படம் | Dinuka Liyanawatte/Reuters, DARK ROOM
அண்மையில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தை புதுப்பித்திருக்கின்றார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய ரணில், இத்திட்டத்தினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்னும் பேச்சிற்கே இடமில்லை. இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள் எம்மால் தீர்க்கப்பட்டுள்ளன. இது பற்றி இந்தியாவுடன் மேலும் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று குறிப்பிட்டிருக்கும் அவர், இந்திய பெருங்கடலில் இந்திய – சீன மோதல் ஏற்படாதென்று ஆருடமும் கூறியிருக்கின்றார்.
சீன அரச நிறுவனமான, தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்தினால் (Communication Construction Company Limited – CCCC) 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் மேற்கொள்ளப்படவுள்ள மேற்படி பாரிய திட்டமானது, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து உடனடியாகவே இடை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இலங்கைக்கும் சீனாவிற்குமான இருதரப்பு உறவுகளும் பாதிப்படைந்திருந்தன. மஹிந்த ராஜபக்ஷ அதிகம் சீனாவை நோக்கி பயணிக்கின்றார் என்று குற்றஞ்சாட்டியவர்கள், அதற்கு ஆதாரமாக முன்வைத்த காரணங்களில் மேற்படி துறைமுக நகரத் திட்டமும் ஒன்று. மற்றையது அம்பாந்தோட்டை விமான நிலையம் ஆகும். ஆனால், அந்தப் பகுதியில் கைத்தொழில் பேட்டை ஒன்றை நிர்மானிப்பதற்காக உடன்பாடொன்றையும் அரசாங்கம் சீனாவுடன் ஏற்படுத்திக் கொள்ளவுள்ளது. அந்த அடிப்படையில் சீனாவிற்கு 1000 ஏக்கர் நிலப்பரப்பை வழங்கவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். அதேவேளை, சீன அபிவிருத்தி வங்கி இலங்கையில் தனது நடவடிக்கைகளை விரைவில் ஆரப்பிக்கவுள்ளது. இதன் மூலம் சீன நாணயமான யுவான் இலங்கையில் இலகுவில் மாற்றக்கூடிய சூழல் ஏற்படுவதுடன், மேலும் அமெரிக்க டொலருக்கு நிகரான மதிப்பும் சீன நாணயத்திற்கு கிடைக்கவுள்ளது.
சீன அரசாங்கத்தின் திட்டங்கள் இவ்வாறு தடைகளை தாண்டி முன்னெடுக்கப்படவுள்ள சூழலில், இந்தியாவின் திட்டங்களுக்கு என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? இந்திய அரசின் திட்டங்களை இலங்கையில் முன்னெடுப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலையே காணப்படுகிறது. பலாலி விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்பார்த்தது போன்று முன்நகர்த்த முடியவில்லை. சம்பூர் அனல் மின்நிலையத் திட்டத்தை எதிர்பார்த்தது போன்று முன்னெடுக்க முடியவில்லை. இலங்கை – இந்திய படகுப் போக்குவரத்தை ஆரம்பிக்க முடியவில்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் பி.ஜே.பி ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வகையிலான ராமர் பாலம் அமைக்கும் திட்டம் பற்றி இந்திய தரப்பினரால் பிரஸ்தாபிக்கப்படுகிறது. மோடி இலங்கைக்கு விஜயம் செய்த போது, திருகோணமலையில் பாரிய எண்ணை சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை உருவாக்கும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், இந்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் வெறும் இந்திய விருப்பங்களாவே இருக்கின்றன.
இது பற்றி ஒரு இந்திய பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, இந்திய அரசினால் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் தெற்கில் எதிர்ப்புக்குள்ளாவதாகவும், ஆனால், இந்திய தனியார் திட்டங்கள் அவ்வாறு எதிர்க்கப்படுவதில்லை என்றார். ஏன் இந்திய அரசின் திட்டங்கள் மட்டும் எதிர்க்கப்படுகின்றன? இந்திய அரசின் திட்டங்களை சிங்கள தேசிய வாதிகள் ஒரு பெரிய அச்சுறுத்தலாகவே பார்க்கின்றனர். இதன் காரணமாகவே இந்தியாவின் திட்டங்கள் எதிர்க்கப்படுகின்றன. ஆனால், இந்திய அரசின் திட்டங்கள் எதிர்க்கப்படுவது போன்று தென்னிலங்கையில் சீன அரசின் திட்டங்களோ மேற்குலகின் திட்டங்களோ பெரியளவில் எதிர்க்கப்படுவதில்லை. வெளித் தோற்றத்தில் இவ்வாறான திட்டங்கள் எதிர்க்கப்படுகின்ற போது, அந்தத் திட்டத்தின் உள்ளடக்கம் எதிர்க்கப்படுவதான ஒரு தோற்றமே காண்பிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் அந்த எதிர்ப்பு என்பது இந்தியாவின் மீதான எதிர்ப்பேயன்றி திட்டத்தின் மீதான எதிர்ப்பல்ல. தமிழர் விரோதமும் இந்திய விரோதமும் சிங்கள தேசிய வாத அரசியலை சூடாக வைத்திருக்கும் இரண்டு பிரதான காரணிகளாகும். இது வராலாற்று ரீதியான காரணிகளால் வழிநடத்தப்படுகிறது.
அண்மையில் கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் ஒரு விடயத்தை குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் மதிய போசன நேரத்தின் போது சில சிங்கள தலைவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைப்பதுண்டு. அவர்கள் மிகவும் வெளிப்படையாகவே கூறுகின்றனராம். நீங்கள் நாளைக்கு அதிகாரத்தை பெற்ற பின்னர், தமிழ் நாட்டுடோடு சேர்ந்து கொண்டு எங்களை தாக்கினால், நாங்கள் என்ன செய்வது? நாங்கள் இலங்கையில் பெரும்பான்மையாக இருந்தாலும் கூட ஒரு சிறுபான்மை போலவே உணர்கிறோம் என்று அந்த சிங்களத் தலைவர் குறிப்பிடுகின்றாராம். இது தொடர்பில் சில சிங்கள வரலாற்றியலாளர்கள் கூட முன்னர் எழுதியிருக்கின்றனர். எப்போதுமே வட கிழக்கு தமிழ் மக்களின் விவகாரத்தை இந்தியாவோடு தொடர்புபடுத்தியே சிங்கள தேசிய வாதிகள் புரிந்துகொள்ள முற்படுகின்றனர். அந்த வகையில் அவர்களை பொறுத்தவரையில் வடக்கு – கிழக்கு இணைப்பு, அதிகாரப்பகிர்வு என்பதெல்லாம் இந்தியாவோடு தொடர்பான விடயம். ஆனால், இந்த விவகாரத்தை இந்தியத் தரப்பினர் எவ்வாறு நோக்குகின்றனர்?
ஆட்சி மாற்றம் நிகழ்ந்த போது, அதனை வெறுமனே ஒரு உள்விவகாரமாக எவருமே நோக்கியிருக்கவில்லை. அவ்வாறு நோக்கவும் முடியாது. அதுவரை எவராலும் நெருங்க முடியாத ஒருவராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ சிங்கள, தமிழ், முஸ்லிம் கூட்டிணைவால் தோற்கடிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ராஜபக்ஷ தன்னுடைய தோல்விக்குப் பின்னால் இந்திய உளவுத் துறை இருந்தாகவே உடனடியாக குற்றஞ்சாட்டினார். இது சிங்கள தேசியவாதிகள் மத்தியில் இந்தியா தொடர்பான எதிர்ப்பை தீவிரப்படுத்தியது எனலாம். இன்று மஹிந்தவுடன் இருப்பவர்களே இந்திய எதிர்ப்பை ஒரு அரசியல் சுலோகமாக கையாண்டு வருகின்றனர். இன்று இந்திய அரசின் திட்டங்கள் எதிர்க்கப்படுவதற்கு பின்னால் இருப்பவர்களும் அவர்கள்தான். இங்கு ஒரு விடயத்தை தெளிவாகக் காணலாம். தென்னிலங்கை அரசியலில், எவர் இந்திய எதிர்ப்பு சுலோகத்தை உயர்த்துகின்றாரோ, அவர்களிடம் தமிழர் விரோத சுலோகங்களும் இருக்கின்றன.
ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து புதிய அரசாங்கம் இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான உடன்பாடொன்றை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அது தொடர்பான எதிர்ப்புணர்வு தென்னிலங்கையில் வேகமாக அதிகரித்தது. மஹிந்த தரப்பு மட்டுமன்றி, வைத்தியர்கள் சங்கம் கூட அதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியது. ஆனால், ஏனைய நாடுகளுடனான வர்த்தக ஒத்துழைப்புக்கள் தொடர்பில் எவரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. சீனாவிற்கு சென்று திரும்பிய ரணில் சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்திருக்கின்றார். எதிர்வரும் ஜூன் மாதத்தில் புதிய அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தித் திட்டம் வெளியிடப்படவுள்ளது. அதன்போது பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்படவுள்ளன.
புதிய அரசாங்கம் சீனாவுடனான உறவுகளை புதுப்பித்தமைக்கு பின்னால் கடன் பிரச்சினைகளே காரணம் என்பது ஒரு சாராரின் கருத்ததாக இருக்கின்றது. அதேவேளை, பிறிதொரு தரப்பினரோ, இந்திய எதிர்ப்பாளர்களை எதிர்கொள்ளுவதற்கான ஒரு உக்தியும் அதற்குப் பின்னால் ஒழிந்திருக்கின்றது என்கின்றனர். அதாவது, சீனாவுடனான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கிக் கொண்டு, இந்தியாவின் திட்டங்களுக்கும் ஒப்புதலளிக்கும் போது, இந்திய எதிர்பாளர்களை கட்டுப்படுத்துவது சுலபம் என்று ரணில் கருதுவதாக அவ்வாறானவர்கள் நம்புகின்றனர். சீனாவுடனான உறவுகளை புதுப்பித்தமை தொடர்பில் பேசுகின்ற போது, ரணில் தாம் ஒரு சமநிலையான கொள்கை அழுத்தத்திற்கு உள்ளாவதாக குறிப்பிட்டிருப்பதை (Island nation would pursue a more balanced foreign policy) இந்த இடத்தில் உற்று நோக்கலாம். எவ்வாறிருந்த போதும் இந்த சமநிலைக் கொள்கையால் எப்போதுமே அதிக இலாபம் அடைந்துகொண்டிருப்பது கொழும்பு மட்டுமே! இலங்கையை தன்னுடைய முழமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்னும் இந்திய மூலோபாயம் அல்லது இலங்கை தன்னுடைய கட்டுப்பாட்டிலிருந்து அதிகம் விலகாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்னும் இந்திய உபாயம் தொடர்ந்தும் தோல்வியில்தான் முடிகிறதா என்னும் கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது.
இலங்கை தொடர்பான இந்திய வெளிவிவகாரக் கொள்கையை உற்று நோக்கினால் அது எப்போதுமே தென்னிலங்கைச் சக்திகளை திருப்திப்படுத்தும் அணுகுமுறையையே கொண்டிருக்கிறது. இந்தியா நேரடியாக தலையீடு செய்ய முற்பட்ட காலத்தில் கூட கொழும்பை திருப்திப்படுத்திக் கொண்டு தமிழர்களுக்கு உதவுவது தொடர்பிலேயே சிந்திக்கப்பட்டது. கொழும்பை தன்னுடைய வழிக்குக் கொண்டுவருவதற்கான ஒரு அழுத்த சக்திகளாவே ஆயுதப் போராட்ட அமைப்புக்களை இந்தியா கையாண்டது. எனவே, தமிழர் விவகாரத்தில் இந்திய அணுகுமுறை என்பது எப்போதுமே ஒன்றாகவே இருக்கிறது. அதாவது, கொழும்மை பகைத்துக் கொள்ளாமல் உதவ முடிந்தால் உதவுவது, இல்லாவிட்டால் தன்னுடைய அழுத்தங்களை வெறும் உதட்டளவில் நிறுத்திக் கொள்வது. தென்னிலங்கையில் இந்தியாவிற்கு எதிரான அலை தீவிரமடைந்துவிடக் கூடாதென்பதிலேயே இந்தியா எப்போதும் கவனம் செலுத்திவருகிறது. ஆனாலும், அந்த எதிர்ப்பலை இன்றுவரை மாறவில்லை.
இந்தியாவின் மேற்படி அணுமுறை தொடர்பில் சில தமிழ் தேசியவாத தரப்பினர் பிறிதொரு பார்வையை வெளிப்படுத்துகின்றனர். அதாவது, இந்தியா இலங்கையில் தன்னுடைய உண்மையான நண்பர் யார் என்னும் அடிப்படையில் சிந்திக்கவில்லை. மாறாக தொடர்ந்தும் கொழும்பை விரோதித்துவிடக் கூடாது என்னும் அடிப்படையிலேயே சிந்திக்கின்றது. ஆனால், அதில் இந்தியா தொடர்ந்தும் தோல்வியையே சந்தித்துவருகிறது. இது தொடர்பில் முன்னர் ஒரு இந்திய இராஜதந்திரி இவ்வாறு கூறினாராம். அது எங்களுக்கு விளங்குகிறது. ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்களும் உலகெல்லாம் சென்று எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவில்லையா? விடுதலைப் புலிகள் காலத்தில் இந்தியா தமிழர்களை நண்பராக நம்புவதற்கு காரணங்கள் இருக்கவில்லை என்பதை நிராகரிக்க முடியாது. ஆனால், கொழும்பை திருப்திப்படுத்திக் கொண்டு தமிழர்களுக்கும் உதவலாம் என்பதை ஒரு காத்திரமான கொள்கையாக இந்தியா தொடர்ந்தும் கருத முடியுமா? இலங்கை தன்னுடைய கட்டுப்பாட்டை மீறும் போதெல்லாம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது சாத்தியமாகுமா? அல்லது வடக்கு கிழக்கை தன்னுடைய செல்வாக்கின் நிழலில் பேணிக் கொண்டு, கொழும்புடனான உறவையும் பேணிக் கொள்வது சரியானதாக இருக்குமா? இந்த இடத்தில் இந்தியா தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் ஒரு சமநிலையான கொள்கையுடன் அணுகுவதுதானா சரியானதொரு அணுகுமுறையாக இருக்க முடியும்? இந்த விடயத்தை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் எவ்வாறு பார்க்கப் போகின்றனர் என்பதை யாருமறியார்.