படம் | Vikalpa
முடிவில்லாத காணிப்பிரச்சினை. அதனால்தான் என்னவோ முடிவில்லாத பயணம்… நான் மீண்டும் பாணம கிராமத்துக்குச் சென்றேன். கொழும்பிலிருந்து 9.30 மணிக்குப் புறப்பட்ட பஸ் அதிகாலை 4 மணிக்கு பொத்துவில் வந்தடைந்தது. எப்படியாவது பாணம போய் ஆகவேண்டும்.
பாணம கிராமத்துக்கு பஸ் எத்தனை மணிக்கு இருக்கிறது? அருகிலிருந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரிடம் கேட்டேன்.
6.30. அட கடவுளே… 4 மணியிலிருந்து இன்னும் 2 ½ மணித்தியாலங்கள் இங்கேயே இருப்பதா…
“இந்த நேரம் த்ரீவீல்களும் இல்லை. இருந்தாலும் யானைகள் இருப்பதால் வரப் பயப்படுவார்கள்”, தேநீர் குடித்தவாறு கதைத்துக் கொண்டிருந்தோம். ஒருவாறு, அந்த இளைஞர் த்ரீவீல் ஒன்றை பேசிக் கொடுத்தார்.
“பாணம பகுதிக்கே வரவேண்டாம். இப்போது நாங்கள் ராகம்வெல என்ற இடத்தில்தான் இருக்கிறோம். விமானப் படை முகாம் இருக்கும், அந்த இடத்தில் இறங்குங்கள். நான் வருகிறேன்…” பாணம நிலத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் அமைப்பாளர் புஞ்சிராள சோமசிறி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அருகிலிருக்கும் வாவியில் சந்திரன் மிதந்து கொண்டிருந்தது. கடல் அலைகளின் சத்தம் வேறு. கும்மிருட்டில் தூரத்தில் ‘டோச்’ வெளிச்சம் தெரிந்தது. தொற்றியிருந்த பயம் கொஞ்சம் அகலத் தொடங்கியது. த்ரீவீலில் இருந்து இறங்கியவுடன், என்றோ ஒரு நாள் பழகியது போல், வயதான நாய் ஒன்று வாலை ஆட்டிக்கொண்டு என்னருகே வந்தது. இருந்த கொஞ்ச பயமும் இப்போது இல்லை… யானை இருந்திருந்தால் நிச்சயமாக நாய் குரைத்திருக்கும்… மனதை தைரியப்படுத்திக்கொண்டு ‘டோச்’ வெளிச்சம் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
“அப்படியே முன்னுக்கு வாங்க. யானைக்காக போடப்பட்டிருக்கும் வேலிக்கிட்ட நில்லுங்க. நான் வந்திட்டு இருக்கிறன்.” புஞ்சிராள மீண்டும் பேசினார்.
இந்தக் காணிப்பிரச்சினையின் அப்டேட் செய்யப்பட்ட செய்தி இது, அரசாங்க அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை அமுல்படுத்தும் வரை பாணம மக்கள் அனைவரும் பலவந்தமாக தங்களது காணிகளுக்குள் குடும்பம் குடும்பமாக குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகிறார்கள்.
காணிப்பிரச்சினையின் வரலாறு
2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு பாணம, ராகம்வெல – சாஸ்த்ர கிராமங்களுக்குள் நுழைந்த ஆயுதம் தரித்த முகமூடி அணிந்த கும்பலொன்று அங்கிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், வீடுகளுக்கு தீயும் மூட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்த மக்கள் அனைவரையும் காடுகளுக்கு விரட்டியடித்துள்ளனர். அன்றைய தினத்துக்குப் பின்னர் அவர்களால் மீண்டும் தங்களது சொந்த நிலத்துக்கு திரும்ப முடியாமல் இருந்தது. தங்களை விசேட அதிரடிப்படையினரே ஓட ஓட விரட்டி அடித்தனர் என்று அம்மக்கள் கூறுகிறார்கள். ராஜபக்ஷ காலத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்தது. அதுவும், பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் அதிகாரம் மேலோங்கியிருந்த போதுதான் இது நடந்தது. அப்போது சட்டத்தின் ஆட்சி அங்கும் இருக்கவில்லை. நீதியை எதிர்பார்த்து சென்ற மக்கள் கைதுசெய்யப்பட்டார்கள். இல்லையென்றால் வழக்குகளில் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டார்கள். இறுதியாக ராகம்வெல (பீனட் பாம் உட்பட) கிராமத்தில் 264 ஏக்கர்கள், சாஸ்த்ர கிராமத்தில் 115 ஏக்கர்கள், உல்பஸ்ஸ கிராமத்தில் 800 என நிலங்களை இராணுவம் அபகரித்துக்கொண்டது. கைப்பற்றப்பட்ட காணியில் விமானப்படை, விசேட அதிரடிப்படை, இராணுவத்துக்கான கட்டடங்கள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. கைப்பற்றப்பட்ட காணியில் 65 ஏக்கர்கள் (பீனட் பார்ம் எனும் பகுதி) மட்டுமே இன்று விடுவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியில் 25 ஏக்கர்களில் விமானப் படை முகாம் ஒன்றையும் நிறுவி வருகிறது.
அமைச்சரவைத் தீர்மானம்
“2009ஆம் ஆண்டு எங்களில் ஏழு பேருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்கள். தொடர்ந்து இழுத்துக்கொண்டிருந்த அந்த வழக்கில் 2015ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. எமக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இருந்தபோதிலும் எமது காணிகளுக்குப் போக அனுமதிக்கப்படவில்லை. அதன் பின்னர் கடந்த 5 மாதங்களுக்கு முன் பலவந்தமாக எமது காணிகளில் வந்து குடியேறினோம். அப்போதும் பொலிஸார் எம்மை விரட்டியடித்தனர். பீனட்பாரம் பகுதியில் உள்ள 25 ஏக்கர் காணியைத் தவிர ஏனைய காணிகளை விடுவிக்குமாறு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர் அதனை அமுல்படுத்துமாறு கோரி அரச அதிகாரிகள், அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினோம். பலன் கிடைக்கவில்லை.
அரசாங்க அமைச்சர்களும் இந்தக் காணிகளில் கண்வைத்திருக்கிறார்கள் என்று நாங்கள் பிந்தி தெரிந்துகொண்டோம். இந்த வருடம் மூன்றாம் மாதம் 25ஆம் திகதிக்கும் முன்னர் காணிகளை மீண்டும் எங்களிடம் ஒப்படைப்பதாக அம்பாறை அரசாங்க அதிபர் கூறினார். 25ஆம் திகதி நெருங்கிய போது அவரைக் காணக்கிடைக்கவில்லை. இவர்களும் எங்களை ஏமாற்றுவதாகப் புரிந்துகொண்டோம். 26ஆம் திகதி மார்ச் மாதம் மாலை 4 மணியளவில் 35 பேர் இணைந்து ராகம்வெல பாதையருகே அமர்ந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டோம். யாரும் பொருட்படுத்தவில்லை. நாங்கள் அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தோம். காணிகளுக்குள் உள்நுழைய விடாமல் பொலிஸார், என்.ஐ.பியினர் பாதுப்பில் ஈடுபட்டிருந்தனர். 27ஆம் திகதி பகல், பலவந்தமாக எமது காணிகளுக்குள் நுழைந்தோம். பொலிஸார், விமானப் படையினர் எங்களை வெளியேற்ற முயற்சி செய்தபோதிலும் நாங்கள் அசையவில்லை. நீதிமன்ற உத்தரவொன்றை பெற்றுக்கொண்டு பொலிஸார் வந்தனர். இருந்தபோதிலும் நாங்கள் வெளியேறவில்லை. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து 28ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்தோம். 30ஆம் திகதி கூடிய நீதிமன்றம் எங்களுடைய காணியுரிமையை ஏற்றுக்கொண்டது. தங்களுக்குச் சொந்தமான காணி என்பதனை விமானப்படையினரால் உறுதிப்படுத்த முடியவில்லை. கட்டுமானப் பணிகள் இடம்பெறும் விமானப் படையினரின் 25 ஏக்கர் காணி தவிர்த்து ஏனைய நிலங்களுக்கு திரும்புமாறு நீதிமன்றம் மக்களுக்கு உத்தரவிட்டது. பிரதேச செயலாளர் காரியாலத்தின் உதவியுடன் காணியைப் பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றும் மேலும் கூறியது.”
பாணமயைச் சேர்ந்த சோமசிறி நடந்தவற்றை விலாவாரியாகக் கூறினார்.
நீதிமன்றத் தீர்ப்பு
“நீதிமன்றத் தீர்ப்பொன்று இருக்கிறது, அதை நாங்கள் சிங்களத்துக்கு மொழிபெயர்த்திருக்கிறோம். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அதில் ஒன்றும் இல்லை. இந்த மக்களுக்கு கட்டாயமாக காணிகள் கொடுக்கப்பட வேண்டும் என்று அதில் எங்கும் கூறப்படவில்லை. இருந்தாலும் இதற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த அமைச்சரவை தீர்மானம் ஒன்று இருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை விட இது வலிமையானது. அமைச்சரவைத் தீர்மானத்தின் படி செயற்பட நாங்கள் முன்வந்தபோது, இந்தக் காணிகள் உல்லாச பயணத்துறைக்காக எடுக்கப்பட்டு அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் தொடர்பாக பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும், அதனால் அமைச்சரவை தீர்மானம் அமுல்படுத்துவதை தள்ளிப்போடுமாறும் இந்தப் பகுதியில் உள்ள அரசியல் தலைவரான தயா கமகே கூறியிருக்கிறார். இந்த அரசியல்வாதிகள்தான் அன்று இந்த மக்களை தூண்டியவர்கள். மிகவும் பெறுமதியான பகுதி இது. இங்குள்ள கடல்பகுதி அலைச்சறுக்கலுக்கு (Surfing) மிகவும் பொருத்தமான இடம் என்று கூறப்படுகிறது. வீடு கட்டுவதற்கு, பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கு இந்தப் பகுதி பொருத்தமில்லை என்பதுதான் எங்களது கருத்தும். நிச்சயமாக இந்தப் பகுதி உல்லாசப் துறைக்காக எடுக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஒருவேளை காணிகளை இந்த மக்களுக்கே கொடுப்பதாக இருந்தால், அவர்கள் பிறகு முஸ்லிம்களுக்கு விற்பார்கள். பொத்துவில் பகுதியிலிருந்து பாணம வரைக்கும் வரும்போது யாருக்கு அதிக நிலம் சொந்தமாக இருக்கிறது என்று பாருங்கள். எனவே, வீதியின் மறுபக்கத்தில் உள்ள காணியை மக்களுக்குப் பிரித்துக்கொடுத்துவிட்டு இந்தப் பகுதியை அபிவிருத்தி செய்வதுதான் சிறந்தது.”
அம்பாறை மாவட்ட செயலாளர் காரியாலத்தில் பணிபுரியும் உயர் அதிகாரியொருவரின் குரலிது. எதிர்காலத்தில் இங்கு என்ன நடக்கவிருக்கிறது என்பது தொடர்பாக அவர் தெளிவாக இருக்கிறார் போல.
“மற்றது, இது அரசாங்கத்துக்குச் சொந்தமான இடம். இந்தக் காணிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர் என மக்கள் கூறினாலும், அவர்களிடம் அனுமதிப்பத்திரம் எதுவும் இல்லை. அரச காணிகளில் மக்களை குடியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிடவும் இல்லை. இது கோடிக்கணக்கான பெறுமதிவாய்ந்த நிலப்பகுதி என்பதை மக்கள் அறிவார்கள். அதனால்தான், இவ்வளவு இந்தளவு தூரம் முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கே இந்த இடத்தை கொடுப்பதாக வைத்துக்கொள்வோம், அவர்களால் எவ்வாறு இங்கு அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட முடியும்? தயாகமகே சேர் பல தடவைகள் இங்கு வந்துபோயிருக்கிறார். இந்த காணிகளின் பெறுமதியை அவர் நன்கு அறிவார். அவர் பிஸ்னஸ்காரர்தானே.”
பாணம, ராகம்வெல காணிகள் மற்றும் கடற் பகுதியைச் சுற்றி கைப்பற்றப்பட்டுள்ள நிலப்பகுதியை விடுவிக்க நல்லாட்சி அரசாங்கத்துக்கும் எதுவித எண்ணமும் இல்லை என்று அந்த உயர் அதிகாரி கூறுகிறார்.
30க்குள் வெளியேறவும்
“காணி தொடர்பாக சட்டரீதியான ஆவணங்கள் இருந்தால் இந்த மாதம் 30ஆம் திகதிக்குள் ராஹுல பிரதேச செயலர் காரியாலயத்தில் ஒப்படைத்துவிட்டு காணியிலிருந்து வெளியேறுமாறு செயலகத்தினால் கடிதமொன்று எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. எங்களிடம் அனுமதிப் பத்திரங்கள் உள்ளன. எனது அப்பாவுக்குச் சொந்தமான, இங்கிருந்த வீட்டிருந்துதான் நான் பாடசாலைக்குச் சென்றேன். இது எங்களது காணி. இப்போது இந்தக் காணியில் தயா கமகே ஹோட்டல் கட்டப்போவதாகத் தகவல். எங்களுடைய செத்த பிணத்தின் மேல்தான் ஹோட்டல் கட்ட வேண்டிவரும். ராஜபக்ஷாக்களினால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் உங்களுக்குத் தருவோம் என்று அரசாங்கம் மாறியவுடன் இங்கு வந்த தயா கமகே கூறியிருந்தார். அன்று இப்படிக் கூறிவிட்டு இப்போது எமது நிலத்தில் ஹோட்டல் கட்ட முயற்சி செய்கிறார். ஹோட்டல் தேவையாக இருந்தால் எமது நிலத்தில் நாங்கள் கட்டிக் கொள்கிறோம். அதற்கு அரசாங்கம் கஷ்டப்படவேண்டிய அவசியமில்லை…”
பாணமயைச் சேர்ந் கே. ஜயசிங்கவின் ஆதங்கம் இது. நள்ளிரவு அடித்து விரட்டப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை பல்வேறு போராட்டங்களை பாணம மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். சிறிசேன ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு இவர்களது போராட்டமும் காரணமாக அமைந்தது. ஆட்சிசெய்பவர்களுக்கு இப்போது நினைவிருக்காது.
ஒவ்வொரு நாள் இரவும் பிள்ளைகள் ஓலையால் வேயப்பட்ட குடிசைகளுக்குள் தூங்க விடியும் வரை பெற்றோர்கள் இருவரும் வெளியில் பாய் ஒன்றை விரித்து தூங்காது கண்விழித்திருக்கின்றனர். சிலவேளைகளில் நல்லாட்சி அரசாங்கமும் இரவிரவாக வந்து விரட்டியடித்துவிடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கிறது.
தண்ணீர் பிரச்சினையால்தான் வந்தோம்
“பாணம பகுதியைத் தவிர்த்து இந்த இடத்தில் மட்டும்தான் குடிப்பதற்கான சுத்தமான நீர் இருக்கிறது. வறட்சி காலத்தின்போது கூட நீர் வற்றிப்போகாது. அதனால்தான் அப்பா இந்த இடத்தில் வந்து குடியேறினார். எனக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள். விரட்டியடித்த நாளிலிருந்து வாடகை வீட்டில்தான் வாழ்கிறேன். நாங்கள் அனைவரும் கஷ்டத்துடன் வாழ்கிறவர்கள். எங்களுக்குப் போய் இப்படி செய்தவர்கள் நல்லா இருக்க மாட்டார்கள். வேறு எங்கோ எங்களுக்கு காணி தருவதாகச் சொல்கிறார்கள். தண்ணீர் இல்லாத மலைகளுக்குள் எங்களை குடியேற்றப் பார்க்கிறார்கள். ஹோட்டல் கட்டுமளவுக்கு வசதி படைத்தவரகள் யாரும் பாணம பகுதியில் இல்லை. அப்படியிருந்தும் எமது நிலத்தை அரசாங்கத்துக்கு விட்டுக்கொடுக்க முடியாது. அரசாங்கத்துக்குக் கொடுத்தாலும் கடைசியில் யாருடைய கைக்குப் போய்ச் சேரும்? கோடீஸ்வரர் தயா கமகேவுக்குத்தான் சொந்தமாகும். அதனால் நாங்கள் சொல்வது எங்களது நிலத்தை எங்களுக்கே தாருங்கள் என்றுதான்.”
பாணமயைச் சேர்ந்த எஸ். அமரபாலவின் கருத்து இது. கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தும் ஏழ்மையான மனிதர் இவர். இந்த நிலம் அவர்களின் கையில் இருந்திருந்தால், கச்சான் பயிரிட்டாவது வாழ்க்கையில் கொஞ்சம் முன்னேற்றமடைந்திருப்பார்கள். ஆனால் தற்போது பணத்தாசை பிடித்துள்ள அரசியல்வாதிகளிடம் சிக்குண்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக வீதியிலறங்கி போராடியதன் மூலம் கொண்டுவரப்பட்ட புதிய ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றம் தற்போது ராஜபக்ஷவின் அதே செயற்பாடுகளை மீள அமுல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நல்லாட்சி சொல்ல வருவது என்ன?
அம்பாறை, பாணம மக்களின் பலவந்த வெளியேற்றம் தொடர்பாக ‘ராவய’ பத்திரிகைக்காக கே. சஞ்சீவ எழுதிய கட்டுரையை மாற்றம் தளத்துக்காக மொழிபெயர்த்தவர் செல்வராஜா ராஜசேகர்.