எழுதப்பட்ட விமர்சன கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. கடந்த இரண்டு முறையும் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டபோது இந்திய அரசுதான் தலையிட்டு இலங்கையை காப்பாற்றியது. ஆனால், இம்முறை பொதுத்தேர்தல் காரணமாகவும் தேர்தல் வெற்றி வாய்ப்பை கருத்தில்கொண்டு இந்திய மத்திய அரசியல் தலைவர்கள் கடந்த மூன்று மாதங்களாக ஜெனீவாவை மறந்திருந்தனர்.
ஆனால், இந்த ஆண்டு தை மாதம் முதல் ஜப்பான் வெளிப்படையான செயற்பாடுகளில் இறங்கியமையும், அமெரிக்காவும் ஏதோ ஒரு வகையில் ஆதரவு கொடுத்தமையாலும் கடந்த ஒரு வாரகாலமாக இந்திய கொள்கை வகுப்பாளர்களும் தீர்மானம் எடுப்பவர்களும் உசாரடைந்தனர். மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு ஜப்பான், இந்திய அரசுகளின் இந்த போட்டி அரசியல் லாபத்தையே ஏற்படும். இதன் காரணமாக ஜெனீவா பிரேரணை விடயத்தில் இலங்கை அரசு அச்சமான ஒரு நிலையில் இருந்தாலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற ஒரு நம்பிக்கையும் உள்ளது. யசூசி அகாசி அந்த அச்சத்தை போக்கியுள்ளார்.
அமைச்சர் பேராசிரியர் பீரிஸ்
அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அமெரிக்கப் பிரேரணைக்கு எதிரான கருத்துக்களை நாடாளுமன்றத்தில் துணிச்சலுடன் வெளியிட்டமைக்கு ஜப்பான் அரசின் நகர்வுகள் காரணமாக அமைந்துள்ளன. இந்திய – ஜப்பான் அரசியல் போட்டி இலங்கை தொடர்பான அமெரிக்க நகர்வுக்கு தடையாகவுள்ளது என்ற நம்பிக்கையும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் மற்றும் இலங்கை அரசின் உயர் மட்ட அதிகாரிகளுக்கு தெரிந்த நிலையில் ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கை தலை நிமிந்து நிற்கும் சூழல் ஒன்றும் உருவாகியுள்ளது. ஆகவே, தமிழர் விவகாரம் குறிப்பாக ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள மூன்றாவது பிரேரணை வல்லரசுகளின் போட்டியின் நடுவில் நின்று மேலும் நகரமுடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதையே மேற்படி தகவல்கள் வெளிக்காட்டுகின்றன.
இந்த இடத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் அரசியல் தலைமைகள் சரியான அணுகுமுறையை கையாளவில்லை என்பது வெளிப்படையானது. இந்த அரசியல் போட்டிக்கு மத்தியில் மஹிந்த ராஜபக்ஷ அரசு தங்களின் நிலைப்பாட்டை நிதானமாக கையாளுகின்றது. வடக்கு கிழக்கில் சுய ஆட்சி ஏற்பட்டு விடக்கூடாது என்பது மட்டுமல்ல, 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களைக்கூட செயற்படுத்த விடாமால் பிடிங்கி எடுத்து அதனை சர்வதேசத்துக்கு நியாயப்படுத்தும் வேலைத் திட்டங்களையும் இலங்கை அரசு கையாளுகின்றது. சர்வதேச விசாரணை, போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களை காரசாரமான வாசகங்களுடன் பிரேரணையில் உள்ளடங்க விடாமல் கடந்த இண்டு ஆண்டுகளும் இந்தியாவை கொண்டு தடுத்த அரசு இந்த ஆண்டு ஜப்பானை பயன்படுத்துகின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு?
இலங்கையின் இந்த இராஜதந்திர நகர்வுக்கு பிராந்திய அரசியல் சூழல் ஒரு காரணம் என்று கூறினாலும், அதனை அறிந்து தமது நலன்களை பிரயோகிக்கின்ற நுண் அறிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருப்பது போல தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்றவற்றின் தலைமைகளுக்கு ஏன் இல்லாமல்போனது? 30 வருட அஹிம்சை போராட்டம் 30 வருட ஆயுதப் போராட்டம் என்று 60 ஆண்டுகால அரசியல் போராட்டங்களை கண்ட தமிழத்தலைமைகள், வல்லரசுகளின் அரசியல் போட்டிகளுக்குள் நுழைந்து தமது தரப்பு நியாயத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பது ஏற்கக்கூடிய காரணம் அல்ல.
சர்வதேச பிரதிநிதிகளை சந்தித்து விளக்கமளிப்பது என்பது வேறு. ஆனால், வடக்கு – கிழக்கு மாகாணத்தில் அரசியல் யாப்பு ரீதியதாகவும் ஒரு தலைப்பட்சமாக இயற்றப்பட்ட சட்டங்கள் மூலமாகவும் இழைக்கப்படுகின்ற அநீதிகள் பற்றிய தகவல்களை ஆதாரங்களுடன் இதுவரையும் கூட்டமைப்பு எந்த ஒரு சர்வதேச பிரதிநிதிகளுக்கும் சமர்ப்பிக்கவில்லை என்ற விமர்சனங்கள் உள்ளன. இலங்கை அரசு போருக்கு பிந்திய காலத்தில் வடக்கு கிழக்கில் செய்யப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் உதவிகள் குறித்த தகவல்களை மிகைப்படுத்தி நம்பக்கூடிய ஆதாரங்களுடன் சமர்ப்பித்துள்ளது. ஜப்பானின் இலங்கைக்கு ஆதரவான செயற்பாட்டு திட்டங்கள் கூட அந்த அடிப்படையில்தான் நோக்கப்படுகின்றன.
ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.