படம் | Global Education

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த நான்கு வருடங்களில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு பல்வேறு ஒப்பந்தக்காரர்களிடம் இருந்தும் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி பகுதியில் விலைகோரல்களை கேட்டிருந்தது. சிவில் சமூக அமைப்புகளினால் விடுக்கப்பட்ட அறிக்கையொன்று (ஆங்கிலம், சிங்களம் அல்லது தமிழில் இங்கு கிடைக்கும்) இந்தத் திட்டம் பற்றி முக்கிய கரிசனைகளை எழுப்புகின்றபோதிலும், கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில மேலதிக விடயங்களும் அங்கு உள்ளன.

மாகாண அல்லது மாவட்ட அதிகாரிகளினால் அதிக அறியப்படாத இந்த திட்டமானது ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளதாக உறுப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய உலோக உற்பத்தி பெருநிறுவனமான ஆர்சிலர் மிட்டல் முன்கூட்டி கட்டமைக்கப்பட்ட உலோக வீடுகளை விநியோகிப்பதற்கும் நிறுவுவதற்கும் போட்டியிடுவதாக கூறப்படுவதுடன், அமைச்சர் அதில் அதிக விருப்பத்தைக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

இதேநேரம், விலைமனுக்கோரல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே மேற்படி நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது (விலைக்கோரல்கள் கோரப்பட்டதுடன், டிசம்பர் மாத இறுதிப்பகுதியில் அது முடிவுக்கு வந்திருந்தது). இங்கு எழும் பல பாரதூரமான பிரச்சினைகள் இருக்கின்றன:

  • முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட உலோக வீடுகளானது வடக்கு மற்றும் கிழக்கிற்கு ஒவ்வாதது என்று சொல்வது குறைமதிப்பீட்டுரையொன்றாக இருக்கக்கூடும். இந்தத் திட்டத்தின் எந்தவொரு அம்சம் பற்றியும் சம்பந்தப்பட்ட சமூகத்தினருடனோ அல்லது உள்ளூராட்சி அதிகாரிகளுடனோ கூட எந்தவொரு ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இந்த விநியோகஸ்தர் சார்ந்த தீர்வுகள் மற்றும் வடிவமைப்புகளின் பொருந்தும்தன்மை மற்றும் ஏற்புடையத்தன்மை தொடர்பில் முன்னோடி பரிசோதனைகள் எதுவும் நடத்தப்படவில்லை என்பதுடன், அவ்வாறு செய்வதற்கு ஒப்பந்தக்காரர் மீது எந்த பொறுப்பும் இருப்பதாக தெரியவுமில்லை.
  • உள்ளூர் பொருட்கள் மற்றும் நிபுணத்துவத்தை பயன்படுத்துவதிலும் பார்க்க இறக்குமதி செய்யப்பட்ட உள்ளீடுகள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதானது உள்நாட்டு பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் என்பதுடன் மட்டுமல்லாது, இந்த மாதிரியான பாரியதொரு வீடமைப்புத் திட்டமொன்றை உருவாக்க எதிர்பார்க்கப்படக்கூடிய தேசிய மற்றும் உள்ளூர் பொருளாதாரத்துக்கான எந்தவொரு சாதகமான பக்க விளைவுகளையும் இல்லாது செய்துவிடும்.
  • இந்த திட்டத்தின் கீழான வீடொன்றுக்கு இலங்கை நாணய மதிப்பில் தலா 2 மில்லியன் (20 இலட்சம்) ரூபா செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதே பிராந்தியத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வீடமைப்புத் திட்டங்களிலும் பார்க்க இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாகும். இது ஒப்பந்தக்காரருக்கு இலாபமாக அமையும் அதேநேரம், ஏற்கனவே அதிகரித்து காணப்படும் பொது தேசிய கடனை மேலும் அதிகப்படுத்துவதற்கு மட்டுமே வழிவகுக்கும்.

உரிமையாளர் சார்ந்த அணுகுமுறைகளானது மலிவானது, மிகவும் இணங்கத்தக்கது மற்றும் அதிக சாதகமான சமூக அனுகூலங்களைக் கொண்டது என்று இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஆரம்ப கட்டம் உட்பட இலங்கையிலுள்ள பல தசாப்தகால அனுபவம் சுட்டிக்காட்டும் போது அரசாங்கம் எதற்காக ஒப்பந்தக்காரர் சார்ந்த அணுகுமுறையொன்றுக்கு சலுகையளிக்கிறது?

ஆம், இந்திய வீடமைப்புத்திட்டம் உட்பட அண்மைய உரிமையாளர் சார்ந்த திட்டங்கள் பல பிரச்சினைகளைக் கொண்டிருந்தன. குறிப்பாக கடன்சுமை பிரச்சினைகள் காணப்பட்டன. ஆனால், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாறாக அரசாங்கம் எதற்காக ஒப்பந்தக்காரர் சார்ந்த அணுகுமுறையொன்றை அரவணைக்கிறது? உண்மையில், ஒப்பந்தக்காரர் சார்ந்த, முற்றிலும் பங்கேற்பில்லாத, உள்ளூர் மற்றும் தேசிய பொருளாதாரத்துக்கு கணிசமான செலவொன்றை ஏற்படுத்தும் அணுகுமுறையொன்றை நியாயப்படுத்துவதற்கு இந்தப் பிரச்சினைகள் பயன்படுத்தப்படுவதாகவே தெரிகிறது. மக்களை மையப்படுத்தியதும் பங்கேற்றல் கொண்டதுமான வீடமைப்புத் திட்டங்களுக்கு பதிலாக விநியோகஸ்த்தர் சார்ந்த தீர்வுகள் சலுகையளிக்கப்படுவது ஏன்? இந்தத் திட்டம் உண்மையில் யாருக்கு பயனளிக்கப்போகிறது?

பாரியளவிலான பொது வீடமைப்பு தொடர்பில் வியக்கத்தக்க வளமான வரலாறும் அனுபவமும் இலங்கைக்கு இருக்கிறது. ஆனால், அரசுக்கான நீண்டகால செலவினங்கள் உட்பட சமூக அல்லது பொருளாதார பரிமாணங்களுக்கான குறுகிய சிந்தனையுடன் கொழும்பின் ஏழை மக்களை மோசமாக வடிவமைக்கப்பட்ட உயர்ந்த கட்டிடங்களுக்குள் உள்ளடக்குவதில் முன்னைய அரசாங்கம் இவை அனைத்தையும் அலட்சியப்படுத்தியதைப் போன்றே இந்த நல்லாட்சி அரசாங்கமும் சரியாக அதே காரியத்தைத்தான் செய்கிறது.

குவேனி என்பவர் எழுதி The fabrications of Yahapalanaya: 65,000 metal houses for the North & East என்ற தலைப்பில் கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் வௌிவந்த கட்டுரையில் தமிழாக்கம்.