படம் | COLOMBO TELEGRAPH

 

உறக்கம் வராத இருள் அலைகள் எழுப்பும்

இருளை உடைத்தவோர் நட்சத்திரம் ஆகாயத்தில் எழும்பும்

பாடும் மீன்கள் உன் பெயரைச் சொல்லும்

தராகி உனது தாபம் மிகுந்த குரல் கேட்கும்

 

இனிமை இல்லை

ஆம் இல்லைத்தான்

பாடல் கர்ணகடூரமானது

ஆயினும் அப்பாடல் உண்மைதான்

 

மந்தமாருதத்தில் தோய்ந்து வரும் உதிரத்தில்

பாடும் குரலொன்றின் நினைவுகள் படிந்திருக்கும்

சண்டமாருதம் வீசி வந்த பயங்கர இரவில்

நித்திரையின் ஆழத்துக்கு ஏன் போனாய்

நிலாத்தோழனே?

 

முதலைமுக நகரத்தின் நிர்வாணம் தெரிந்தது

முதலை ஓடைக் கரைதனில் முதலைப் பற்கள் மின்னின

கவலைகொண்ட உள்ளங்களின் கதவுகள் திறந்தன

உனது குரல் அந்த உள்ளங்களில் நிறைந்தது

 

மஞ்சுல வெடிவர்தன

சிங்களத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் பஹிமா ஜஹான்

சிங்கள மொழி கவிஞரான மஞ்சுல வெடிவர்தனவின் தர்மரத்தினம் சிவராம் தொடர்பான இந்தக் கவிதை வரிகளுக்கு இசை வடிவம் கொடுத்து பாடல் ஒன்றை மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ஜயதிலக்க பண்டார இயற்றியிருக்கிறார். அதனை கீழே தந்திருக்கும் இணைப்பினூடாகக் கேட்கலாம், நன்றி: @vikalpavoices