படம் | BHANTESUJATHA
அறிமுகம்
மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அடிப்படைக் கொள்கைகளையும், யாப்பு ஏற்பாடுகளையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவிற்கு மலையக சமூக ஆய்வு மையம் முன்வைக்கவுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது –
‘மலையகத் தமிழர்கள்’ சுமார் 200 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தீவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் மத்திய மலைநாட்டிலும் ஏனையோர் மற்றைய மாகாணங்களிலும் வசிக்கின்றனர். காடாக இருந்த மலையக மண்ணை தேயிலை, இறப்பர் செழிந்தோங்கும் பூமியாக மாற்றியவர்கள் இவர்களேயாவர். இதனூடாக இலங்கைக்கான தேசிய வருமானத்தை முதல் நிலையில் பெற்றுக் கொடுத்தனர்.
மலையக மக்களின் கடந்த காலம் கசப்பான வரலாற்றினைக் கொண்டது. மனித குலம் சகிக்க முடியாத கொத்தடிமைகளாக சுதந்திரத்தின் முன்னர் பிரித்தானிய ஆட்சியாளர்களாலும, சுதந்திரத்தின் பின்னர் இலங்கை ஆட்சியாளர்களினாலும் இம்மக்கள் நடாத்தப்பட்டனர். சொந்தமாக நிலமோ, வீடோ இல்லாமல் உலகில் வாழும் பெருங்கூட்டம் மலையக மக்கள்தான். இலங்கைத் தீவுக்குள்ளே இன்னோர் இருண்ட தீவாக மலையகம் இருந்தது.
உலகமே தலை குனியும் மனிதாபிமானத்திற்கு எதிரான சட்டங்கள் அவர்கள் மீது ஏவப்பட்டன. பிரஜாவுரிமைச் சட்டம், தேர்தல்கள் திருத்தச் சட்டம் என்பவை இவற்றில் முக்கியமானவை. இவற்றினூடாக பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டன. இவர்களின் சம்மதமில்லாமல் சிறிமா -சாஸ்திரி, சிறிமா – இந்திரா ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு இவர்களில் பெரும் பிரிவினர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். இந்தியாவிலும் அவர்களது வாழ்வு சிறப்பாக உள்ளது எனக் கூற முடியாது. கூட்டாக வாழ்ந்த மக்களை இந்திய அரசாங்கம் பல பிரதேசங்களிலும் சிதற விட்டுள்ளது.
மிக நீண்ட காலமாக தேசிய நீரோட்டத்தில் அவர்கள் இணைக்கப்படவில்லை. அண்மைக் காலமாக மலையகத் தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் சிறிது சிறிதாக உள்வாங்கப்படுகின்றனர். அதுவும் இன்னமும் முற்றுப்பெறவில்லை. உள்ளூராட்சிச் சபைகள் பெருந்தோட்ட மக்களுக்கு உதவ முடியாத நிலை இன்றும் உள்ளது.
மேற்கூறியவாறு வரலாற்று ரீதியாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு இம்மக்கள் முகம் கொடுத்தாலும் அதனூடாக இன்று ஒரு தேசிய இனமாக வளர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களது தேசிய இன அடையாளம் தொடர்ந்து சிதைக்கப்படுகின்றது. இது ஒருவகை இன அழிப்பாகும். இதுவே மலையக மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினையாகும். எனவே, மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு, யாப்பு ஏற்பாடுகள் என்பன இந்த அடையாளச் சிதைப்பிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதாக இருத்தல் வேண்டும்.
அடையாளம்
1) இலங்கையில் சிங்களவர்கள், இலங்கைத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என நான்கு தேசிய இனத்தவர்கள் தனித்துவ அடையாளத்துடன் வாழ்கின்றனர். ஏனைய இனங்களைப் போன்று மலையகத் தமிழர்களும் இலங்கைத் தீவின் தனித்துவமான தேசிய இனத்தவராவர்.
இவர்களுடன் வேடுவர், பறங்கியர், மலாயர், ஆபிரிக்கர் ஆகியோரும் இலங்கைத் தீவில் வசிக்கின்றனர்.
2) மலையக மக்கள் ‘மலையகத் தமிழர்’ என்ற பெயரினால் அழைக்கப்படல் வேண்டும். ‘இந்திய வம்சாவழித் தமிழர்’ என்ற பெயரினால் அழைக்கப்படக் கூடாது (இது மலையக மண்ணிலிருந்து அவர்களை அந்நியப்படுத்துவதுடன் மலையகத்தை தாயகமென மலையக மக்களால் கூறமுடியாத நிலையை ஏற்படுத்துகின்றது).
3) மலையகத் தேசிய இனத்தை தாங்கும் தூண்களாக இருப்பவை நிலம், தமிழ்மொழி, பெருந்தோட்டத் துறைப் பொருளாதாரம், மரபு ரீதியான மலையக மக்களின் கலாசாரம் என்பனவாகும். இவை யாப்பு ரீதியாக பாதுகாக்கப்படல் வேண்டும்.
அரசு
1) இலங்கை அரசு பல்லினத் தன்மையை பேணும் வகையில் அனைத்து தேசிய இனங்களுக்கும் நியாயமான இடத்தைக் கொடுக்கும் பன்மைத்துவ அரசாக (சமஸ்டி அரசாக) இருக்க வேண்டும். அதாவது, மாநில அரசுகளின் ஒன்றியமாக இருக்க வேண்டும்.
2) மாநில அரசுகளில் ஒன்றாக மலையகமும் இருக்க வேண்டும். இதற்கு மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை இணைத்து மலையக மக்களுக்கான அதிகார அலகு ஒன்று உருவாக்கப்படுதல் வேண்டும். அது நிலத்தொடர்ச்சியற்றதாகவும் இருக்கலாம் (பாண்டிச்சேரி போன்று).
3) ஏனைய பிரதேசங்களில் வாழும் மலையக வம்சாவழியினரின் நலன் பேணும் வகையில் சமூக அதிகார அலகு உருவாக்கப்படல் வேண்டும் (பெல்ஜியம் மாதிரி).
இறைமை
1) இறைமை பிரிக்க முடியாததாக மக்களிடமும், தேசிய இனங்களிடமும் இருக்கும். இவ் இறைமை வாக்குரிமை, மனித உரிமைகள் என்பவற்றையும் உள்ளடக்கியிருக்கும்.
2) மக்களினது சட்டவாக்க அதிகாரங்கள் மக்கள் சார்பாக மத்திய அரசினாலும், மாநில அரசுகளினாலும் யாப்பின்படி அவற்றினுடைய அதிகார எல்லைக்குள் பிரயோகிக்கப்படும்.
3) மக்களது நிறைவேற்று அதிகாரங்கள் யாப்பின்படி மக்களின் சார்பாக மத்திய அரசினாலும் மாநில அரசுகளினாலும் அவற்றினுடைய அதிகார எல்லைக்குள் பிரயோகிக்கப்படும்.
4) மக்களது நீதி அதிகாரங்கள் யாப்பின் படி மக்கள் சார்பாக மத்திய அரசின் நீதிமன்றங்களினாலும், மாநில அரசுகளின் நீதிமன்றங்களினாலும் அவற்றின் அதிகார எல்லைக்குள் பிரயோகிக்கப்படும். இவற்றிற்கேற்ப இலங்கையின் நீதித்துறை மத்திய அரசின் நீதித்துறை, மாநில அரசுகளின் நீதித்துறை என இரு வகைகளாக பிரிக்கப்பட வேண்டும்.
5) நீதித்துறைச் சுதந்திரத்திற்கான ஏற்பாடுகள் உள்வாங்கப்படல் வேண்டும். அரசியல்யாப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கு அரசியல்யாப்பு நீதிமன்றம் ஒன்றும் உருவாக்கப்படல் வேண்டும்.
மொழி
1) சிங்களமும், தமிழும் இலங்கையின் அரசகரும மொழிகளாகவும், தேசிய மொழிகளாகவும் இருத்தல் வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருத்தல் வேண்டும்.
2) பிரஜைகள் எவரும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அரச கருமங்கள் ஆற்றங்கூடிய நிலையிருத்தல் வேண்டும்.
3) வட கிழக்கு மாநில அரசிலும், மலையக மாநில அரசிலும் தமிழ்மொழி அரச கருமமொழியாக இருத்தல் வேண்டும். ஏனைய மாநிலங்களில் சிங்கள மொழி அரச கரும மொழியாகவும் இருத்தல் வேண்டும். எனினும், எல்லா மாநிலங்களிலும் மூன்று மொழிகளிலும் தொடர்பாடல்களை மேற்கொள்ளக்கூடியாத இருத்தல் வேண்டும்.
4) வட கிழக்கு மாநில அரசிலும், மலையக மாநில அரசிலும் தமிழ்மொழி நீதிமன்ற மொழியாக இருத்தல் வேண்டும். ஏனைய மாநில அரசுகளில் சிங்கள மொழி நீதிமன்ற மொழியாக இருத்தல் வேண்டும். எனினும், அனைத்து நீதிமன்றங்களிலும் மூன்று மொழிகளிலும் தொடர்பாடலை மேற்கொள்ளக்கூடிய நிலை இருத்தல் வேண்டும்.
5) சிங்களமும், தமிழும் நாட்டின் சட்டவாக்கமொழியாக இருக்கவேண்டும். ஒவ்வொரு சட்டமும் ஆங்கில மொழியிலும் மொழிபெயர்க்கப்படல் வேண்டும்.
6) அரச கரும மொழிக் கொள்கையின் அமுலாக்கலை மேற்பார்வை செய்ய தேசிய அரச கரும மொழி ஆணைக்குழுவும், மாநிலங்களின் அரச கரும மொழி ஆணைக் குழுக்களும் உருவாக்கப்படல் வேண்டும்.
தாய்மொழி கல்வி
இலங்கையில் அனைத்து மாணவர்களும் தமது ஆரம்பக் கல்வியை தாய்மொழியில் கற்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கான கல்விக் கொள்கை வகுக்கப்படல் வேண்டும்.
மேலும், அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் உள்வாங்கப்படும் மாணவர்கள் தமது தாய்மொழியிலோ அல்லது தாம் விரும்பும் இலங்கையில் பயன்பாட்டிலுள்ள வேறெந்த மொழியிலோ கற்பதற்கான வாய்ப்புக்களை உறுதிப்படுத்தல் வேண்டும்.
மத சார்பற்ற அரசு
1) இலங்கை மத சார்பற்ற அரசாக இருத்தல் வேண்டும். அனைத்து மதங்களின் சுதந்திரங்களும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
2) மதங்களுக்கிடையே ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும் வளர்க்கும் வகையில் சமய சுதந்திரத்திற்கான ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.
அரசியல் யாப்பு
1) அரசியல் யாப்பு அனைத்து தேசிய இனங்களையும் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாக இருக்க வேண்டும்.
2) அரசியல் யாப்பே நாட்டின் அதியுயர்ந்த சட்டமாகும். மத்திய அரசினதும், மாநில அரசுகளினதும் சகல செயற்பாடுகளும் அரசியல் யாப்பிற்கு அமைவாகவே இருத்தல் வேண்டும்.
3) அரசியல் யாப்புத் திருத்தங்கள் அனைத்தும் மத்திய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையாலும், ¾ மாநில சட்ட சட்ட மன்றங்களினாலும் நிறைவேற்றப்படல் வேண்டும்.
4) தேசிய இனங்களுடன் தொடர்புடைய விவகாரங்களை பொறுத்தவரை மேற்கூறியவற்றுடன் சம்பந்தப்பட்ட தேசிய இனத்தின் சட்ட சபையின் 2/3 பெரும்பான்மையுடனும் நிறைவேற்றப்படல் வேண்டும்.
5) அரசியல் யாப்புடன் தொடர்புடைய விடயங்களுக்கு அரசியல் யாப்பு நீதிமன்றம் பொறுப்பாக இருக்கும்.
6) அரசியல் யாப்பு நீதிமன்றத்தின் நீதிபதிகள் சகல தேசிய இனங்களிலிருந்தும் நியமிக்கப்படல் வேண்டும். தேசிய இனங்களின் நீதிபதிகளை அந்தந்த தேசிய இனங்களின் சட்ட சபைகள் சிபார்சு செய்தல் வேண்டும்.
7) தேசிய இனங்களின் விவகாரங்கள் தொடர்பான தீர்ப்புகளுக்கு அந்தந்த தேசிய இனங்களின் சட்டசபைகளினது ஒப்புதல் அவசியம்.
வாழ்வதற்கான உரிமை
இலங்கையின் அரசியல் யாப்பில் அனைத்து இனங்களும் தனித்துவத்தோடும், சமத்துவத்தோடும் தமக்கே உரிய அடையாளங்களை பாதுகாத்து, பேணி எதிர்கால சந்ததியினருக்கு நாகரீகமிக்க மனித சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு ஏற்ற வகையில் வாழும் உரிமையினை உறுதிப்படுத்தி, அங்கீகரித்து, பாதுகாப்பளித்தல் வேண்டும்.
தேசிய கீதம்
நாட்டின் தேசிய கீதம் இலங்கையின் அரசகரும மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பாடக்கூடியவாறு தேசிய கீதத்தின் வரிகள் வகுக்கப்படல் வேண்டும். அத்தோடு, இலங்கையில் வாழக்கூடிய ஏனைய இனங்களின் இனத்துவ அடையாளங்களையும் வெளிப்படுத்தும் வகையில் சொற்தொடர்கள் தேசிய கீதத்தில் உள்வாங்கப்படல் வேண்டும்.
தேசிய கொடி
இலங்கையின் தேசிய கொடியானது இலங்கையில் வாழும் அனைத்து இனங்களையும் அடையாளப்படுத்தும் வண்ணமும், சமத்துவ உரிமையை கௌரவப்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்படல் வேண்டும்.
ஒடுக்குமுறைகள்
இன, மத, பால், சாதி, கல்வி, தொழில், பிரதேசம்… ரீதியில் திட்டமிட்ட முறையில் ஒடுக்குதலையும், அழிவுகளையும் மேற்கொள்ளக் கூடிய வார்த்தைப் பிரயோகங்களையும், செயற்பாடுகளையும் தனிநபர்களோ, அமைப்புகளோ மேற்கொள்ளா வண்ணம் அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகளை யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தல் வேண்டும்.
மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்குமிடையேயான அதிகாரப் பகிர்வு
1) ஆட்சி அதிகாரங்கள் மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்குமிடையே பங்கிடப்படல் வேண்டும்.
2) அரசின் அதிகாரங்கள் மத்திய பட்டியல், மாநிலப் பட்டியல் என இரு வகைப்படுத்தப்பட்டதாக இருக்கும்.
3) மத்திய பட்டியலில் மத்திய அரசும், மாநிலப் பட்டியலில் மாநில அரசுகளும் அதிகாரம் உடையனவாக இருக்கும்.
4) மத்திய பட்டியல் அனைத்து மாநிலங்களுக்குமான பொதுவான விவகாரங்களைக் கொண்டிருக்கும். மாநில பட்டியல் மாநிலங்களின் தனியான நலன்களைக் கொண்டிருக்கும்.
5) மத்திய பட்டியலிலுள்ள அதிகாரங்களை மாநிலங்களில் மத்திய அரசின் சார்பாக மாநில அரசு நிறைவேற்றிக் கொடுக்கலாம். (சுவிஸர்லாந்து மாதிரி)
6) மத்திய அரசின் பட்டியலில் தேசிய பாதுகாப்பு, வெளி விவகாரம், குடியகல்வு – குடிவரவு, பணம் அச்சிடல், குடியுரிமை, சுங்கம், தபால் தொலைத்தொடர்பு, சர்வதேச விமான நிலையங்கள், சர்வதேச துறைமுகங்கள், புகையிரத சேவை, தேசிய நெடுஞ்சாலைகள் என்பன உள்ளடங்கியிருக்கும். ஏனையவை அனைத்தும் மாநிலப் பட்டியலுக்கு உரியவையாக இருக்கும்.
7) மாநிலங்களுக்குள்ளேயான புகையிரத, விமானப் போக்குவரத்து, கடற் போக்குவரத்து, வேறு நீர் நிலைகளினூடான போக்குவரத்து மாநில அரசுகளின் அதிகாரங்களாக இருக்கும்.
8) மாநிலங்களுக்கிடையேயான ஆறுகள், நீர்நிலைகள் மத்திய அரசின் அதிகாரங்களாக இருக்கும். மாநிலங்களுக்குள்ளேயான ஆறுகள், நீர்நிலைகள் மாநில அரசின் அதிகாரங்களாக இருக்கும்.
9) மத்திய பட்டியலில் அடங்காத அனைத்து விடயங்களும் மாநில அரசுக்குரியதாக இருக்கும்.
மாநில அரசுகள்
1) ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியான ஒரு அரசியல்யாப்பு இருத்தல் வேண்டும். அவ்யாப்பு மத்திய அரசின் அரசியல்யாப்பிற்கு இணங்க உருவாக்கப்பட வேண்டும்.
2) ஒவ்வொரு மாநிலத்திற்கும், மத்திய அரசின் பிரதிநிதியாக ஒரு ஆளுநர் இருப்பார். அவர் அம்மாநில மக்களினால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார். (அமெரிக்கா மாதிரி)
3) ஆளுநரின் பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும். இடைக் காலத்தில் லஞ்சம், பெருங்குற்றம், சட்டமீறல் தொடர்பாக குற்றப் பிரேரணை ஒன்று மாநில சட்ட மன்றத்தில் கொண்டு வந்து 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றினால் ஆளுநர் பதவி நீக்கப்படுவார்.
4) ஆளுநர் பதவி வெற்றிடமானால் மாநில சட்டசபை புதிய ஆளுநர் ஒருவர் தெரிவு செய்யப்படும் வரை தற்காலிக ஆளுநர் ஒருவரை நியமித்தல் வேண்டும்.
5) ஆளுநர் மத்திய அரசிற்கும் மாநில அரசிற்குமிடையே ஒரு பாலமாக இருப்பார்.
6) ஆளுநர் மாநில முதலமைச்சரின் ஆலோசனையின் படியே கருமங்களை ஆற்றுதல் வேண்டும்.
மாநில சட்ட சபை
1) ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாநிலச் சட்ட சபையிருக்கும்.
2) சட்ட சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை மாநில சனத்தொகை, மாநிலத்தின் பல்லின சமூக அமைப்பு, மாநிலத்தின் நிலப்பரப்புக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.
3) மாநில சட்டசபையில் பெண்களுக்கும் சமவாய்ப்பு அளித்தல் வேண்டும்.
4) மாநிலச் சட்டசபையில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துதல் வேண்டும்.
5) மாநில சட்ட சபையின் உறுப்பினர்கள் எளிய பெரும்பான்மை முறை மூலமும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை மூலமும் தெரிவு செய்யப்படுவர். 50:50 என்ற விகிதத்தை இதற்கு பயன்படுத்தலாம்.
6) தேர்தல் தொகுதிகள் சனத்தொகை, இன விகிதாசாரம், நிலப்பரப்பு என்பவற்றிற்கு ஏற்ப மாநில தொகுதி நிர்ணய ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படும்.
7) ஒரு பிரதேசத்தில் பல்லினங்கள் செறிந்து வாழுமாயின் அங்கு பல்லின பிரதிநிதித்துவம் உருவாக வாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும்.
8) விகிதாசார தேர்தலுக்கு தேர்தல் மாவட்டங்கள் ஒரு அலகாக இருக்கும். தேர்தல் மாவட்டங்களையும் மாநில தொகுதி நிர்ணய ஆணைக்குழு தீர்மானிக்கும்.
9) அரசியல் யாப்பினால் வழங்கப்பட்ட எல்லைக்குள் மாநில சட்டமன்றங்கள் சட்டங்களை இயற்றலாம்.
10) மாநில அரசியல்யாப்புத் திருத்தங்கள் மாநில சட்டசபையில் 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றப்படல் வேண்டும்.
11) சட்டங்கள் அனைத்தும் சமூகமளித்துள்ளோரில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படல் வேண்டும். சபாநாயகரின் ஒப்புதலுடன் அவை நடைமுறைக்கு வரும்.
12) மாநில சட்ட சபையின் பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும். இடைக்காலத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை மாநில சட்டசபையில் நிறைவேற்றுவதன் மூலம் ஆளுநர் மாநிலச்சட்ட சபையைக் கலைக்கலாம்.
மாநில அமைச்சரவை
1) மாநில நிர்வாகத்திற்கென ஒரு அமைச்சரவை இருக்கும். இதன் எண்ணிக்கையை மாநில சட்ட சபை ஒரு தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யலாம். அமைச்சரவையின் அமைவு மாநில பல்லினத் தன்மையைப் பிரதிபலிக்கும்.
2) மாநில அமைச்சரவையில் பெண்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படல் வேண்டும்.
3) முதலமைச்சர் அமைச்சரவையின் தலைவராக விளங்குவார். சட்ட சபைத் தேர்தலின் பின்னர் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியின் பிரதிநிதியை ஆளுநர் முதலமைச்சராக நியமிப்பார். பின்னர் முதலமைச்சரின் ஆலோசனையுடன் ஏனைய அமைச்சர்கள் ஆளுநரினால் நியமிக்கப்படுவர். எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிடின் சட்டமன்றத்தில் அதிக ஆதரவு பெற்ற சட்ட சபை உறுப்பினர் ஒருவரை ஆளுநர் முதலமைச்சராக நியமிப்பார்.
4) அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினை மாநில சட்ட சபையில் கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலம் அமைச்சரவையை பதவி நீக்கலாம்.
5) அமைச்சர்களுக்குரிய அமைச்சுகளை முதலமைச்சர் தீர்மானிப்பார். அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் முதலமைச்சரின் பொறுப்பில் இருக்கும்.
மாநில நீதித்துறை
1) மாநிலத் நீதித்துறைக்குள் மாநில உயர்நீதி மன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம், சிறுவர் நீதிமன்றம், தொழில் நீதிமன்றம், பெண்கள் விவகார நீதிமன்றம் என்பன உள்ளடங்கும்.
2) மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளை முதலமைச்சர்களின் சிபார்சுடன் மாநில ஆளுநர் நியமிப்பார். ஏனைய நீதிமன்ற நீதிபதிகளை மாநில நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிபார்சுடன் ஆளுநர் நியமிப்பார்.
3) மாநில நீதித்துறை நீதிபதிகள் மாநில பன்மைத் தன்மைக்கேற்ப நியமிக்கப்படுவர்.
4) ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாநில சட்டமா அதிபர் இருப்பார். அவரை முதலமைச்சரின் சிபார்சுடன் ஆளுநர் நியமிப்பார்.
வெளிநாட்டு உறவுகளும், உதவிபெறலும்
மாநிலங்கள் வெளிநாடுகளுடன் நேரடியாக உறவுகளை மேற்கொள்ளவும் உதவிகளைப் பெறவும் வாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும். இதற்கு வெளிநாடுகளில் செயற்படும் இலங்கைத் தூதுவராலயங்களில் மாநிலப்பிரிவுகளை உருவாக்கலாம்.
தேசியப் பாதுகாப்பு, தேசியப் படைகள்
1) தேசியப் பாதுகாப்பு, தேசியப் படைகள் பற்றிய அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருக்கும்.
2) தேசியப் படைகளுக்கான ஆட்சேர்ப்பு நாட்டின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படல் வேண்டும்.
3) மாநிலங்களின் பாதுகாப்புப் பொறுப்பை அந்தந்த மாநிலங்களில் சேர்க்கப்பட்ட ஆட்களைக் கொண்ட படைப் பிரிவுகளிடம் வழங்கப்படல் வேண்டும்.
உள்ளூராட்சி சபைகள்
1) உள்ளூராட்சிச் சபைகள் மாநிலங்களின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருக்கும். தமது கருமங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும்.
2) சகல உள்ளூராட்சி சபைகளும், அரசியல் யாப்பிற்கிணங்கவும் அவற்றிற்குரிய நாடாளுமன்ற சட்டங்களுக்கு இணங்கவும் உபசட்டங்களை இயற்றலாம்.
3) தற்போதுள்ள பிரதேச சபைகளுக்கு பதிலாக பட்டின சபைகள், கிராம சபைகளை (முன்னரைப் போன்று) உருவாக்கப்படல் வேண்டும். இதற்கேற்ற வகையில் பெருந்தோட்டங்களில் மலையகக் கிராமங்களும், பட்டினங்களும் உருவாக்கப்படல் வேண்டும்.
ஆணைக்குழுக்கள்
1) சுதந்திர பொதுச்சேவை ஆணைக்குழு, சுதந்திர நீதிச்சேவை ஆணைக்குழு, சுதந்திர தேர்தல் ஆணைக்குழு, சுதந்திர மனித உரிமை ஆணைக்குழு போன்ற ஆனைத்து ஆணைக்குழுக்களிலும் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
2) சுதந்திர ஆணைக்குழுக்களில் மலையக மக்களின் விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்படும் போது மலையக மாநில சட்டசபையின் சம்மதத்தினைப் பெறுதல் வேண்டும்.