படம் | கட்டுரையாளர்

“கடைசியில புள்ள சாகும் வரைக்கும் வேலை செஞ்சிக் கொடுத்ததே… சாகும் வரைக்கும் செஞ்சிக் கொடுத்தானே… சாகுறதுக்கு 5 நாளைக்கு முதல் கூட புள்ள வேல செய்தானே.

“2009 வைகாசி மாசம் 15ஆம் திகதி பின்னேரம் 4 மணியிருக்கும்.

“இப்படியொரு நிலம வந்திட்டதே…”

ஓர் உண்மையான ஊடகப்பணியாளரின் – ஊடகவியலாளரது தாயின் இடைவிடா கதறல் இது.

கொல்லப்பட்ட, காணாமல்போன, தாக்கப்பட்ட, அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர்கள் எங்காவது பதியப்பட்டிருக்கும். அவர்களுக்காக நீதிகேட்டு எங்காவது, எப்போதாவது குரல் எழுப்பப்பட்டுவரும். விசாரணைகளும் நடத்தப்படும், ஒரு சிலருக்கு நன்கொடைகளும், ஏன் ஒரு சிலர் வெளிநாடுகளில் தஞ்சமும் அடைந்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் செய்த அதே சேவையை – வேலையை செய்துவந்த ஊடகப் பணியாளர்கள் குறித்து யாரும் கவனத்தில் எடுப்பதில்லை. ‘ஊடகவியலாளர்’ என்ற சொற்பதத்தைக் கொண்டு சங்கங்கள் இயங்குவதால் என்னவோ தெரியவில்லை, அவைகள் கூட ஊடகப்பணியார்களின் உரிமைகள் தொடர்பாக, கொல்லப்பட்ட பணியாளர்களுக்கு நீதிகிடைப்பதற்காக குரல் எழுப்புவதே இல்லை.

ஆகவே, மக்களுக்கு செய்தி வழங்க உழைத்தமைக்காக உயிரிழந்த, காணாமல்போன ஊடகப்பணியார்கள் தொடர்பாக பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முயற்சியுடன், இறுதிப் போரில் உயிரிழந்த ஊடகப்பணியாளர் ஒருவரின் உறவுகளைச் சந்திக்கலாம் என்று முடிவுசெய்தேன். அதன்படி,

யாருமே கண்டுகொள்ளாத – தெரிந்துகொள்ள முயற்சிக்காத – பட்டியல்படுத்தப்படாத – படம் அச்சடிக்கப்படாத – யாரும் கையில் ஏந்தியிருக்காத – குரல்கொடுக்காத – மாலைபோட்ட பட வரிசையில் சேர்க்கப்படாத – பணம் பார்க்கப் பயன்படாத – ஓர் உண்மையான ஊடகப் போராளியான சங்கரசிவம் சிவதர்ஷனின் தாய் சங்கரசிவம் கிளியை கிளிநொச்சியில் வைத்து சந்தித்தேன்.

பிரதான பாதையிலிருந்து தொலைவில் இருக்கிறது அவரது வீடு. நீண்டகாலமாக பயர்செய்கையைக் கண்டிராத வயல்வெளி ஊடாக சென்றுகொண்டிருக்கும்போதே அந்த வயதான தாய் என் முன் வந்துகொண்டிருந்தார். இவ்வளவு காலமும் தேக்கி வைத்திருந்த அழுகை அப்படியே உடைந்தது. ஓவென கதறத் தொடங்கினார்… அமைதியாகவே இருந்தேன், அழட்டும் என்று இருந்தேன். தொடர்ந்து அவருடன் உரையாடியபோதும் இதையேதான் செய்தேன்.

“எந்த நேரமும் கலகலப்பாகவே இந்த வீடு இருக்கும். அவர் இருக்கும்போது ரேடியோவும் போட்டுக்கொண்டு சத்தமாத்தான் இருக்கும். மகன பார்க்கிறதுக்கு நெறய பேர் வந்து போவினம். இப்ப ஒருத்தர் கூட எட்டிப்பார்க்கினம் கூட இல்லையே…? இருக்கிறமா இல்லையா என்டு… இதுதான் எனக்கு ஆதங்கமா இருக்குது… புள்ள இருக்கும்போது எல்லோரும் வருவினம், அத செய்யவேணும், இத செய்விக்கவேணும் என்டு வருவினம். இப்ப ஒன்டும் இல்லையே… தர்ஷன் அம்மா இருக்கிறாவா என்டு கூட ஒருத்தருக்கும் தெரியாது போல…”

தலையை கீழே போட்டவாறு அமைதியானேன். தனது ஒரே மகனை இழந்து கதறுபவரிடம் என்ன சொல்வது…? எங்களோடு வேலை செய்த, சக ஊழியர்களை எப்போதோ மறந்துவிட்டோமே… அதைச் சொல்வதா? எப்போதாவது ஒருநாள் அவர்களை நினைவுகூருவோமே… அதைச் சொல்வதா? இல்லை கண்காட்சிப் பொருளாக அவர்களைப் பாவிப்போமே… அதைச் சொல்வதா? சர்வதேச தினம் ஒன்றுக்காக மட்டும் படங்களை அடுக்கி மாலை அணிவிப்போமே… அதைச் சொல்வதா? சர்வதேச பிரதிநிதிகளுக்கு காண்பிக்கவென அவர்களது இரத்தம் தோய்ந்த படங்களை பாதுகாத்து வைத்திருப்போமே… அதைச் சொல்வதா? இனிமேல் இப்படி இடம்பெறாமல் இருக்க பாதுகாப்புப் பயிற்சி வழங்கவென்று (இவர்களை காரணம் காட்டி) பணம் வசூலிப்பதைப் பற்றிச் சொல்வதா? இல்லை, நிறுவனத்தில் பணிபுரிந்த ஊடகவியலாளர்களுக்கே இந்த கதி என்றால் ஊடகப்பணியாளர்கள், அவர்களது உறவுகளை எந்தமட்டில் கணக்கில் எடுப்போம் என்ற உண்மை நிலைமையை தர்ஷனின் தாய்க்கு விளங்கப்படுத்துவதா? இல்லை மற்றவர்களும் கூறிக்கொள்வது போல நானும் ஓர் ஊடகப்போராளிதான்… ஊடக ஜாம்பவான்தான்… இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை என்று சொல்வதா? இல்லை நல்லாட்சியின் ஊடக நல்லிணக்கத்தைப் பற்றி சொல்வதா?  ஒன்றும் கூறவில்லை. என்னுள் அமைதி தொடர்ந்தது… அந்தப் பக்கமிருந்து அழுகை சத்தம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. இருமல் இடை இடையே வந்து அழுகையை நிறுத்தி நிறுத்தி விட்டுப்போகிறது. அழுதவாறு திடீரென எழுந்து அறையினுள் செல்கிறார்…

‘ஈழநாதம்’ பத்திரிகையில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்த சிவதர்ஷன் பின்னர் ஊழியர் பற்றாக்குறை காரணமாக முழுநேர ஊழியராக இணைந்துகொள்கிறார். போரின் இறுதிக் கட்டத்தில் பத்திரிகை அச்சிடும் இடத்தை தொடர்ந்து மாற்றி வந்த சிவதர்ஷன் உட்பட ஒரு சில ஊழியர்கள், பின்னர் முடியாத கட்டத்தில் வாகனமொன்றில் மின்பிறப்பாக்கியின் உதவியுடன் அச்சு இயந்திரத்தைப் பொறுத்தி பத்திரிகையை அச்சிட்டு வந்துள்ளனர். இலங்கையில் முதலாவது நடமாடும் பத்திரிகை நிறுவனம் இதுவெனலாம்.

பின்னர் ஒரு சில ஊழியர்கள் உயிரிழக்க, இன்னும் ஒரு சிலர் இடம்பெயர பத்திரிகை அச்சிடுவதில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டிய சூழ்நிலைக்கு சிவதர்ஷன் உள்ளாகியுள்ளார். அவருக்கு உதவியாக வாகன சாரதியான அன்ரனி குமாரும் இருந்துள்ளார். கணினியில் பக்கவடிவமைப்பு செய்து பத்திரிகையை அச்சிட்டு அதைத் தானே விற்பனை செய்தும் வந்திருக்கிறார் சிவதர்ஷன்.

4 பக்கங்களைக் கொண்ட பத்திரிகை மே மாதம் முதலாம் வாரம் வரை வெளிவந்திருக்கிறது, சிவதர்ஷன், அன்ரனி குமாரின் உழைப்பில்.

ப்ரேம் செய்யப்பட்ட பெரிய படமொன்றுடன் வெளியே வந்த சிவதர்ஷனின் தாய் கீழே உட்கார்ந்து அருகில் படத்தை வைத்துக்கொண்டார்.

“எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் இந்த ஈழநாதத்துக்குள்ள. மெஷின்ல கை விரலும் போயிட்டது. ஆரம்பத்தில இரவு மட்டும்தான் வேலை செய்தவர். பிறகு புள்ள போராளி இல்லையெண்டு வேலையில இருந்து நிப்பாட்டி போட்டினம். பிறகு ஆக்கள் இல்லையென்டு திருப்பி எடுத்தவ. கடைசியில புள்ள சாகும் வரைக்கும் செஞ்சிக் கொடுத்தானே…”

IMG_9737

அவர் கதறுவதை கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை. மகனை இழந்து 7 வருடங்களாகின்ற நிலையில் சொல்லி அழுவதற்கு யாரும் அவருக்கு இதுவரை இருந்ததில்லை, கணவரைத் தவிர. சொல்லி அழுவதற்கு, மனதில் உள்ள பாரத்தை இறக்கிவைக்கவென நான் அந்த இடத்தில் இருப்பதாகவே உணர்ந்தேன்.

“என்ட புள்ள எத்தன பேர தூக்கினது. என்ட புள்ளய என்னால கூட தூக்க முடியாம போட்டுது. அப்படியே போட்டுட்டு வந்திட்டேனே. என்ட புள்ள எல்லோரயும் பாதுகாக்கனும் என்டு தூக்கி திரிஞ்சவர்… கடைசியில இந்த கடவுள் புள்ளய காப்பாத்தித் தரல்லயே… காயப்பட்ட எத்தன பேருக்கு தண்ணி பருகிவிட்டவர், ஆனா அவருக்கு தண்ணிகூட குடுக்க முடியாம, தூக்கவும் முடியாம…

“நான் முதல்ல காயப்பட்டுட்டன், என்ன தூக்கிக்கொண்டு திரிஞ்ச புள்ளய, “அம்மா அழாதே… அம்மா அழாதே…” என்டவன நாய மாதிரி போட்டுட்டு வந்திட்டன் ஐயா, என்ட புள்ளய…

“இன்னொரு புள்ள இருந்திருந்தா பரவாயில்ல. இருந்த ஒரே புள்ளய றோட்லயே விட்டுட்டு வந்திட்டேனே. அநாதரவா இருக்கிற எங்களயும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்தானே… நேரகாலத்துக்கு கல்யாணம் ஏதும் செய்து விட்டிருந்தா ஒரு புள்ளையொன்றாவது இருந்திருக்கும்…

“இந்தப் படத்தப் பார்க்க பார்க்க நெஞ்சு வெடிக்குது… கும்புட்ட தெய்வம் எல்லாம் எங்கோ போய்ட்டது, புள்ளய பரிச்சிக்கொண்டு, எங்கள இப்படி விட்டுட்டு…

“என்ட புள்ளய தள்ளிக்கொண்டு போனானா? மண்வெட்டியால தூக்கி அள்ளிக்கொண்டு போனானா? காயப்பட காயப்பட எவ்வளவு பேர தூக்கினவங்க. ஆனா என்ட புள்ளய அப்படியே  தெருவில போட்டுட்டு வந்திட்டமே… நெஞ்சே வெடிக்குது… தூக்கியெண்டாலும் பார்க்காம வந்திட்டம். தூக்கியிருந்தாலும் மனம் ஆறியிருக்கும். பாவி நான்… புள்ளய இப்படி வளர்த்திட்டு நாய மாதிரி போட்டுட்டு வந்திட்டேனே… யாரும் என்ட புள்ளய தூக்க வரல்ல. நான் அந்த இடத்திலேயே செத்திருந்திருக்கலாம்.

“இப்படி ஒரு நிலம வருமென்டு கனவிலயும் நினைச்சிப் பார்க்கேல்ல.”

நீண்டநேரமாக அழுகை தொடர்கிறது…

சிவதர்ஷனுக்கு உதவியாக இருந்த அன்ரனிகுமார்
சிவதர்ஷனுக்கு உதவியாக இருந்த அன்ரனிகுமார்

சிவதர்ஷன் தாயுடன் இடம்பெயர்ந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துகொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிழந்திருக்கிறார். காயமடைந்த சங்கரசிவம் கிளியை ஏனையோர் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டுவந்து சேர்ந்ததால் சிவதர்ஷனின் உடலைக் கூட அவரால் பார்க்க முடியாமல் போயுள்ளது.

60 வயதான சங்கரசிவம் காலையில் சந்தைக்குச் சென்று இரவு வீடுவருவதனால் பெரும்பாலும் இரவு வேளை மட்டும்தான் உணவுவேளையாக இருக்கிறது அவருக்கு. கண்பார்வையும் குறைவு என்பதால் சமைக்கும்போது ஒருதடவை அடுப்புக்குள் கைவிட்டிருக்கிறார். உடம்புக்குள் குண்டுச் சிதறல்கள் இருப்பதால் தொடர்ந்து தலைசுற்று, மயக்கம் வேறு.

“அவர் பழம் வாங்கி விற்கிறவர். பழம் விற்கிற கடைகள் 16, 17 இருக்குது. இந்த மாதம் வாழைப்பழம் விக்காது… மழை என்டதால வாங்காதுகள்… ரெண்டு நாள் கடை பூட்டு, நேற்றும் 30 கிலோ பழம் தூக்கி எரிஞ்சனான் என்றார். ஒரு நாளைக்கு நூறு ரூபாயும் உழைப்பார், சிலநேரம் 300 ரூபாயும் உழைப்பார், சில நேரம் ஒன்டும் இருக்காது…

யாராவது உதவி செஞ்சாங்களா அம்மா என்றேன்?

“ஒருத்தர் வீட்டுக்கு போறதும் இல்ல, புள்ளகள் இல்லையென்டு சமுர்த்தி கூட குடுக்கேல்ல. இவர் சொல்லியிருக்கார், இருந்தா சாப்பிடு இல்லையென்டா விடு… பிச்சை எடுக்காம இருப்பம் என்டு. மகன நெனச்சி அவருக்கு கவல. எப்படியும் புள்ள எங்கள பார்க்கும் என்டுதானே வளர்த்தனாங்கள். புள்ள இருந்து பார்க்கவேண்டிய நேரத்தில புள்ளயின்ட பேரச் சொல்லி  எதுவும் கேட்காத என்டு சொல்லியிருக்கார்.”

12 தகரத்தை மட்டும் தந்த அரசாங்கம் மீது அவருக்கு உள்ள கோபத்தை, ஆதங்கத்தை விட தன்னை வந்து யாரும் பார்க்காதது கஷ்டமாக இருப்பதாக சங்கரசிவம் கிளி கூறுகிறார்.

மீண்டும் அழுகையை சேமிக்கத் தொடங்கிவிட்டார்…

குறிப்பு: இடம்பெயர்ந்து வந்துகொண்டிருக்கும்போது அன்ரனி குமாரும் ஷெல் தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கிறார்.

செல்வராஜா ராஜசேகர்